திருமாலை: பாயும் நீர் அரங்கம்

To Read this in English, please click here, thanks

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய  திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம் போன்றவர்கள், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்லுகிறார்.

அப்படியும் நாம் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் நம்மை விட்டு, பெருமாள் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யேற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான பெருமாள், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்றார். அடுத்து, தான் கள்வனாகவும், சூதனாகவும் இருந்து, பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை “சூதனாய் கள்வனாய்” என்ற பதினாறாவது பாடலில் தெரிவித்தார்.

அடுத்த பாசுரத்தில், முற்காலத்தில், தான் விரும்பி நின்று பெருமாளை முக்கரணங்களால் தொழுதது இல்லை என்றும் இரும்புபோல் கடினமான தன் நெஞ்சத்தை, கரும்புபோன்ற பெரியபெருமாள் தன் அழகை கொண்டு திருத்தினார் என்றும், தன்னுடைய கண்கள் ஆனந்தம் பெற்று மகிழ்ந்தன என்று பாடினார். அதனால் வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க, பெருமாளை முழுமையாக ரசிக்கமுடியவில்லையே என்றும், ஐயோ! இக்கண்ணீர் கண்களை மறைத்து எம்பெருமானை இடைவிடாது தரிசிக்க முடியாமல் செய்கின்றதே என்று கவலையுற்று தான் ஒரு பெரிய பாவத்தை செய்ததாக எண்ணி தன்னையே வெறுத்துக் கொண்டது அடுத்த பாசுரமான ‘இனித்திரை திவலை மோத ” என்ற பதினெட்டாவது பாசுரம் ஆகும்.

பெருமாள் நான்கு திசைகளை படைத்தது, அவற்றில் தன்னுடைய அங்கங்களை வைத்து, அதைக்கொண்டு நாம் உய்வதற்கு வழிசெய்து கொடுத்ததை ஆழ்வார் ‘குடதிசை முடியை வைத்து‘ என்ற பதினொன்பதாம் பாசுரத்தில் சொன்னார். பெருமாளின் தரிசனத்தால், அவரது உடலும் உள்ளமும் உருகுவதைக் கண்டு, அவருடன் வந்த நம் போன்றவரைகளுக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பதை பார்த்து அவர்களிடம் அப்படி இருக்க காரணமான மருந்தினை தனக்கும் கொடுக்குமாறு ஆழ்வார் கேட்கிறார்.

இனி அடுத்த பாசுரம்.

திருமாலை இருபதாம் பாசுரம்

பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட, மாயனார் திருநன் மார்வும் மரகத உருவும் தோளும், தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும், ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே. (திருமாலை 20)

சென்ற பாசுரத்தில், ஆழ்வார், தான் பெரியபெருமாளை தரிசித்தவுடன் தனக்கு உள்ளத்துடன் சேர்ந்து உடலும் உருகுகிறதே, ஆனால் அப்படி உருகாத சம்சாரிகளைப் பார்த்து தனக்கு அவர்கள் உபயோகிக்கும் மருந்தினை கொடுக்குமாறு கேட்டார். அதற்கு சம்சாரிகள், தங்களை போல் பகவத்விஷயத்தில் இருந்து வந்துவிடுமாறு ஆழ்வாரைச் சொல்கிறார்கள். பெரியபெருமாள் கண் வளர்ந்து அருளுவது, தங்களுக்காகவே என்று அவரின் ஸ்வரூபத்தை அறிந்தவர்கள் இருக்கும்போது, அகங்காரம் மமகாராம் படைத்த சம்சாரிகளைப்போல் தன்னால் பெருமாளை விட்டு அகலமுடியாது என்று ஆழ்வார் பதில் உரைக்கும் பாசுரம் ஆகும்.

இந்த பாசுரத்தில் பெரியபெருமாளின் அழகினை ஆழ்வார் விவரிக்க முயற்சிக்கிறார். காவேரியால் சூழப்பட்ட திருவரங்கத்திலே திருஅனந்தாழ்வானாகிய படுக்கையில் கண் வளர்ந்து அருளுகிற ஆச்சர்யமான செயல்களை உடைய எம்பெருமானுடைய, பிராட்டி வாழ்கின்ற மிக சிறந்த திருமார்பும், மரகதமணி போன்ற திருமேனி நிறமும், திருத்தோள்களும், பரிசுத்தமான தாமரை மலரைப் போன்ற திருக்கண்களும், சிவந்த திருஅதரங்களும், பவளம் போன்ற திருவாயும், வெகுகாலமாக மேன்மையுடைய திருமுடியும், இவைகளால் வந்த தேஜஸும், அடியவர்களுக்காகவே ஆகும். இவற்றை அடியவர்கள் இழக்கலாமோ என்று ஆழ்வார் இந்த பாசுரத்தை முடிக்கிறார்.

இந்த பாசுரத்தினால் எம்பெருமானின் வடிவழகும் அதில் ஆழ்வாருக்கு இருக்கும் ஈடுபாடும் நன்றாக தெரியவரும்.

பாயும் நீர் அரங்கம்

அணைகட்டி நீர் ஏற்றும்படி இல்லாமல், பாய்கின்ற நீருக்கு ஏற்ற பள்ளமாக இருக்கும் திருவரங்கம் என்பது ஒரு பொருள். நீரைப்போல், சுத்தப்படுத்துவதும் தெளிவாகவுள்ளதும் ஆன மற்ற பொருள்களையும் குறிக்கும். அத்தகைய பொருள்கள் வந்து சேரும் இடம் திருவரங்கம் ஆகும் என்பது இன்னொரு பொருள். ஆழ்வார்கள் பதின்மரும் ஆச்சார்யர்கள் அனைவரும் வந்து சேர்ந்த இடம் அன்றோ இந்த பெரியகோயில். வால்மீகி ராமாயண ஸ்லோகம் (1.2.5) இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது. “பரத்வாஜனே, சேறு அற்றதாகவும், அழகியதாகவும், நல்லவர்களின் மனதைப்போல் தெளிந்த நீரை உடையதாகவும் விளங்கும் இந்த நீரினை காண்பாயாக” என்று சொல்லும் போது, இங்கு சொல்வதைப் போலவே, நீர், நல்லவர்களுக்கு உபமானமாக சொல்வதை காணலாம்.

பாம்பணை பள்ளி கொண்ட

எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏடுகளில் உள்ளது என்று எண்ணிவிடாமல், திருவரங்கத்தில், திருவனந்தாழ்வான்மீது “தன் தாளுந் தோளும் முடிகளும்  சமனிலாத பல பரப்பி” (திருவாய்மொழி 8.10.8) என்றபடி எல்லா அவயங்களின் அழகும் நன்கு விளங்கும்படி சாய்ந்து அருள்கின்ற தேஜஸை கண்டவர்களின் கால்கள் அங்கிருந்து விலகுமோ என்று ஆழ்வார் வினவுகிறார். எம்பெருமானின் சயனத் திருக்கோலத்தை “தன் தாளுந் தோளும் முடிகளும்  சமனிலாத பல பரப்பி” என்று விளக்கம் சொல்லியிருப்பதை மேலும் சில பாடல்களில் இங்கு காணலாம்.

பூவிலும் மென்மையான தன் திருமேனியை கடல் நீர் உறுத்தாமல் இருக்க வேண்டும் என்று அனந்தாழ்வான் மீது சயனித்து இருக்கும் எம்பெருமான் என்று சொல்வதை, பெரியாழ்வாரின், “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்ற’ (பெரியாழ்வார் திருமொழி 5.1.7) பாடல் மேற்கோளாக காட்டப்படுகிறது.

பள்ளி கொண்ட மாயனார்

பள்ளிகொண்ட என்ற பதம், பாம்பணை பள்ளி கொண்ட என்றும் ‘பள்ளிகொண்ட மாயனார்” என்றும் சேர்க்கப்பட்டு அர்த்தம் சொல்லப்படுகிறது. மாயம் என்பது ஆச்சர்யம் என்ற அர்த்தத்தில் உபயோகபடுத்த பட்டு உள்ளது. பள்ளிகொண்டு இருக்கும் போதே மாயங்கள் அல்லது ஆச்சர்யங்கள் நடத்தும் பெருமான் என்றும் பொருள் கொள்ளலாம். திருவிளக்குப்பிச்சனுடன் பெரியபெருமாள், நம்பிள்ளையின் காலக்ஷேபத்தை கேட்க விழைந்த போது பேசியது அப்படி ஒரு ஆச்சர்யமே.

பள்ளிகொண்டு இருக்கும் அழகு ஆச்சர்யப்பட வைக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம். பள்ளிகொண்டு இருக்கும் இராமபிரானின் அழகை அனுபவிக்கும் சீதா பிராட்டியின் வார்த்தைகளை யுத்த காண்டத்தில் (38.25) காணலாம். ( ச மயா போதிதஹ் ஸ்ரீமான் சுகசுப்தஹ் பரந்தபஹ ) காகாசுரனால் துன்பபடுத்தப்பட்ட போது, சுகமாக கண் வளர்ந்து அருளியவரும், அழகாக இருப்பவரும், எதிரிகளைத் தவிக்கச் செய்பவருமான இராமபிரான் எழுப்பப்பட்டார் என்று இந்த ஸ்லோகத்தில் சொல்கிறார். அப்படிப்பட்ட அழகிய ராமன், ஆராதித்த பெருமாள் திருவரங்கன்; அதனால் அந்த அரங்கநாதனின் சயன திருக்கோல அழகை கண்டு மகிழ்ந்து தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாசுரத்தில் கூறுவது ஆச்சர்யமில்லை. அதே போல் கண்ணனை துயில் எழுப்பியவர் ஆண்டாள் ஆவார். (நீளாதுங்க ஸ்தனகிரிதடி ஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம் ).

நின்ற திருக்கோலத்தில் இருந்தாலும், அமர்ந்த திருக்கோலத்தில் இருந்தாலும் அகலலாம், அனால் பள்ளிகொண்ட திருக்கோலத்தில் அகல இயலாது என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்கிறார். நம்மாழ்வாரின் திருவாய்மொழி (5.8.1) “ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!” என்ற பாடலும், குலசேகர ஆழ்வார் பாடிய பெருமாள் திருமொழி (7.2), “ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிடப் பெற்றிலேன் ” (ஆனை கிடப்பதை போல் பள்ளி கொண்டு அருளும் அழகை சொல்கிறார்) என்ற பாடலும் இங்கு மேற்கோள் காட்டப்படுகிறது.

எம்பெருமானுடைய நீண்ட கைகளுக்கும் எட்டாமல் ஓடினேன் ஓடி என்று சம்சாரத்தினுள் வெகு தூரம் ஓடிகொண்டுஇருந்த தன்னை பிடித்து இழுத்துக்கொண்ட ஆச்சர்யத்தால் மாயனார் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுவதுவதாக உரையாசிரியர் தெரிவிக்கிறார்.

திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் (7) என்ற பிரபந்தத்தில், “அரவு இன் அணை மிசை மேய மாயனார் ” என்று சொல்வதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.

திருநன் மார்வும்

பிராட்டி எப்போதும் அகலமாட்டேன் என்று வாழ்கின்ற மார்பு என்பதால், எம்பெருமானின் திருமார்பிற்கு சிறப்பு என்பது ஒரு அர்த்தம். அதாவது பிராட்டி வாழ்வதால் சிறப்பு பெரும் மார்பு என்று பொருள். நம்மாழ்வாரின் அகலகில்லேன் இறையும் என்ற திருவாய்மொழி (6.10.10) அந்த சிறப்புக்கு அர்த்தம் கூறும். பிராட்டி அணிந்த செம்பஞ்சுக்குழம்பும் (மகளிர் பண்டைக்காலததில் அழகிற்காகப் பூசிய சிவப்புக்கலவை), பிராட்டி அணிந்த மாலைகளும் எம்பெருமானின் திருமார்பில் இருப்பதைக்கண்டு உபநிஷத்துக்கள் இவனே பரம்பொருள் என்று முடிவு செய்கின்றன என்று பராசர பட்டர் சொல்கிறார். (ஸ்ரீ குணரத்ன கோஸம் 4).

நம்மாழ்வார், “திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும், திகழ்கின்ற திருமாலார்” (திருவாய்மொழி, 10.6.9 ) என்று திருமாலுக்கும், அவரின் திருமார்பிற்கும், பெரிய பிராட்டியாருக்கும் உள்ள சிறப்புகளை சேர்த்து ஒன்றோடு ஒன்று மேலும் மேலும் அழகு சேர்த்துக்கொள்வதை இங்கே நினைவில் கொள்ளலாம்.

மரகத உருவும் தோளும்

நீர் வெள்ளத்தை திறந்து விட்டால், அது எப்படி காண்பவர்கள் கண்கள் குளிரும்படி உள்ளதோ, அதேபோல் எம்பெருமான், ஒளிரும் மரகத பச்சை நிற வடிவு கொண்டவர். இதே ஆழ்வார் பாடிய பச்சை மாமலை போல் மேனி என்பதையும் இங்கு நினைவு கொள்ளலாம். மார்பிற்கு சிறப்பு சேர்க்க திரு, நன் என்ற அடைமொழிகள் சேர்க்கப்பட்டன; உருவிற்கு சிறப்பு சேர்க்க மரகத ஒளி சேர்க்கப்பட்டது. அப்படி எந்த சிறப்பும் சேர வேண்டிய அவசியம் இல்லாத இயற்கையிலேயே சிறப்பு உள்ள தோள்கள் என்று ஆழ்வார் கூறுகிறார். இந்த நீரோட்டத்தில் நீந்த விழைபவர்களுக்கு தெப்பம் போல் உள்ள தோள்கள் என்று உரையாசிரியர் கூறுகிறார்.

தூய தாமரைக் கண்களும்

பரிசுத்தமான தாமரை மலர்போன்ற திருக்கண்கள் என்பது நேரிடையான பொருள். இந்த திருக்கண்களால் கடாக்ஷிக்க பெற்றவர்கள் பரிசுத்தம் அடைவதால், அதற்கு காரண உறுப்பான திருக்கண்களுக்கு ‘தூய‘ என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. பிராட்டியாக இருந்தாலும் சரி, ஹிரண்யன் போன்ற அசுரர்கள் ஆனாலும் சரி, எல்லோரையும், குளிர நோக்குகின்ற கண்கள்; நோக்கு ஏன் தூய்மை என்றால், எம்பெருமான் எந்த ஒரு காரணமும் இல்லாமல், தன்னுடைய விருப்பத்தினால் மட்டுமே பார்ப்பதால், அதில் பாரபட்சம் இருப்பதில்லை.

நண்பன், பகைவன் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லா ஜீவராசிகளுக்கும் நண்பன் அன்றோ எம்பெருமான். (பகவத் கீதை 5.29). ஜிதந்தே ஸ்தோத்திரத்தில் (1.2), விஷ்ணு பக்தி உடையவர்களுக்கும், பகவத் பக்தி அற்றவர்களுக்கும் எப்போதும் சமானமாக பற்றலாம்படி இருக்கும் அவனுடைய திருவடிகளை உபாயமாக நிச்சயிக்கிறேன் என்று சொன்னது இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது. அதாவது எல்லோருக்கும் சமமாக இருப்பது அவனது உறவு. பார்வை ஒன்றாக இருக்கும்போது, அசுரர்களுக்கு மட்டும் ஏன் கெடுதல் விளைகின்றது என்று கேட்டுக்கொண்டு, அவை அசுரர்களின் தோஷத்தினால் வந்தது என்று பதில் உரைக்கிறார். எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் தென்றல், தாமரையை மட்டும் உலர்த்திவிடுவதைபோல் இதுவும் என்கிறார்.

தூயதாமரை என்று சொல்லும்போது, குளிர்ச்சிக்கும், நறுமணதிற்கும், மேன்மைக்கும் மட்டுமே எம்பெருமானுடைய திருக்கண்களுக்கு தாமரை ஒப்பிடப்படுகிறது; திருக்கண்களில் வழியும் கருணைக்குத் தாமரையை ஒப்பிடமுடியாது என்றும் குறிப்பிடுகிறார்.

துவரிதழ் பவள வாயும்

சிவந்த திருவதரங்களையும் (உதடுகளையும்), பவளம் போல் இருக்கும் பல்வரிசை உடைய வாயும் என்று சொல்லிவிட்டு, உதடுகளின் சிவப்பு பிரதிபலிப்பதால் பல்வரிசையும் பவளம் போல் சிவப்பாக இருக்கிறது என்று சொல்கிறார். ஒருவரிடமும் பேசாமல், ஒரு வஸ்துவினுடனும் ஆதரம் இல்லாமல், மிக உயரிய நிலையில், இருக்கும் பரமாத்மா, அத்தகைய காம்பீர்யத்தை குலைத்துக்கொண்டு தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வார்த்தைகளை கூறுகிறார் என்றபடி இருக்கும் பவள வாய் என்பது இன்னொரு விளக்கம். அதேபோல், தங்களுடைய குறைகளை நினைத்து, அவனை அணுகுவதற்கு அஞ்சும் அடியவர்களை பார்த்து அஞ்சேல் என்று சொல்வது போல் புன்சிரிப்போடு இருக்கும் பவள வாய் என்பது இன்னொரு விளக்கம்.

ஆயசீர் முடியும்

ஆய என்பது, எப்பொழுதும் அழகாகவும், சித்தமாகவும் இருக்கும் என்பதை சொல்கிறது. ஆயம் என்பது தங்கத்தைக் குறிக்கும் என்பதால் ஆயம் என்பதில் உள்ள கடைசி எழுத்து குறைந்து ஆய சீர் முடி என்று எடுத்துக்கொண்டால், தங்கத்தாலே செய்தாற்போல் உள்ள திருமுடி என்றும் கொள்ளலாம். சீர் என்பது செல்வ சிறப்பை காட்டுகிறது.

தேசும்

தேசும் என்பது தேஜஸ் என்பதின் மருவு. திருமேனி முழுவதும் தேஜஸ் மிளிர்கிறது. மேலே சொன்ன ஒவ்வொரு அவயத்தில் இருந்தும் தேஜஸ் ஜொலிக்கிறது. திருநன்மார்பு, மரகத உரு, தோள், தூய தாமரை கண்கள், துவர் இதழ், பவளவாய், ஆயசீர்முடி என்று ஒவ்வொரு அவயங்களையும் சொல்லிய, ஆழ்வார் இந்த ஒரு வார்த்தையினால், எம்பெருமானின் திருமேனியின் முழு உருவத்தின் அழகையும் உணர்த்துகிறார். மரகத உரு என்பது, அவயவ விளக்கமே தவிர அது முழு வடிவம் ஆகாது, ஏன் எனில், எம்பெருமானின் திருமேனியில், எல்லா அவயங்களும் மரகத பச்சை நிறமாக இருப்பது இல்லை.

ஒவ்வொரு அவயவமாக சொல்வது சௌந்தர்யம் என்றும் முழுவதுமாக சொல்வது லாவண்யம் என்று சொல்வதுண்டு. திவ்யதேசங்களில் சௌந்தர்யத்திற்கு நாகை சௌந்தர்ராஜ பெருமாளும், லாவண்யத்திற்கு திருக்குறுங்குடி நம்பியும் சொல்வது இங்கே குறிப்பிடலாம்.

அடியரோர்க்கு அகலலாமே

பெரியபெருமாளின் இத்தகைய வடிவழகின் பெருமையை கண்டால், ஸ்வரூப ஞானம் உள்ள எங்களால் அகல முடியாது, அதை அனுபவிக்க தெரியாத, நான், என்னது என்று அகங்காரம் மற்றும் மமகாராம் உள்ளவர்களால் மட்டுமே அகல முடியும் என்று ஆழ்வார் கேட்டுக்கொண்டு அதற்கு சம்சாரிகள் சம்மதம் தெரிவிப்பது போல், ‘ஆமே‘ என்று இந்த பாசுரத்தை முடிக்கிறார்.

மீண்டும் அடுத்த பாடலில் சந்திக்கலாம்.

சயன திருக்கோலம்

ஆலம் பேரிலை அன்னவம் செய்யும் அம்மானே” (திருவாய்மொழி 8.3.4) என்று மிகச் சிறிய ஆலினிலையில் சயனித்து இருக்கும்போதும், இப்படி சிறிய இடத்தில இருக்கலாமோ ‘தன் தாளுந் தோளும் முடிகளும்  சமனிலாத பல பரப்பி” விசாலமான இடத்தில இருக்கலாமே என்று உரையாசிரியர் கேட்கிறார்..

நிலைநின்ற வாழ்ச்சியை விரும்புவர், திருப்பாற்கடலில் துயில்கின்ற எம்பெருமானை அடையுங்கள் என்று சொல்லும்போது, ‘நிற்குறில், ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல் அடியவர் ஆமின்‘ (திருவாய்மொழி 4.1.6) என்ற பாசுரத்தின் விளக்கத்தின் போதும், ‘தன் தாளுந் தோளும் முடிகளும்  சமனிலாத பல பரப்பி” என்று உரையாசிரியர் சொல்கிறார்.

திருவாய்மொழியில் “குறைவில் தடங்கடல் கோள் அரவு ஏறி தன் கோலச்செந் தாமரைக்கண், உறைபவன் போல் ஓர் யோகு புணர்ந்த ஒளிமணி வண்ணன் கண்ணன்” (3.10.2) என்பதற்கு விளக்கம் கொடுக்கும்போது, ‘தன் தாளுந் தோளும் முடிகளும்  சமனிலாத பல பரப்பி” என்று உரையாசிரியர் சொல்கிறார். குறையற்ற, விசாலமான, திருப்பாற்கடலில், திருஅனந்தாழ்வான் மேல் உறைகிறான் என்பதே இங்கு பொருள்.

நான்முகன் திருவந்தாதி, 3ம் பாடலில், “பாலிற் கிடந்ததுவும், பண்டரகம் மேயதுவும், ஆலில் துயின்றதுவும் ஆரறிவார்” என்றதை, திருப்பாற்கடலில் சயனித்து அருளுவதையும், திருஅரங்கத்தில் பொருந்தி இருந்து அருளுவதையும், ஆலிலையில் பள்ளியெழுந்து அருளுவதையும் சொல்லி, ‘தன் தாளுந் தோளும் முடிகளும்  சமனிலாத பல பரப்பி” என்று மேற்கோள் காட்டுவது தனிச்சிறப்பு.

முதல் திருவந்தாதியில் இரண்டாவது பாசுரத்தில், பொய்கையாழ்வார், “அன்று உடைத்து அடைத்துக் கண்படுத்த ஆழி” என்று சொல்லும்போதும், இதுவும் மேற்கோள் காட்டப்படுகிறது. “வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தயாக விரித்து அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்ற” (பெரியாழ்வார் திருமொழி 5.1.7) என்ற பாடலும் இங்கு கூறப்படுகிறது.

One Comment on “திருமாலை: பாயும் நீர் அரங்கம்

  1. Very easy to Read, and easy to understand, smooth flow of writing skill makes us learn “Tirumalai” using “Tirumalai”, Please keep it up your unique service
    Thanks and Wishes
    Swaminathan S

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: