கங்கையில் புனிதமாய – திருமாலை

To Read this in English, please click here, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை / எம்பெருமானை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும்,  தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து பலர், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்கிறார்.

அப்படியும் மக்கள் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான எம்பெருமான், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்றார்.

அடுத்து, ஆழ்வார், தான் கள்வனாகவும், சூதனாகவும் இருந்து, பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை “சூதனாய் கள்வனாய்” என்ற பதினாறாவது பாடலில் தெரிவித்தார்.

அடுத்த பாசுரத்தில், முற்காலத்தில், தான் விரும்பி நின்று எம்பெருமானை முக்கரணங்களால் தொழுதது இல்லை என்றும் இரும்புபோல் கடினமான தன் நெஞ்சத்தை, கரும்புபோன்ற பெரியபெருமாளின் அழகை கொண்டு திருத்தினார் என்றும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னுடைய கண்கள் ஆனந்தம் பெற்று மகிழ்ந்தன என்றும் பாடினார்.

தன்னை பெரியபெருமாள் திருத்தியதால், தனக்கு வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க, பெருமாளை முழுமையாக தொடர்ந்து ரசிக்கமுடியவில்லையே என்று கவலையுற்று தான் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணி தன்னையே ஆழ்வார் வெறுத்துக் கொண்டது பதினெட்டாவது பாசுரமான ‘இனித்திரை திவலை மோத ” ஆகும்.

கண் கலங்கியதை சென்ற பாசுரத்தில் சொன்ன ஆழ்வார், இந்த பாசுரத்தில், அக்கண்களைத் தாங்குகின்ற மொத்த உடலும் கட்டு குலைந்து உருகுகின்றதே, என்ன செய்வேன் என்று சொல்லி, அவருடன் வந்தவர்களுக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் அப்படி இருக்க காரணமான மருந்தினை தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். எம்பெருமான் நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்த உபகாரத்தையும் ஆழ்வார் ‘குடதிசை முடியை வைத்து‘ என்ற இந்த பதினொன்பதாம் பாசுரத்தில் சொல்கிறார்.

உடல் உருகாமல் இருக்க, சம்சாரிகள், ஆழ்வாரை தங்களை போல் பகவத்விஷயத்தில் இருந்து வந்துவிடுமாறு சொல்கிறார்கள். பெரியபெருமாள் கண் வளர்ந்து அருளுவது, தங்களுக்காகவே என்று அவரின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் இருக்கும்போது, அகங்காரம் மமகாராம் படைத்த சம்சாரிகளைப்போல் தன்னால் எம்பெருமானை விட்டு அகலமுடியாது என்று “பாயும் நீர் அரங்கம் தன்னுள்” என்று இருபதாவது பாசுரத்தில் சொன்னார்.

அரங்கநாதனை தரிசித்து பின் அகலமுடியாது என்று சொன்ன ஆழ்வாரிடம் அரங்கனின் அழகை அளவிட்டு அனுபவிக்கலாம் என்றும், அரங்கநாதனை கண்களால் பார்த்ததினால் தான் ஆழ்வார் தவிக்கிறார், ஒரு மூலையில் உட்கார்ந்து நெஞ்சினால் தியானம் செய்யலாமே என்று சிலர் ஆழ்வாரிடம் சொன்னதும், சேர்ந்து, ஆழ்வார் தன் நெஞ்சிடம், அது இயலாது என்பதை, அப்பெருமானை அளவிட்டு தரிசிப்பது என்பது இத்தனை காலமாக உறுதி இல்லாமையால் தான் இழந்த பகவத் அனுபவம் போலவே ஆகும் என்று “பணிவினால் மனம் அது ஒன்றி” என்ற அடுத்த பாசுரத்தில் சொல்கிறார்.

சென்ற பாசுரத்தில், “மனத்தினால் நினைக்கலாமே ?” என்றதற்கு அளவிட்டு நினைக்க முடியாது என்று சொன்ன ஆழ்வாருக்கு, வாய்விட்டு பேசினால் என்ன என்ற சிலர் சொல்ல, மனத்தால் அளவிடமுடியாததை, வாய் பேசி முடித்துவிடமுடியாது என்றும், வேதங்களும், சான்றோர்களும் பேசிய பேச்சுக்களை நாம் பேசமுடியுமே தவிர, குற்றமற்ற பெரியவர்களின் நெஞ்சில் வாழும் எம்பெருமானின் பெருமைகளை நாம் அறிய முடியாது, என்றும் கூறுகிறார். அப்படிப்பட்ட எம்பெருமானை வணங்குவதை தவிர, அவனின் பெருமைகளை புதியதாக பேச முடியுமா” என்று பேசிற்றே பேசல் அல்லால் என்று இருபத்தி இரண்டாம் பாசுரத்தில் கேட்கிறார்.

இனி அடுத்த பாசுரம்.

திருமாலை இருபத்தி மூன்றாம் பாசுரம்

கங்கையில் புனிதமாய காவிரி நடுவு பாட்டு, பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள், எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும், எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே. (திருமாலை 23)

நினைக்கவும் பேசவும் முடியாதென்றால், மறந்து போவதுதானே என்று ஆழ்வாரிடம் மற்றவர்கள் சொன்னபோது, அரங்கனின் சயனத் திருக்கோலத்தின் அழகை திருவரங்கத்தில் கண்டு ரசித்தபின் அதனை மறந்து எப்படி வாழ்வேன் என்று சொல்லும் பாசுரம்.

கங்கையில் புனிதமாய காவிரி

அழகாலும், நீரின் இனிமையாலும் கங்கையை காட்டிலும் சிறந்த காவிரி, பிறரை புனிதப்படுத்துவதிலும் கங்கையை விடச் சிறப்பான காவிரி ஆறு என்று இந்த பாசுரத்தை ஆழ்வார் தொடங்குகிறார். ஸ்ரீரங்க மஹாத்மியம் என்ற நூலில், ப்ரஹ்மாவிடம் கடும் தவம் புரிந்து கங்கையுடன் சமம் என்ற நிலையை அடைந்தபின், காவிரி, ஸ்ரீரங்கவிமானம் திருவரங்கத்தில் நிறுவப்பட்ட பின், கங்கையை விட உயர்ந்தவள் என்ற பெருமையை அடைந்ததாகக் கூறுகிறது.

ஈஸ்வர சம்ஹிதை என்ற நூலில், விஷ்ணுவிடம் இருந்த பக்தியினால், தர்மம், தண்ணீராக மாறியது என்றும், அப்படிப்பட்ட தண்ணீரை, சிறந்த பக்தியுடன் விஷ்ணுவின் திருவடிகளை, அவர் திருவிக்ரமனாக உலகு அளந்த போது, தான் சுத்தம் செய்து மரியாதை செய்ததாகவும் பிரம்மன் கூறுகிறார். அந்த தண்ணீரைத் , தான், பரிசுத்தப்படுத்தபடத் தயாராக உள்ளதாகக் கூறி, சிவபெருமான் தன்னுடைய தலையினால் தாங்கிக் கொண்டு பிறகு சிறிது சிறிதாக பூமிக்கு விடுகிறார். அதுவே கங்கை என்று ஆனது.

அதனால் கங்கைக்கு சிவன் (ருத்ர) சம்பந்தம் கொண்டது என்ற ஒரு குற்றமும் உண்டு. ருத்ர சம்பந்தம் கொண்டதால், அவனுடைய மாலை மற்றும் பிரசாதங்களை, ‘நிர்மால்யம்’ என்று அவனுடைய பக்தர்களும் தொடத்தக்கதாக கொள்ளவில்லை. ருத்ர சம்பந்தம் என்பது, ரஜோ தமோ குணங்களுடன் தொடர்பு உள்ளது.

திருவெழு கூற்றிருக்கை என்ற பிரபந்தத்தில் திருமங்கைஆழ்வார், “முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன் அறிவு அருந் தன்மைப் பெருமையுள் நின்றனை” என்று கூறியபடி, கங்கைக்கு சிவனின் சடையின், சிடுக்கு நாற்றமும், மயிர் தொடர்பும் உள்ளது. இருந்தாலும், இப்படிபட்ட கங்கைக்கு, விஷ்ணுவின் ஸ்ரீபாத சம்பந்தம் ஒரே ஒரு முறை ஏற்பட்டு இருந்ததால், கங்கைக்கு புனித தன்மையே இறுதியில் இருக்கும்.

இதே போல், பொய்கை ஆழ்வாரும், முதல் திருவந்தாதியில்(97), “உன்றன் அடிசேர்ந்து அருள் பெற்றாள் அன்றே, பொடிசேர் அனற்கு அம் கை யேற்றான் அவிர்சடைமேல் பாய்ந்த, புனல்கங்கை யென்னும்பேர்ப் பொன்” சொல்லியது, சிவபெருமானின் சடைமேல் பாய்ந்த நீரை புனிதமாக அருள் செய்தது விஷ்ணுவின் திருவடி சேர்ந்ததாலே என்று கூறுவது.

இதையே பராசர பட்டர் எனும் ஆச்சார்யர், ரங்கராஜஸ்தவம் என்ற ஸ்தோத்ரத்தில் (22), ஒரு க்ஷண ஸ்ரீ பாத சம்பந்தத்தால் பெருமை வாய்ந்தது என்று அஹங்கரித்து இருக்கும் கங்கை என்கிறார். திருவரங்கன் புறப்பாடு முன் திருவரங்கத் தெருக்களைச் சுத்தம் செய்வது, திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம் தருவது, எப்போதும் பெரியபெருமாளின் திருவடிகளைத் தடவிக் கொடுத்து சேவை செய்வது போன்ற செய்கைகளால் கங்கையை விடச் சிறந்தவள் அன்றோ காவிரி என்று கூறுகிறார்.

தீர்த்தம் என்று பெயர் பெற்ற எல்லா புண்ணிய நதிகளும், ஐப்பசி மாதத்தில் காவிரிக்கு வந்து, பாவிகளான மக்களைத் தீண்டியதால் ஏற்பட்ட பாவங்களை போக்கி கொள்வதாக துலா காவிரி மஹாத்மியத்தில் காவிரியின் பெருமை கூறப்பட்டு உள்ளது.

ஆக கங்கைக்கு ருத்ர சம்பந்தம் என்ற குறை உண்டு. மேலும் விஷ்ணுவின் சம்பந்தம் ஒரே ஒரு முறை மட்டுமே. ஆனால், காவிரிக்குக் குறை எதுவும் இல்லை, மேலும் அப்படிப்பட்ட திருவடிகளைக் கொண்ட திருவரங்கன் இந்த காவிரி கரையில் இருக்க வேண்டும் என்று இங்கு வந்து இருப்பதால், திருவரங்கனின் திருவடித் தொடர்பு காவிரிக்கு எப்போதும் உண்டு. அதனால் தொண்டரடிப்பொடியாழ்வார் கங்கையில் புனிதமாய காவிரி என்று பாடி உள்ளார்.

நடுவு பாட்டு

வட திருக்காவிரி மற்றும் தென் திருக்காவிரி இரண்டுக்கும் நடுவே திருவரங்கம் இருப்பதை இப்படி ஆழ்வார் குறிப்பிடுகிறார். கண்ணன் எம்பெருமான் யசோதை பிராட்டியின் மடியினில் சாய்ந்து இருப்பது போல், காவிரியின் நடுவில் பள்ளிகொண்டு திருவரங்கன் அருள்கிறான் என்கிறார்.

தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் என்ற நான்கும் புருஷார்த்தம் என்று கூறப்படும். இவைகளில் தர்மம், மற்றும் மோக்ஷம் என்பவை நிரந்தரமானவை என்றும், காமம் மற்றும் அர்த்தம், தற்காலிகமானவை என்றும் சொல்வதுண்டு. தர்மம், மற்றும் மோக்ஷம் என்பவை எப்பொழுதும் பரமாத்மாவிற்கு நெருங்கியவை.

திருவரங்கத்தில் வடக்கு பக்கம் கொள்ளிடம் என்ற வட திருக்காவிரி மற்றும் காவேரி என்ற தென் திருக்காவிரியும் ஓடுகின்றன. ஆக, திருஅரங்கம் நான்கு காவிரிக்கரைகளை கொண்டது. பெரியபெருமாளுக்கு அருகில் உள்ள காவிரிகரைகள் மோக்ஷமாகவும், தர்மமாகவும் உள்ளன என்று சொல்வதுண்டு. திருஅரங்கத்திற்கு வெளிப்பக்கம் உள்ள மற்ற இரண்டு காவிரிக்கரைகள், அர்த்தம் மற்றும் காமம் என்றும் சொல்லப்படும்.

வட திருக்காவிரியின் வடக்கு பக்கக் கரையை “காமம்” என்றும், தெற்கு பக்கக் கரையை ‘தர்மம்’ என்றும், தென் திருக்காவிரியின் வடக்கு பக்கக் கரையை ‘மோக்ஷம்’ என்றும், தெற்குக் பக்க கரையை ‘அர்த்தம்’ என்று சொல்லப் படுகின்றன.

பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில்

காவிரி ஒரு அமைதியான நதியை போல் இல்லாமல், இருகரைகளையும் அடித்துக் கொண்டு செல்கிறது. அதிகமான நீர் வருவதாலும், பெரிய பெருமாளை காண வருகிறோம் என்ற மகிழ்ச்சியினாலும் அலைகளை எறிந்து கொண்டு கலங்கி கொண்டு வருகிறது என்று பராசரபட்டர் ரங்கராஜஸ்த்வத்தில் (22) குறிப்பிடுகிறார். காவிரிக்கு, பெரியபெருமாள், மாப்பிளை ஆனபடியால், திருவரங்கம் வருவதற்கு முன்பு, ஒருவித கவலையோடு வருமாம், திருவரங்கத்தைக் கடந்தபின், இனிமேல் பார்க்க முடியாதே என்ற ஏக்கத்துடன் விலகுமாம், அதனால் எப்போதும் அது கலக்கத்துடன் உள்ளது என்று குறிப்பிடுகிறார். காவிரியின் நீர் பெருக்கால், திருவரங்கத்துச் சோலைகள் எப்போதும் பூத்து குலுங்கிக் கொண்டு என்றும் வசந்த காலமாகவே இருக்கும். அதனால் எல்லோருக்கும் களைப்பினை போக்கும் தேசமாக திருவரங்கம் உள்ளது என்கிறார்.

கங்கையில் புனிதமாய என்பதால், புனிதம் மற்றும் தூய்மையும், பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் என்பதால், இனிமையும் காவிரிக்குச் சொல்லப் படுகின்றன.

எங்கள் மால் இறைவன் ஈசன்

மால், இறைவன், ஈசன் என்ற மூன்று சொற்களுமே அரங்கனையே குறிக்கின்றன. மால் என்பதற்கு பித்துபிடித்து என்று ஒரு அர்த்தம் உண்டு.

மால் என்றால் அரங்கன் அடியார்கள் மேல் பித்து பிடித்து இருக்கிறான் என்று கொள்ளலாம். அடியார்களிடம் அளவுக்கு அதிகமான அன்பு உடையவன் என்றும் கூறலாம். பெரியபெருமாளிடம் தங்களை காக்கும் பொறுப்பை விட்டிருக்கும் மற்ற ஆழ்வார்களையும் இவர் சேர்த்துக்கொண்டதால், ‘எங்கள்’ மால் என்று அழைக்கிறார். மேலே சொன்ன புனிதத்தன்மையாலும், இனிமையினாலும் பெரியபெருமாள், திருவரங்கத்தில் எழுந்தருளி உள்ளார் என்பது போல் தோன்றும், ஆனால், ஆழ்ந்து பார்த்தால், அடியவர்களிடம் கொண்ட அன்பினால் தான் இங்கு எழுந்தருளி உள்ளான் என்பது உரையாசிரியரின் விளக்கம்.

இறைவன் என்பதற்கு எல்லாவற்றிற்கும் தலைவன், மற்றும் உரிமை உள்ளவன் என்பது பொருள். இறைவனாக இருப்பதால் அடியார்கள் மேல் அன்பு கொண்டு உள்ளான்.

ஈசன் என்பதற்கு தலைமைக்கு தகுந்தபடி ஆளத் திறமை உள்ளவன் அல்லது எல்லாவற்றையும் நடத்தி செல்பவன் அல்லது நடத்தி செல்ல வல்லவன் என்று பொருள்.

இப்படி இந்த மூன்று பதங்களால் அன்பு உடையவன், நல்வழி காட்டி, நடத்தி செல்ல வல்ல, தலைவன் என்று கூறுகிறார். நம் சம்ப்ரதாயம், அன்பு உடையவன் என்பதற்கு வாத்ஸல்யம்(பரிவு) , சௌலப்யம்(எளிமை) மற்றும் சௌசீல்யம் (நீர்மை)  என்ற பதங்களால் சொல்லும்; நியந்த்ருத்வம் என்பது நல்வழிகாட்டி நடத்தி செல்லவல்லவன் என்பதை சொல்லும்; ஸ்வாமித்துவம் என்பது தலைமையும் உணர்த்தும்.

அடியவர்கள், உலகில் உள்ள பொருட்களின் மேல், தங்களுடைய சத்வ, ரஜோ, மற்றும் தமோ என்ற முக்குணங்களால் கவரப்படுவதைத் தடுத்து, அவர்களை எப்போதும் அனுபவிக்கவல்ல பரமபதத்திற்கு அழைத்துச் செல்ல எண்ணி, அவர்கள்மேல் உள்ள பாசத்தால் தூண்டப்பட்டு, தன் உடைமையை, தன் இஷ்டத்திற்கு, தனதாக்கி கொள்வதற்காக, இங்கு வந்து காத்து கிடக்கிறான் என்பது உரையாசிரியரின் விளக்கம்.

கிடந்தது ஓர் கிடக்கை

ஆழ்வார் பெரியபெருமாளின் திவ்யகுணங்களை ஒரு கணம் தள்ளி வைத்துவிட்டு, அவன் கிடந்த திருக்கோலத்தில் தான் அகப்பட்டுக்கொண்டதை சொல்கிறார். ஒப்பற்ற என்ற பொருளில், கிடந்த திருக்கோலத்தின் சிறப்பை ஓர் என்று சொல்கிறார். நின்ற அல்லது அமர்ந்த திருக்கோலமாக இருந்தால் ஒருவேளை மறந்து இருக்கலாம், கிடந்த திருக்கோலத்தை மறக்க முடியாது என்பதை ஓர் என்ற வார்த்தையால் சொல்கிறார். மற்றவர்கள் படுத்துக்கொண்டு இருந்தால், அழகின்மையே மிகுந்து இருக்கும், ஆனால் பெரியபெருமாள் சயனித்து இருக்கும், அழகு மிகுந்து இருக்கிறது என்று உரையாசிரியர் கூறுகிறார்.

பாயும் நீர் அரங்கம் தன்னில் என்ற பாசுரத்தின் விளக்கத்தில், “பள்ளி கொண்டு இருக்கும் இராமபிரானின் அழகை அனுபவிக்கும் சீதா பிராட்டியின் வார்த்தைகளை யுத்த காண்டத்தில் (38.25) (ச மயா போதிதஹ் ஸ்ரீமான் சுகசுப்தஹ் பரந்தபஹ ) காகாசுரனால் துன்பபடுத்தப்பட்ட போது, சுகமாக கண் வளர்ந்து அருளியவரும், அழகாக இருப்பவரும், எதிரிகளைத் தவிக்கச் செய்பவருமான இராமபிரான் எழுப்பப்பட்டார்” என்று சொன்னதையும் இங்கே நினைவில் கொள்ளலாம்.

ஆழ்வார்களை பொறுத்தவரையில் எம்பெருமான் நின்ற நிலையாய் இருந்தாலும், அமர்ந்த நிலையாய் இருந்தாலும் சயனித்து இருந்தாலும், அவற்றை உயர்வாகவே சொல்வார்கள். உதாரணமாக, பெரிய திருமொழியில், (6.9.5) “நிலையார நின்றான் தன் நீள்கழலே அடை நெஞ்சே”, திருமங்கை ஆழ்வார் எம்பெருமான், திருநறையூரில், மிகவும் பொருந்தி, நிலையாக நின்றான், என்று நின்ற நிலையின் பெருமையை கூறுகிறார். அதேபோல், திருவாய்மொழியில் (6.5.5), “பிரான் இருந்தமை காட்டினீர்” என்று திருத்தொலைவில்லிமங்கலத்தில் எம்பெருமான் அமர்ந்த திருக்கோல பெருமையை நம்மாழ்வார் கூறுகிறார்.

இந்த பாசுரத்தில், ஆழ்வார் முதலில் கங்கையில் புனிதமாய காவிரி என்று சொல்லி, பிறகு கிடந்ததோர் கிடக்கை என்று சொல்கிறார். ஆனால் அரங்கனின் திருவடிகளை வருடிச்சொல்வதாலேயே கங்கையை விட புனிதமான நிலையை காவிரி அடைவதாக மேலே பார்த்தோம். ஆக, கிடந்ததோர் கிடக்கையை முதலில் சொல்லிவிட்டு, பிறகு கங்கையில் புனிதமாய காவிரி என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால், ஆழ்வார்களுக்கு திவ்யதம்பதிகளை காட்டிக்கொடுத்த திவ்யதேசத்தின்மேல் கொஞ்சம் அதிக ஈடுபாடு ஆனதால், இந்த வரிசையில் சொல்கிறார்.

கண்டும், எங்ஙனம் மறந்து வாழ்கேன்

காணாமல் இருந்தால், மறந்து வாழலாம், பெரியபெருமாளின் சயன திருக்கோலத்தைக் கண்டு அனுபவித்தபின் எப்படி மறந்து வாழ்வேன் என்று ஆழ்வார் கூறுகிறார். சுவாமி நம்மாழ்வாரின் “எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்?, நங்கள் கோலத் திருக் குறுங்குடி நம்பியை நான்கண்டபின், (திருவாய்மொழி, 5.5.1) என்ற வார்த்தைகள், இதனையே பிரதிபலிக்கின்றன. இந்த விஷயத்தை அனுபவித்தபின் மறக்க முடியாது, அப்படியே மறந்தாலும், மற்ற விஷயங்களைக்கொண்டு வாழ முடியாது என்று பொருள்.

ஏழையேன் ஏழையேனே

ஆழ்வார் பகவத் விஷயத்தில் தான் ஏழை அல்லது வறுமை உள்ளவன் என்கிறார். தான் இந்த விஷயத்தை அனுபவிக்க பேராசையுடன் இருந்தாலும், முன்னே சொன்னது போல், முழுவதும் அனுபவித்து முடிக்க முடியாத விஷயம் ஆகையால், ஏழையேன் என்று சொல்கிறார். அதைப் பிரிந்தால், வாழ முடியாதவன் ஆவதால், ஏழையேன் என்கிறார். ஏழைமை என்பதற்கு தளர்ச்சி என்று ஒரு பொருள் உள்ளது. பலகாலமாக கர்மா வினை பயன்களால் தளர்ச்சியடைந்த ஆழ்வார், இப்போது அளவிட்டு முடிக்கமுடியாத பகவத் விஷயத்தை கண்டு தளர்ச்சி அடைந்தவராக உள்ளார் என்பதால், ஏழையான தான் மீண்டும் ஏழையாகிவிட்டேன் என்பதை ஏழையேன் ஏழையேனே என்றும் கொள்ளலாம்.

இத்துடன் இந்த பாசுரத்தை முடித்துக்கொண்டு, எம்பெருமான் தனக்கு செய்த உதவிகளை பேசுதல் என்ற இந்த உபபகுதியின் இறுதி பாடலான “வெள்ளநீர் பரந்து பாயும்” என்ற அடுத்த பாசுரத்தை தொடரும் வலைப்பதிவில் சந்திக்கலாம், நன்றி.

கீழ்கண்ட வலைப்பதிவுக்கு எங்களின் நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d