A Simple Devotee's Views
பூமிதேவி ஸமேத ஒப்பிலியப்பப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருவிண்ணகர் / ஒப்பிலியப்பன் கோவில், மார்கண்டேய க்ஷேத்திரம் / ஆகாச நகரி | |||
மூலவர் | ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) ஸ்ரீனிவாசன் / உப்பிலியப்பன் | |||
உத்ஸவர் | பொன்னப்பன் | |||
தாயார் | பூமி தேவி தாயார் | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 47 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 34 நம்மாழ்வார் 11 பேயாழ்வார் 2 | |||
தொலைபேசி | +91 435 245 3386 ; +91 435 245 3685 |
கோவில் பற்றி
திருவேங்கடம் செல்ல இயலாதவர்கள் தங்கள் பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்தலாம். திருவேங்கடமுடையானுக்கு தமையனார் என்று ஐதீகம். எம்பெருமானுக்கு உப்பு இல்லாத பிரசாதம். திருவோண நக்ஷத்திரத்தன்று ச்ரவண தீபம் எடுத்து குறி சொல்வது இந்த ஸ்தலத்தின் சிறப்பு.
‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ ‘ என்ற கிருஷ்ண சரம ஸ்லோக பகுதி, எம்பெருமானின் வலது திருக்கரத்தில் வைரங்களால் பதிக்க பட்டு உள்ளது.
இங்குள்ள புஷ்கரணி (இரவு, பகலென்றில்லாமல்) 24 மணி நேரமும் நீராடலாம் என்பதால் அஹோராத்ர தீர்த்தம் என்று ஆயிற்று. வடமொழியில் இத்தலம் வைகுண்டத்திற்குச் சமமானதாகப் பேசப்படுகிறது. எனவே இதனை ஆகாச நகரி என்றே வடநூல்கள்
கூறுகின்றன.
108 திவ்யதேசங்களில், சில ஸ்தலங்களே (6) விண்ணகர் (வைகுந்தம்) என்ற பெயர் பெற்றுள்ளன. அவை :
தாயார் அவதார ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள தாயார் ஸ்ரீதேவி தாயார் தான், ஆனால் பூமாதேவி என்ற பெயருடன் மண்டியிட்டு வணங்கும் திருமண திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இங்கு தாயாருக்கு தனிக்கோவில் இல்லை. இங்கு பெருமாள் மட்டும் தனியே புறப்பாடு ஆவதே இல்லை. எப்போதும் பிராட்டியுடன் சேர்ந்தே செல்வார்.
திருவாய்மொழி காலத்திற்கு முன்பே இந்த எம்பெருமானுக்கு ஒப்பிலியப்பன் என்ற திருநாமமா அல்லது ஆழ்வார் பாடலுக்கு பிறகு தான் இந்த திருநாமம் அமைந்ததா என்று ஒரு சுவாரசியமான விவாதம் இன்றும் நடைபெறும், ஏன் என்றால், ஸ்தலபுராணத்தின் படி இவர் உப்பிலியப்பன் (உப்பு இல்லாத அப்பன்). ஆக, இரண்டுவிதமாகவும் பொருந்தும்.
திருவோண தினங்களில் ஒப்பிலியப்பன் கோயில் மூலவர் நில மாலையிலும், உற்சவர் ரத்ன அங்கியிலும், பூமி தேவி நாச்சியார் ரத்ன கொண்டை, மரகத கிளி, ரத்ன ஜடை அலங்காரத்தில் சேவை சாதிப்பார்கள்.
ஐப்பசி சிரவணத்தன்று தொடங்கி திருக்கல்யாண உற்சவமும், பங்குனி சிரவணத்தை ஒட்டி பிரம்மோற்சவமும், இராம நவமி உற்சவமும் இந்த திவ்ய தேசத்தில் சிறப்பாக நடைபெறுகின்றது. பங்குனி பிரம்மோற்சவத்தின் போது ஒப்பிலியப்பன் வெள்ளி கருட சேவை காண்கின்றார். கட்டளை பிரம்மோற்சவம் இத்திவ்ய தேசத்தின் ஒரு சிறப்பு. இன்றும் தாயாரும் பெருமாளும் எழுந்தருளும் போதெல்லாம், தேசிகனும் உடன் எழுந்தருளுவார்
இந்த எம்பெருமான், இராமனாகவும், கண்ணனாகவும் ஒரே நேரத்தில் சேவை சாதிக்கின்றான். ஏக பத்னி விரதனாக, பூமிதேவித் தாயார் மட்டும் இருப்பதால் இராமன் என்றும் மாம் ஏகம் சரணம் வரஜ (என் ஒருவனையே சரணமாகப் பற்று) என்று வலது திருக்கரத்தில் சொல்வதால் கண்ணனாகவும் காட்சி அளிக்கிறார்.
ஸ்தல வரலாறு
ஒரு சமயம், துளசி தேவி (திருத்துழாய் தேவி), மகாவிஷ்ணுவிடம், தன்னைக்கும் ஸ்ரீதேவி தாயாரைப் போல் எப்பொழுதும் அவருடைய மார்பில் இடம் பெரும் பாக்கியம் கிடைக்கவேண்டும் என்று வேண்டுகிறாள். மஹாவிஷ்ணு, ஸ்ரீதேவி நாச்சியார் கடும் தவம் புரிந்து இந்த இடத்தைப் பெற்று உள்ளாள், என்றும் அவள் மீண்டும் பூவுலகு சென்று, காவிரிக்கரையில் பூதேவி என்ற பெயருடன் பிறந்து தன்னை அடையப் போவதாகவும் சொல்கிறார். அந்த நிகழ்வில், அவளுக்கு துணைபுரிய, துளசி செடியை அங்கு செல்ல சொல்கிறார்.
துளசி, அங்கு சென்று, ஸ்ரீதேவி தாயாருக்கு ஆதரவு தரும் வகையில், நிழல் தரும் செடியாகி அதன் அடியில் ஸ்ரீதேவி தாயார் தோன்றுகிறார். மஹாலக்ஷ்மி (ஸ்ரீதேவி) அவதரிப்பதற்கு ஆதாரமாக துளசி இருந்தபடியால் சிறந்த பேற்றினை பெற்றாள். லக்ஷ்மியின் அருளை ஒருவன் கடும் தவத்திற்கு பிறகே அடைய முடியும். ஆனால் துளசியால் திருமாலை வணங்குபவர்கள் அசுவமேத யாகத்திற்கு உண்டான பலனைப் பெறுவார்கள்.மேலும், எப்போதும் திருமால் விரும்பி ஏற்கும் மாலையாக துளசி திகழ்வாள் என்றும் திருமால் அருள் புரிகிறார்.
மிருகண்டு மகரிஷியின் புதல்வரான மார்க்கண்டேயர் திருமகள் தனக்கு மகளாகவும், திருமால் தனக்கு மாப்பிள்ளையாகவும் வரவேண்டும் என்று பேராவல் கொண்டு இருந்தார். இவ்விடத்தில், திருமாலைக் குறித்து தவம் இருக்க, ஸ்ரீதேவி என்னும் மஹாலக்ஷ்மி, சிறு குழந்தையாக துளசி செடியின் கீழ், நிழலில் தோன்றினார். மகரிஷி, திருமகள், இவள் என்று உணர்ந்து எடுத்து அவளுக்கு பூதேவி என்று திருநாமம் இட்டு வளர்த்து வந்தார்.
ஓரூ பங்குனி மாதம் ஏகாதசி திருவோண நாளன்று திருமால், வயதான பிராமணன் வேடம் பூண்டு, மகரிஷியிடம் பெண் கேட்டு வந்தார். மகரிஷி, தன்மகள் சிறியவள் என்றும், அவர் முதியவர் என்றும் சொல்ல, திருமால் விடாமல் அந்த பெண்ணே வேண்டும் என்று கேட்டார். ரிஷி அவள் சிறியவள், உணவில், உப்பு கூட சேர்க்க தெரியாதவள் என்று சொல்லி பார்த்தார்.
எம்பெருமான், அந்த சிறுமி சமைக்கும் உப்புஇல்லாத உணவே தனக்கு சிறப்பு என்று சொல்லி அவளை மணந்து கொள்ளாமல் செல்ல மறுத்தார். மகரிஷி, வந்திருப்பவர் திருமாலே என்று உணர்ந்து கண் திறக்கும் வேளையில் எம்பெருமான் சங்கு சக்கரத்துடன் காட்சி அளித்தார் என்பதும் மஹரிஷி திருமகளை திருமாலுக்கு மணம் செய்து வைத்தார் என்பதும் வரலாறு.
உப்பு இல்லாத உணவே தனக்கு சிறப்பு என்று எம்பெருமான் சொன்னதால், இன்றும் உப்பு இல்லாத நிவேதனமே உப்பிலாத நிவேதனமே சமர்பிக்க படுகிறது. . இதனால் தான் இப்பெருமானுக்கு உப்பிலியப்பன் என்று திருநாமம் அமைந்தது என்பர்.
ஆழ்வார்
நம்மாழ்வார் தான் இருந்த இடத்திலேயே (திருக்குருகூர் திவ்யதேசம்) இருக்க பல திவ்யதேச எம்பெருமான்கள் அவருக்கு காட்சி கொடுக்க ஆழ்வார் பாசுரங்கள் பாடியதாக ஐதீஹம். திருவிண்ணகர எம்பெருமான் தானே மிகவும் உகந்து ஆழ்வாருக்கு ஐந்து திருக்கோலங்களில் காட்சி கொடுத்தார்.அவையாவன. பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன், இந்த ஐந்து பெயர்களுடன் ஆழ்வார் திருவாய்மொழி (6.3.9) பாசுரம் பாடி உள்ளார்.
என்னப்பன் எனக்காய் இகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என் அப்பனுமாய்
மின்னப் பொன் மதில் சூழ் திருவிண்ணகர் சேர்ந்தவப்பன்
தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாழ் நிழலே