கைசிக ஏகாதசி

To read this in English Please click here, thanks

இந்த வருடம் 26 நவம்பர் 2020, கைசிக ஏகாதசி ஆகும், அடுத்த நாள் கைசிக துவாதசி. வராஹனின் கருணை மழை கிடைக்க இந்த நன்னாளில் (26 நவம்பர் 2020) வராஹனைப் பிரார்த்திப்போம்.

ஏகாதசி

அமாவாசை அல்லது பௌர்ணமி முதல் பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம் என்கிறோம். கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்லபக்ஷம் (வளர்பிறை) ஆகிய இந்த இரண்டு பக்ஷங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். மோக்ஷத்தை அளிக்கும் விரதத்தை கடைபிடிக்க வழி ஏற்படுத்தியிருக்கும் ஏகாதசியால் எல்லா பக்தர்களுக்கும் மகிழ்ச்சியே.

வ்யாஸ முனிவர் சொல்வதுபடி, கருணைக்கடலான விஷ்ணு, பாவம் செய்தவர்கள் நரகத்தில் அனுபவிக்கும் துயரங்களைக் கண்டு, அதனில் இருந்து ஜீவராசிகள் விடுபட்டு மோக்ஷம் அடைய, இவ்வுலகில் வாழ்ந்துகொண்டு இருக்கும் போதே செய்யக்கூடிய உபாயம் (ஏகாதசி விரதம்) என்று தன்னுடைய உருவாகவே இந்த ஏகாதசியைப் படைத்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’ என்று இந்த விரதத்தை மகிமைப் பற்றி அக்னி புராணம் எடுத்துரைக்கிறது. பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம்,கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியைத் தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தைவிட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம் என்கிறார் பகவான் கிருஷ்ணர். ஏகாதசி விரதத்தை ஆண், பெண், ஏழை, பணக்காரர், குல, ஜாதி ஆகிய வேறுபாடுகள் ஏதும் இன்றி எல்லோரும் கடைப்பிடிக்கலாம்.

கைசிக ஏகாதசி

கைசிகம் என்பது ஒரு ராகத்தின் பெயர். கர்நாடக சங்கீதத்தில் பைரவி ராகம். நம்பாடுவான் என்னும் விஷ்ணுபக்தன், கைசிகப் பண் இசைத்து பாடிய நாளான கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியை கைசிக ஏகாதசி என்று அழைப்பர்,

விஜய சொக்கநாதர் கைசிக ஏகாதசி சேவையை தரிசிப்பதற்குத் தனது குடும்பத்துடன் திருவரங்கம் வந்தார். ஆனால் அவர் வருவதற்குள் பெருமாள் சந்தன மண்டபத்துக்குப் புறப்பட்டுவிட்டார். மனம் வருந்திய மன்னர், ஸ்ரீரங்கத்திலேயே ஒருவருடம் தங்கி அடுத்த ஆண்டு, இந்த சேவையைக் கண்டுகளித்தார். ஸ்ரீரங்கத்தில் இவர்களின் நினைவாக இரண்டாம் திருச்சுற்றில் இவர்களின் சிலைகள் இருக்கின்றன.

வராஹ புராணம்

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில், பூகர்ப்ப (72) – தனது மனைவியான பூமாதேவியை ஒரு கர்ப்பத்தைப்போல் காப்பாற்றுபவர் என்றும் கோவிந்த (543) பூமியை காத்து மீண்டும் அவளை அடைந்தவர் என்றும், (539 முதல் 543 வரை உள்ள திருநாமங்கள் வராஹ அவதாரத்தை பற்றியவை) சொல்லும் திருநாமங்கள் இந்த கைசிக புராணத்திற்கு தொடர்புடையவை.

பூமியில் மானிடர்களைப் படைக்க வேண்டும் என்று எண்ணிய சமயத்தில், இரண்யாக்ஷன் என்ற அசுரன் பூமியை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். பிரம்மா மகாவிஷ்ணுவிடம் சமுத்திரத்தில் அமிழ்ந்து இருக்கும் பூமியை வெளிக்கொண்டு வர பிரார்த்தனை செய்தார்.    மகாவிஷ்ணு பிரம்மாவின் விருப்பத்தை பூர்த்தி செய்ய, வராஹ அவதாரம் எடுத்தார்.  பகவான் வராஹ மூர்த்தியாக எழுந்தருளி ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன் போரிட்டு அவனை வென்று, தண்ணீருக்குள் ஆழ்ந்து கிடக்கும் பூமியை வெளிக்கொணர்ந்து தர்மத்தை நிலை நிறுத்தினார்.

நீரில் இருந்து வெளிவந்த பூமாதேவித் தாயாரின் அச்சத்தைக் குறைத்து, அவளை அமைதிப்படுத்தி,, வராஹப்பெருமான் தன் மடியில் அமர்த்தினார், அப்போது தாயார் நம் பொருட்டு, “நம் குழந்தைகளாகிய இந்த பூமியின் பிரஜைகள் உய்வதற்கு வழி என்ன” என்று கேட்க பகவான் நம் மேல் உள்ள கருணையினால், “ தூய மலர்களைத் தூவி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க வேண்டும்” என்று சொல்கிறார். இதையே திருப்பாவை என்ற திவ்ய பிரபந்தந்தின் மூலம், பூமாதேவியின் அவதாரமான ஆண்டாள் நமக்கு கொடுக்கிறார்.

அதேபோல் நாம சங்கீர்த்தனம் மூலம் தன்னை அடையலாம், மற்றும் அதை கைசிக பண் கொண்டு தன் திருத்தலங்களில் கைசிக ஏகாதசி துவாதசி போன்ற சிறப்பு நாட்களில் தன் முன் பாடுவதால் அதை கேட்பவர்களையும் உய்யச் செய்யலாம் என்பதை நம்பாடுவான் என்பவனின் சரித்திரத்தை, கைசிக ஏகாதசியின் சிறப்பை பூமிப்பிராட்டியிடம் சொல்லும் கைசிக மஹாத்மியம் வராஹ புராணத்தில் உள்ளது.

வராஹ அவதார ஆழ்வார் பாசுரங்கள் சில

  • ஞானப்பிரான் என்று நம்மாழ்வார் பெருமையுடன் பேசம் அவதாரம் வராஹ அவதாரம்ஏனத் துருவாய் இடந்த பிரான், இருங் கற்பகம்சேர் வானத்தவர்க்கும் எல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும் ஞானப் பிரானை – (திருவிருத்தம் 10.9 )
  • பன்றியாய் அன்று பாரகங்கீண்ட பாழியான் ஆழியான் அருளே நன்று நானுய்ய – திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழி 1.1.4) – க்ருபை மிக்க பிரான்
  • ஆதிமுன் ஏனமாகி அரணாய மூர்த்தி அது நம்மை ஆளும் அரசே (பெரிய திருமொழி 11.4.4) – ரக்ஷகன் – நம்மை காப்பாற்றும் பெருமாள்
  • இருங் கற்பகம்சேர் வானத்தவர்க்கும் எல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும் ஞானப் பிரானை – (திருவிருத்தம் 10.9 ) என்று தன்னுடைய முதல் பிரபந்தத்திலும், கோல மலர்ப்பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ, நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்த தொப்ப, கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய், நீலக் கடல் கடைந்தாய் உன்னை பெற்றினிப் போக்குவனோ? (திருவாய்மொழி 10.10.7) என்று தன்னுடைய கடைசிப் ப்ரபந்தத்தின் இறுதியிலும் பாடி நம்மாழ்வார், இவ்வுலகில் உள்ளவர்களுக்கும், மற்று எல்லா உலகத்தில் உள்ளவர்களுக்கும் ரக்ஷகன் என்றும், தனக்கும் மோக்ஷம் கொடுத்தவன் என்றும் நம்மாழ்வார் சிறப்பாக கூறும் வராக அவதாரம்.
  • நம் சம்பிரதாயத்தில் நவவித சம்பந்தம் என்று பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள ஒன்பது விதமான சம்பந்தங்களை கூறுவார்கள். இங்கே நம்மாழ்வார் தந்தை பிள்ளை உறவை வராஹ அவதாரத்தை கொண்டு சொல்லும் பாசுரங்கள். ஏனமாய் நிலங் கீண்ட என் அப்பன் !(திருவாய்மொழி, 5.5.6) என்றும், அப்பன் ஊன்றி இடந்து ஏயிற்றில் கொண்ட நாளே (திருவாய்மொழி, 7.4.3) என்றும் பாடி, அவனுக்கும் தனக்கும் உள்ள தந்தை-பிள்ளை உறவை எடுத்து சொல்லி வராஹ அவதாரத்தில் ரக்ஷகத்தின் பெருமையை / சிறப்பை நமக்கு சொல்வது சுவாமி நம்மாழ்வார்.
  • எம்பெருமான் அசுரர்களுக்கு என்று சொல்லும் வார்த்தைகளை, ஸாத்விகர்கள் நேரடியாக எடுத்து கொள்ள இயலாது. திருவாய்மொழியில் (5.10.4) – “கள்ள வேடத்தைக் கொண்டுபோய்ப் புறம் புக்க வாறும், கலந்து அசுரரை உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும்,” என்று சொன்னதும், “திண்கழற் கால் அசுரருக்குத் தீங்கிழைக்கும் திருமாலை‘ (திருவாய்மொழி 3.5.2) – என்று சொன்னதும் அதற்கு உதாரணங்கள். இரண்டாவது உதாரணத்தில் தீங்கிழைக்கும் என்று சொல்லும்போது, தீங்கு என்பதை கனவிலும் நினைக்காத திருமகளையும் சேர்த்து சொல்வது, பிராட்டியும் எம்பெருமானோடு சேர்ந்து தீங்கிழைக்க திருவுள்ளம் கொள்ளும் அளவிற்க்கு அசுரர்கள் தீமைகளைச் செய்கின்றனராம்.
  • ஆனால் வராஹ அவதாரத்தில் சொன்ன வார்த்தைகள் மேலே சொன்னவை போல் அல்ல. அவை எம்பெருமான், பிராட்டி சொன்ன வார்த்தைகள். மேலும் பிரளய காலத்தில், பூமிப் பிராட்டியை காப்பாற்றி, அவளின் மனக்கிலேசத்தை / துயரங்களை குறைக்க முற்படும் போது, எம்பெருமான் அருளிய வார்த்தைகள். ஆகவே அவை மிக நம்பத்தகுந்த வார்த்தைகள்.
  • பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல் நாவுமிரண்டுளவாய்த்து ” (நாச்சியார் திருமொழி 10.3), மற்றும் “செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்” (நாச்சியார் திருமொழி, 11.10) என்பவை பிரிவில் ஊடலில் பேசும் வார்த்தைகள். அவை போல் இல்லாமல், “பார்வண்ண மடமங்கை பத்தர்” (திருநெடுந்தாண்டகம் 18) என்று சேர்ந்து இருக்கும் போது பேசும் சத்திய வார்த்தைகள் போல் இருக்கும் வராஹனின் வார்த்தைகள்.
  • வராஹ அவதாரத்தில் தமக்கு சொன்ன வார்த்தைகளில் இருந்து மாற மாட்டார் என்று பூமிதேவியின் அம்சமாகவே எழுந்தருளிய நம் ஆண்டாள், நாச்சியார் திருமொழி (11.8) “பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள், மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார், பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே” பாடலும் இங்கு அவசியம். வராஹ அவதாரத்தில் அவர் கூறிய வார்த்தைகளைத் தன் நெஞ்சில் இருந்து பெயர்க்க முடியாதவை என்று ஆண்டாள் கூறுகிறார்.

ஆக வராஹ அவதாரம் எடுத்து சகல லோகப் பிதாவான விஷ்ணு, சகல லோக மாதாவான பூமாதேவியை ரக்ஷித்தபோது, பூமாதேவி, பூமியிலுள்ள மக்கள் சம்சாரபந்தம் என்ற கடலிலிருந்து கரை ஏற இருக்கும் உபாயங்களை அருளுமாறு கேட்க, பகவான் தன்னைப் பாடி மகிழ்ச்சி அடையச்செய்வது என்ற ஒரு உபாயத்தை, நம்பாடுவான் என்கிற பரம பக்தனின் சரிதையைக் கூறி மெய்ப்பிக்கிறான். அதுவே கைசிக மாகாத்மியமாகும்.

பூமிபிராட்டியார் பல உபாயங்களை கேட்ட போதிலும் வராஹப்பெருமாள் தன் திருநாம வைபவங்களை ‘பாடி‘ என்று ஒரேயொரு உபாயத்தை சொன்னதை நன்றாக நினைவில் கொண்டு, பின்னால் திருப்பாவை என்ற ப்ரபந்தந்தை ஆண்டாள் மூலம் இந்த கீத ரூபமான உபாயத்தை பல இடங்களில் சொல்லி, நமக்கு புரிய வைக்கிறார்.

  • பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி (2)
  • ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி (3)
  • தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி (5)
  • நாராயணன்மூர்த்தி கேசவனைப் பாடவும் (7)
  • பாவாய் எழுந்திராய் பாடிப் (8)
  • முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட (11)
  • மனத்துக்கு இனியானைப் பாடவும் (12)
  • கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடி (13)
  • பங்கயக் கண்ணானைப் பாட (14)
  • மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனைப் பாட (15)
  • தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாட (16)
  • பந்துஆர் விரலிஉன் மைத்துனன் பேர் பாட (18)
  • திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி (25)
  • கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் (28)

வராஹப்பெருமாள், பூமிப்பிராட்டியாருக்கு கைசிக மஹாத்மியத்தை உபதேசித்ததே கைசிக ஏகாதசி அன்று நடந்தது என்று சொல்வார்கள் உண்டு, அதற்கான குறிப்புகள் எங்கு உள்ளன என்று பார்க்கவேண்டும்..

கைசிக மஹாத்மியம்

வராஹ புராணத்தில் ஸ்ரீ வராஹப் பெருமான் பூமிப் பிராட்டியாரிடம் நம்பாடுவான் பக்தியை சிலாகித்து சொன்ன பகுதியை கைசிக மகாத்மியம் என்று அழைக்கிறோம், கைசிக புராணம் என்பது பிற்பாடு வந்த பெயர். திருக்குறுங்குடிக் கோயிலில்  குடி கொண்டுள்ள நம்பிப்பெருமாள் மீது பக்திகொண்ட பாணர் குலத்தைச் சேர்ந்த  நம்பாடுவான்  என்ற பக்தரின் இறைப்பற்றைக் கூறுவதுதான் கைசிக ஏகாதசி புராணம்.

பெரிய பெருமாளும், பெரிய பிராட்டியாரும் தாலாட்டி வளர்த்த ஶ்ரீபராசர பட்டர் என்னும் ஆசார்யர், ஶ்ரீராமானுஜர் மற்றும் எம்பாருக்குப் பின்னர் ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் தலைமை ஏற்ற மஹான், சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். வடமொழி வராஹ புராணத்தில் கைசிக மகாத்மியம் பற்றி சொல்லும் பகுதி 92 சுலோகங்கள் கொண்டது. இதனைப் பட்டர் தமிழில் கைசிகப் புராண உரை என்னும் நூலாக எழுதியுள்ளார். கைசிக புராணம் உரைத்த மேன்மையில் மகிழ்ந்த அரங்கன் அவருக்குக் கோவில் மரியாதைகள் அளித்துக் கெளரவிக்குமாறு நியமித்தார் (அந்தப் பிரம்ம ரத மரியாதை தான் இன்றும் அவர் வம்சத்தாருக்கு வழங்கப்படுகிறது).

நிகழ்ச்சி

இந்த கைசிக புராணம், திருக்குறுங்குடி என்ற திவ்யதேசத்தில் நடைபெற்றது. மிக பெரிய உருவமாக வராஹ அவதாரம் எடுத்த திருமால் தனது நாயகியுடன் இத்தலத்தில் தங்கி, தனது அச்சந்தரும் வராஹ உருவத்தைக் குறுகச் செய்தமையால் இத்தலம் குறுங்குடி ஆனது. “பெருங்கேழலார் தம் பெருங்கண்மலர் புண்டரீகம் நம்மேல் ஒருங்கே பிறழவைத்தார்” (திருவிருத்தம் 45) என்ற நம்மாழ்வார் பாசுரம் இங்கே நினைவில் கொள்ளவேண்டியது.  

திருக்குறுங்குடி என்னும் இத்திவ்யத் தேசத்தில் நின்ற நம்பி, கிடந்த நம்பி, இருந்த நம்பி, மலைமேல் நம்பி, பூர்ண நம்பி ஆகிய திருப்பெயர்களுடன் வெவ்வேறு நிலைகளில் எம்பெருமான் திகழ்கிறார்.

திருக்குறுங்குடி நம்பியின் அம்சமாக நம்மாழ்வார் அவதரித்தார். எனவே இத்தலத்தில், நம்மாழ்வாருக்குத் தனி சன்னதி இல்லை. இந்த கோவில் திருமங்கையாழ்வார் கட்டியது என்றும் இராமாயண காலத்தில் ராமரும், லட்சுமணரும், வானரப் படைகளுடன், ராவணனுடன் போர் புரிவதற்காகத் தங்கிய இடம் இந்த மலை என்று கூறப்படுகிறது. திருவாலித்திருநகரில் பிறந்து பல தலங்கள் சென்று பரந்தாமனைப் பாடிய திருமங்கை ஆழ்வார் இங்கு வந்து முக்தியடைந்தார்.

நம்பாடுவான்

வராஹ புராணத்தில் ‘பாடுவான்’ என்றுதான் குறிப்பு இருக்கிறது. ‘நம்பெருமாள்’, ‘நம்மாழ்வார்’ ‘நம்பிள்ளை’ ‘நஞ்ஜீயர்’ வரிசையில் பாடுவானை, ‘நம்-பாடுவான்’ என்று முதல் முதலில் பராசர பட்டர் தான் அழைத்துள்ளார். நம்பாடுவான் பாணர் குலத்தில் திருக்குறுங்குடி மலை அடிவாரத்தில் உள்ள முனி எனும் ஊரில் பிறந்து பக்தியில் திளைத்து திருக்குறுங்குடி நம்பியை போற்றி, அவரின் கல்யாண குணங்களை தினமும் விடிகாலையில் யாழை (வீணை) மீட்டி பண் இசைத்துப் பாடுவான். இவனது பெருமையும், பிரதி பலன் கருதாமல் செய்த பக்தியையும், வராஹ பெருமாள் பூமிபிராட்டியிடம் சொல்கிறார்.

கலியுகத்தில் பக்தி செய்ய நாம சங்கீர்த்தனமே சிறந்த வழி என்று சொல்லப்படுகிறது. திருப்பாணாழ்வார் என்ற ஆழ்வாரும், பாணர் குலத்தில் உதித்தவர், அவர் கையிலும் இசை வாத்தியம் இருக்கும்.

பிரம்ம ராக்ஷசன்

நம்பாடுவான், ஒரு கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று இரவு எல்லோரும் உறங்கி கொண்டு இருக்கும் இரண்டாவது ஜாமத்தில், அழகிய நம்பியை திருப்பள்ளி எழுப்பவேண்டி பாட தன்னுடைய வீணையுடன் கிளம்பினான். காட்டுவழியே வரும் வழியில் அவனை பிரம்ம ராக்ஷசன் ஒருவன் பிடித்துக்கொண்டான். பிரம்ம ராக்ஷசன் மிகவும் பலமோடும், நம்பாடுவான் சக்தி இல்லாதவனாகவும் இருந்தார்கள். பிரம்ம ராக்ஷசன் தான் பசியோடு இருப்பதாகவும், நம்பாடுவானை உணவாக சாப்பிடப் போவதாக கூறினான். நம்பாடுவான் பலம் இல்லாதால் வீரத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அவன் ப்ராஹ்மணன் இல்லாதால், ஒரு மந்திரம் சொல்லி தப்பிக்க முடியவில்லை. ஆகவே, பெருமாள் மேல் பாரத்தை போட்டுவிட்டு, இனிமையாக பேசுகிறான்.

நம்பாடுவான், “என் உடல் உனக்கு உணவாகும் என்றால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியும்?” நான் ஏகாதசி விரதம் இருக்கிறேன். சிற்றம் சிறு காலை அழகிய நம்பியை, சேவித்து விட்டு என் விரதத்தை முடித்துக்கொண்டு வருகிறேன்; அதன்பின் நான்முகன் உனக்கும் எனக்கும் எழுதியபடி, என்னை உணவாகக் கொள்ளலாம்” என்று கூற அதை ராக்ஷசன் நம்ப மறுக்கிறான். பிரம்ம ராக்ஷசன், நம்பாடுவானை பார்த்து “நிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம்“, (திருவாய்மொழி 1.7.10) என்று பத்து ஆண்டுகளாக நம்பியை பாடி வருவதாகவும், ஆனால் தான் பத்து நாட்களாக உணவு உண்ணவில்லை என்கிறான். நம்பாடுவான் தான் பெருமாளுக்கு ஒரு விரதம் இருப்பதாகவும், அதற்கு தடங்கல் வராமல் பிரம்ம ராக்ஷசன் தான் காப்பற்ற வேண்டும் என்று வேண்டினான். பிரம்ம ராக்ஷசன், நம்பாடுவான் தப்பி சென்றுவிடுவான் என்றும் அதற்காக பொய் சொல்கிறான் என்றும் சொல்லி அவனை விடுவதாக இல்லை.

அதற்கு நம்பாடுவான் தான் பாணர் வகுப்பைச் சேர்ந்த பரம பக்தன். பரமாத்மாவைப் பற்றி ஞானம் உள்ளதால், உயரிய பிறவிக்கான ஞானம் தன்னிடம் உள்ளது என்று நம்பாடுவான் சொன்னான். தான் பொய் சொல்வதில்லை என்றும், தான் திரும்பி வராவிட்டால் அடையப்போகும் நரகங்களைச் சொல்லி்ப், பயங்கரமான சத்தியங்களைச் செய்துவிட்டுப் போவதாக பதினெட்டு விதமான சத்தியங்களைச் சொல்லி அனுமதிக்குமாறு நம்பாடுவான் பிரம்ம ராக்ஷசனிடம் மன்றாடுகிறான்.

கைசிக புராணத்தில் தர்ம ரீதியாக கடமைகளைச் சரிவர ஆற்றாமையால் விளயும் 18 பாவங்கள் கூறப்பட்டுள்ளன.

பதினெட்டு சத்தியங்கள்

நம்பாடுவான் பிரம்மராக்ஷசனிடம் தான் திரும்பி வருவதாக உறுதிமொழி கூறும்போது அவ்வாறு செய்யாவிட்டால் தான் பாவம் செய்தவனாகி நரகம் அடைவதாகக் கூறினான். அவன் பதினெட்டு வகைப் பாவங்களைப் பற்றிக் கூறுகிறான்.

  1. 1) கொடுத்த சத்தியத்தை மீறுதல்.
  2. 2) மன்மதன் அம்புக்கு அகப்பட்டு, மற்ற பெண்களை நாடும் பாவத்தை அடைதல்
  3. 3) தனக்கும் உடன் உண்போனுக்கும் உணவில் ஏற்றத்தாழ்வு காட்டுவது.
  4. 4) பிராமணனுக்கு பூமி தானம் பண்ணி அதனைத் திரும்பப் பெறுவது.
  5. 5) அழகுள்ள பெண்ணை இளமையில் மணந்து அனுபவித்து, பின்பு அவள் மீது குற்றம் சுமத்திக் கைவிடுவது.
  6. 6) அமாவாசை அன்று தர்ப்பண ரூபத்தில் பித்ரு சிராத்தம் செய்து அன்று பெண்ணுடன் கூடி சுகம் அனுபவித்தல்
  7. 7) அன்னத்தை நன்றாக உண்டுவிட்டு, உணவிட்டவனை கருணை இல்லாமல் நிந்திப்பது
  8. 8) ஒருவனுக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்விப்பதாகக் கூறி, அவ்வாறு செய்யாதது.
  9. 9) ஷஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தசி நாட்களில் ஸ்நானம் செய்யாமல் உண்பது.
  10. 10) கொடுக்கிறேன் என்று வாக்களித்து விட்டு அதன்படி தானம் செய்யாதிருத்தல்.
  11. 11) தனக்கு மிகுந்த உதவி செய்த நண்பன் மனைவியை வசீகரிப்பதால் உண்டாகும் பாவம்
  12. 12) குரு பத்தினியையும், மன்னன் மனைவியையும் காமபரவசனாகிப் புணர்தல்.
  13. 13) இரண்டு மனைவியரை விவாகம் செய்து கொண்டு ஒருத்தியிடம் அன்பு கொண்டு, மற்றவளைத் புறக்கணித்தல் .
  14. 14) கற்புக்கரசியான தன் மனைவியை இளமையில் தவிக்க விடுதல்.
  15. 15) தாகத்துடன் வரும் பசுக்கூட்டத்தைத் தண்ணீர் குடிக்க விடாமல் தடுத்தல்.
  16. 16) பிரம்மஹத்தி, மத்யபானம், விரதபங்கம் என்று ஒன்றைச் செய்தவனுக்குப் பெரியோர் இடும் சாபம்.
  17. 17) வாசுதேவனை விட்டு இதர தேவதைகளை ஆராதிக்கிறார்களோ, அதனால் தாழ்ந்த நிலை அடைகிறார்களோ அதே நிலை தானும் அடைதல்.
  18. 18) எல்லோருக்கும் ஆத்மாகவும், அந்தர்யாமியாகவும் இருந்து, மோக்ஷம் அளிக்க வல்லவரான, ஸ்ரீமந்நாராயணனோடு, கர்மங்களால் வசப்படும் மற்ற தேவதைகளைச் சமமாக நினைத்தல். “காணிலும் உருப் பொலார், செவிக்கினாத கீர்த்தியார், பேணிலும் வரம் தர மிடுக்கிலாத தேவரை” என்று திருமழிசை ஆழ்வார் சொன்ன திருச்சந்தவிருத்த (69) பாடலை இங்கு நினைவில் கொள்ளலாம்.

கடைசியாக “நான் திரும்ப வரவில்லை என்றால் வாசுதேவனை விட்டு மற்ற தேவதைகளை வணங்குபவர்களுக்கு என்ன கதி கிடைக்குமோ, நாராயணனை மற்ற தேவதைகளோடு சமமாக நினைப்பவர்கள் பாவத்தை நான் அடையக்கடவது” என்று சத்தியம் செய்ய அவனது விஷ்ணு பக்தியைக் கண்டு பிரம்ம ராக்ஷசன் அவனை வணங்கி, விரைவாக விரதத்தை முடித்து திரும்பி வா என்று அனுப்பி வைக்கிறான்.

நம்பியிடம் பாடுதல்

நம்பாடுவான் மகிழ்ச்சியோடு, சம்சாரத்தில் இருந்து விடுபட்ட ஒரு முக்தாத்மாவைப் போல், பெருமாள் கோவிலுக்கு சென்று மிக மிக உருக்கமாக பாடினான். நம்பாடுவான் அந்த நாள் வழக்கத்தின் படி கோவிலுக்கு வெளியே நின்று பாடுவதை வழக்கமாக கொண்டவன். இவ்வளவு காலமும் நம்பியை எப்பவாவது  தரிசிக்க முடியும் என நம்பிக்கையோடு இருந்தாகவும், இதுதான்  தன் கடைசி நாள் என்றும் எப்பவும் பாடும் பாட்டை ரொம்பவே உருக்கமாப் பாடினான்.

திருக்குறுங்குடி நம்பி, நம்பாடுவான் என்ற தன் பக்தனை நன்றாக கடாக்ஷிப்பதற்காக தன் எதிரில் இருந்த கொடிமரத்தினை சற்று தள்ளி இருக்க சொன்னதாகவும் அதன்படி, கொடிமரம் இந்த கோவிலில் பெருமாள் சந்நிதிக்கு நேர் எதிரில் இல்லாமல் சற்று தள்ளியே இருப்பதை இன்றும் நாம் காணலாம். நம்பாடுவானும் நம்பியை நன்றாக தரிசித்தான்.

இறுதியில் ஒரு கைசிகப்பண்ணைப் பாடினான். ஏகாதசி விரதத்தை முடித்துவிட்டு, நம்பியைச் சேவித்துவிட்டு தனக்கு பாரமாக உள்ள தன் உடல் நீங்கப்போகிறது என்ற மகிழ்ச்சியோடு பிரம்ம ராக்ஷசனைத் தேடி விரைவாக திரும்பி வந்து கொண்டு இருந்தான். வரும் சமயத்தில் அவனை சோதிக்கும் வகையில், ஒரு வழிப்போக்கன், அவன் முன்னே தோன்றி “இந்த வழியில் ராக்ஷசன் இருக்கிறான், அவன் விபீஷ்ணனைப் போல் தர்மவான் இல்லை, வேறு வழியில் செல்” என்று சொல்ல, “சத்தியத்திலிருந்து தவறுவதற்கு உயிர் போவதே மேல்” என்று நம்பாடுவான் சொல்ல, அந்த வழிப்போக்கன், அவன் உறுதியைக் கண்டு மகிழ்ந்து, நம்பாடுவானுக்கும் பிரம்மராக்ஷசனுக்கும் வரும் ஆபத்துகள் நீங்க அருள்புரிந்து மறைகிறான். இந்த மஹாத்மியத்தை அருளிக்கொண்டு இருந்த வராஹப் பெருமாள், தாயாரிடம், ‘ மஹாவராஹ: ஸ்புட பத்ம லோசன;‘ என்றும் ‘புருஷ புஷ்கரேக்ஷ்ண:” என்றும் சொல்லும்படி தானே வழிப்போக்கனாக சென்றதாக பூமிதேவியிடம் சொன்னார்.

பிரம்ம ராக்ஷசனின் கதை

நம்பாடுவான் பிரம்ம ராக்ஷசனை தேடி வந்து, தான் சர்வேஸ்வரனான, மஹாவிஷ்ணுவான, திருக்குறுங்குடி நம்பியிடம் பாடி அவரை உகக்கவைத்து விட்டு தன்னுடைய விரதத்தை முடித்து விட்டதாகவும், தன்னை அப்போதே சாப்பிடலாம்” என்று கூற பிரம்ம ராக்ஷசன் மெதுவாக இவனிடம் பேச்சு கொடுக்கிறான். விஷ்ணுவின் முன், அன்று பாடிய பாடல்களின் பலன்களை தனக்கு கொடுத்து விட்டு அவன் உயிருடன் செல்லலாம் என்று சொல்கிறான். நம்பாடுவான் கீதபலனை தர மறுத்து முன்பு சொன்னதைப்போல தன்னை உணவாக கொள்ள சொன்னான். பிரம்ம ராக்ஷசன் மெதுவாக, முழு பலனையும் தரவேண்டாம் என்றும், பாதி பலனையாவது தந்து நம்பாடுவானை உயிருடன் செல்ல வேண்டினான். மீண்டும் நம்பாடுவான் மறுத்தான். அதற்கு ராக்ஷசன், கடைசியாக கைசிக ராகத்தில் பாடிய பாட்டில் பலனையாவது தனக்குத் தந்து, நம்பாடுவானை மனைவி குழந்தைகளுடன் சென்று வாழ அனுமதி தருவதாக சொன்னான்.

அப்போதும் நம்பாடுவான் மறுத்ததால், ராக்ஷசன், இவன் உயிரைவிட சத்தியத்தை பெரிதாக மதிக்கிறான் என்றும், விஷ்ணுவின் முன் பாடிய பாடல்களின் பலன்களையும் அறிந்து இருக்கிறான் என்றும், அவனிடம் மிகவும் மரியாதையுடன் பேசினான். பிரம்ம ராக்ஷசன், நம்பாடுவானிடம் அந்த இறுதிப்பாடலின் பலனை அவனுக்கு தந்து, அவனுடைய பாவங்களை நீக்கி ராக்ஷச ஜென்மத்தை போக்க வேண்டுமென அவனிடம் சரணாகதி அடைகிறான். நம்பாடுவான் எப்படி இந்த மாதிரி பிரம்ம ராக்ஷசன் ஆனான் என்று கேட்க ராக்ஷஸன் தன் கதையைச் சொல்கிறான்

பூர்வ ஜென்மத்தில், சோமசர்மன் என்ற அந்தணனாக பிறந்து, ஒரு யாகம் செய்ததை சொன்னான். செல்வம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் யாகத்தை தொடங்கியதால், வயிற்றில் சூல நோய் வந்தது என்றான். யாகம் முடிக்கப்படாமலே ஐந்து நாட்களுக்குப் பிறகு தான் இறந்ததாக சொன்னான். அந்த யாக தோஷத்தினால் தான் ராக்ஷசன் ஆனதாக தெரிவித்தான். வராஹப் பெருமாள், தான் விபீஷணனுக்கு சரணாகதி அளித்ததைப் போல், நம்பாடுவான் ராக்ஷஸனுக்கு சரணாகதி அளித்ததாக பூமி பிராட்டியாரிடம் கூறுகிறார். நம்பாடுவான் தான் கைசிக ராகத்தில் அன்று இரவு திருக்குறுங்குடி நம்பியின் முன் பாடிய கைசிகப் பண்ணின் புண்ணிய பலத்தைத் தந்தான். (கீதபலன்) பிரம்ம ராக்ஷசன், ராக்ஷச பிறவி நீங்கி நல்ல பிறவியில் பிறந்து, தனக்கு பல்லாண்டு பாடி, பரமபதம் அடைந்ததாக வராஹ பெருமாள் பூமி தேவியிடம் கூறினார். இப்படி நம்பாடுவான் பிரம்மராக்ஷசனை வீடுபேறு அடைய வைத்தான். நம்பாடுவானும் பலகாலம் திருக்குறுங்குடி பெருமாள் கோயிலில் உள்ள திருமாலுக்கு பாடி சேவை செய்து, பின்பு அவன் திருவடி சேர்ந்ததான் என்றும் வராக பெருமாள் கூறுகிறார்.

ஆக, பிரம்மரக்ஷஸ் (சோமசர்மா என்னும் அந்தணர்) ஆனவன் , நம்பாடுவான் என்று எம்பெருமானாரால் போற்றப்பட்ட, பரம பாகவத பக்தானான, சண்டாள சாதியில் பிறந்தவரிடம் சரணமடைந்து நாம சங்கீர்த்தன பெருமையால் வீடுபேறு அடைத்தான்.

நாம் அறிய வேண்டியவை

எம்பெருமானின் நாமசமகீர்த்தனம் மோக்ஷத்திற்கு வழி.

மேற்கூறிய 18 பாவங்கள் ஒன்றைவிட மற்றொன்று அதிகபாவம் உடையது.
பாவங்கள் அனைத்திலும் மிகக்கொடுமையானது ஸ்ரீமந்நாராயணனையும் இதர தேவர்களையும் சமமாக நினைப்பதே ஆகும். மேற்படி பாவங்களை அறிவாளிகள் உணர்ந்து விலக்க வேண்டும் என்பதே வராஹ புராணத்தின் உள்ள கைசிக புராணத்தின் சாரமாகும்.

ஶ்ரீமந்நாராயணனுக்கு மேலான தெய்வம் ஒன்றில்லை; அவரை வணங்காமல் மற்ற தேவதைகளை வணங்குவோரும், அவரை மற்ற தெய்வங்களோடு ஒப்பிட்டுப் பேசுவோரும் கொடிய பாவம் செய்தவர்களாய் நரகத்தை அடைவார்கள் என்று நம்பாடுவான் சத்தியம் செய்வதை இங்கே காணலாம்

தூய்மையான பக்தியுடன் எவனொருவன் மஹா விஷ்ணுவிடம் சரணாகதி அடைகிறானோ அவனே ஸ்ரீவைஷ்ணவன். சரணடைந்த பின் எக்குலத்தவராயினும் அவனிடம் குல வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பது ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிப்படை சித்தாந்தம். திருப்பாணாழ்வார், நம்பாடுவான் வாழ்க்கை வரலாற்றில் இது மிக அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

வராஹப் பெருமாள், நமக்கு நம்பாடுவான் மற்றும் பிரம்மராக்ஷசன் மூலம், ஒருவருடைய பிறப்பு ஜாதி என்பவை வெறும் உடல் ரீதியானவையே தவிர, முக்கியமானவை பக்தியும், சத்தியங்களுக்கு கட்டுப்படுவதே ஆகும் என்று உணர்த்துகிறார்.

கடவுள் பக்தி, தர்மங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வது, மற்றும் இவ்வுலக வாழ்வை துறக்க சித்தமாக இருப்பது ஆகியவை முக்கியம்.

பிராமண குடியில் பிறந்து அற்ப வாழ்க்கை வாழ்ந்தால் ஒரு ராக்ஷஸ பிறவி கிட்டும் . தாழ் குடியில் பிறப்பினும் இறை நம்பிக்கை கொண்டால் தன்னையும் உயர்த்தி பல ராக்ஷசர்கள் போன்ற கேவல ஜன்மங்களையும் கடைத்தேற்ற வழி உண்டாகும்.

மோக்ஷத்தை அடைவதற்கு, ஜாதி ஒரு தடை இல்லை.

விரதம்

கைசிக ஏகாதசி அன்று விரதம் இருந்து, துவாதசி அன்று அதிகாலை கைசிக புராணம் பாராயணம் செய்யுங்கள்.

மஹாவிஷ்ணுவின் ஆணைப்படி எல்லா உலகங்களிலும் உள்ள பாவ செயல்களும், ஏகாதசி தினத்தன்று உணவு தானியங்களில் ஒளிந்து கொள்ளும். அதனால் மோக்ஷ ஆசை உள்ளவர்கள் அன்றைய தினம் உணவு உண்ண மாட்டார்கள். தண்ணீரும் அருந்தாமல் நிர்ஜல விரதம் இருப்பவர்களும் உண்டு. ஏகாதசி அன்று சூரிய உதயத்தின் போது தொடங்கும் இந்த விரதம், அடுத்த நாள் (துவாதசி) காலை சூரிய உதயம் போது முடிவுறும். துவாதசி அன்று குளித்து எம்பெருமானை வணங்கி துளசி தீர்த்தம் பருகி விரதத்தை முடித்து கொள்ள வேண்டும்.

இந்த நாள் முழுவதும், மஹாவிஷ்ணுவின் சிந்தனையுடன், அவரின் ஸ்லோகங்கள், சரித்திரங்கள், மற்றும் அவர் பற்றிய பாடல்கள் இவற்றில் நேரத்தை செலுத்த வேண்டும்.

பலன்கள்

வராஹப் பெருமாள் தாயாரிடம், வராக புராணத்தில், தங்களுடைய கல்யாண குணங்களையும் சரித்திரங்களையும் யார் ஒருவர் பாடுகிறாரோ, அவர் பாடும்போது அதில் உள்ள ஒவ்வொரு அக்ஷரத்திற்கும், ஆயிரம் ஆண்டுகள் ஸ்வர்கத்தில் இருப்பார்கள் என்று சொல்லி நம்பாடுவானை புகழ்கிறார்.

அப்படி ஸ்வர்கத்தில் இருக்கும் போது, அங்குள்ள எல்லோரையும்விட அழகுள்ளவனாகவும், பெருமாள் தாயாரை மறக்காதவனாகவும் நம்பாடுவான் இருப்பான் என்றும், சொர்கத்திற்கு தலைவனான இந்திரன் தன்னுடைய வஜ்ராயுதத்துடன் வந்து வணங்குவான் என்றும் பெருமாள் சொல்கிறார்.

அப்படி இந்திரன் வணங்கும் போதும், பெருமாள் தாயாரை மறக்காமல் நம்பாடுவான் அவர்களுக்கு உண்டான சேவைகளை செய்து கொண்டு இருப்பான் என்றும் கூறுகிறார்.

அப்படி தம்மை பற்றி பாடிக்கொண்டும் அதனை அங்குள்ள மற்றவர்களும் கேட்கும்படி செய்வதால், நம்பாடுவானை ஸ்வர்கத்தில் இருந்து பரமபத்திற்கு அழைத்து வந்து தனக்காகவே எப்போதும் பாடி கொண்டு இருக்கும்படி செய்ததாக வராகப் பெருமான் சொல்கிறார்.

எவர் ஒருவர், கைசிக பண்ணில் பக்தியுடன், பெருமாள் சன்னதியில் பாடுகிறாரோ, அவர் தன்னை அண்டி வந்தவர்களை காப்பாறுவார்.

யார் ஒருவன், கார்த்திகை மாத சுக்ல பக்ஷ துவாதசி அன்று கைசிக புராணம் பெருமாள் முன்பாக படிக்கிறானோ அவனும், அதை கேட்பவர்களும், “சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டு” என்று, வராஹப் பெருமாளுக்கு பல்லாண்டு படுவதாக அவரே சொல்லி அந்த மஹாத்மியத்தை முடித்து வைத்தார்.

அப்பேற்பட்ட கைசிக மகாத்மியத்தை பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் வைகுந்தத்தையும் அடைவர் என்று பூமி பிராட்டிக்கு வராஹ பெருமாளே சொன்ன சத்தியம் இது.

ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்று கீழே சொல்லப்பட்டவை பல புராணங்களில் உள்ளதாக கூறுவார்கள். அதேபோல் ஒவ்வொரு மாதம் வரும் ஏகாதசிக்கும் ஒரு சில சிறப்பு பலன்களும் இருக்கும் என்பார்கள்; அவைகளில் சில இதில் அடக்கம்.

  • சமமான பலன்கள்
    • அஸ்வமேத யாகம் செய்த பலன்
    • ஸ்னானம் செய்யும் பலன்கள்
      • காசியில் கங்கையில்,
      • நைமிஸாரண்ய காட்டில்,
      • புஷ்கரம் குளத்தில்
      • சாளக்ராமக் கற்கள் கிடைக்கும் கண்டகி நதியில்
      • கோதாவரி நதியில் திங்கட்கிழமையும் பௌர்ணமியும் சேர்ந்த அன்று குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரிக்கும் போது
      • குருக்ஷேத்திரத்தில் சூரிய கிரகணம் அன்று குளித்தல்
    • இந்த பூமியை அதன் காடுகள் சமுத்திரங்களோடு தானம் கொடுத்ததற்கு ஒப்பானது.
    • ஒரு பசுவை அதன் கன்றோடு, அவை உண்ண தேவையான உணவோடு தானமாக கொடுப்பதற்கு சமம்.
  • மேன்மையான பலன்கள்
    • வேத சாஸ்திரங்களை படிப்பதை காட்டிலும் பலன் வாய்ந்தது .
    • நவரத்தினங்களை பகவானுக்கு சமர்ப்பிப்பதை காட்டிலும் உத்தமமானது.
  • நீங்குபவை
    • இந்த ஜென்ம மற்றும் முந்தய ஜென்ம பாவங்கள்
    • ப்ரம்மஹத்தி தோஷம்
    • புத்திர தோஷம்
    • பேய் மற்றும் ப்ரும்ம ராக்ஷசர்களால் ஏற்படும் தொந்தரவுகள்
  • எதிர்காலத்தில் பிறப்பின்றி வைகுண்டம் சேரலாம்
  • யமராஜனும் சித்திரகுப்தரும் அண்ட மாட்டார்கள்.
  • ஒருவரின் மூதாதையர்கள் ஸ்வர்க்கத்திற்கு முன்னேறுவார்கள்.
  • தேவர்களும், கந்தர்வர்களும், பன்னகர்களும்,நாகர்களும் போற்றுவார்கள்.

இப்பொழுது கைசிக ஏகாதசி விழா

திருக்குறுங்குடியில்

திருக்குறுங்குடியில் ஶ்ரீவைஷ்ணவநம்பிக்குத் திருமஞ்சனம். இரவு 10 மணியிலிருந்து, காலை 2 மணி வரை, வைஷ்ணவ நம்பிக்கு முன்னால் கைசிக மஹாத்மியம் நாடகமாக நடத்தப்படும். கைசிக  துவாதசி அன்று இரவு பெருமாள் கருட சேவை.

திரு அரங்கத்தில்

முன்பே சொன்னதுபோல், பராசர பட்டர், அரங்கநாதன் முன்பு கைசிக புராணத்தை வாசித்தார். அந்த வழக்கம் இன்றும் அவரது சந்ததியரால் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. திருவரங்கத்தில் கைசிக  ஏகாதசி அன்று நம்பெருமாளுக்குத் திருமஞ்சனம், இரவு 9 மணிக்கு மேல் அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் சாற்றப்படுகின்றன. இரவு 12 மணிக்கு மேல் பராசர / வேதவியாச பட்டர் வம்சத்தில் வந்த ஆசார்ய ஸ்வாமி கைசிகபுராணம் வாசிப்பார்.அதை கேட்போர் நற்கதி அடைய வேண்டுவார். அவர் வாசித்து முடிந்ததும் அவரைக் கோவில் மரியாதைகளுடன் பிரம்ம ரதத்தில் அமரவைத்து உத்திர வீதிகளில் வலம் வந்து அவர் திருமாளிகையில் விட்டு வருவார்கள். கைசிக  துவாதசி அன்று அதிகாலை அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு, சரியாக 5.45மணிக்கு மேலப்படியேறி ஆஸ்தானம் சென்று சேர்வார். இதற்கு “கற்பூரப் படியேற்ற சேவை” என்று பெயர்.

மற்ற விஷ்ணு கோவில்களில்

மற்ற திவ்யதேசங்களில், பெருமாள் / விஷ்ணு கோவில்களில், கைசிக ஏகாதசி சாயங்காலம் அல்லது துவாதசி விடியற்காலை கைசிக புராணம் வாசிக்கப்பட்டு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்பான சில பாசுரங்கள்

அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித்
தமர்களில் தலைவராய சாதி-அந்தணர்களேலும்
நுமர்களைப் பழிப்பர்ஆகில், நொடிப்பது ஓர்அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும்; அரங்க மா நகருளானே!’ (திருமாலை 43)

தொண்டரடிப்பொடியாழ்வார் எழுதியது. இதன் அர்த்தம்,நான்கு வேதங்கள், அவைகளை விளக்க உதவும் ஆறு அங்கங்களையும் மனப்பாடம் செய்து, அவற்றின் பொருள்களையும் நன்றாக அறிந்து, போற்றப்படும் பிராமணர்களாக இருந்தாலும், அடியவர்களை அவர்கள் குலத்தைக் கொண்டு குறை கூறினால், அவர்கள் அந்தணர்களாகவே இருந்தாலும் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்களாக கருதப்படுவர்.

அடுத்தது,

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ்இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே
.’ (திருவாய்மொழி 3.7.9)

இது நம்மாழ்வாரால் இயற்றப்பட்டது. நான்கு குலங்களிலும் தாழ்த்தப்பட்டு மிகவும் இழிவாகக் கருதப்பட்டு தாழ்ந்த குல சண்டாளர்களுக்கும் சண்டாளர்களாக இருப்பினும், அவர்கள் வலப்புறத்தில் சக்கரத்தைத் தாங்கி நிற்கும் மணிவண்ணனான திருமாலின் அடியார்களாகில் அவர்களுக்கு அடியவர்களாக இருப்போம் என்கிறார்.

இன்னொரு பாசுரத்தில் நம்மாழ்வார் இன்னும் ஒரு படி மேலே சென்று,

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனை,
பயில இனியநம் பாற்கடல் சேர்ந்த பரமனை,
பயிலும் திருவுடை யார்யவ ரேலும் அவர்க்கண்டீர்,
பயிலும் பிறப்பிடை தோற்றெம்மை யாளும் பரமரே
(திருவாய்மொழி 3.7.1)

என்ற பாசுரத்தில் பெருமாளுக்கு சேவை செய்யும் யாராகிலும், அவர்களே தனக்கு இந்த பிறவியிலும், இனிவரும் பிறவிகளிலும் தலைவர் ஆவார் என்கிறார்.

முடிவுரை

இன்னும் பல பாசுரங்கள், பற்பல வராஹனின் பெருமைகள், பல வராக திருத்தலங்கள், பல ஸ்தோத்திரங்கள், இந்த வலைப்பதிவினில் விட்டு போயிருக்கலாம். இது ஒரு சிறு முயற்சியே.

இந்த கைசிக ஏகாதசி மஹாத்மியம் வராஹ புராணத்தில் சொல்லப்பட்ட முக்கியமான கருத்து ஆகும். இதேபோல் இன்னொரு தலைப்பில் மீண்டும் சந்திப்போம். நன்றி.

2 Comments on “கைசிக ஏகாதசி

    • மிக்க நன்றி தங்களது வார்த்தைகள் அடியேனுக்கு ஊக்கம் அளிக்கின்றது மீ‌ண்டு‌ம் உங்கள் ஆதரவுக்கு நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: