A Simple Devotee's Views
To Read this in English, please click here, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (எம்பெருமானை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து மக்கள், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்லுகிறார்.
அப்படியும் மக்கள் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் அவர்களை விட்டு, எம்பெருமான் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யேற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான எம்பெருமான், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்றார்.
அடுத்து, தான் கள்வனாகவும், சூதனாகவும் இருந்து, பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை “சூதனாய் கள்வனாய்” என்ற பதினாறாவது பாடலில் தெரிவித்தார்.
அடுத்த பாசுரத்தில், முற்காலத்தில், தான் விரும்பி நின்று எம்பெருமானை முக்கரணங்களால் தொழுதது இல்லை என்றும் இரும்புபோல் கடினமான தன் நெஞ்சத்தை, கரும்புபோன்ற பெரியபெருமாளின் அழகை கொண்டு திருத்தினார் என்றும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னுடைய கண்கள் ஆனந்தம் பெற்று மகிழ்ந்தன என்று பாடினார்.
தன்னை பெரியபெருமாள் திருத்தியதால் தனக்கு வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க, பெருமாளை முழுமையாக தொடர்ந்து ரசிக்கமுடியவில்லையே என்று கவலையுற்று தான் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணி தன்னையே ஆழ்வார் வெறுத்துக் கொண்டது பதினெட்டாவது பாசுரமான ‘இனித்திரை திவலை மோத ” ஆகும்.
கண் கலங்கியதை சென்ற பாசுரத்தில் சொன்ன ஆழ்வார், இந்த பாசுரத்தில், அக்கண்களைத் தாங்குகின்ற மொத்த உடலும் கட்டு குலைந்து உருகுகின்றதே, என்ன செய்வேன் என்று சொல்லி, அவருடன் வந்தவர்களுக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் அப்படி இருக்க காரணமான மருந்தினை தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். பெருமாள் நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்த உபகாரத்தையும் ஆழ்வார் ‘குடதிசை முடியை வைத்து‘ என்ற இந்த பதினொன்பதாம் பாசுரத்தில் சொல்கிறார்.
உடல் உருகாமல் இருக்க, சம்சாரிகள், ஆழ்வாரை தங்களை போல் பகவத்விஷயத்தில் இருந்து வந்துவிடுமாறு சொல்கிறார்கள். பெரியபெருமாள் கண் வளர்ந்து அருளுவது, தங்களுக்காகவே என்று அவரின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் இருக்கும்போது, அகங்காரம் மமகாராம் படைத்த சம்சாரிகளைப்போல் தன்னால் பெருமாளை விட்டு அகலமுடியாது என்று “பாயும் நீர் அரங்கம் தன்னுள்” என்று இருபதாவது பாசுரத்தில் சொன்னார்.
இனி அடுத்த பாசுரம்.
பணிவினால் மனம் அது ஒன்றிப் பவளவாய் அரங்கனார்க்கு, துணிவினால் வாழ மாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய், அணியினார் செம்பொனாய அருவரை அனைய கோயில், மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கலாமே (திருமாலை 21)
அரங்கநாதனை தரிசித்து பின் அகலமுடியாது என்று சென்ற பாசுரத்தில் சொன்ன ஆழ்வாரிடம் அவரது நெஞ்சம், அரங்கனின் அழகை அளவிட்டு அனுபவிக்கலாம் என்று சொன்னதும், “கரும்பினைக் கண்டுகொண்டு” (17) என்றும், “அரவணைத் துயிலுமா கண்டு” (19) என்றும் சொன்ன ஆழ்வாருக்கு, அரங்கநாதனை கண்களால் பார்த்ததினால் தான் “என்செய்கேன்!(18)என் செய்கேன்!!(19)” என்று ஆழ்வார் தவிக்கிறார் என்றும், ஒரு மூலையில் உட்கார்ந்து நெஞ்சினால் தியானம் செய்யலாமே என்று சிலர் ஆழ்வாரிடம் சொன்னதும், சேர்ந்து, ஆழ்வார் தன் நெஞ்சிடம், அப்பெருமானை அளவிட்டு தரிசிப்பது என்பது, இத்தனை காலமாக உறுதி இல்லாமையால் தான் இழந்த பகவத் அனுபவம் போலவே ஆகும் என்று இந்த பாசுரத்தில் சொல்கிறார்.
வெகு காலமாக பகவான் பற்றிய ஞானத்தை இழந்து, துணிவுடன் வாழ மாட்டாத நெஞ்சே, பவளம் போன்ற திரு அதரங்களை உடைய திருஅரங்கன் விஷயத்தில், பணிவாக இருந்து, மனதை அந்த விஷயத்தில் பொருத்தி, முழுமையான அழகுடன், சிவந்த பொன்னால் செய்யப்பட்ட, சிறந்த மேரு மலையை போன்ற, கோயிலிலே, நீல ரத்னம் போன்ற எம்பெருமான், கண் வளர்ந்து அருளுகிற அழகை நெஞ்சினால் நினைக்க முடியுமோ என்று நீயே சொல் என்று தன நெஞ்சத்தைப் பார்த்து கேட்கிறார். இங்கு துணிவு என்று சொல்லப்படுவது எம்பெருமானிடத்தில் “மஹா விஸ்வாசம் “ கொள்ளுதல் ஆகும்.
பெரியபெருமாளைப் பணிவோம் என்று உறுதி பூண்டு, மற்ற விஷயங்களில் இருந்து விலகி, இவ்விஷயத்தில் ஊன்றி ஈடுபடுவது என்ற கருத்து. இந்த உறுதியின் தொடக்கமே இங்கு முக்கியமாக சொல்லப்படுகிறது. மனம் ஒன்றி என்று சொல்லாமல், மனம் அது ஒன்றி என்று சொல்வது, மனதைச் சொல்லாமல், மனதின் செயல்பாடான சிந்தனையைச் சொல்வது. நம்மாழ்வார் திருவாய்மொழியில் (4.3.1) “பூசும் சாந்து என் நெஞ்சமே” என்று சொல்லும் போதும், நெஞ்சத்தின் செயல்பாடான சிந்தனையை சொல்வதே ஆகும்.
திருவாய்மொழி (2.10.9) “தொழ கருதுவதே துணிவது சூதே” என்ற பாசுரத்திலும் சொல்லும் விஷயம் அதுவே. திருமாலிருஞ்சோலையை அடைந்து தொழ வேண்டும் என்ற சிந்தனையை எப்போதும் மனதில் நிறுத்துவதே இந்த உலக வாழ்க்கையை வெல்வதற்கு வழி என்று நம்மாழ்வார் சொல்வதை நினைவில் கொள்வோம்.
எம்பெருமானை தவிர, மற்றவர்களிடம், முழுவதுமாக பணிந்து இருந்தாலும் அவர்கள் மனம் இரங்குவார்களா என்பது நிச்சயம் இல்லை. மனம் இரங்கினாலும் அதனால் நல்ல பலன் கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் எம்பெருமானிடம் பிறக்கும் கருணையும் இரக்கமும் சொல்லி அளவிடமுடியாது.
இப்படி ஈடுபாட்டின் தொடக்கத்தை உடைய ஒருவன் கிடைத்து விட்டால், அவன் இத்தனை காலமாக இழந்த இழப்பை நினைத்து வருந்தாமல் இருக்க ஆறுதல் கூறும், பவளத் திருவாய் உடையவர், திருவரங்கன் என்று ஆழ்வார் சொல்கிறார். ஈடுபாடு ஏற்பட்டு, அவன் நம்மை நினைக்கும் போது ரொம்ப தொலைவில் இருக்க கூடாது என்று திருவரங்கத்தில், அருகிலேயே இருப்பவர்.
முன்பு சொன்ன பணிவும், இப்போது சொல்லப்படும் துணிவும் கூட ஜீவாத்மாவால் ஆரம்பிக்க பட்டது இல்லை, அரங்கனின் அழகே பணிவையும், துணிவையும் உண்டாக்கி, அனுபவம் என்ற உன்னத வாழ்க்கையும் அடையச் செய்கிறது என்பது அர்த்தம்.
துணிவு இல்லாததால் அனுபவத்திற்கு முயற்சி செய்தது இல்லை; அதற்கான துணிவுதனை இப்போது வேண்டுவது ஆழ்வாரின் வார்த்தைகள். மஹாபாரதம் சாந்தி பர்வத்தில், (334.47), கிருஷ்ணர், மனதில் நிச்சயம் இல்லாதவன் பரமாத்மாவை அடைய மாட்டான் என்று கூறுகிறார். ஜனகன், பரமபதம் அடைவதற்கான வழிக்கு துணிவு ஒன்றே பழுதுபடாத சாதனம் என்பதில், தன்னுடைய ஆச்சார்யரான வேதவ்யாஸரை விட, தெளிவாக இருந்தான்.
இப்படி எல்லா இடத்திலும் துணிவு என்று சொல்லப்படுவது எம்பெருமானிடத்தில் “மஹா விஸ்வாசம் “ கொள்ளுதலே ஆகும்.
இந்த துணிவு இல்லாததால் இத்தனை காலமாக எம்பெருமானின் அனுபவத்தை இழந்து விட்டதாக தன் நெஞ்சத்திடம் தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுகிறார்.
இப்படி அனுபவிக்காமல், இத்தனை காலம் அறிவுகெட்டு கிடந்த நெஞ்சைப்பார்த்து, இந்த அனுபவத்தை அளவிடமுடியும் என்று நெஞ்சு சொல்வதும் அறிவுஇல்லாத கூற்றே என்று ஆழ்வார் சொல்கிறார்.
அழகு மிகுந்து இருப்பதும், செம் பொன்னில் செய்யப்பட்டதும் மேரு மலையை ஒத்து இருப்பதாகவும் உள்ள திருவரங்கம் பெரிய கோவில், இந்த பூமண்டலத்திற்கு ஆபரணம் போல் விளங்குவதால் ‘அணியினார் ‘ என்பது மிக பொருத்தம். அதேபோல், மலை போல் நிலையாய் உலகுக்கு எல்லாம் ஆதாரமாய் இருப்பதால், திருவரங்கம் பெரிய கோவிலை ‘அருவரை அனைய ‘ என்று சொல்வதும் பொருத்தமே.
அப்படி மேரு மலையை ஒத்து இருக்கும் மலையின் நடுவில் ஒரு உயர்ந்த நீல ரத்தினத்தை வைத்து அழுத்தியத்தைப் போல் பெரியபெருமாள், ஸ்ரீரங்கவிமானத்தின் நடுவே பள்ளிகொண்டு இருப்பது என்கிறார் ஆழ்வார்.
இப்படி கண்வளர்ந்து அருளுகின்ற பெரியபெருமாளின் அழகை அளவிட்டு அனுபவிக்க முடியுமோ என்று தன் நெஞ்சிடம் ஆழ்வார் கேட்கிறார். அவருடைய கல்யாண குண நலன்களையும், திருவிளையாடல்களையும் அளவிட்டு விடலாம், ஆனால், திருமேனியின் அழகை அளவிட்டுவிட முடியாது என்று ஆழ்வார் சொல்கிறார். மனதின் செயல்பாடு, நினைப்பது; வேறு ஒரு அவயம் எப்படி நினைக்க முடியாதோ அதேபோல், மனத்தினாலும் திருமேனியின் அழகை அளவிட்டுவிடமுடியாது என்பது கருத்து.
மீண்டும் அடுத்த பாசுரத்தில் சந்திக்கலாம். நன்றி.