A Simple Devotee's Views
சாரநாயகித்தாயார் ஸமேத சாரநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருச்சேறை / பஞ்சஸார க்ஷேத்திரம் | |||
மூலவர் | ஸாரநாதன் | |||
உத்ஸவர் | மாமதலைப்பிரான் | |||
தாயார் | ஸாரநாயகி /ஸார நாச்சியார் / பஞ்ச லக்ஷ்மி | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 12 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 12 | |||
தொலைபேசி | + 91 435 246 8078, +91 435 245 8001,. +91 94441 04374 |
கோவில் பற்றி
சாரநாதன் என்ற எம்பெருமான், சாரநாச்சியார் என்ற தாயார், சார புஷ்க்ரணி, சாரவிமானம் மற்றும் சார க்ஷேத்திரம் என்ற ஐந்தும் சேர்ந்து பஞ்ச சார க்ஷேத்திரம் என்று ஆயிற்று.
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, மஹாலக்ஷ்மி, சார நாச்சியார் என்று ஐந்து தேவிகளுடன் எம்பெருமான் காட்சி அளிக்கிறார். இங்குள்ள மூலவர் தனது வலது கையில் பத்மம் வைத்துள்ள காட்சி பரமபதம் எனப்படும் வைகுண்டத்தில் எம்பெருமான் தனது வலதுகரத்தில் பத்மம் வைத்துள்ளதற்கு ஓப்பானதாகும்.
எம்பெருமான் காவிரி தாய்க்கு ப்ரத்யக்ஷம். குளக் கரையில் காவிரியம்மனுக்கு சன்னதி உள்ளது. காவிரித் தாயின் தவத்தின் பலனாக அவரது மடியில் பெருமாள் குழந்தையாகத் திகழ்ந்ததோடல்லாது, அவருக்கு ஸ்ரீதேவி, பூதேவி, நிளாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய ஐந்து தேவியருடன் காட்சியளித்தார்
ராஜகோபாலன் சன்னதி உள்ளது. புஷ்கரணிக்கு வடமேற்கு திக்கில் உள்ள ஆஞ்சநேயரும் அவசியம் தரிசிக்க வேண்டிய சன்னதி.
கும்பகோணத்திற்கு குடத்தின் மூக்கு என்று சொல்வதை ஒட்டி, குடத்திற்கு வாசல், குடவாசல் என்ற அருகில் உள்ள ஊர். இந்த திவ்யதேசம், குடத்தின் சாரம், அதாவது மத்திய பாகம்.
மார்க்கண்டேயர் முக்தியடைந்த தலம் இது
ஸ்தல வரலாறு
பிரளய காலத்தில் இந்த ஊரின் கெட்டியான மண்ணை கொண்டு ஒரு குடம் செய்து அதில் வேதங்களை வைத்து காப்பற்றியதாக வரலாறு. இதை எம்பெருமான் சொல்லும்போது, தனக்கு உகந்த ஊர் என்று இந்த சாரக்ஷேத்திரத்தை சொல்லி உள்ளார். இந்த ஊரின் மண், சாரம் நிறைந்தது, அதனால் எம்பெருமான் சாரநாதன், ஸ்தலமும் திருச்சார ஸ்தலம், அது மருவி திருச்சேறை ஆயிற்று.
காவிரித்தாய் தவமிருந்த வரலாறு
ஒரு காலத்தில் விந்திய மலையின் அடிவாரத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, காவேரி, கோதாவரி போன்ற 7 நதிகளும் கன்னிகைகளாக மாறி விளையாடிக் கொண்டிருக்கையில் யார் பெரியர் என்ற விவாதம் ஏற்பட்டது. இதில் மற்ற நதிகள் எல்லாம் விலகிக்கொள்ள கங்கையும் காவிரியும் தாமே நதிகளுள் பெரியவர்கள் என்று வாதிட்டு முடிவில் பிரம்மனிடமே விடை தேடி சென்றனர்.
விஷ்ணுவிடம் இருந்த பக்தியினால், தர்மம், தண்ணீராக மாறியது என்றும், அப்படிப்பட்ட தண்ணீரை, சிறந்த பக்தியுடன் விஷ்ணுவின் திருவடிகளை, அவர் திருவிக்ரமனாக உலகு அளந்த போது, தான் சுத்தம் செய்து மரியாதை செய்ததாகவும் பிரம்மன் கூறுகிறார். எனவே கங்கையே புனிதமானவள், உயர்வானவள் என்று கூறினார்.
இதைக் கேட்டு மிகவும் வருத்தமுற்ற காவேரி நான் கங்கையினும் பெருமைபெற்றவள் என்ற பெயரை அடைய என்ன செய்யவேண்டும் என்று கேட்க, ஸாரபுஷ்கரிணியில் உள்ள அரச மரத்தடியில் திருமாலைக் குறித்து கடுந்தவஞ் செய்யுமாறு கூறினார். அவ்வண்ணமே கடுந்தவஞ்செய்ய, மஹாவிஷ்ணு ஒரு தை மாச பூச நட்சத்திரத்தன்று சிறு குழந்தையாய்த் தோன்றித் தவழ்ந்து வர, அந்த பிரகாசத்தைக் கண்ட காவிரி இது எம்பெருமானே என்று தீர்மானித்து வணங்கினாள்.
உடனே எம்பெருமான் தனது மழலை வேடத்தை மறைத்து கருடவாகனத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளா தேவி, மகாலெட்சுமி, ஸாரநாயகி என்னும் 5 தேவிகளுடன் சங்கு சக்ரத்துடன் காட்சியளித்தார். இக்காட்சியைக் கண்டு பேரானந்தம் கொண்ட காவேரி இதே கோலத்தில் இங்கு காட்சி தரவேண்டுமென்றும், கங்கையினும் மேன்மையைத் தனக்கு தரவேண்டுமெனவும் வேண்டினாள்.
அவ்விதமே அருளிய எம்பெருமான், தான் இராமாயண காலத்தின் முடிவில் காவிரியிடத்தில் தங்குவேன் என்று கூறினார். இராமாவதாரம் முடிந்து, விபீஷணன் எம்பெருமானை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அரங்கநாதனாக காவிரியில் பள்ளிகொண்டார். அன்று முதல் கங்கையில் புனிதமான காவிரி என்று ஆயிற்று.
ஆழ்வார்கள்
எம்பெருமான் குழந்தையாகத் தவழ்ந்து வந்ததால் “மாமதலையாய்” என்று இந்த திவ்யதேசத்திற்கும், காவிரிக்கும் மேன்மை அளித்ததால் “கங்கையிற் புனிதமாய காவேரி” என்று திருவரங்கம் பாசுரத்திலும் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்து உள்ளனர்.
திருமங்கையாழ்வார் இந்த திவ்யதேச எம்பெருமானை பற்றி பாடும் போது, இந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கும் எல்லா பக்தர்களையும், ஆழ்வார் தன்னுடைய தலையில் தாங்குவதாக கூறி உள்ளார். “செல்வத் தண்சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே” (பெரிய திருமொழி 7.4.1) என்ற இந்த வரிக்கு விளக்கம் சொல்லும் பெரியவாச்சான் பிள்ளை, “ஒரு வைணவ பக்தர் இந்த ஊரின் வழி செல்லாமல், வயல்களில் கடந்து சென்று கொண்டு இருந்ததை பார்த்தவர், இந்த ஊரின் வழியே சென்று சார நாதனையும் சேவித்து விட்டு செல்லலாமே” என்று சொன்னதற்கு, அந்த வைணவர், ஆழ்வாரின் இந்த பாசுரத்தை சொல்லி, தான் ஆழ்வாரின் திருமுடியில் ஏறி, ஆழ்வாரிடம் அபச்சார பட வேண்டாம் என்பதால் தான் இந்த ஊர் வழியே செல்லவில்லை என்று கூறினாராம். இது ஒரு ரசமான விளக்கமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும் உரையாசிரியர் கூறி உள்ளார்.
Google Map
திருச்சேறைப் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம் திருச்சேறை பற்றி சொல்வது