A Simple Devotee's Views
அபிஷேகவல்லித்தாயார் ஸமேத பக்தவத்சலப் பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருக்கண்ணமங்கை , கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம் ஸப்தாம்ருதக்ஷேத்திரம், ஸப்தபுண்ணியக்ஷேத்திரம், லக்ஷ்மிவனம் | |||
மூலவர் | பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள் | |||
உத்ஸவர் | பெரும்புறக்கடல் | |||
தாயார் | அபிஷேகவல்லி, கண்ணமங்கை நாயகி | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 14 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 14 | |||
தொலைபேசி | +91 4366 278 288, +91 98658 34646 |
எம்பெருமானுக்கு மிகப் பெரிய திரு உருவம். மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம். சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கு உள்ள புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான். மஹாலக்ஷ்மி, எம்பெருமானின் திருமண கோலத்தைக் காண தினசரி தேவர்களும், முனிவர்களும் தேனீ வடிவில் இங்கு உள்ளனர்
கோவிலுக்கு வேண்டிய விமானம், மண்டபம், ஆரண்யம், தீர்த்தம், க்ஷேத்திரம், ஆறு, நகரம் ஆகிய ஏழு அம்சங்களும் மரணமில்லா வாழ்வைத் தரும் அமிர்தத்தின் சிறப்பைக் கொண்டதால், ஸப்தாம்ருத க்ஷேத்திரம் என்றும் ஸப்தபுண்ணியக்ஷேத்திரம் என்றும் பெயர்.
லட்சுமி தவம் செய்த ஸ்தலம் ஆகையால், லக்ஷ்மிவனம் என்ற பெயரும் உண்டு.
எம்பெருமான், திருமகளை திருமணம் செய்ய தன்னுடைய திருப்பாற்கடலில் இருந்து புறத்தே வந்ததால், இந்த ஸ்தலம், பெரும்புறக்கடல் என்ற திருநாமம்.
பக்தர்களின் பொருட்டு ஆவி போல் வேகமாக வந்து அருள் பாலிப்பதால் பத்தராவி என்றும், பக்தர்களை விட்டு ஒரு போதும் நீங்காது பக்தர்களின் அருகிலேயே இருப்பதால் பக்தவத்ஸலர் என்றும் இந்த எம்பெருமானுக்குத் திருநாமங்கள்.
திருக்கண்ணமங்கை ஆண்டான் என்று ஒரு ஆச்சாரியார் இந்த ஊர் எம்பெருமானை வழிப்பட்டு தொண்டு புரிந்த வாழ்ந்த தலம் என்பதால் இவ்வூர் அவரது பெயரால் வழங்கப்படுகிறது.
விஷ்ணுவிடம் இருந்த பக்தியினால், தர்மம், தண்ணீராக மாறியது என்றும், அப்படிப்பட்ட தண்ணீரை, சிறந்த பக்தியுடன் விஷ்ணுவின் திருவடிகளை, அவர் திருவிக்ரமனாக உலகு அளந்த போது, பிரம்மன் சுத்தம் செய்து மரியாதை செய்த போது ஒரு துளி நீர் இந்த புஷ்கரணியில் விழுந்தது. சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் இந்த புண்ணிய தீர்த்ததை பார்த்ததும் தீர்ந்ததால், இது தரிசன புஷ்கரணி என்று பெயர் ஏற்பட்டது.
பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் ஒன்று. (திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திருக்கவித்தலம், என்ற நான்கு சோழதேச திவ்யதேசங்களும், நடுநாட்டில் உள்ள திருக்கோவிலூரும் சேர்ந்து பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் என்று கூறப்படும்).
கிருஷ்ணாரண்யம் பகுதியில் இதுவும் ஒன்று. ஒரு இரவு இந்த க்ஷேத்திரத்தில் இருந்தாலும் மோக்ஷம் கிடைக்கும் என்று ஐதீகம். இங்குள்ள அருமையான சிற்பங்களில், வைகுண்ட நாதன் சிற்பமும், கருடன் மேல் எழுந்தருளியிருக்கும் மஹாவிஷ்ணுவின் சிற்பமும் மிக அழகானவை.
சிவபெருமான் நான்கு வடிவங்கள் எடுத்துக்கொண்டு, நான்கு திசைகளிலும் இந்த ஊரை காத்து வருகிறார் என்று சொல்வர்.
இங்குள்ள பெருமாள் சன்னதியில் வெளிப்புறச் சுவரில் அஞ்சலி செய்யும் கரங்களுடன் புத்தர் பிரான் சிலை உள்ளது.
திருமால் பாற்கடலைக் கடைந்த போது சந்திரன், கற்பகத் தரு, காமதேனு என்று ஒவ்வொன்றாகத் தோன்றி இறுதியில் மகாலெட்சுமி தோன்றினாள். பாற்கடல் கடைந்த தோற்றத்துடன் இருந்த எம்பெருமானை சுற்றி இருந்த கோடானகோடி தேவர்களைக் கண்டு, மிகவும் நாண முற்ற திருமகள், இத்தலத்திற்கு வந்து எம்பெருமாளைக்
குறித்து தவம் இருக்கலானாள். திருமகளின் தவம் பற்றி அறிந்த மஹாவிஷ்ணு அவளை ஏற்றுக் கொள்ள நினைத்து தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் (சேனை முதலியார்) முகூர்த்த நாள் முடிவு செய்து கொடுத்தனுப்ப, விஷ்வக்சேனர் அதைக் கொணர்ந்து பிராட்டியிடம் சேர்ப்பித்தார். அதனால் இங்குள்ள விஷ்வக்சேனருக்கு இரண்டே கரங்கள் மட்டும், மற்ற விஷ்ணு கோவில்களில், விஷ்வக்சேனருக்கு நான்கு கரங்கள். பிறகு முப்பத்து முக்கோடி தேவர்கள் காண எம்பெருமான் திருமகளை மணம் புரிந்து கொண்டார்.
இன்றும் தாயார் சந்நிதியில் ஒரு பெரிய தேன்கூடு போன்ற அமைப்பு உள்ளது. அதற்கு தினமும் பூஜை நடக்கிறது. இந்த தேன்கூட்டில் முப்பத்து முக்கோடி தேவர்கள் தேனீக்களாக இருப்பதாக ஐதீகம். இங்கு நடந்த மஹாலக்ஷ்மியின் திருமணத்தைக் காண தேவர்கள் கூட்டம் கூட்டமாக வந்ததோடு, எப்போதும் இத்திருக்கோலத்தைக் கண்டு கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தேனிக்களாக உருவெடுத்து அதன் மூலம் தினமும் அவர்களை கண்டு மகிழ்கிறார்கள்.
12 ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை நாலாயிர திவ்ய பிரபந்தமாக தொகுத்த நாதமுனிகளின் சீடரான திருக்கண்ணமங்கை ஆண்டான் என்று ஒரு ஆச்சாரியார் இந்த ஸ்தலத்தில் இருந்து மோக்ஷம் அடைந்தார்.
திருமங்கையாழ்வார் ஒரு பாடலில், “வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண, நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே” என்று சொல்லி இருக்கிறார். இதன் பொருள், “எம்பெருமானே! உனக்கும் இந்த பாடல்களை கற்க வேண்டும் என்று ஆசை உண்டானால், எனக்கு சிஷ்யனாயிருந்து கற்று கொள்ளலாம் ” என்பதாகும்.
இத்திருமொழியின் இனிமையையும் சீரிய பொருளையும் கண்டு எம்பெருமானும் சீடனாக இருந்து கற்றுக்கொண்டதை, நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை குரு சிஷ்ய உறவு மூலம் தெரிந்து கொள்ளலாம். இத்திருமொழியின் (பெரிய திருமொழி பிரபந்தம்) சீரிய சொல்இன்பமும் பொருள்இன்பமும், எம்பெருமான்கூட, ஆழ்வாரை வணங்கச் செய்யும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நம்பிள்ளை என்ற ஆச்சாரியார், திருமங்கை ஆழ்வார் போல், கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தவர். அவருடைய சீடராக இருந்த பெரியவாச்சான் பிள்ளை, பகவான் கிருஷ்ணனைப் போல் ஆவணி, ரோஹிணியில் அவதரித்தவர். பெரியவாச்சான் பிள்ளை எல்லா திவ்யப்ரபந்தங்களின் அர்த்தங்களையும் கற்றுக்கொண்டு வியாக்யானச் சக்ரவர்த்தி என்று பெருமையுடனும் மரியாதையுடனும் அழைக்கப்படுகிறார்.
இங்கே குருவான நம்பிள்ளையின் வாழிதிருநாமத்தில் “கார்த்திகையில் கார்த்திகை உதித்த கலிகன்றி வாழியே“ என்று சொல்வதில் உள்ள, கலிகன்றி என்பது திருமங்கையாழ்வாரின் திருநாமமே ஆகும்.
Google Map
திருக்கண்ணமங்கை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம் திருக்கண்ணமங்கை பற்றி சொல்வது