A Simple Devotee's Views
லோகநாயகி தாயார் ஸமேத லோகநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருக்கண்ணங்குடி கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம், பஞ்ச பத்ரா | |||
மூலவர் | லோகநாத பெருமாள் , ஷ்யாமளமேனி பெருமாள், சாம மாமேனிப் பெருமாள். நீலமேகவண்ணன் | |||
உத்ஸவர் | தாமோதர நாராயணன் | |||
தாயார் | லோகநாயகி – அரவிந்தவல்லி (உற்சவர்) | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 10 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 10 | |||
தொலைபேசி | +91 04365 – 245350 |
கோவில் பற்றி
பரத்துவத்தின் மேன்மையின் மேல் எல்லைக்கும், மிக எளிமையான எளிமையின் கீழ் எல்லைக்கும் பொருந்தும் திருநாமங்களை கொண்ட எம்பெருமான் ஆவார். நாராயணன் என்பது பெருமைகளின் உச்ச ஸ்தானம். தாமோதரன் என்பது இடைச்சி கையால் இடுப்பில் கட்டுப்பட்டு இருந்த எளிமையின் திவ்யதரிசனம். இந்த இரண்டு திருநாமங்களும் சேர்ந்து தாமோதர நாராயணன் என்ற திருநாமத்துடன் இங்குள்ள உற்சவ பெருமாள் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு ஸ்ரீதேவி பூதேவிகளுடன் கண்ணனாக காட்சி அளிக்கிறார்.
இதனை பஞ்ச பத்ரா என்றும் புராணங்கூறும். ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம் என்ற ஐந்தினாலும் புகழ்பெற்ற இடமாதலால் பஞ்ச பத்ரா என்றாயிற்று.
தாயார் சந்நிதியில் மூலவரும் உத்ஸவரும் ஒரே முக ஜாடையில் உள்ளது ஒரு அதிசயம்.
பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. (திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கவித்தலம், என்ற நான்கு சோழதேச திவ்யதேசங்களும், நடுநாட்டில் உள்ள திருக்கோவிலூரும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் என்று கூறப்படும்).
இந்த திவ்யதேசத்தில், கருடன், மற்ற இடங்களைப்போல் கை கூப்பிக்கொண்டு நில்லாமல், கைகட்டிக்கொண்டு வைகுந்ததில் இருப்பது போல் நிற்பது ஒரு சிறப்பு.
முன்பு இந்த ஊரில் முக்கிய அடையாளங்களாக இருந்த ஊராக் கிணறும், உறங்காப்புளியும், இப்பொழுது இல்லை. காயா மகிழ் (காய்ந்து போன, ஆனால் பட்டு போகாத மகிழ மரம் சன்னதியின் பின்புறம் உள்ளது.)
இங்குள்ள புஷ்கரிணீயின் பெயர், சிரவண புஷ்கரிணி, அதாவது, இதன் பெயரை எங்கிருந்து கேட்டாலும் உடனே சகல பாபங்களையும் போக்கவல்லதால் இப்பெயர் பெற்றது.
இந்த திவ்யதேசத்தை சுற்றி ஐந்து நாராயணர்கள் இருக்கிறார்கள். அவர்கள், ஆபரணதாரி என்ற பதியில் ஆனந்த நாராயணன், பெரிய ஆலத்தூர் என்ற பதியில் வரத நாராயணன், தேவூர் என்ற பதியில் தேவ நாராயணன் மற்றும், கீவளுர் என்ற பகுதியில் யாதவ நாராயணன் ஆவர். இதனால், இவற்றை, பஞ்ச நாராயண ஸ்தலம் என்றும் கூறுவார்கள். இவை எல்லாம் சுமார் 6 கிலோமீட்டருக்குள் இருக்கும்.
இதேபோல், இன்னொரு பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களையும் பற்றியும் சிறிது அனுபவிக்கலாம். (நன்றி, Travelogue by Sri Kazhiyur Varadan in anudinam.org)
ஸ்வாமி ராமானுஜர் மேல்கோட் என்ற திவ்யதேசத்தில் வாழ்ந்த காலத்தில், அவர் தன் அருளால் விஷ்ணுவர்தன் என்ற அரசனின் மகளினை காப்பாற்றியதால், அரசன் வைணவத்திற்கு மாறியதுடன், ஐந்து நாராயண கோவில்களை இராமானுஜரின் சீடரான முதலியாண்டான் என்ற ஆச்சாரியாரின் மேற்பார்வையில் ஒரே நேரத்தில் கட்டி வைணவத்தை அந்த பகுதியில் வளர்க்க உதவினான். அவை,
சிலர், ஸ்ரீ திருநாராயண க்ஷேத்திரம், மேல்கோட் இந்த பஞ்ச நாராயண க்ஷேத்திரத்தில் சேர்த்து கொள்வது இல்லை, என் எனில், இது மற்ற க்ஷேத்திரங்களை போல் முதலியாண்டான் மேற்பார்வையில் கட்டப்பட்டது இல்லை.
ஸ்தல வரலாறு
வசிட்டருக்கு கண்ணன் மேல் மிகுந்த பக்தி. அவர் வெண்ணெயை உருண்டை பிடித்து அதனை கண்ணனாக பாவித்து பூஜை செய்வார். ஒரு நாள், கண்ணன் சிறு குழந்தையாக அங்கே வந்து, அந்த வெண்ணையை எடுத்து, உண்டு, ஓடினான். வசிட்டர் துரத்தி வர, இங்கே விஷ்ணுவை நோக்கி கடுமையாக தவம் செய்து வந்த முனிவர்களால், அந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் பக்தியினால் கண்ணன் கட்டுப்பட்டு நின்றான். வசிட்டர் வந்து கண்ணனை வணங்கினார். கண்ணன் கட்டுண்டு நின்றபடியால் கண்ணங்குடி ஆயிற்று.
ஆழ்வார்
காயா மகிழ், தோலா வழக்கு, உறங்காப்புளி, ஊராக் கிணறு திருக்கண்ணங்குடி என்று ஒரு பழமொழி உண்டு. இது திருமங்கை ஆழ்வார் சம்பந்தப்பட்ட வார்த்தைகள். திருவரங்கத்தில் மதில் கட்டுவதற்கு, நாகைப்பட்டினத்தில் இருந்து ஓரு தங்க புத்த விக்கிரஹத்தை எடுத்து வந்து, அதை இங்கு ஒரு நிலத்தில் இரவில் புதைத்து வைத்தார். ஆழ்வார் உறங்குவதற்கு முன், அங்கிருந்த ஒரு புளிய மரத்திடம், இந்த விக்கிரகத்தை உறங்காமல் பார்த்துக்கொள்ள சொல்ல, அதுவும் அப்படியே செய்ததால், ஆழ்வார் அதனை உறங்காப்புளி என்று வாழ்த்தினார்.
காலையில் நிலத்தை அதன் சொந்தக்காரன் உழ ஆரம்பிக்க, ஆழ்வார் அதனை தடுத்து அது தன்னுடைய நிலம் என்று வாதிட ஆரம்பித்தார். இந்த ஊர் மக்களிடம் வாதிட்டு, ஆழ்வார் தன்னுடைய பத்திரத்தை திருவரங்கத்தில் இருந்து எடுத்து வர, ஒரு நாள் அவகாசம் வாங்கினார். நிலச்சொந்தக்காரன் வெற்றி பெறமுடியாமல் இதனை ஒரு தீரா வழக்காகப் பார்த்தான். தீரா வழக்கு, தோற்காத வழக்கு, தோலா வழக்கு என்று ஆனது. ஆழ்வார் இந்த ஊர் மக்களிடம் தண்ணீர் கேட்க அவர்கள் மறுக்க, இந்த ஊரில் ஒரு கிணற்றிலும் தண்ணீர் ஊறக்கூடாது என்று ஆழ்வார் சபித்து விட்டு சென்றதால், இன்றளவில், இவ்வூர் கிணறுகளில் தண்ணீர் வற்றிய நிலையில் (ஊரா கிணறு) உள்ளன. ஆழ்வார் தாகத்துடன் ஒரு மகிழ மரத்தின் கீழ் சிறிது ஓய்வு எடுக்க, எம்பெருமான் ஒரு மனிதன் வடிவில் வந்து, நீருடன் பசியாற உணவும் கொடுக்க, ஆழ்வார் அவைகளை ருசிக்க அந்த மனிதன் அந்தஇடத்தைவிட்டு மறைந்தான். ஆழ்வார் அந்த மனிதனை நினைவு கொள்ள முயன்றபின், அது திருக்கண்ணங்குடி எம்பெருமானே என்று தெரிந்துகொண்டார். பிறகு மகிழ மரத்தை வாழ்த்தி, அது காய்ந்து போனாலும் இங்கேயே சிறப்புடன் வாழும் என்றார். அதனால் அது காயா மகிழ் ஆயிற்று.
திருமங்கை ஆழ்வார் இந்த எம்பெருமானுக்கு 10 பாசுரங்கள் பாடி உள்ளார்.
Google Map
வேளுக்குடி ஸ்வாமிகள் திருக்கண்ணங்குடி பற்றி
திருக்கண்ணங்குடி பற்றி தினம் ஒரு திவ்யதேசம்