A Simple Devotee's Views
பங்கயச் செல்வித்தாயார் ஸமேத புண்டரீகாக்ஷப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி
திவ்யதேசம் | திருவெள்ளறை, வேதகிரி க்ஷேத்திரம் உத்தம ஷேத்ரம், ஹித ஷேத்ரம் | |||
மூலவர் | புண்டரீகாக்ஷன் | |||
உத்ஸவர் | செந்தாமரை கண்ணன் | |||
தாயார் | பங்கஜவல்லி, செண்பகவல்லி, பங்கயச்செல்வி | |||
திருக்கோலம் | நின்ற | |||
திசை | கிழக்கு | |||
பாசுரங்கள் | 24 | |||
மங்களாசாசனம் | திருமங்கையாழ்வார் 13 ; பெரியாழ்வார் – 11 | |||
தொலைபேசி எண் | +91 431 256 2243; +91 93451 18817 |
கோவில் பற்றி
பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில். இக்கோயிலில் நந்தவனங்கள்,கிணறு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தலம் மிகவும் தொன்மையான தலங்களில் ஒன்றாகும். அதனால் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கபடுகிறது. வெண்மையான பாறையினால் ஆன மலை எனப்பொருள்பட வெள்ளறை எனப்படுகிறது. திரு என்பது சேர்த்து ‘திருவெள்ளறை ’ எனப்படுகிறது. வரை என்பதற்கு குன்று என்ற அர்த்தம் உள்ளதால், மலைமேல் உள்ள கோவிலான இதனை, திருவெள்ளரை என்று சொன்னாலும் தகும்.
வராஹ அவதாரத்தை நினைவுப் படுத்தும் ஷேத்திரம்.
இக்கோயிலில் உத்தராயண வாசல், மற்றும் தட்சிணாயன வாசல் என்று இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசல் வழியாகவும் கோயிலில் எம்பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.
கோவில் மதில்களுக்குள்ளே ஏழு தீர்த்தங்கள் உள்ளன. ஸ்வஸ்திக் வடிவில் உள்ள புஷ்கரணி தரிசிக்க வேண்டிய ஒன்று. இந்த ஸ்வஸ்திக்குளம் ஒரு துறையில் குளிப்பவர்களை இன்னொரு துறையில் குளிப்பவர்கள் பார்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்த்தம் மணிகர்ணிகா தீர்த்தம் என்ற சிறப்புடன் விளங்கிறது.
ஸ்தல புராணம்
சிபிச்சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) எம்பெருமான் காட்சி தந்ததால் எம்பெருமானுக்கு ச்வேதபுரிநாதன் என்றும் இந்த ஊருக்கு ஸ்வேதபுரி என்றும் பெயர் சொல்வார்கள்.
தாயார் ஸ்தலம்
எம்பெருமானுக்கு மூன்று தேவிமார்கள். ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளா தேவி. இவர்கள் முறையே, திருவெள்ளறை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் நாச்சியார்கோவில் ஆகிய மூன்று திவ்ய தேசங்களில் பிரதானமாக இருக்கிறார்கள். இவ்விடத்தில் தாயாரை வணங்கிய பின்னே எம்பெருமான் சந்நதிக்கு செல்ல இயலும். புறப்பாடு ஆகும்பொழுதும் தாயார் பல்லக்கு முன்செல்ல, எம்பெருமான் பல்லக்கு அதை தொடர்ந்து செல்லும். செண்பகவல்லி என்கின்ற பங்கயச் செல்வி தாயாருக்குத் தனிச் சன்னிதி உண்டு. தாயாரின் உற்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம்.
ஆழ்வார் ஆச்சார்யர்கள்
பெரியாழ்வார் கண்ணனின் மேல் கொண்ட பரிவால், குழந்தைக்கு கண் திருஷ்டி வராமல் இருக்க அவனுக்கு காப்பு கட்ட அழைக்கும் பாடல் தொகுப்பு, “இந்திரனோடு பிரமன், ஈசன் இமையவர் எல்லாம்“. (பெரியாழ்வார் திருமொழி, 2.8). ஆழ்வார் திருவெள்ளறை பெருமாளையே இந்த பத்து பாடல்களிலும் ஸ்ரீ கிருஷ்ணராக கொண்டு உள்ளார். பகவானை நோக்கி தவம் செய்த பிராட்டிக்கு (பங்கயச் செல்வி) பெருமாள் செந்தாமரைக் கண்ணனாய் காட்சியளித்தார்.
ஸ்ரீதேவி தாயாரின் பிரதான தேசமான திருவெள்ளறையை ஆழ்வார் குழந்தைக்கு கண் திருஷ்டிப் படாமல் இருக்க எடுத்துக்கொண்டது மிக உகந்ததுவே.
ஓராண்வழி வந்த வைணவ ஆச்சார்யார்களில் ஒருவரான உய்யக்கொண்டார் என்ற ஆச்சாரியார் தோன்றிய ஸ்தலம். உடையவர் (இராமானுஜர்) வைணவத்தை வளர்ப்பதற்கு வாசம் செய்த ஸ்தலம்.
Google Map
திருவெள்ளறை பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்
தினம் ஒரு திவ்யதேசம் திருவெள்ளறை பற்றி சொல்வது