A Simple Devotee's Views
To Read this in English, please click here, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.
அப்படியும் மக்கள் எல்லோரும் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் நம்மை விட்டு, பெருமாள் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யேற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான பெருமாள், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்றார்.
அடுத்து, ஆழ்வார், தான் கள்வனாகவும், சூதனாகவும் இருந்து, பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை “சூதனாய் கள்வனாய்” என்ற பதினாறாவது பாடலில் தெரிவித்தார்.
அடுத்த பாசுரத்தில், முற்காலத்தில், தான் விரும்பி நின்று பெருமாளை முக்கரணங்களால் தொழுதது இல்லை என்றும் இரும்புபோல் கடினமான தன் நெஞ்சத்தை, கரும்புபோன்ற பெரியபெருமாளின் அழகை கொண்டு திருத்தினார் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்று பாடினார்.
தன்னை பெரியபெருமாள் திருத்தியதால் தனக்கு வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க, பெருமாளை முழுமையாக தொடர்ந்து ரசிக்கமுடியவில்லையே என்று கவலையுற்று தான் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணி தன்னையே ஆழ்வார் வெறுத்துக் கொண்டது பதினெட்டாவது பாசுரமான ‘இனித்திரை திவலை மோத ” ஆகும்.
கண் கலங்கியதை சென்ற பாசுரத்தில் சொன்ன ஆழ்வார், இந்த பாசுரத்தில், அக்கண்களைத் தாங்குகின்ற மொத்த உடலும் கட்டு குலைந்து உருகுகின்றதே, என்ன செய்வேன் என்று சொல்லி, அவருடன் வந்தவர்களுக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் அப்படி இருக்க காரணமான மருந்தினை தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். பெருமாள் நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்த உபகாரத்தையும் ஆழ்வார் ‘குடதிசை முடியை வைத்து‘ என்ற இந்த பதினொன்பதாம் பாசுரத்தில் சொல்கிறார்.
உடல் உருகாமல் இருக்க, சம்சாரிகள், ஆழ்வாரை தங்களை போல் பகவத்விஷயத்தில் இருந்து வந்துவிடுமாறு சொல்கிறார்கள். பெரியபெருமாள் கண் வளர்ந்து அருளுவது, தங்களுக்காகவே என்று அவரின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் இருக்கும்போது, அகங்காரம் மமகாராம் படைத்த சம்சாரிகளைப்போல் தன்னால் பெருமாளை விட்டு அகலமுடியாது என்று “பாயும் நீர் அரங்கம் தன்னுள்” என்று இருபதாவது பாசுரத்தில் சொன்னார்.
அரங்கநாதனை தரிசித்து பின் அகலமுடியாது என்று சொன்ன ஆழ்வாரிடம் அரங்கனின் அழகை அளவிட்டு அனுபவிக்கலாம் என்றும், அரங்கநாதனை கண்களால் பார்த்ததினால் தான் ஆழ்வார் தவிக்கிறார், ஒரு மூலையில் உட்கார்ந்து நெஞ்சினால் தியானம் செய்யலாமே என்று சிலர் ஆழ்வாரிடம் சொன்னதும், சேர்ந்து, ஆழ்வார் தன் நெஞ்சிடம், அப்பெருமானை அளவிட்டு தரிசிப்பது என்பது இத்தனை காலமாக உறுதி இல்லாமையால் தான் இழந்த பகவத் அனுபவம் போலவே ஆகும் என்று “பணிவினால் மனம் அது ஒன்றி” என்ற அடுத்த பாசுரத்தில் சொல்கிறார்.
சென்ற பாசுரத்தில், “மனத்தினால் நினைக்கலாமே ?” என்றதற்கு அளவிட்டு நினைக்க முடியாது என்று சொன்ன ஆழ்வாருக்கு, வாய்விட்டு பேசினால் என்ன என்ற சிலர் சொல்ல, மனத்தால் அளவிடமுடியாததை, வாய் பேசி முடித்துவிடமுடியாது என்றும், வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களை நாம் பேசமுடியுமே தவிர, குற்றமற்ற பெரியவர்களின் நெஞ்சில் வாழும் எம்பெருமானின் பெருமைகளை நாம் அறிய முடியாது, என்றும் கூறுகிறார். அப்படிப்பட்ட எம்பெருமானை வணங்குவதை தவிர, அவனின் பெருமைகளை புதியதாக பேச முடியுமா” என்று பேசிற்றே பேசல் அல்லால் என்று இருபத்தி இரண்டாம் பாசுரத்தில் கேட்கிறார்.
நினைக்கவும் பேசவும் முடியாதென்றால், மறந்து போவதுதானே என்று ஆழ்வாரிடம் மற்றவர்கள் சொன்னபோது, அரங்கனின் சயனத் திருக்கோலத்தை திருஅரங்கத்தில் கண்டு ரசித்தபின் அதனை மறந்து எப்படி வாழ்வேன் என்று சொல்வது கங்கையில் புனிதமாய என்ற இருபத்திமூன்றாம் பாசுரம்.
இனி அடுத்த பாசுரம்.
வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கம் தன்னுள், கள்ளனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும், உள்ளமே வலியைப் போலும் ஒருவன் என்று உணர மாட்டாய், கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே. (திருமாலை 24)
ஆழ்வார், முந்திய பாசுரங்களில், மனத்தினால் நினைக்கலாமே என்றும், ‘பேசித்தான் ஆவதுண்டோ என்றும் எங்கனம் மறந்து வாழ்கேன் என்றும் தன்னுடைய அன்பினை காட்டியதற்கு பதிலுக்கு பெரியபெருமாள், ஆழ்வார் மேல் தமக்குள்ள உள்ள அன்பினைக் காட்ட, அதனை பார்க்கும் போது தனது அன்பு மிகவும் தாழ்ந்தது என்று ஆழ்வார் உணர்ந்து, பைத்தியம் பிடித்தவனுக்கு ஒரு சமயம் வரும் தெளிவு போல் உள்ள தன்னுடைய பக்தியை கள்ளத்தனம் என்று பாடும் பாடல்.
பொங்குநீர் பரந்து பாயும் என்று சென்ற பாசுரத்தில் பாடியது இன்னும் ஆழ்வார் நினைவில் இருக்க, இங்கே தொடர்ந்து “வெள்ளநீர் பரந்து பாயும்” என்று காவிரியின் பெருமையில் இந்த பாசுரத்தையும் தொடர்கிறார்.
காவிரி, தன் உற்பத்தி ஸ்தானத்தில் இருந்தே திருவரங்கம் வர வேண்டும் என்று நோக்கோடு வருவதால், ஆர்வம் வெளியே தெரியும்படி, பெருவெள்ளமாக நீரை கொண்டு எவராலும் அணைகட்டி தடுக்க முடியாதபடி எல்லா பக்கங்களிலும் பாய்ந்து செல்லும். ஆற்றின் ஆர்வத்திற்கு முடிவு இல்லாததால், ஆழ்வார் பாய்ந்தது என்று இறந்த காலத்தில் சொல்லாமல், பாயும் என்று நிகழ் காலத்தில் கூறி உள்ளார். காவிரியின் வெள்ளநீர் எங்கும் பாய்வதால், சோலைகளும் எல்லா இடங்களிலும் பரவுகிறது.
கள்ளமில்லாத நித்யஸூரிகளுடன் பரமபதத்தில் நேர்மையோடு இருப்பதைவிட்டு, திருவ ரங்கத்தில் கண் வளர்ந்து இருப்பது, இங்குள்ள கள்ளத்தனம் உள்ள சம்சாரிகளைத் தன் கள்ளத்தனம் கொண்டு, வலைவீசி, கவர்ந்து கொள்வதற்காக என்பதால் ஆழ்வார் ‘கள்ளனார்’ அல்லது ‘கள்வனார்‘ என்று கூறுகிறார். பலவகை துர் எண்ணங்களுடன் கோவிலுக்குள் செல்லும் மக்களை தன் வடிவழகு போன்றவற்றை கொண்டு திருத்தி, அவர்களை அடியவர்கள் என்று மாற்றும் எம்பெருமானை கள்வனார் என்று ஆழ்வார் சொல்வது பொருத்தமே. மிகப் பெரிய தீவட்டித் திருடன் என்பதால் ‘கள்வன்’ என்று சொல்லாமல் ‘கள்வனார்’ என்று சொன்னதற்கு காரணம் என்று உரையாசிரியர் கூறுகிறார். எம்பெருமானுக்குச் சொந்தமான ஆத்மாவைத் தன்னது என்று உரிமை கொண்டாடும் ஜீவாத்மாக்களைக் கவரும் போது, அதை சொல்லிக்கொண்டு வந்தால் யாரும் கிடைக்க மாட்டார்கள் என்பதால், கள்வனாக கிடக்கிறார்.
மேலே சொன்ன நீர்வளத்தையும் சோலைகளின் வனப்பையும் கொண்டு எம்பெருமான் இங்கு வந்து பள்ளிகொண்டு உள்ளான் என்று நினைக்க தோன்றினாலும் உண்மையில் ஜீவாத்மாக்களை கவரவே என்பதால் கள்வன் என்று சொல்லலாம்.
நம்மாழ்வார் திருமாலிருஞ்சோலை திவ்யதேச எம்பெருமானை பாடும்போது, “செஞ்சொற் கவி காள், உயிர் காத்து ஆட் செய்மின்” என்று பாடுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
திருப்பாணாழ்வார், பெரியபெருமாளை அருகில் சேவித்தபோது அவரது திருமுக மண்டலத்தில் ஒரு கள்ளத்தனம் தோன்றி இருப்பதால் தானோ, அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தில் (7), ‘செய்ய வாய் ஐயோ ! என் சிந்தை கவர்ந்ததுவே‘ என்று சொல்கிறார். அதாவது எதோ ஒரு காரணத்தினால் தன்னை அணுகுகிறவர்களின் ஆத்மாவை திருடி தன் சட்டைப்பைக்குள் வைத்து கொள்வார் அல்லது அவர்களை தன்னுடைய அந்தரங்கர்கள் ஆக்கி கொள்வார். எம்பெருமானுக்குச் சொந்தமான ஆத்மாவை தன்னது என்று பலகாலமாக நினைத்து கொண்டு இருக்கும் ஜீவாத்மாவிடம் இருந்து அது அறியாதவண்ணம், எம்பெருமான் சேர்த்துக்கொள்வதால் கள்வனார் என்கிறார்.
இதை ஜிதந்தே ஸ்தோத்திரம் முதல் ஸ்லோகத்திலேயே ‘செந்தாமரை கண்ணா, உன்னால் இந்த ஆத்மா ஜெயிக்கப்பட்டது, இந்த ஆத்மா என்னுடையது அல்ல, உன்னுடையது, உலகையெல்லாம் உண்டாக்கினவனே, இந்திரியங்களை நியமிப்பவனே, கொடுப்பதில் சிறந்தவனே, முற்பாடானாக பிறப்பவனே, இந்த ஆத்மா எனக்காக இல்லாமல் உனக்காகவே ஆகவேண்டும்” என்றபடி எம்பெருமான் தன்னுடைய வடிவழகை காட்டி இந்த ஆத்மாவை எடுத்துக்கொள்கிறார்.
பற்பலகாலமாக ஜீவாத்மா, இந்த ஆத்மாவை தன்னதாகவே நினைத்துக்கொண்டு இருப்பதால், இப்பொழுது பரமாத்மா தனக்கு சொந்தமான ஆத்மாவை எடுத்துக் கொண்டாலும் அது, ஆயர்பாடியில் கண்ணன் வெண்ணையை திருடியது போல், கள்ளத்தனமாகவே தெரிகிறது, என்று உரையாசிரியர் சொல்கிறார்.
எம்பெருமானுடைய உலகங்களையெல்லாம் அவனுக்கே மாவலி தானம் கொடுத்தது போல், நாமே இந்த ஆத்மாவை அவனுக்கு சமர்ப்பித்தாலும் அதுவும் ஒரு கள்ளத்தனமே.
ஆழ்வார் தன்னை வசப்படுத்தியது, எம்பெருமானின் எளிமை மற்றும் பற்பல திருக் குணங்கள் அல்ல என்றும், கண் முதலிய அவயங்களின் தனிப்பட்ட அழகு இல்லை என்றும், “கிடந்ததோர் கிடக்கை” (திருமாலை 23) என்ற பெரியபெருமாள் திருமேனியின் முழுவதுமான அழகே (சமுதாய சோபை) என்றும் கூறுகிறார்.
தாமரை, எம்பெருமானின் திருமுகத்துடன் ஒப்பிடப்படுகிறது. மலர்ச்சி, நறுமணம், குளிர்ச்சி, புதுமை என்ற குணங்களால் ஓரளவு ஒன்றாக இருந்தாலும், நன்முகம் என்று சொன்னதால், முற்றிலும் சமமானது என்று சொல்லமுடியாது. சுத்த சத்வ மயமானதாலும் ஜோதிமயம் ஆனதாலும் தாமரை போன்ற ஒரு ஜட பொருளுக்கு எம்பெருமானின் திருமுக மண்டலத்தை ஒப்பிட முடியாது. ஆதித்தனை கண்டு மலரும் தாமரைக்கு அடியார்களை கண்டு மலரும் எம்பெருமானின் திருமுகத்திற்கு ஒப்பு ஆகாது என்பது ஆழ்வாரின் கருத்து. எல்லா உலகங்களிலும், எம்பெருமானின் திருமுகம் மட்டுமே மிக குளிர்ச்சியான முகம் என்றும் மற்றவை கடுமையானவை என்பதை ‘நன்முகம் ‘ என்ற சொல்லால் உணர்த்துகிறார்.
இதே உரையாசிரியர், வங்கக்கடல் கடைந்த பாசுர விளக்கத்தில் ஆண்டாள், பெரியாழ்வாரை புகழும் போது, ‘தண்தெரியல் பட்டர்பிரான்‘ என்று சொன்னது, பெரியாழ்வார் குளிர்ச்சியான மாலையை அணிந்து கொண்டு உள்ளார், எம்பெருமான் உட்பட மற்றவர்கள் சூடானவற்றை அணிந்துள்ளனர் என்று கூறியுள்ளார். இரண்டையும் சேர்த்து பார்க்கும் போது, ஆழ்வார்கள் எம்பெருமானையும் விட இன்னும் சாத்விகர்களாக இருப்பார்கள் என்பதால் உரையாசிரியர், ஆழ்வார்கள் தவிர மற்றவர்களை பார்க்கும் போது எம்பெருமான் குளிர்ச்சியாகவும், ஆழ்வார்களை பார்க்கும் போது ஆழ்வார்கள் எம்பெருமானை விடவும் குளிர்ச்சியாகவும் இருப்பர் என்று சொல்வது போல் தெரிகிறது.
எம்பெருமான் கண்வளர்ந்து அருளும் அழகினை சேவித்த பிறகும், ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கும் மனதை பார்த்து ஆழ்வார் அதன் வலிமையை கண்டு வியக்கிறார். இதற்கு முந்தைய பாசுரங்களில் கண்ணினை களிக்குமாறே (17), பனிஅரும்பு உதிருமாலோ (18), உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று சொன்னதற்கு என்ன அர்த்தம் என்று மனது கேட்ட போது, ஆழ்வார், எம்பெருமான் பெருமைகளைப் பார்க்கும்போது, ஆழ்வார் தனக்கு ஏற்பட்ட மாற்றங்களாக மேலே சொன்னவை, மிக சிறியவையே என்று ஆழ்வார் கூறுகிறார்.
ஆழ்வார் மேலும், எம்பெருமான் தன்னிகர் இல்லாதவன் அல்லது ஒப்பற்றவன் என்று உணராத நெஞ்சம் என்று சொல்ல ஆரம்பிக்கிறார். அப்படி உணர்ந்தால், எம்பெருமானின் பெருமைகளும், குணங்களையும் உள்ளபடி உணரவேண்டும். அதற்கு ஏற்ப ஈடுபாடும் பிறக்க வேண்டும். அது பிறக்காததால், நெஞ்சை வன்மை உள்ளது என்று கூறுகிறார்.
கண்ணினை களிக்குமாறே (17), பனிஅரும்பு உதிருமாலோ (18), உடல் எனக்கு உருகுமாலோ (19) என்று சொன்னது மற்ற உலக விஷயங்களில் எப்படி கள்ளத்தனமாக நடக்கிறோமோ அதேபோல் பகவத் விஷயத்திலும் கள்ளத்தனமாக நடந்து கொண்டதாக ஆழ்வார் சொல்கிறார்.
ஆழ்வார், மேலும் நெஞ்சத்திடம் உலக விஷயத்தில் செய்த கள்ளத்தனம், பற்பல காலங்களாக, பற்பல பிறவிகளாக செய்து வருவதால், இந்த பகவத் விஷயத்திலும் பொய்யான அன்பை நன்றாக காட்டிவிட்டதாக ஆழ்வார் சொல்கிறார். மெய்யான அன்பு செலுத்தவில்லை என்றும் இந்த விஷயத்திற்கு ஏற்ற உண்மை அன்பை, பக்தியை செலுத்தவில்லை என்று தன் மனத்திடம் சொல்லி, இந்த பாசுரத்தை முடிக்கிறார்.
எம்பெருமானின் திருமுகத்தை தரிசித்த பின்னும் ஆழ்வாரின் வலிமையான நெஞ்சம், அவரிடம் பொய்யான பக்தியை காண்பித்ததாகவும், அதனால் தன்னிடம் சராணாகதிக்கு தேவையான தகுதி ஒன்றும் இல்லை என்று தன்னை எம்பெருமான் சரணாகதிக்கு தயார் செய்ததை, ஆழ்வார்க்கு செய்த உபகாரமாக இந்த பாசுரம் சொல்கிறது.
இதேபோல், பெரியாழ்வார் தன்னுடைய பெரியாழ்வார் திருமொழியில், (5.2.8), “ஏதங்களாயின எல்லாம் இறங்க லிடுவித்து என்னுள்ளே, பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து, போதில் கமல வன் நெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில், பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே”, என்று சொல்லி எம்பெருமான் தன்னுடைய வலிமையான நெஞ்சத்தில் உள்ள பாவங்களை விலக்கிவிட்டு, அதனுள் புகுந்து அவனுடைய திருவடிகளை ஆழ்வாரின் தலையில் வைத்து உபகாரம் செய்ததை சொல்லி உள்ளார்.
இத்துடன் ஆழ்வார், எம்பெருமான் தனக்கு செய்த உதவிகள் என்ற தலைப்பில் சொன்ன தொகுப்பு முடிகின்றது. அடுத்து ஆழ்வார், நிரந்தர இன்பம் அளிக்கும் பரமபத்திற்கான உபாயங்களை கடைபிடிக்க தமக்கு ஒரு தகுதியும் இல்லை என்ற தொகுப்பில் 25 முதல் 34 வரை சொன்ன பத்து பாசுரங்களை காண்போம்.
மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திப்போம் நன்றி.