001 திருவரங்கம் / 001 Thiruvarangam

ரங்கநாயகி தாயார் ஸமேத ரங்கநாதப்பெருமாள் திருவடிகள் போற்றி போற்றி

திவ்யதேசம் திருஅரங்கம் / பூலோக வைகுந்தம்
மூலவர் ரங்கநாதர் / பெரியபெருமாள் / அழகியமணவாளன்
உத்சவர் நம்பெருமாள்
தாயார் ரங்கநாயகி / ரங்கநாச்சியார்
திருக்கோலம் கிடந்த
திசை தெற்கு
பாசுரங்கள் 247
மங்களாசாசனம் திருமங்கை ஆழ்வார் -73
தொண்டரடிப்பொடி ஆழ்வார் – 55
பெரியாழ்வார் – 35
குலசேகர ஆழ்வார் – 31
திருமழிசையாழ்வார் – 14
நம்மாழ்வார் – 12
ஆண்டாள் -10
திருப்பாணாழ்வார் – 10
பூதத்தாழ்வார் -4
பேய் ஆழ்வார் – 2
பொய்கையாழ்வார் – 1

கோவில் பற்றி

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களில் முதன்மையானதாகவும், ‘கோவில்’ என்றாலே அது திருவரங்கம் என்று பெயர் பெற்றதும், பூலோக வைகுந்தம் என்று பெயர் பெற்றதும் போக மண்டபம் என்றும் சில சிறப்புகள் ஆகும்.

21 கோபுரங்கள், 7 சுற்று பிரகாரங்கள், சுமார் 54 சன்னதிகள், 156 ஏக்கர் நிலப்பரப்பில், என்று சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியாவிலேயே மிக பெரிய ராஜகோபுரம் (சுமார் 236 அடி உயரமும், 13 நிலைகளும்) ஆகும். அஹோபில ஜீயர் அவர்களின் கடும் முயற்சியால் இந்த ராஜகோபுரம் கட்டப்பட்டது.

ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களில் ஒன்று. திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய எட்டுத் திருத்தலங்களும்  ஸ்வயம் வ்யக்த க்ஷேத்திரங்களாகும். (இவற்றில், புஷ்கரம், ஸ்ரீமுஷ்ணம் இரண்டும் 108 திவ்யதேசங்களில் கிடையாது).

திருவரங்கம், ஸ்ரீவைகுந்ததில் இருந்து விழுந்த ஒரு துளி என்று சொல்வதுண்டு. இந்த கோவிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.

மூலவர் ரங்கநாதர் கர்பகிரகத்தின் மேல் உள்ள தங்க கோபுரத்தின் தெற்கு பக்கம் பரவாசுதேவர் தங்க விக்ரஹம் உள்ளது.

மூலவர் உத்சவர் இருவருக்கும் ரேவதி நக்ஷத்திரம். தாயாருக்கு உத்திரநக்ஷத்திரம்.

இங்கு தாயார் சன்னதியில் உற்சவர் தவிர இரண்டு மஹாலக்ஷ்மி தாயார்கள் ஒருவர் பின் ஒருவராக காட்சி அளிப்பர். இவர்களில் ஒருவர், முஸ்லீம் மன்னர்கள் படையெடுப்பின் போது மறைத்து வைக்கப்பட்டு, பின் ஒருநாள் காணப்பெற்று மீண்டும் சன்னதியில் காட்சி அளிக்கிறார்.

மேட்டு அழகிய சிங்கர் சன்னதி, தாயார் சன்னதி அருகில் உள்ளது, இங்கே தான் கம்ப ராமாயணம் அரங்கேற்ற மண்டபமும் உள்ளது. மருத்துவக் கடவுளான தன்வந்த்ரிக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. சக்ரத்தாழ்வார், கருடாழ்வார், ராமானுஜர், தேசிகன், கருடமண்டபம் என்று சேவிக்க வேண்டிய பல சந்நதிகள் உள்ளன.

ஸ்ரீரங்கவிமானம், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் என்று யார் தன்னை பிரதக்ஷிணம் செய்தாலும், அவர்களுக்கு மிக உயர்ந்த பலனைக் கொடுப்பதாக, பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. இந்த விமானத்தை 24 முறை சுற்றி வந்தவன் ஒரு கோடி காயத்திரி மந்திரம் சொன்ன பலனை அடைகிறான் என்றும் அதே புராணம் கூறுகிறது. இரண்டு முறை சுற்றி வந்தால், எல்லா லோகங்களையும் சுற்றிவந்த பலன் கிடைக்கும். இந்த ரங்க விமானத்தை தரிசிப்பது, நமஸ்கரிப்பது மற்றும் சுற்றி வருவது என்பவைகளை பக்தியுடன் செய்தால், இந்த உலகவாழ்க்கையில் இருந்து விடுதலை அழித்து மோக்ஷம் தருவதாக, எம்பெருமான் தாயாரிடம் சொல்லிக்கொண்டு இருந்ததை தான் கேட்டதாக, ப்ரஹ்மா சொல்வது இந்த புராணத்தில் வருகிறது.

ராமன் ஆராதித்த பெருமாள்

சத்யலோகத்தில் பிரம்மாவால் ஆராதிக்கப்பட்டு வந்தவர் இந்த ரங்கநாதர். சூரிய வம்ஸ மன்னர்களுக்கு கொடுக்கப்பட்டு, அவர்களால் ஆராதிக்கப்பட்டு வந்தவர். சக்ரவர்த்தி திருமகனான இராமன், ரங்கநாதரை தன் ஆராதனை பெருமாளாக கொண்டதாக வால்மீகி ராமாயணமும் கூறுகிறது. பட்டாபிஷேகத்திற்கு முதல்நாள் கைகேயியை சந்திப்பதற்கு முன்னால் ரங்கநாதரை ஆராதனை செய்யும் காட்சி உள்ளது. இந்த கோவில் இராமாயண காலம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோவில்.

ஸ்தல புராணம்

இராமன் இராவணனோடு யுத்தம் செய்ததில் தனக்கு உதவிய விபீஷணனுக்கு இவரை பரிசாக வழங்கினார். விபீஷணன் இலங்கை நோக்கி செல்லும் வழியில் இவரை திருவரங்கத்தில் சிறிது நேரம் கீழே இறக்கி வைத்தார். பின் அவரால் திரும்பி எடுத்து செல்ல இயலவில்லை. பெருமாளின் திருவுள்ளப்படி அங்கேயே அவரை எழுந்தருளச் செய்தார்.

தெற்கு நோக்கி

தென்திசை நோக்கி பள்ளி கொள்ளும் (பெருமாள் திருமொழி 1.10) என்று குலசேகர ஆழ்வார் சொல்வது போல், எம்பெருமான் தனக்குப் பிரியமான விபீஷ்ணன் வாழும் தெற்கு திசையை நோக்கி கண்வளர்ந்து அருள்கிறார்.

மணவாளனான திருவரங்கன் பள்ளிகொண்டு இருக்கையில் தெற்கு திசையை நோக்கி கடாக்ஷித்து கொண்டு இருப்பது மணமகளான ஆண்டாளுக்காகவே மட்டும் என்றும் சொல்வதுண்டு. வேதாந்த தேசிகன் என்னும் ஆச்சார்யர் தன்னுடைய கோதா ஸ்துதி (11) என்ற நூலில், தெற்கு திசை பெருமை பெற்றதே ஆண்டாள் திருவரங்கதிற்கு தெற்கு திசையில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்ததால் தான் என்கிறார்.

நம்பெருமாள் திவ்யதரிசனம் – நன்றி whatsapp குரூப் நண்பர்கள்

Google Map

திருவரங்கம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

ஸ்ரீ வேளுக்குடி சுவாமி

தினம் ஒரு திவ்யதேசம் திருவரங்கம் பற்றி சொல்வது

திருவரங்கம் பற்றி நம் வலைப்பதிவுகளில்

Thanks to friends from Whatsapp group

நம்பெருமாள் பெயர் காரணம்

ஸ்ரீரங்கத்தில் எழுத்தருளியிருக்கும் ரங்கநாதரின் மூலவரின் திருப்பெயர் “பெரிய பெருமாள்” என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால் உற்சவரான அழகிய மணவாளனுக்கோ “நம்பெருமாள்” என திருப்பெயர். கலாப காலத்தில், திருவரங்கத்தில் உற்சவரை போலவே ஒரு திருமேனியை செய்து, அந்த மூர்த்திக்கு திருவாராதனம் செய்து வந்தனர். கலாப காலம் முடிந்த பின்னர், அழகிய மணவாளனையும் திருவரங்கம் எழுந்தருள, எவர் உண்மையான உற்சவ மூர்த்தி என்று கண்டுபிடிக்க அரும்பாடு பட்டனர்.

அச்சமயத்தில்,வயது முதிர்ந்த, கண் பார்வை இல்லாத ஸ்ரீ வைஷ்ணவ வண்ணான் தான் உற்சவ மூர்த்தியின் திருமஞ்சன தீர்த்தம் மூலமாக கண்டுபிடித்தார் எனவும், அவர் தான் “நம்பெருமாள்” என் உற்சவ மூர்த்திக்கு பெயர் சூடியதாக என்பதை பல்வேறு சரிதம் மூலம் அறிகிறோம்.

ஒரு சலவை தொழிலாளி இது தான் “நம் பெருமாள்”என சொன்னதை, அரங்கன் அடியார்கள் ஒப்புக்கொண்ட நாள் வைகாசி 17. ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றான். ஆனால் திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் அழகிய மணவாளனோ 48 ஆண்டுகள் வனவாசம் சென்றான்.

1310 ஆம் ஆண்டு மாலிக் கபூர் படையெடுப்பின் போது, திருவரங்கத்தின் உற்சவர் அழகிய மணவாளன் கவர்ந்து செல்லப்பட்டார். உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர் பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லி வரை சென்று அழகிய மணவாளனை மீட்டு வந்தனர்…

ஆனால், 1323 ஆம் ஆண்டு முகம்மது பின் துக்ளக்கின் படையெடுப்பின் போது, பிள்ளை லோகாச்சாரியார் என்கிற வைணவப் பெரியவர் மூலவர் ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் சுவர் எழுப்பி மறைத்துவிட்டு, உற்சவர் அழகிய மணவாளனை பாதுகாக்க வேண்டி தம்முடன் எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு கி.பி. 1371ஆம் ஆண்டு (பரீதாபி ஆண்டு-வைகாசி மாதம் 17ஆம்நாள்) திருவரங்கத்திற்கு 48 ஆண்டுகள் கழிந்து மீண்டும் எழுந்தருளினார். இதுவே அரங்கனின் வனவாசம் என்று வர்ணிக்கப்படுகிறது.

1323 ஆம் ஆண்டு சென்ற அழகிய மணவாளன், 48 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருவரங்கம் வந்தபோது கிட்டத்தட்ட அனைவரும் அவரை மறந்தே விட்டனர். ஏற்கனவே படையெடுப்பின் போது பலர் கொல்லப் பட்டதால், வந்தவர் திருவரங்கத்தில் இருந்த அசல் அழகிய மணவாளன் தான என்கிற சந்தேகம் அனைவருக்கும் ஏற்பட்டது.

தங்கள் சந்தேகத்தை எப்படி தீர்த்துக்கொள்வது என்று வழி தெரியாது தவித்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு அழகிய மணவாளனின் வஸ்திரங்களை துவைத்த ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி) ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் சென்றால் இதற்கு ஏதேனும் விடைக்கிடைக்கலாம் என்றும் தெரிந்தது. அந்த சலவைத் தொழிலாளிக்கு வயது 90 என்பது மட்டுமல்ல அவருக்கு இரண்டு கண்களிலும் பார்வை வேறு கிடையாது.

இவர்கள் வந்த நோக்கத்தை தெரிந்த கொண்ட அந்த தொழிலாளி, “கவலைப்படாதீர்கள்… எனக்கு புறக்கண் தான் இல்லையே தவிர அரங்கன் தந்த அகக்கண் இன்னமும் உள்ளது” என்று கூறியவர், “அரங்கனின் மேனியில் கஸ்தூரி அதிகளவு , பயன்படுத்தப்பட்டு இருக்கும். அவரது ஆடையை நான் துவைப்பதற்கு முன், அந்த ஆடையை நனைத்து அதை பிழிந்து அந்த நீரை பருகிவிட்டே தான் ஒவ்வொரு முறையும் சலவை செய்வது வழக்கம், எனவே அரங்கனுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்துவிட்டு அந்த ஈர ஆடையை என்னிடம் கொடுங்கள் போதும்!” என்றும் கூறினார்.

அவர்களும் அதே போன்று அரங்கனுக்கு திருமஞ்சனம் செய்து ஈர ஆடையை தர, அதை கண்களில் ஒற்றிக்கொண்டு பிழிந்து பருகிய அந்த சலவைத் தொழிலாளி, “இவரே நம் பெருமாள்!” என்று உற்சாகத்துடன் கூக்குரலிட்டார். அன்று முதல் தான் திருவரங்கத்தில் உற்சவருக்கு ‘நம்பெருமாள்’ என்று பெயர் ஏற்பட்டது.

இந்து கோவில்கள் சிதைப்பு மற்றும் திரு அரங்கன் உலா வந்த இந்த 48 ஆண்டுகள் பற்றிய முழு வரலாற்று தகவல் ஶ்ரீவேணுகோபாலன் அவர்கள் எழுதிய ” திருவரங்கன் உலா” என்ற புத்தகமாக வந்துள்ளது…

அழகியமணவாளன்

இப்பெருமானுக்கு அழகிய மணவாளன் என்பதும் ஒரு திருநாமம். அதாவது இவர் மிகவும் அழகான மாப்பிள்ளை ஆவார். எனவேதான் அழகிய மணவாளர் ஆனார். ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாளையும், உறையூர் கமலவல்லி நாச்சியாரையும் இவர் அழகான மாப்பிள்ளை திருக்கோலத்தில் ஏற்றுக் கொண்டார்.  திருவரங்கனுக்கு ஏழு நாச்சிமார். அவர்கள்,

 • ஸ்ரீ தேவி
 • பூமாதேவி
 • ரங்கநாச்சியார் (தனிக்கோவில் நாச்சியார்)
 • கோதை என்னும் ஆண்டாள் (இவர் பெரியாழ்வாரின் திருமகள்)
 • கமலவல்லி நாச்சியார் (உறையூர் நாச்சியார், பங்குனி உத்திரதிருவிழா 6ம் நாள் உறையூரில் சேர்த்தி )
 • சேரகுலவல்லி நாச்சியார் (இவர் குலசேகர ஆழ்வாரின் திருமகள், ஸ்ரீராமநவமி அன்று சேர்த்தி)
 • துலுக்கநாச்சியார் (டெல்லி பாதுஷாவின் மகள், எம்பெருமான் மீது தீராத அன்பு, அதனாலேயே இங்கு பெருமாளுக்கு ரொட்டி நிவேத்யம் )

திருவரங்கம் திருச்சுற்றுகள் (பிரகாரங்கள்)

திருவரங்கம் சப்த பிரகாரங்கள் என்று ஏழு திருச்சுற்றுக்கள் ஏழு மதில்கள் கொண்டு அமைக்கப்பட்டு இருப்பதாக பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.  ஏழு உலகங்கட்கு உண்டான பெயர்களையே இந்த ஏழு மதில்கட்கு வைத்திருப்பதும், பூலோகத்திலிருந்து ஒவ்வொரு உலகமாக கடந்து சென்றால் ஏழாவது உலகமாக சத்திய லோகம் என்றும் சொல்வது போல் சத்யலோகத்தில் இருந்த வந்த எம்பெருமான் ஏழாவது திருச்சுற்றில் எழுந்தியருளி உள்ளான்.

இன்று பெரிய ராஜகோபுர வாசலைக்கொண்டு ஏழு திருசுற்றுக்களை உள்ளடக்கிய எட்டாவது சுற்றினையும் சேர்த்து கீழே ஒரு சிறு அட்டவணையின் மூலம் அவை என்ன என்றும், அங்கு என்ன உள்ளன என்றும் ஒரு பார்ப்போம். இதற்கு மிகவும் உதவியாக இருந்த 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு என்ற நூலை எழுதிய ஆசிரியர் டாக்டர்.வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் B.A., காரைக்குடி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி.

எண்ஏழு லோக பெயர்கள்திருச்சுற்று மற்றும் வாசல்உள்ளவை முக்கிய சன்னதிகள்முக்கிய மண்டபங்கள்முக்கிய நிகழ்வுகள்
8அடைய வளஞ்சான் திருச்சுற்றுமொட்டை கோபுரம், முனியப்பன் கோட்டை வாசல்மிக உயர்ந்த ராஜகோபுரம் ராயர்கோபுரம் தெற்கு கோபுரம்முனிக்கு அப்பனான ஸ்ரீநிவாசன்
7பூலோகம்ராஜ வீதி, சித்திரை வீதிகடைகள் வீடுகள்கண்ணன் சந்நிதி, ஆஞ்சநேயர் கோவில்வானமாமலை மண்டபம்
6புவர் லோகம்திருவிக்ரமன் திருவீதி, உள்திருவீதி / உள்வீதி / உத்திர வீதிஸ்ரீரங்க நாராயண
ஜீயர் மடம், அஹோபில மடம், மணவாள
மாமுனிகள் மடம்
யானை கட்டும் மண்டபம்இராமானுஜர் தங்கி இருந்து திருவரங்கம் கோவில் நிர்வாகம் செய்த மடம்
5சுவர் லோகம்நான்முகன் கோட்டை வாசல், அகளங்கன் திருச்சுற்றுசோழமன்னன் அகளங்கன் கட்டிய மதில்தாயார் சன்னதி, ஆண்டாள்,
சக்கரத்தாழ்வார், வேணுகோபால கிருஷ்ணர், மேட்டழகிய
சிங்கர் (நரசிங்கப் பெருமாள்), தொண்டரடிப் பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார், கூரத்தாழ்வார், இராமானுஜர், பிள்ளை
லோகாச்சார்யார்,
தேசிகன்
எம்பெருமான் திருஷ்டி கழிக்கும் (திருவந்திக் காப்பு) நாலுகால் மண்டபம், ஸ்ரீரங்க விலாச
மண்டபம், வஸந்த
மண்டபம், கம்பர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபமும் அதன் நடுவே உள்ள திருமாமணி மண்டபமும்
வைகாசி திருவிழா வசந்த மண்டபத்தில் நடக்கும் ; திருமாமணி மண்டபத்தில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியன்று
தொடங்கும் திருவாய்மொழித் திருநாள் உற்சவம் நடக்கும்
4மஹர் லோகம்திருமங்கை மன்னன்
சுற்று, ஆலிநாடான் வீதி கார்த்திகை கோபுர வாசல்
திருமங்கை ஆழ்வார் கட்டிய மதில், சொர்க்க வாசல் , சந்திர புஷக்ரணி, பிரசாதம் விற்கும் இடம்தன்வந்திரி, கருடாழ்வார், முதலாழ்வார்கள் மூவர், நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருக்கச்சி நம்பிகள் சன்னதிகள்பரமன் மண்டபம்
3ஜநோ லோகம்ஆர்யபட்டர் வாசல், குலசேகரன் திருச்சுற்று102 தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்கப்பட்ட
துவஜஸ்தம்பம் (கொடிமரம்)
உள்கோடை மண்டபம், பரமபதவாசல்,
டோலோத்ஸ்வ (ஊஞ்சல் உற்சவம்) மண்டபம்
2தபோ லோகம்ராஜ மகேந்திரன்
திருச்சுற்று, நாழிகேட்டான் வாசல்
ராஜமகேந்திர சோழனால் கட்டப்பட்டது. யாகசாலை, கண்ணாடி அறை, திருப்பரி வட்டாரங்கள் வைக்குமிடம்சேனை முதலியார் சன்னிதி, துலுக்க நாச்சியார் சன்னிதிகிளி மண்டபம்
குடும்பத்துடன் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் காட்சி; மணவாள மாமுனிகள் ஸ்ரீசைலேச தனியனை பெற்றது; கற்பூரப் படியேத்தம்,
கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியன்று நடைபெறும்.
1சத்திய லோகம்திருஅணுக்கன் திருவாசல்சோழமன்னன் தர்மவர்மன் கட்டியதுதிருவரங்கன் கருவறை (மூலஸ்தானம்)ரங்கமண்டபம் /
காயத்ரி மண்டபம்
இதில் உள்ள 24 தூண்கள் காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களாக
கூறுவர்.

திருவரங்கம் வரைபடம்

திருவிழாக்கள்

திருவரங்கத்தில் எல்லா நாட்களும் திருநாட்களே. வருடத்தில் 300 நாட்களுக்கு மேலாக இங்கு ஏதாவது உற்சவம் நடந்து கொண்டே இருக்கும். தை, மாசி, மற்றும் சித்திரை என்ற 3 பிரம்மோத்ஸவங்கள், வைகுண்ட ஏகாதசி, மாசி மாத தெப்ப திருவிழா என்று பல விழாக்கள் இருந்தாலும், சிலவற்றை இங்கே காண்போம்.

வைகுண்ட ஏகாதசி

பகல் பத்து மற்றும் இராப்பத்து என்று இரண்டு பத்து நாட்களில் எம்பெருமான் முன்னிலையில் திவ்யப்ரபந்த பாசுரங்களை சேவிப்பார்கள். இது பற்றி மேலும் இங்கே காணலாம். திருவரங்க திருநாள் என்று ஆசையுடன் அழைக்கப்படும் இந்த வைகுந்த ஏகாதசி விழா முடிந்தவுடன், மீண்டும் அடுத்த ஆண்டும் இந்த விழாவை சேவிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் முடிப்பார்கள்.

திருவரங்க திருநாளும் நிறைந்தது. அரங்கன் சேவையில் திரண்ட மக்கள் மனமும் கரைந்தது. அழகாய் ஆபரணங்கள், மிடுக்காய் நடை, அசைந்து ஏறிய படியேத்தம், இனிய வீணை ஏகாந்தம், கானம் குளிர்ந்த அரை சேவை, பரவசமான பரமபதவாசல் திறப்பு, காண கண் கோடி வேண்டிய முத்தங்கி, ரத்தினங்கி சேவைகள், நளினமான நாச்சியார் திருக்கோலம், மின்னலென வந்த கைத்தல சேவை, துல்லியமான வையாளி – வேடுபறி, பொங்குபுனல் தீர்த்தவாரி, அவபிரத ஸ்நானமாய் கண்டருளிய திருமஞ்சனம், ஆசை ஆசையாக ஆழ்வாருக்கு தன்னுடைசோதியை காட்டிக் கொடுத்த மோக்ஷானுபவம், ஆழ்வார்- ஆச்சார்ய புருஷர்களின் குழாமும் அவர்களுக்கு அளித்த மரியாதையும், கொட்டும்- தட்டும்-முட்டும்-மங்களவாத்ய முழக்கமும், அலங்கார அன்னமும், திருப்பாவாடை பிரசாதமும், வெள்ளிச் சம்பா அமுதுபடியும், செல்வர் அப்பமும், உருப்படி வடையும் இனிதாக கண்டருளி, பகலில் சாதராவும், இரவில் பனி சல்லாவும், குளிர் தெரியாத வெட்டிவேர் சப்பரமும், கண் திருஷ்டி படுமோ என்று எடுத்த திருவந்தி காப்பும், சிம்ம, ஸர்ப கதி நடையும், நாலாயிரமும் சேவி மடுத்த நம்பெருமாளின் சேவை இதே போல் இனி அடுத்த வருடமும் நமக்கு கிடைக்க அவரை ப்ரார்த்திப்போம்.

(மேலே கொடுத்துள்ள இந்த பிரார்த்தனை பகுதியை எழுதிய whatsapp நண்பருக்கு நன்றி.)

பங்குனி உத்திரம்

சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு ப்ரஹ்மா நடத்திய பிரம்மோத்ஸவம் பங்குனி மாதத்தில் நடப்பதாக ஐதீகம். திருவரங்கத்தில் பங்குனி பிரம்மோத்ஸவத்தை ஆதிபிரம்மோத்ஸவம் என்று அழைக்கிறார்கள். இதன் இடையில் வரும் உத்திர நட்சத்திர நாள் அன்று தாயாருடன் பெருமாள் சேர்த்தி காண்கிறார்.

திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் என்ற விழாவில் நம்மாழ்வாரின் பங்கு மிகப் பெரியது. பெருமாள், உறையூரில் சேர்த்தி கண்ட பின்பு ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் வரும் போது, அவரை உள்ளே விடாமல் பெரிய பிராட்டியார் தடுக்கும் போது, நம்மாழ்வார் தான் வந்து சமரசம் செய்து வைப்பார். பிராட்டியாரும் நம் பெரியன் சொல்படி கேட்டோம் என்று ஆழ்வாருக்கு உயர்ந்த மரியாதையை தருவார்.   ‘நம் பெரியன்’ என்று சொன்னதால் நம்மாழ்வார் என்ற பெயர் தாயார் கொடுத்ததாக கொள்ளலாம்.

கைசிக ஏகாதசி

கைசிக ஏகாதசி (கார்த்திகை, வளர்பிறை) அன்று இரவு, பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள், விடிய விடிய சாற்றப்படுகின்றன. இதை பற்றி மேலும் இங்கே காணலாம். கைசிக ஏகாதசி அன்று கற்பூர படியேற்றம்.

ஸ்ரீரங்கத்தில் ஒரு மாதம் முன்னதாகவே கைசிக ஏகாதசியும்/ஸ்ரீவைகுண்ட ஏகாதசியும்,
19 வருடங்களுக்கு ஒருமுறை கார்த்திகை மாதத்திலே, ஸ்ரீரங்கம் திவ்ய தேசத்தில், மட்டும் நடைபெறும். விஜயநகர பேரரசு காலத்தில் தைத்திருநாள் ( தை பிரம்மோற்ஸவம்) ஏற்படுத்தப்பட்டபோது, மார்கழி கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், தை முதலில் தை திருநாளும் வந்தால்,எதைக் கொண்டாடுவது எப்படிக் கொண்டாடுவது என கேள்வி வந்தபோது, ஸ்ரீ மணவாள மாமுனிகளின் நியமனத்தின்படி,19 வருடங்களுக்கு ஒருமுறை இந்த மாதிரி வைகுண்ட ஏகாதசி (பகல்பத்து, ராப்பத்து) திருவிழாவை கார்த்திகையில் பெரிய பெருமாளின் திருவுள்ளம் அறிந்து மாற்றியமைத்து ஏற்படுத்தினார்.

அதன்படி இந்த ஆண்டு,வைகுண்ட ஏகாதசி கார்த்திகை மாதத்தில்–14/12/2021–அநுஷ்டிக்கப் படுவதால், அதற்கேற்ப, கைசிக ஏகாதசியும் ஒரு மாதம் முன்னரே–ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி–15/11/2021–அனுஷ்டிக்கப் படுகிறது. ஸ்ரீபெரும்புதூரிலும் தை மாதம் குரு புஷ்யம் நடப்பதால், இவ்வாறாக ஒரு மாதம் முன்னரே கொண்டாடுகிறார்கள்.
மற்ற எல்லா திவ்ய தேசங்களிலும் எப்போதும் போல கைசிக ஏகாதசி கார்த்திகையிலும் (14/12) ,ஸ்ரீவைகுண்ட ஏகாதசி மார்கழியிலும்(13/01/2022) அனுஷ்டிக்கப் படுகிறது.

ஆடிப்பெருக்கு

ஆனி கேட்டை நக்ஷத்திரத்திற்கு 45 நாட்கள் கழித்து ஆடிப்பெருக்கு கொண்டப்படும். அப்பொழுது எம்பெருமான், அம்மா மண்டபம் எழுந்தருளி காவேரி தாயாருக்கு பட்டு புடவை, வளையல்கள், குங்குமம் மற்றும் வெற்றிலை பாக்கு அவற்றை சீதனமாய் அளிப்பார்.

கஜேந்திர மோக்ஷம்

சித்ரா பௌர்ணமி அன்று அம்மாமண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளி கஜேந்திர மோக்ஷம் திருவிழா நடைபெறுகிறது.

ஆழ்வார்கள்

திருவரங்கம் பற்றி ஆழ்வார்களின் பாடல்களையும், அவர்கள் அனுபவங்களையும் கொடுக்க, தனித்தனியே, பல பாகங்களாக எழுத வேண்டும். அதற்குரிய ஞானமோ, அனுபவமோ, முதிர்ச்சியோ அடியேனிடம் இல்லை. இருந்தாலும், ஒரு சில விஷயங்களை மட்டும், கோடி காட்டி, இதன் முழு விவரமும் வேண்டுவோர் சரியான தகவல்களை பெற்று பயனடைய வேண்டுகிறேன்.

இது அதிகமான ஆழ்வார்களாலும், அதிகமான பாசுரங்களாலும் (247) பாடப்பட்ட திவ்யதேசம்.மதுரகவி ஆழ்வார் தவிர மற்ற எல்லா ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார் என்ற இரண்டு ஆழ்வார்கள், இந்த திவ்யதேச எம்பெருமானான திருவரங்கநாதனையே தன் பாசுரங்களில் பிரதான நாயகனாக வைத்து இயற்றி உள்ளார்கள்.

எம்பெருமானின் அடியார்கள் எக்குலத்தவராயினும் சமமே என்று பறைசாற்றும், சாதி சமய பேதமற்ற வைணவம் திருவரங்கத்திலே காலூன்றி எத்திக்கும் பரவ இவ்வரங்கனே வித்திட்டார்.

நம்மாழ்வார்

நம்மாழ்வார் என்று பெயர் கொடுத்ததே திருவரங்க நாச்சியாரும்,திருவரங்க நாதனுமும் தான்.

 • நம் பெரியவன் சொல் கேட்டு என்று பங்குனி உத்திர திருவிழாவில் தாயார் சொன்னது,
 • வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு, திருவாய்மொழி கேட்க நம் ஆழ்வானை ஆழ்வார்திருநகரியில் இருந்து எழுந்தருள எம்பெருமான் சொன்னது,
 • கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று பாடிய நம் ஆழ்வாரை பாடினீரோ என்று மேட்டு அழகியசிங்கர் சன்னதி அர்ச்சகர் மூலம் கேட்டது.

நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி 1102 பாடல்களும் திருவரங்கனுக்கே என்பதை வான் திகழும் சோலை மதில் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் என்று பராசர பட்டர் என்னும் ஆச்சாரியார் பாடி உள்ளார்.

கங்குலும் பகலும் என்ற திருவாய்மொழி, 7ம் பத்து 2ம் பதிகம் பத்து பாசுரங்களும் திருவரங்கநாதனுக்கு நம்மாழ்வார் பாடியது. இந்த பத்து பாசுரங்களில் திருவாய்மொழியில் சொன்ன பத்து பத்துக்களில் சொன்ன அத்தனை கருத்துக்களையும் சுருக்கமாக சொல்லி இருப்பதால் திருவாய்மொழி முழுவதும் அரங்கனுக்கே என்று சொல்வார்கள்.

பெரியாழ்வார்

பெரியாழ்வார், திருவரங்கநாதனின் மாமனார் ஆவார். ஆண்டாள் இவரது மகள். திருவரங்கனின் மேல் பக்தி கொண்டு அவரையே மணவாளனாக பற்றிக்கொண்டாள்.

ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால், திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் கொண்டு போனான் ” என்ற பாடல், திருவரங்கநாதனுக்காக பாடியது. அதையே சுவாமி ராமானுஜர், கூரத்தாழ்வான் பரமபதித்த போது, மிக பொருத்தமாக நினைவு கூர்ந்தார் என்பதும் வரலாறு.

தன்னடியார் திறத்தகத்து தாமரையாள் ஆகிலும் என்ற பெரியாழ்வார் திருமொழி, (4.9.2), பாசுரம், அச்சுதன் (நழுவுதல் இல்லாதவன்) என்ற திருநாம விளக்கத்திற்கு பொருத்தமான திருவரங்கன் பாசுரம்.

ஆண்டாள்

திருவரங்கத்து செல்வனை நினைத்து ஆண்டாள் உருகும் பாசுரங்களில், அவனையே விரும்பும் தனக்கு அவன் நடையழகைக் காட்ட வேண்டுகிறார்.   பெண்ணின் வருத்தம் அறிந்தவன் என்று இராமாவதாரத்தில் காட்டிக்கொண்ட பெருமாள் தன் விஷயத்தில் வேறுபடுகிறாரே என்றும், தம்மை விரும்புவரை தான் விரும்புவேன் என்று வராக அவதாரத்தில் சரமச்லோகத்தில் சொன்ன வார்த்தைகள் பொய்யாகாமல் இருக்க வேண்டுமே என்றும் ஆண்டாள் கவலைப்படுகிறார். புவனியும், விண்ணுலகும் ஆள்கின்ற எம்பெருமான், செங்கோலுடைய திருவரங்க செல்வனார் என்றும், திருவரங்க செல்வனார் பேசிஇருப்பனகள் பேர்க்கவும் பேராவே என்றும், தம்மை உகப்பாரை தாம் உகப்பார் என்னும் சொல் என்ற ஆண்டாளின் வார்த்தைகள் நயமானவை.

குலசேகர ஆழ்வார்

திருவரங்கத்திற்காக மூன்று பதிகங்கள் பாடிய குலசேகராழ்வார் தன்னுடைய பெருமாள் திருமொழி என்ற பிரபந்தத்தின் முதல் பதிகத்தில், திருவரங்கம்  பெரியகோயிலில்  திருவனந்தாழ்வான் மீது பள்ளிகொண்டுள்ள அழகிய மணவாளனை  கண்ணாரக்கண்டு களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ என்கிறார். பெரியபெருமாளை ஆராதிக்கின்ற அடியார்களோடு கூடி, கலந்து, வாயாரப் பாடி, அதனால் ஆனந்தக்கண்ணீர் பெருகி,  தலைகால் தெரியாமல் துள்ளிக் கூத்தாடி, நிலத்தில் வீழ்ந்து புரளும்படியான பாக்கியம் வாய்ப்பது என்றைக்கோ என்கிறார்.

முதல் பதிகத்தில், எம்பெருமானை எப்போது காண்போமோ (பகவத் பக்தி)  என்று  சொன்ன ஆழ்வார், இரண்டாம் பதிகத்தில் எம்பெருமானை நேசிக்கும் பக்தர்களை (பாகவத பக்தி) பற்றி சொன்ன ஆழ்வார், மூன்றாம் பதிகத்தில் இவ்வுலக இன்பத்தில் மட்டும் கவனம் செலுத்தும், மனிதர்களுடன் தான் சேர்வதில்லை என்றும், எம்பெருமானுக்குப் பிடிக்காதவற்றை செய்யும் சாமானிய மக்களின் சகவாசத்தை,  விலக்கி விடவும் சொல்கிறார்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

இவர் அருளிய திவ்யப்ரபந்தங்கள் இரண்டிற்கும் திருவரங்கனே பிரதானம். முதலில், நாற்பது ஐந்து பாசுரங்கள் கொண்ட திருமாலை. திருமாலை அறியாதார், திருமாலயே (எம்பெருமானையே) அறியாதவர் என்று பழமொழி கூறும் அளவுக்கு பிரசித்தி பெற்றது. அடுத்தது, அர்ச்சாவதாரத்தில் அரங்கனைத் துயில் எழுப்பும் விதமாக இயற்றப்பட்ட திருப்பள்ளியெழுச்சி. பொதுவாக, ஒவ்வொரு நாளும், காலையில் எம்பெருமானை எழுப்புவதற்கு எல்லா வைணவக் கோவில்களிலும் பாடப்பாடுவது.

தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த திவ்யதேசத்தில், நந்தவன கைங்கர்யங்கள் செய்து உள்ளார். திருமங்கையாழ்வார் திருமதிள் கைங்கர்யங்கள் செய்து உள்ளார். அந்த மதில் வரும் வழியில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் நந்தவனம் இருந்ததால் அதற்கு ஒரு தடங்கலும் வராமல் மதிலை வளைத்து கட்டினார். அதனை அறிந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார், தான் மலர் பறிக்கும் ஒரு கருவிக்கு ‘அருள்மாரி’ என்று திருமங்கையாழ்வாரின் பட்ட பெயரை சூட்டி மகிழ்ந்தார்.

திருப்பாணாழ்வார்

பாணர் குலத்தை சேர்ந்த இந்த ஆழ்வார் பத்தே பத்து பாசுரங்களில், திருவரங்கனின் முழு அழகினை, அவன் காட்டவே தான் கண்டு, பாதம் முதல் கேசம் வரை வர்ணித்த ஆழ்வார், அரங்கனின் சந்நிதியில் என் அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே என்று அவன் திருவடிகளில் சேர்ந்து விட்டார்.

இராமானுஜர்

ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீரங்கநாதர் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். திருவரங்கம் செல்வம் முற்றும் திருத்தி என்று அடைமொழி சொல்லும்படி கோவில் நிர்வாகத்தை சீர்திருத்தி இன்று வரை பெரிதும் போற்றி பாதுகாக்க படுகின்றன.

பங்குனி உத்திர திருநாள் அன்று இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பிராட்டியை முன்னிட்டு நம் பெருமாள் முன்னே சரணாகதி கேட்டு அதனை பெற்றார். இவருக்கு இங்கு தனியாக சன்னதி உள்ளது. இங்குள்ள ஸ்ரீராமாநுஜரின் திருமேனி `தானேயான திருமேனி‘ ஆகும்.

ஆச்சார்யர்கள்

வைணவத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் திருஅரங்கம் ஓர் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. இராமானுஜரை வைணவத்திற்கு அடையாளம் காட்டிய ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் இங்கு இருந்து தான் தொண்டு புரிந்தார்.

பராசரபட்டர், வடக்கு திருவீதி பிள்ளை, பிள்ளைலோகாச்சார்யார், பெரியநம்பி என்ற ஆச்சார்யர்கள் அவதரித்த ஸ்தலம். ஸ்ரீமந் நாதமுனிகள் என்ற ஆச்சார்யாரால் திவ்யப்ரபந்த பாசுரங்களை ராக தளங்களுடன் பாடி அபிநயம் பிடித்து அரையர் சேவை என்ற பெயரில் இங்கு ஆரம்பித்து, இன்றும் நடந்து வருகிறது.

சுவாமி தேசிகன் என்ற ஆச்சார்யாருக்கு பெரியபெருமாள் ‘கவிதார்க்கிக ஸிம்ஹம்‘ என்றும் தாயார் ‘ஸர்வ தந்த்ர ஸ்வதந்திரர் ‘ என்றும் பட்டங்கள் வழங்கி கெளரவம் செய்து உள்ளனர். இந்த எம்பெருமானின் பாதுகைகள் மீது தான் ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்ற ஆயிரம் பாசுரங்கள் கொண்ட உயர்ந்த நூலை சுவாமி தேசிகன் ஒரே இரவில் இயற்றி உள்ளார்.

மணவாளமாமுனிகள் என்ற ஆச்சாரியர், இந்த எம்பெருமானின் கட்டளையை ஏற்று, திருவாய்மொழி என்ற திவ்யப்ரபந்தத்திற்கு ஒரு வருட காலம் காலக்ஷேபம் செய்தார். அதன்போது கோவிலின் எல்லா திருவிழாக்களையும் நிறுத்தி வைக்கவும் எம்பெருமான் ஆணை இட்டதாக சொல்வதுண்டு. இந்த காலஷேபம் நிறைவு அடையும் போது, எம்பெருமானே ஒரு சிறுவனாக வந்து ‘ஸ்ரீசைலேச தயா பாத்திர‘ தனியனை அருளி செய்து அவருக்கு கெளரவம் செய்தார்.

சடகோபன் அந்தாதி

வால்மீகி ராமாயணத்தில், நரசிம்ம அவதாரம் பற்றி கிடையாது. ஆனால் கம்ப ராமாயணத்தில் நரசிம்ம அவதாரம் பற்றி ஒரு படலம் உண்டு. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட இராமாயணத்தை, கம்பர் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும்போது,‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று பாடின நம் ஆழ்வானை பாடினாயோ?‘ என்று மேட்டு அழகிய சிங்கர் (நரசிம்ம பெருமாள்) கோவில் அர்ச்சகர் மூலம் கேட்டாராம்.  இப்படி கேட்டதால்,  நம் ஆழ்வார்  என்ற பெயர் கொடுத்தது  திருவரங்கன் என்றும்  கொள்ளலாம்.   கம்பர் சடகோபர் அந்தாதி என்ற நூறு பாடல்கள் உள்ள தொகுப்பையும் பிறகு எழுதி திருவரங்கன் முன் சமர்ப்பித்தார்.

வரலாற்று குறிப்புகள்

திருவரங்கம் கோவிலைப் பற்றி சில முக்கியமான வரலாற்றுக்குறிப்புகள் கொடுக்காமல், இந்த கோவிலை பற்றிய தகவல்கள் முழுமையாகாது. ஏன்எனில்,

 • திருவரங்கனையும், திருவரங்கம் கோவிலையும்,
  • அந்த பகுதியில் வசித்துவந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்கள்,
   • பல நூறு ஆண்டுகளாக,
    • அரங்கன் மீது கொண்ட அளவிடமுடியாத
     • பக்தியாலும்,
     • ஈடுபாட்டினாலும்,
     • அன்பாலும்,
     • மோஹத்தினாலும்,
     • காதலாலும்,
     • பரிவினாலும்,
     • பாசத்தினாலும்,
     • உணர்வுகளாலும்,
     • கடமையாலும்
     • மரியாதையாலும்,
     • ஏக்கத்தாலும்,
      • தங்கள் உயிர் முதற்கொண்டு பலவித தியாகங்களால்,
       • காத்தும், வளர்த்தும் வந்து உள்ளனர்.

அவற்றை ஒரு சிறு அட்டவணையாக கீழே கொடுக்க முயன்றுளேன். இதற்கு மிகவும் உதவியாக இருந்த 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு என்ற நூலை எழுதிய ஆசிரியர் டாக்டர்.வைணவச் சுடராழி ஆ.எதிராஜன் B.A., காரைக்குடி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. நம்பெருமாள் திருவரங்கத்தில் இருந்து கிளம்பி மீண்டும் திருவரங்கம் வரும் வரையில் சுமார் 47 ஆண்டுகள் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து ஸ்ரீ வேணுகோபாலன் எழுதியுள்ள “திருவரங்கன் உலா” என்னும் நூல் விளக்கமாக சொல்கிறது.

காலம்நிகழ்வுஆட்சியாளர்
திரேதா யுகம்எம்பெருமான் திரேதா யுகத்து பெருமாள்
இராமாயண காலத்திற்கு பிறகுதர்மவர்மா விமானத்தை சுற்றி கோவில் அமைத்தான்சோழ
காலம் தெரியவில்லைகிள்ளிவளவன் கோவிலை புதுப்பித்து, மதிலும் கோபுரமும் கட்டினான்சோழ
கிபி 10 நூற்றாண்டுசோழ மன்னர்கள் ஆதரவு. முதல் பராந்தக சோழன்,சோழ
கி.பி. 1060-1063இராச மகேந்திர சோழன் இங்குள்ள முதலாம் பிரகாரத்தின் திருமதிலை கட்டினான்சோழ
கி.பி.1020-1137இது இராமானுஜரின் காலமாகும். திருவரங்கம் செல்வம் முற்றும் திருத்தி, நிர்வாகம் முழுதும் சீர் திருத்தினார்.சோழ
கி.பி. 1120-1170முதலாம் குலோத்துங்க சோழன். இவன் இராமானுஜருக்கும் வைணவத்திற்கும் பல கொடுமைகள் விளைவித்தான்சோழ
கி.பி.1178-1218மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இத்தலத்தின் நிர்வாகம் இவனது நேரடிக் கவனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவன் சமயப் பூசல்களைத் தீர்த்து வைத்தான்.சோழ
கி.பி.1223-1225திருவரங்கம் கோவில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டது. கோவில் நிர்வாகம் சீர் குன்றியது.கங்கர்கள்
கி.பி.1216-1238மாறவர்மன் சுந்தரபாண்டியன் கர்நாடகத்தைக் கைப்பற்றினான். கங்கர்களை விரட்டினான். கோவில் நிர்வாகம் சீர்பெற்றது.பாண்டியன்
கி.பி.1234-1262ஒய்சாள மன்னன் சோமேசுவரன் இங்கு நந்தவனம் உண்டாக்கி மூன்றாம் பிரகாரத்தில் யாகசாலை நிறுவினான்.ஒய்சாளம்
கி.பி.1251-1268பாண்டிய மன்னன் சடாவர்ம சுந்தர பாண்டியன் ஏராளமான பொன்வழங்கி, மூன்று விமானங்கள் கட்டினான். திருமடைப்பள்ளி கட்டினான். இராண்டாம் பிரகாரத்தில் பொன் வேய்ந்தான்.பொற்கருட வாகனம் வழங்கினான். திருவரங்கனுக்கு மரகதமாலை, பொற்கிரீடம், முத்தாரம், முத்துவிதானம், பொற் பட்டாடை போன்றன வழங்கினான். ஏராளமான அணிகலன்களையும், பொற் காசுகள் நிரம்பிய குடங்களையும், கோவிலுக்கு வேண்டிய பிற முக்கிய பொருட்களையும் இத்திருக் கோவிலுக்கு தானம் வழங்கினான்.பாண்டியன்
கி.பி.1263-1297ஒய்சாள மன்னன் இராமதேவன் இக்கோவிலுக்கு எண்ணற்ற தானம் வழங்கி புனருத்தாரப் பணிகளை மேற்கொண்டார். இத்திருக்கோவிலில் உள்ள வேணு கோபால கிருஷ்ணரின் சன்னிதி இவர் காலத்தில் ஏற்பட்டதாகும்.ஒய்சாளம்
கி.பி.1268-1308மாறவர்மன் குலசேகரபாண்டியன். போர்ச்சுக்கீசிய மாலுமி மார்க்கோபோலோ இத்தலம்பற்றியும், செழிப்பைப் பற்றியும் வியந்து போற்றிக் குறிப்புகள் கொடுத்துள்ளார்.பாண்டியன்
கி.பி. 1311முஸ்லீம் தளபதி மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றினான். இக்கோவிலில் கொள்ளையிட்டான்.முகலாய
கி.பி.1325-1351முகம்மதுபின் துக்ளக் இக்கோவிலை கொள்ளையிட எத்தனித்தான். அரங்கன்பால் பற்றுக் கொண்ட அடியார்களும், ஆச்சார்யார்களும் திருவரங்க நகர்வாசிகளும் தேவதாசிகளும் அவனை முன்னேற விடாமல் தடுத்தனர். எண்ணற்ற வீரர்கள் இருதரப்பிலும் மாண்டனர். வைணவ அடியார்கள் தம் இன்னுயிர் நீத்து இத்திருக்கோவிலைக் காத்தனர். இத்திருக்கோவிலின் விலை உயர்ந்த அணிகலன்களையும், வழிபாட்டிற்குரிய முக்கிய பொருட்களையும் உற்சவப் பெருமாளையும் திருவரங்கத் தினின்றும் கடத்தி பல ஊர்களில் மறைத்து வைத்து திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை எனப் பலவிடங்களிலும் மறைத்து இறுதியில் திருப்பதியில் கொண்டுபோய் பாதுகாத்து வைத்தனர்.முகலாய
கி.பி. 1371திருப்பதியிலேயே இருந்த உற்சவ பெருமாளான நம்பெருமாள் மீண்டும் திருவரங்கம் வந்து சேர்ந்தான்.விஜயநகரப் பேரரசு
கி.பி. 1371 முதல் கி.பி.1565 வரைவிஜயநகரப் பேரரசு முஸ்லீம்களை புறமுதுகிட்டு ஓடச் செய்து இத்திருக்கோவிலை மீட்டு திருப்பதியிலிருந்து உற்சவப் பெருமாளையும், பிறபொருட்களையும் மீளக் கொணர்ந்து திருவரங்கம் சீர்படுத்தப்பட்டு பொலிவு பெற்றதுவிஜயநகரப் பேரரசு
கி.பி.1538-1732நாயக்க மன்னர்கள், இவர்களும் இத்திருக்கோவிலுக்கு எண்ணற்ற
திருப்பணிகள் செய்து வந்தனர்.
நாயக்க மரபினர்
கி.பி. 1659-1682சொக்க நாத நாயக்க மன்னர் இத்திருக்கோவிலுக்கு பலதிசை களினின்றும் சாலைகள் அமைத்து எதிரிகளால் தாக்க முடியாத அரண்போன்ற கதவுகளை நுழைவாயிலில் பொருத்தினார்.நாயக்க மரபினர்
கி.பி. 1016-1732விஜயரங்க சொக்கநாத நாயக்கர் மூன்றாம் பிரகாரத்தில் ஒரு மண்டபத்தையும் கண்ணாடி அறையினையும் கட்டுவித்தார்.நாயக்க மரபினர்
கி.பி.1732-1800நாயக்க மன்னர்களுக்குப் பிறகு தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பு ஆங்கிலேயர்களின் உதவியால் ஆற்காடு நவாபுகளிடம் சென்றதுஆற்காட்டு நவாப்
கி.பி.1809-1947தொண்மை முறைப்படியான கோவில் நிர்வாகத்தில் தலையிடாது மேற்பார்வை கண்காணிப்பாளர்களாக ஆங்கிலக் கலெக்டர்கள் இருந்து வந்தனர்.ஆங்கிலேய ஆட்சி
Pictures courtesy : family and friends through whatsapp
Thanks to friends from whatsapp group for the video
நன்றி இந்த videoவை அனுப்பிய Whatsapp குரூப் நண்பர்களுக்கு

மேலும்

திருவரங்கம் பற்றி தொடர்ந்து மேலும் சில தகவல்களை வரும் நாட்களில் சேர்க்க முயற்சிக்கிறோம். நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: