A Simple Devotee's Views
கண்ணபுர நாயகி ஸமேத சௌரிராஜப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருக்கண்ணபுரம் , கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம், பஞ்சகிருஷ்ணக்ஷேத்திரம் , சப்தபுண்ணியக்ஷேத்திரம், ஸ்ரீமதஷ்டாக்ஷர மஹா மந்த்ர சித்தி க்ஷேத்திரம் | |||
மூலவர் | நீலமேக பெருமாள், சௌரிராஜன் | |||
உத்ஸவர் | சௌரிராஜன் | |||
தாயார் | கண்ணபுரநாயகி , ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 128 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 104 நம்மாழ்வார் 11 குலசேகராழ்வார் 11 பெரியாழ்வார் 1 ஆண்டாள் 1 | |||
தொலைபேசி | +91 4366 270 557; +91 4366 270 718; +91 99426 56580 |
கோவில் பற்றி
விரைந்து மோட்சம் அளிக்க வல்லவர் யாரென்று நைமிசாரண்ய முனிவர்கள் ஒருங்கே திரண்டு ஸு த முனிவரைக் கேட்க, அவர் திருக்கண்ணபுர திவ்ய தேசத்தைப் பற்றி விவரிக்கிறார்.
ஸ்வாமி நம்மாழ்வாரும் “சரணம் ஆகும் தன தாள் அடைந்தார் எல்லாம், மரணம் ஆனால் வைகுந்தம் அளிக்கும் பிரான் ‘ என்று பாடி உள்ளார்.
ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களான திருவேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், திருவரங்கம், வானமாமலை, முக்திநாத், பத்ரிநாத், நைமிசாரண்யம், புஷ்கரம் இவற்றில் ஒவ்வொன்றிலும் அஷ்டாக்ஷரத்தின் ஒவ்வோர் எழுத்தாக இயங்கும் எம்பெருமான் இவ்விடத்து திருவஷ்டாக்ஷர எழுத்துகளின் மொத்த சொரூபமாக விளங்கி முக்தி அளிக்கிறார். இந்த திவ்யதேசத்தில் கால் பதித்தாலே முக்தி கிடைக்கும் என்பதால், இந்த கோவிலில் தனியாக சொர்க்கவாசல் .கிடையாது.
64 சதுர்யுகங்களையும் தாண்டி பழமையானது இந்த திவ்யதேச எம்பெருமான் என்று கூறுவர்.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில், 649 வது திருநாமமாக சொல்லும் ஸௌரி என்பது இந்த திவ்யதேச எம்பெருமானான சௌரிராஜப்பெருமாளையே குறிக்கும். இங்கு ஸௌரி என்பது யுகங்கள் தோறும் அவதாரம் எடுப்பவன் என்ற அர்த்தத்தில் வந்து உள்ளது.
தலம், வனம், நதி, கடல், நகரம், தீர்த்தம், விமானம் என்ற 7 புண்ணியங்களும் ஒருங்கே அமைந்துள்ள ஸ்தலம் ஆதலால், சப்தபுண்ணியக்ஷேத்திரம் என்று கூறப்படுகிறது.
பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்று. (திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கவித்தலம், என்ற நான்கு சோழதேச திவ்யதேசங்களும், நடுநாட்டில் உள்ள திருக்கோவிலூரும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் என்று கூறப்படும்).
வடக்கு வீடு எனப்படும் திருவேங்கடத்தையும், தெற்கு வீடு எனப்படும் திருமாலிருஞ்சோலையையும், மேற்கு வீடு எனப்படும் ஸ்ரீரங்கத்தையும் போல், திருக்கண்ணபுரம் நம் சம்பிரதாயத்தில் கிழக்கு வீடு என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
இவர் திருக்கரங்களில் உள்ள சக்ரம், பிரயோக சக்ரமாக விளங்குகிறது. எம்பெருமானின் இன்னொரு திருக்கரம் தானம் வாங்குவதுபோல் காட்சி அளிக்கும். மற்ற திவ்யதேசங்களில் திருமாலின் திருக்கரம் அபயம் என்று சொல்லும். ஆனால் இங்கு நம் பாவங்களை வாங்கி கொள்வது போல் உள்ளது.
உபய நாச்சிமார்களுக்கு இடது புறம் ஆண்டாளும், வலது புறம் பத்மாவதி (செம்படவ /மீனவ அரசகுமாரி) தாயாரும் வீற்றுஇருக்கிறார்கள்.
இவ்விடத்தில் வைகாசி பிரம்மோத்ஸவத்தில் 7 ஆம் நாளில் எம்பெருமான், மும்மூர்த்திகளாக காட்சி அருளுகிறார்.
மாசி மக பெருவிழாவின் போது, எம்பெருமான் திருமலை ராயன் பட்டினம் வரை கருட வாகனத்தில் சென்று சமுத்திர தீர்த்தவாரி காணுகிறார்.
ஸ்தலபுராணம்
உபரிசரவசு என்ற மன்னன் ஒருமுறை இந்த ஸ்தலம் வழியாக சென்ற போது, மெலிந்த தேகத்தினரான முனிவர்கள் / மஹரிஷிகள் தவம் செய்துகொண்டிருக்க, அவர்களைச் சாமைக் கதிர்கள் என்று எண்ணிய உபரிசரவசுவின் வீரர்கள் தம் வாளால் வெட்ட, முனிவர்களின் அபயக் குரல் கேட்ட எம்பெருமான் பாலகனாய் வந்து படையைத் துவம்சம் செய்ய, உபரிசரவசு பல அஸ்திரங்களையும் ஏவி அதிர்ந்து போக இறுதியில் தன்னோடு போரிட்டவன் மஹாவிஷ்ணுவே என்று அறிந்த மன்னன், பாலகனின் பாதத்தில் வீழ்ந்து பாவமன்னிப்பு வேண்டினான். மஹரிஷிகள, மிகவும் மெலிந்து, உலர்ந்த சதைகள் உடையவர்களாய் தபஸ் பண்ணி இந்த விமானத்தைச் சேவித்ததால் இதற்கு உத்பலவதாக
விமானம் என்று பெயர். உபரிசரவசுவின் மகள் சௌரிராஜனையே மணவாளனாக ஏற்க
வேண்டுமென்று, தவம் செய்ய எம்பெருமானும் அவ்விதமே மணமுடித்துக் கொண்டார் .
“நீ கிடந்த அழகை திருவரங்கத்திலே கண்டேன். நின் நடையழகையும் காண வேண்டும்” என்று விபீஷ்ணர் கேட்க, “கண்ணபுரத்தில் காட்டுவோம், வா ” என்று விபீஷ்ணனுக்கு இங்கு நடையழகு காட்டியதாக ஐதீகம். இன்றும் அமாவாசை தோறும் எம்பெருமான் விபீஷ்ணனுக்கு தன்னுடைய நடைஅழகினை காட்டுகிறார்.
சௌரி என்ற சொல்லுக்கு தமிழில் முடி என்றும், அழகு என்றும் அர்த்தங்கள் உள்ளன.
இக்கோவிலில் பூஜை புரிந்து வந்த அர்ச்சகர் தான் காதல் கொண்ட கன்னிக்கு சூட்டிய மாலையை எம்பெருமான் பிரசாதம் என்று சோழராஜனுக்கு அளித்தார். அதில் தலைமுடி ஒன்றிருக்க அரசர் அர்ச்சகரை அழைத்து காரணம் கேட்டார். எம்பெருமானுக்கு முடி வளர்ந்துள்ளதாக அவர் தெரிவிக்க, இதனைச் சோதிக்க மறு நாள் காலை சோழன் சந்நிதிக்கு வந்து எம்பெருமானின் தலையில் இரண்டு மூன்று கேசங்கள் இருப்பதைப் பார்த்து, அதில் ஒரு கேசத்தையிழுக்க, அதில் இருந்து தெறித்த ரத்தத் துளிகள் மன்னனின் முகத்தில் பட, இறைவன் தன் பக்தனைக் காப்பதற்கே இவ்வாறு செய்தான் என்று உணர்ந்த அரசன் அர்ச்சகரின் பக்தியை மெச்சியதோடு தானும் இப்பெருமானுக்கு
அடிமையானான். இதன் காரணமாகத்தான் சௌரி ராஜன் என்னும் திருநாமம்
இப்பெருமானுக்கு உண்டாயிற்றென்பர்.
இவ்வூரில் வாழ்ந்த “முனைய தரையர்” என்பவர், எம்பெருமானுக்கு வேண்டிய திருப்பணிகளை செய்து வந்தார். அவர் எம்பெருமானுக்கு திருவாராதனம் செய்யாமல் ஒரு நாளும் உண்பதில்லை. அவ்வாறிருக்கையில் ஒரு நாள் வெளியூருக்குச் சென்று விட்டு இரவில் திரும்ப, அவர் மனைவி ஆக்கி வைத்த பொங்கலை மானஸிகமாக இறைவனுக்குப் படைக்க, மூடிய கோவிலில் மணி சப்தம் கேட்டது. மறு நாள் காலை கோவில் திறக்கும் போது பொங்கல் மணம் எங்கும் வீச, தம் அடியார் பொருட்டு பகவான் அப்பொங்கலை உகந்து ஏற்றுக் கொண்டார் என்றும் முனியோதரம் பொங்கல் என்றே பெயர் கொடுத்து, இன்றும் இப்பெருமானுக்கு அர்த்தஜாம நிவேதனமாக முனியோதரம் பொங்கல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்தைப் போன்று 7 மதில்கள் இருந்தன என்றும் சோழ மன்னன் ஒருவன் இம்மதில்களை இடித்து கருங்கற்களை அருகிருந்த இன்னொரு கோயிலுக்கு எடுத்துச் சென்றான் எனவும். இது கண்டு மனம் வருந்திய இப்பெருமானின் பரம பக்தர் அரையர் என்பர் “பொருவரைமுன் போர் தொலைத்த பொன்னாழி மற்றொரு கை” என்பது பொய்த்ததோ என்று தம் கையில் உள்ள தாளத்தை பெருமானின் மீது விட்டெறிய, இப்பெருமானின் நெற்றியில் “நெற்றி வடு” இன்றும் உள்ளதைக் காணலாம். 6 மதில்களை இடித்தது போக எஞ்சியிருப்பது இப்போது உள்ள மதில் ஒன்றுதான்.
ஆழ்வார்கள்
திருமங்கையாழ்வார் இந்த திவ்யதேச எம்பெருமானுக்கு 104 பாசுரங்கள் பாடி உள்ளார். இந்த திவ்யதேச பெருமாள், ஆழ்வாருக்கு திருமந்திரத்தின் அர்த்தத்தை (திருமந்திர உபதேசம்) சொல்லி கொடுத்ததால், பஞ்சஸம்ஸ்காரம் செய்துவித்த திருநறையூர் எம்பெருமான் போல் இவருக்கும் பெரிய திருமொழி என்ற பிரபந்தத்தில் 8ம் பத்து முழுவதும் 100 பாசுரங்கள் பாடி உள்ளார்.
இதைத்தவிர திருநெடுந்தாண்டகம் என்ற பிரபந்தத்தில், “கணபுரத்து என் கனியே” என்று பதினாறாம் பாசுரத்திலும், ‘திருக்கண்ணபுரம் புக்கு‘ என்று இருப்பத்தியேழாம் பாசுரத்திலும் பாடி உள்ளார். சிறிய திருமடலில் ஓர் இடத்திலும், பெரிய திருமடலில் இரண்டு இடங்களிலும் திருக்கண்ணபுரபெருமானை பற்றி பாடி உள்ளார்.
திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலே தனது துயர்கள் எல்லாம் போய்விட்டன, இனிமேல் தனக்கு என்ன குறையுள்ளது என்று நம்மாழ்வார் கேட்ட திவ்யதேசம். தன்னை சரண் அடைந்த எல்லோருக்கும் மரணத்திற்குப் பிறகு முக்தி அளிக்கும் எம்பெருமான் என்று பாடிய திவ்யதேசம்.
வேலை(கடல் அலை) மோதும் மதிள்சூழ், வெள்ளி ஏய்ந்த மதிள்சூழ்,, வானை உந்தும் மதிள்சூழ், அரண் அமைந்த மதிள்சூழ், நன் பொன் ஏய்ந்த மதிள்சூழ், மணிபொன் ஏய்ந்த மதிள்சூழ், கல்லில் ஏய்ந்த மதிள்சூழ் என்று திருக்கண்ணபுரத்தில் மதில்கள் பெருமைகளை பாடியுள்ளார். வண்டு பாடும் பொழில் சூழ், செய்யில் வாளை உகளும், வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரம் என்று மேலும் சில சிறப்பு அடைமொழிகளையும் ஆழ்வார் தருகிறார்.
பஞ்சகிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்றான, இந்த தலத்து எம்பெருமானை, “மன்னுபுகழ் கெளசலைதன் மணிவயிறு வாய்த்தவனே”, என்று கோசலையின் மடியில் தவழும் இராமபிரானுக்கு தாலாட்டு பாடல்கள் என்று பிள்ளைத்தமிழில் ஆழ்வார் போற்றிப் பாடுகிறார்.
அர்ச்சாவதாரமாக ஆங்காங்குக் கோயில்களில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீமந் நாராயணனே கண்ணபிரானாக அவதரித்தான் என்றும், திருக்கண்ணபுரத்தில் பரம யோக்யனாயிருக்கும் எம்பெருமானை, “கண்ணபுரத்து அமுதே” என்றும் அழைக்கிறார்.
காட்டில் வேங்கடம் கண்ண புரநகர் என்று திருவேங்கடத்தை காடு என்றும், திருக்கண்ணபுரத்தை நகரம் என்று இரண்டிலும் மகிழ்ச்சியுடன் நித்தியவாசம் செய்யும் எம்பெருமானை அழைக்கிறார். இராமபிரான் வனவாசத்தின் போது இருந்ததை திருமலை வாசத்துடனும், அயோத்தியில் சகலருடன் கூடி வசித்ததை திருக்கண்ணபுரத்திற்கும் ஒப்பிடுகிறார். அதேபோல் கண்ணபிரான் பிருந்தாவனத்தில் வசித்த நேரத்தை திருமலையுடனும், ஆயார்பாடி மாளிகையில் வசித்ததை திருக்கண்ணபுரத்துடனும் ஒப்பிட்டு பாடுகிறார்.
இனி, பாசுரங்கள் :