A Simple Devotee's Views
To Read this in English, please click here, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம் போன்றவர்கள், பல காரணங்களை சொல்லியபொழுது ஆழ்வார், “சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்” என்று சொல்லி இராமபிரானையும் “கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின்” என்று எளிமையான கண்ணனையும், “உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான்” என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்லுகிறார்.
அப்படியும் நாம் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் நம்மை விட்டு, பெருமாள் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான பெருமாள், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்றார். அடுத்து, தான் கள்வனாகவும், சூதனாகவும் இருந்து, பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை “சூதனாய் கள்வனாய்” என்ற பதினாறாவது பாடலில் தெரிவித்தார். அடுத்த பாசுரத்தில், முற்காலத்தில், தான் விரும்பி நின்று பெருமாளை முக்கரணங்களால் தொழுதது இல்லை என்றும் இரும்புபோல் கடினமான தன் நெஞ்சத்தை, கரும்புபோன்ற பெரியபெருமாளின் அழகை கொண்டு திருத்தினார் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் தன்னுடைய கண்கள் ஆனந்தம் பெற்று மகிழ்ந்தன என்று பாடினார். அதனால் வந்த ஆனந்த கண்ணீர், ஒரு சுவர் போல் மறைக்க, பெருமாளை முழுமையாக ரசிக்கமுடியவில்லையே என்றும், ஐயோ! இக்கண்ணீர் கண்களை மறைத்து எம்பெருமானை இடைவிடாது தரிசிக்க முடியாமல் செய்கின்றதே என்று கவலையுற்று இனி திரை பாசுரத்தில், தான் பெரும் பாவம் செய்ததாக எண்ணி தன்னையே வெறுத்துக் கொண்டார்.
இனி அடுத்த பாசுரம்.
குடதிசை முடியை வைத்துக் குணதிசைப் பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி, கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலு மாகண்டு, உடல் எனக்கு உருகு மாலோ என் செய்கேன் உலகத்தீரே. (திருமாலை 19 )
கண் கலங்கியதை சென்ற பாசுரத்தில் சொன்னார், இந்த பாசுரத்தில், அக்கண்களைத் தாங்குகின்ற மொத்த உடலும் கட்டு குலைந்து உருகுகின்றதே, என்ன செய்வேன் என்று கடைசி இரண்டு அடிகளில் சொல்கிறார். முதல் இரண்டு அடிகளில் தம்மை உருக்கியது எது என்று சொல்கிறார்.
பெருமாள், புண்ணியங்கள் நிறைய செய்த தேவர்களுக்காக வானுலகத்தை (மேல் உலகம்) படைத்தார். புண்ணியங்களும், பாவங்களும் கலந்து செய்யும் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் வாழ்வதற்காக பூமியை (கீழ் உலகம்) படைத்தார். இப்படி மேல் கீழ் என்ற இரு திசைகளுக்கு பயன் உள்ளதை ஆழ்வார் உணர்ந்தார். ஆனால் கிழக்கு, மேற்கு, வடக்கு தெற்கு போன்ற நான்கு திசைகளுக்கும் ஒரு பயனும் இல்லை என்று நினைத்தார். இந்த பாடலுக்குப் பிறகு அவைகளின் பயனை உணர்ந்து கொண்டார். மனிதர்களுக்கு படைத்த இந்த உலகத்தில், அவர்களை உய்விப்பதற்கும் உதவ வேண்டும் என்று இந்த திசைகளை படைத்து, அவை ஒவ்வொன்றிலும் தன்னுடைய ஒவ்வொரு அவயவங்களை வைத்து அவர்கள் அதன் அழகினைப் பார்த்து பலன் பெறட்டும் என்று ஆழ்வார் சொல்கிறார்.
மேற்கு திசையில் (குடதிசை) உள்ளவர்கள் வாழும்படி அதாவது, அங்குள்ளவர்கள் பயன் அடையும்படியும், தானே இந்த பூலோகத்திற்கு (உபயவிபூதி ) நாயகன் அல்லது தலைமை வகிப்பவன் அல்லது ஸ்வாமியாக இருக்கும் தன்மை உடையவன் என்று சொல்லும்படியாகவும் தன்னுடைய திரு அபிஷேகத்தை (கீரிடம்) உடைய திருமுடியை மேற்கு பக்கம் வைத்து உள்ளான் என்று ஆழ்வார் பாடுகிறார். நம்மாழ்வார் திருவாய்மொழி 3.8.1 ல், எல்லா உலகுக்கும் தனிக்கோல் செலுத்துபவன் என்று சொல்லும்படி கிடக்கிறான் என்பதை (முடியானே … என்று கிடக்கும் ) இங்கு நினைவில் கொள்ளலாம்.
அதே திருவாய்மொழி பாடலில் (3.8.1), ‘மூவுலகும் தொழுதேத்தும் சீர் அடியானே,’ என்று நம்மாழ்வார் சொன்னபடி, எல்லா உலகங்களும் வாழ்ச்சி பெறுவதற்கு விஷயமான தனது திருவடிகளை கிழக்குப் பக்கம் (குணதிசை) நீட்டிவைத்து உள்ளார் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் கூறுகிறார். நீட்டி என்று சொன்னதால், திருவடிகளை கிழக்குப் பக்கம் உள்ள ஆழ்வாரின் ஊரான மண்டங்குடி வரை நீட்டி தன்னை வசீகரித்ததைச் சொல்கிறார். இதையே அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தின் முதல் பாடலில், திருப்பாணாழ்வார், “திருக்கமலபாதம் வந்து என் கண்ணில் உள்ளன ஒக்கின்றதே‘ என்று சொன்னதும், அந்த ஆழ்வார் இருந்த உறையூர் வரை திருப்பாதங்கள் நீண்டன என்ற பொருளிலே சொல்லப்படுகிறது.
பெருமாள், குணமுள்ளவர்களை வாழ்விப்பது, குணமற்றவர்களை கைவிடுவது என்ற கொள்கை இல்லாதவர் ஆகையால், குணவான்களோடு, துஷ்டர்களும் வந்து பணிந்து போற்றக்கூடிய திருவடிகளை பெற்றவர் என்பது சிறப்பு. “பொய்யர்க்கே பொய்யனாகும்” என்று மேலே, பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான் என்று சொன்னது கூட, இந்த பிறவியில், அவர்கள் பாவம் செய்வதை நிறுத்தி, அவர்களுக்கும் நன்மையே செய்து விடுவது என்பதை இங்கு கருத்தில் கொள்ளலாம்.
ஆளவந்தார் என்ற ஆச்சார்யர் எப்பொழுதும் கிழக்கு பக்கம் எழுந்தருளி, எம்பெருமானின் திருவடி பக்கமே, பெரியபெருமாளை சேவிப்பார் என்றும், பெருமாளின் திருமுடி இருக்கும் மேற்கு திசையை துரியோதனன் பக்கம் என்று சொல்லி தவிர்ப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
திருவடிகளின் பெருமையைப் பற்றி பேசும் போது, வேதாந்த தேசிகன் என்ற இன்னொரு ஆச்சாரியார், தன்னுடைய பாதுகா சஹஸ்ரம் என்ற நூலில், கூறியதை பார்ப்போம். இராமன், மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம அவதாரங்களை போல் தான் ஒருவனாகவே அவதரித்து எல்லாம் செய்து இருக்கலாம். ஆனால், தானே, பரத, லக்ஷ்மண, சத்ருக்னனாக தன் கூடவே அவதரிக்க காரணம், எல்லோரும் விரும்பும் தன்னுடைய திருவடிகளை தானும் விரும்பி ஆராதனம் செய்ய விரும்பினார்; ஆனால் இந்த உலகம் பரிகசிக்குமே என்று தானே பரதனாக அவதரித்து அதனை செய்தார் என்று கூறுகிறார்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாளே, சக்ரவர்த்தி திருமகனான ஸ்ரீராமன் ஆவார்; இக்ஷ்வாகு குலத்தில் ஆராதிக்க பட்ட பெருமாளும் அவரே ஆவார். பட்டாபிஷேக சமயத்தில் விபீஷணனுக்கு பரிசளிக்கப்பட்டவரும் அவரே ஆவார். ஆக, ஸ்ரீ ராமன், ஸ்ரீரங்கம் பெருமாளான அரங்கநாதன், ஆகியவர்கள் எல்லோருமே ஸ்ரீமன் நாரயணனே. இப்படி, தன்னை தானே ஆராதித்துக்கொள்வது சரியா என்று கேட்டால், அதற்கு, தன்னுடைய பெருமை தனக்கு மட்டுமே தெரியும் என்பதாலும், அது மற்றவர்க்கு உரிய நிலமில்லை என்பதாலும், அதற்கு என்று தனியாக ஆள் வைக்காமல் தானே ஆராதனை செய்கிறார் என்று பட்டர் சொல்கிறார்.இவைகளை போல், அவரே தன்னுடைய அழகையும் ரசிக்கிறார் என்று பராசர பட்டர் என்னும் ஆச்சாரியார் சொல்கிறார்.
வடமொழி வல்லுநர்கள் நிறைந்த பகுதியாதலால் அங்கு ஆழ்வார்களின் கருணை நிறைந்த பாசுரங்கள் தெரியாதவர்கள் ஆகையால், அவர்களை திருத்துவதற்கு, தன்னுடைய முன்னழகை விட சிறந்ததான பின்னழகை பெரியபெருமாள் காட்டுகிறார் என்று ஆழ்வார் சொல்கிறார். பிள்ளை பெருமாள் அய்யங்கார் எழுதிய கோவிலந்தாதி என்ற நூலில், அழகிய மணவாளன் என்னும் ரங்கநாதனுக்கு முன்னிலும் பின்னழகிய பெருமாள், ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள் என்ற திருநாமங்களும் உண்டு என்று சொல்கிறார்.
உத்சவ மூர்த்தியான நம்பெருமாள், தன் முன்னழகையும், முன்னிலும் பின்னழகிய பெருமாள் என்று ஏத்தும்படி உள்ள தன் பின்னழகையும், எதிரே வீற்றுஇருக்கும் பெரியதிருவடியின் (கருடன்) வடிவத்தையும், இரண்டு பக்கங்களில் உள்ள உபய நாச்சிமார்களின் வடிவங்களையும், பின்னால் அரவணைமேல் பள்ளிகொண்ட பெரியபெருமாளின் அழகினையும் கண்டு ரசித்தும் அதில் திருப்தி கொள்ளாதவராக உள்ளார் என்ற பட்டர் சொற்களையும் நாம் இங்கு ஞாபகம் கொள்ளலாம். இப்படி தன்னுடைய அழகை மேலும் மேலும் மெருகூட்டி கொள்வது, மேலும் அதிகமான அடியார்களை கவர்வதற்கே ஆகும்.
நம்முடைய ஆச்சார்யார்களில் ஒருவரான, நம்பிள்ளையின் சிஷ்யர்களில் பின்பழகிய பெருமாள் ஜீயர் என்று ஒருவர் உண்டு. இவர் பின்பழகராம் பெருமாள் ஜீயர் என்றும் அழைக்கப்படுகிறார். எம்பெருமானின் (திருஅரங்கம் நம்பெருமாள்) பின்னழகுக்கு அடிமை ஆகி தன் பெயரை இப்படி மாற்றிக் கொண்டதாக வரலாறு. அவர் குருபரம்பரை என்று நம்முடைய ஆழ்வார் ஆசார்யர்களின் சரித்திர விவரங்களை குறிப்பிட்டுள்ளார். எப்படி நம்ஜீயர் என்ற சன்யாசம் பெற்ற ஆச்சார்யார் பட்டர் என்ற ஆச்சார்யாருக்கு கைங்கர்யங்கள் செய்தாரோ அது போன்று சன்யாசியான பின்பழகிய பெருமாள் ஜீயர் நம்பிள்ளை என்ற ஆச்சார்யார்க்கு கைங்கர்யங்கள் செய்தார். ஒரு ஆசார்யனின் திருமேனியில் ஒரு சிஷ்யனுக்கு முழுப் பற்றுதல் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை வெளிப்படுத்திய சிஷ்யர் ஆவார். பட்டர், நம்பிள்ளை இருவரும் க்ரஹஸ்தர்கள்.
அதேபோல், மற்ற திசைகளுக்கு இல்லாமல், வடக்கு திசைக்கு மட்டும், காட்டி என்று சொன்னதற்கு உரையாசிரியர், வடக்கு பக்கம் வாழ்பவர்களுக்கு என்று குறிப்பிட்டு சொல்லி உள்ளார், மற்ற திசைகளை சொல்லும் போது, அந்தந்த திசையை மட்டும் சொல்லி, அங்கு உள்ளவர்களுக்கு என்று உரையாசிரியர் குறிப்பிட்டு சொல்லவில்லை. இது மற்ற திசைகளை வாழ்பவர்களை விட இவர்கள் கடினமானவர்கள் என்ற கருத்தால் இருக்கலாம்.
மற்ற மூன்று திசைகளிலும் அவயங்களை வைத்ததிற்கு காரணம், அந்த திசைகளின் பயனில்லாமையை நீக்குவதற்காக என்று சொன்ன ஆழ்வார், தெற்கு திசையை நோக்கி பார்ப்பது மட்டும் பெருமாள், தன்னுடைய குறை நீங்குவதற்காக என்று சொல்கிறார். மற்ற மூன்று திசைகளுக்கும் தன்னுடைய கருணையின் காரணமாகப் பிறர்க்கு செய்த உதவி என்றும், தெற்கு திசையில் செய்வது மட்டும், தான் விபீஷ்ணனுடன் இலங்கை செல்லாமையைக் கருதி பெருமாள் தானே தனக்கு செய்துகொண்ட உதவி என்று ஆழ்வார் கூறுகிறார்.
தென்திசை நோக்கி பள்ளி கொள்ளும் (பெருமாள் திருமொழி 1.10) என்று குலசேகர ஆழ்வார் சொல்வதை நினைவில் கொண்டால் தனக்குப் பிரியமான விபீஷ்ணன் வாழும் திசையை நோக்கி கண்வளர்ந்து அருளுவதின் காரணம் தெரியும்.
பெரியாழ்வார் திருமொழியில் (4.9.2), விபீஷ்ணற்காகவே பெரியபெருமாள் தெற்கு நோக்கி உள்ளார் என்பதை பற்றி பெரியாழ்வார் சொன்ன வார்த்தைகள் “மன்னுடைய விபீடணற்காய் மதிளிலங்கைத் திசைநோக்கி மலர்கண் வைத்த, என்னுடைய திருவரங்கர் “. விபீஷ்ணனின் விரோதியை ஒழித்து, இலங்கை ராஜ்யத்தை அவனுக்கு கொடுத்து அதை அவன் நன்றாக ஆட்சி செய்வதைப் பார்த்தபடி பெரியபெருமாள் கண்வளர்ந்து இருப்பதை பெரியாழ்வார் சொல்கிறார். குழந்தைக்கு பால் கொடுத்தபடி, படுத்துக்கொண்டு அதன் முக மலர்ச்சியை கண்டு மகிழும் தாயைப் போலே இருக்கிறது என்று உரையாசிரியர் சொல்வது சிறப்பு.
அடுத்தது, திருமங்கையாழ்வார். அதற்கு முன், நாம் இராமனுக்கு சுக்ரீவன் மேல் எவ்வளவு அன்பு என்பதை பார்க்க வேண்டும். யுத்த காண்டத்தில், சுக்ரீவன், இராமரின் தலையில் கீரிடம் இல்லாமல் இருப்பதை பார்த்தும், அதே சமயத்தில் இராவணனின் பத்து தலைகளிலும் பத்து கிரீடங்கள் இருப்பதைக்கண்டு பொறுக்காமலும், உடனே எதையும் சிந்தனை செய்யாமல், பாய்ந்து இராவணனின் தலைகளில் உள்ள அத்தனை கீரிடங்களையும் பறித்து இராமனின் காலடியில் கொண்டு சமர்ப்பித்தான். அதற்கு இராமன், சுக்ரீவனைப் பார்த்து கவலையுடன், இப்படி ஆபத்தான காரியங்கள் செய்யும் போது, அவனுக்கு ஏதாவது நடந்து இருந்தால், தான் என்ன செய்வது, தனக்கு சீதா, பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் என்று பலர் இருந்து என்ன பயன் என்று வருந்துவது வால்மீகி ராமாயணத்தில் (யுத்த காண்டம், 41.4) சொல்லப்படுகிறது. இவர்களுக்கு இணையாக சுக்ரீவனும் சொல்லப்படுவதே இராமனின் சுக்ரீவனிடத்தில் இருந்த பேரன்புக்கு எடுத்துக்காட்டு.
இப்போது இராமனுக்கு விபீஷ்ணனின் மேல் எவ்வளவு அன்பு என்பதை பார்ப்போம். விபீஷ்ணன் இலங்கையை விட்டு விலகி, இராமனிடம் சரணாகதி அடைய வரும்போது, முதலில் சுக்ரீவன் அவர்களை தடுத்து வைத்து, இராமனிடம், அவர்கள் எதிரிகளிடம் இருந்து வந்தவர்கள், அவர்களுக்கு அடைக்கலம் தரக்கூடாது என்று வாதிடுகிறான். அதற்கு இராமன் மறுப்பு தெரிவித்தபோது, சுக்ரீவன் அவர்களை சேர்த்தாலே, தானும் தன் படைகளான வானர சேனையும் இராமனை விட்டு விலகிவிடுவோம் என்று சுக்ரீவன் சொன்னான். இராமன், விபீஷ்ணனை அன்று ஈன்ற கன்று போல கொண்டு, வானர சேனையும், சுக்ரீவனும் தன்னை விட்டு விலகினாலும், தாம் ஒருபோதும் விபீஷ்ணனை கைவிடமாட்டோம் என்று, முன்பு ஈன்ற கன்று போல உள்ள சுக்ரீவனிடம் சொன்னார். சுக்ரீவனும் மனம் மாறி இராமன் சொன்னதை ஆதரித்தான் என்பது சரித்திரத்தின் தொடர்ச்சி. பெரியபெருமாள் இவ்வளவு பரிவு கொண்ட விபீஷ்ணன் என்பதை திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில், (6.8.5) “செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை” என்றார். அத்தகைய விபீஷ்ணனனை நோக்கி கண்வளர்ந்து அருளுகிறார் என்பது தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாடலில் சொன்னது.
மேற்கு திசையில் (குட ) முடியை வைத்து என்றும், கிழக்கு திசையில் (குண) பாதம் நீட்டி என்றும் வடக்கு திசையில் பின்பு காட்டி என்றும் சொன்ன ஆழ்வார் தெற்கு திசையில் மட்டும் நோக்கி என்று பெருமானுடைய விருப்பமாக சொல்கிறார். அதாவது, வைத்து, நீட்டி மற்றும் காட்டி என்பவை ஒருமுறை செய்தால் போதுமானது, ஆனால், நோக்கி என்பது தொடர்ந்து செய்து கொண்டுஇருக்கும் என்ற பொருளைத் தருவது. நோக்கி என்பதன் மூலமும் எம்பெருமானுக்கு விபீஷ்ணன் மேல் உள்ள பரிவு தெரிகிறது.
இவ்வுலகத்தில் உள்ள 106 திவ்யதேசங்களில் தெற்கு நோக்கிய திருமுகம் 7 திவ்யதேசங்கள் மட்டுமே. அவை ஸ்ரீரங்கம், திருமெய்யம், திருசிறுபுலியூர், திருநீரகம், திருகாரகம், திருவித்துவக்கோடு, திருக்காட்கரை.
நித்யஸூரிகள் எப்பொழுதும் ஆசைப்படும் வடிவு பரமாத்மா ஆகும். அப்படிப்பட்ட பரமாத்மா, ஏதாவது ஒரு ஜீவாத்மா கிடைப்பானா என்று காத்துகொண்டு இருப்பதை ஆழ்வார் இங்கு கூறுகிறார். கடல், தன்னைக் கண்டவர்கள் களைப்பை போக்கும் தன்மை உள்ளது. அதேபோல், பெருமாளின் திருமேனியும் கண்டுகளிப்பவர்களின் களைப்பை போக்குவதால், ஆழ்வார், கடல் நிறக் கடவுள் என்கிறார். கடலை , நிறத்திற்கு ஒப்பாக கூறலாமே அன்றி, பெருமாள் திருமேனி, அதையெல்லாம் கடந்து இருப்பதால், கடவுள் என்று ஆழ்வார் கூறுகிறார்.
இந்த வடிவழகைக் காட்டி ஆட்கொண்ட பெருமான் என்பதை, எந்தை என்று சொன்னார். புதிய கிணறு சரியாக உள்ள நிலையில் பழைய கிணறை தூர் வார்வது எதற்காக என்று ஆழ்வார் கேட்கிறார். புதிய கிணறு என்று ஆழ்வார், பெருமான் தன்னை தன்னுடைய வடிவழகை காட்டி ஆட்கொண்டதை சொல்கிறார். பழைய கிணறு என்று ஆழ்வார், நித்யஸூரிகளை பெருமான் தன்னுடைய வடிவழகை காட்டி ஏற்றுக்கொண்டதை சொல்வது. தாழ்வுக்கு எல்லையாக உள்ள தன்னை பெருமாள் அழகை காட்டி திருத்திய பின், வேறு ஒருவரையும் சொல்ல வேண்டாம் என்பது ஆழ்வாரின் கருத்து. நம்மாழ்வார் சொன்ன திருவாய்மொழியில் (3.3.4) “ஈசன் வானவர்க்கு என்பான், என்றால் அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு, நீசனேன் நிறைவொன்றும் இல்லேன் என் கண் பாசம் வைத்த பரம் சுடர் சோதிக்கே” என்ற பாடல் இங்கு மேற்கோளாக சொல்லப்படுகிறது.
மிக சிறந்த இரத்தினத்தை மிக விலை உயர்ந்த தங்க கட்டிலில் பொருத்தினால் எப்படி இருக்குமோ அது போல் பெரியபெருமான் வடிவழகு ஆதிசேஷன் மேல் சாய்ந்த பின் மேலும் ஒப்பற்றதாகிறது.
ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டுஇருக்கும் அரங்கனின் அழகை ரசிக்க ஞானம் உள்ள ஜீவாத்மாக்களுக்கு உடலும் உள்ளமும் உருகினால் அதில் ஆச்சர்யம் இல்லை என்றும், அதை அனுபவிக்க ஞானம் இல்லாத தான் கூட உருகுவதுதான் ஆச்சர்யம் என்று ஆழ்வார் கூறுகிறார். ஆழ்வாருடன் கூட வந்தவர்கள் தாங்கள் உருகவில்லையே என்று சொன்னபோது, தான் உருகுகிறேன் (எனக்கு) என்றுசொல்லி உள்ளார்.
இராமானுஜர் சரணாகதி கத்யத்தில் “பகவத் ஸ்வரூப திரோதா நகரீம்” என்று (12) சொல்வது, பரமாத்மாவின் ஸ்வரூபத்தை மறைக்கும் ஜீவாத்மாவின் உடலானது, அதை கண்டால், கட்டுக்குலைகிறது அல்லது உருகுகிறது என்பதை இங்கு நினைவில் கொள்ளலாம். ஆன்மாவின் ஸ்வரூபத்தை நாம் அறிய முடியாமல் இருப்பதற்கு காரணம், ஆன்மா இந்த தேகத்துடன் சேர்ந்து இருப்பது தான் என்பது பிரம்மசூத்திரத்தில் (3.2.5) சொல்லப்பட்டுள்ளது. அப்படியான ஞானத்தை மறைக்கும் உடல் அல்லது உடலில் உள்ள கண்கள், அந்த ஆன்மாவை கண்டவுடன் மறைக்காமல் இருந்து மொத்த உடலையும் உருக செய்வது ஆச்சர்யமாக உள்ளது.
ஆற்றில் வெள்ளம் கரையை கடந்து, அருகிலுள்ள கரைகள் உடைந்தால் கரையைப் பாதுகாப்பவர்கள், கைவிட்டுக் ஆற்றைக் கடக்க உதவி வேண்டி கூப்பிடுவதை போலே, தொண்டரடிப்பொடி ஆழ்வார் இங்கு நம்மை போன்ற சம்சாரிகளை கூப்பிடுகிறார். பெரிய பெருமாளின் அழகை சேவித்தும் கொஞ்சம் கூட கலங்காமல் புறப்படுகிற ஸம்ஸாரிகளைப் பார்த்து அவர்களை போலே தன் உடலும் உருகாமல் கல்போன்று இருப்பதற்கு ஒரு உபாயம் சொல்லமாட்டீர்களோ என்று கேட்கிறார்.
தம்மை ஒத்த மற்றைய ஆழ்வார்களை கேட்கலாம் என்றால், ஓட்டை ஓடத்தோடு சேர்ந்த ஒழுகல் ஓடம்போல், அவர்கள் முன்னமே உருகி இருந்தார்கள். என் செய்கேன் பெருமாளே என்று பெருமாளிடம் கேட்கலாம் என்றால் தன்னை உருகவிட்டதை நினைத்து, எதிர் தலையை உருக்கவிட்டது தன்னுடைய பெருமை ஆகும் என்று பெருமாள் கர்வம் கொண்டுவிடுவார், அதற்கு தான் காரணம் ஆக கூடாது என்று ஆழ்வார் அவரிடம் கேட்கவில்லை. ஆகவே, பெருமாளை சேவித்துவிட்டு வந்த பின்பும் உடம்பை இப்படி கெட்டியாக வைத்துக்கொண்டு உள்ள சம்சாரிகளிடம் இப்படி இருப்பதற்கு காரணமாக உள்ள மருந்தை தனக்கு ஒரு கை அளவாவது கொடுக்க வேண்டுகிறார்.
மீண்டும், அடுத்த பாசுரத்தில் இணைவோம், நன்றி