A Simple Devotee's Views
To Read this in English, please click here, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம் போன்றவர்கள், பரமபதநாதன் எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறான் என்றும் அவனை தங்களால் அடைய முடியாது என்றும் சொன்னார்கள். சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் என்று ஆழ்வார் சொல்லி இராமபிரானை அடையச் சொன்னார். இராமனோ சக்ரவர்த்தித் திருமகன், அவனை அணுகுவதும் தங்களுக்கு சிரமம் என்று நம் போன்றவர்கள் சொன்னதால், ஆழ்வார், கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின் என்று எளிமையான கண்ணனை அடையச்சொன்னார். கண்ணனும் இந்த காலத்தில் இல்லை என்று நாம் நழுவிய போது, ஆழ்வார், உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்லுகிறார். அப்படியும் நாம் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் நம்மை விட்டு, பெருமாள் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை அடுத்த பத்து பாசுரங்களில் விவரிக்கிறார். அதில் முதலில் நாம் பார்த்தது ‘மெய்யேற்கே மெய்யனாகும்’ என்ற பதினைந்தாவது பாசுரம். அந்த பாசுரத்தில், பரமாத்மாவான பெருமாள், உண்மையாக பக்தி கொண்டவர்களுக்கு எல்லாவிதத்திலும் அருள் செய்கிறான்; உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யான பக்தி செய்பவர்களை கூட காப்பாற்றி வருகிறான்; அப்படி பொய்யான பக்தி கூட இல்லாதவர்களை கைவிட்டு விடுகிறான்; அப்படிப்பட்ட பெருமாளின் அழகு எல்லா சந்தேகங்களையும் தீர்த்து விடும் என்று சொன்னார். அடுத்து தான் கள்வனாகவும், சூதனாகவும், பிற மாந்தர்களின் கயல்விழிகளில் அகப்பட்டு குப்புற வீழ்ந்த தன்னை, தன்னுடைய திருமேனி அழகினால் திருத்தி, அவன் மேல் அன்பு பெருகும்படி செய்ததை சென்ற பாடலில் தெரிவித்தார். இனி அடுத்த பாசுரம்.
விரும்பி நின்று ஏத்த மாட்டேன் விதி இலேன் மதி ஒன்று இல்லை, இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம், சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட, கரும்பினைக் கண்டு கொண்டு என் கண் இணை களிக்கு மாறே. (திருமாலை 17)
ஆதரத்துடன் பெருமாளை வாயினால் துதி பாடி வணங்க மாட்டேன் என்றும், கைகூப்புதல் போன்ற காரியங்களையும் செய்தது இல்லை என்றும், ஈஸ்வரன் என்று ஒருவன் இருக்கிறான் என்று மனது நினைக்கவில்லை என்றும், இருந்த தன்னுடைய இரும்பு போன்ற கடினமான நெஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்த, வண்டுகள் அதிகம் உள்ள சோலைகள் சூழுந்த திருவரங்கத்தில் கோயில்கொண்ட எம்பெருமானை பார்த்து தன் கண்கள் களிக்கின்றனவே என்று ஆழ்வார் ஆச்சர்யப்படும் பாசுரம். மிகவும் ஏழையாக இருக்கும் ஒருவனுக்கு தினமும் விருந்து கிடைத்தால் எப்படி மகிழ்வானோ அதுபோல் ஒரு யோக்கியதையும் இல்லாத தனக்கு அழகிய மணவாளனின் சேவையும் அருளையும் கிடைத்ததை எண்ணி மகிழும் பாடல்.
சென்ற பாசுரத்தில், நெஞ்சினுள் அன்புபெருகவைத்ததை ஆதரம் என்று ஆழ்வார் சொன்னார். நெஞ்சினுள் அன்பு பெருகி உருகினாலும், அது உடம்பில் தெரியாதபடி, அது கட்டுஅழியாமல், கடினமாக இருக்கும் மக்களை போல் இல்லாமல், தன்னுடைய கண்கள் போன்ற புலன்கள் கூட பெருமாளை கண்டு களிக்கின்றன என்று சொல்லும் பாடல். எப்பவும் ஆத்மாதான் உணர்வுகளை அனுபவிக்கும், ஆனால் இங்கு ஆழ்வார், புலன்களே மகிழ்ச்சி அடைகின்றன என்று சொல்கிறார். இனி பாடலுக்குள் செல்வோம்.
இந்த வார்த்தைகளால் மனம், உடல், வாக்கு என்ற தன்னுடைய முக்கரணங்களும் கடந்த காலத்தில் இருந்த நிலையை ஆழ்வார் தெரிவிக்கின்றார். இந்த முக்கரணங்களை, ஆண்டாள் தூமலர் தூவி (கை) தொழுது , வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து, (திருப்பாவை, 5) என்று சொல்லி இருக்கிறார். ஆண்டாள் நாம் என்ன செய்யவேண்டும் என்று சொல்லியதை தான்முன்பு செய்யவில்லை என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் இந்த பாசுரத்தின் முதலில் கூறுகிறார். நித்யஸூரிகளுக்கும் தலைவனாகிய பெருமாளை துதிப்பதற்கும் அர்ச்சிப்பதற்கும் சக்தி இல்லாதவனாக இருப்பதால் அவனிடமே தயைகேட்பது என்று விஷ்ணுபுராணத்தில்(5.7.70) குறிப்பிடப்பட்டுள்ளது போல் மற்ற விஷயங்களை பேசுவதற்கு நாக்கிற்கு சக்தி இருந்தாலும் பெருமாளை பற்றி பேசுவதற்கு சக்தி இல்லாதவனாக இருந்ததாக “விரும்பி நின்று ஏத்த மாட்டேன்” என்ற இந்த வார்த்தைகளால் ஆழ்வார் கூறுகிறார்.
அமரகோசம் என்ற காவியத்தில், “விதிர் விதானே‘ என்று சொல்லும்போது விதி என்பது உடம்பினால் செய்யும் காரியங்கள் என்ற கருத்தில் சொல்லப்படுகிறது. பெருமாளை கருதி கை போன்ற அவயங்களால் தான் எந்த பக்தியான காரியங்களையும் பல காலங்களாக செய்யவில்லை என்று ஆழ்வார் கூறுவது விதி இலேன் என்பதால் தெரிகிறது.
விஷ்ணு தர்மம் என்ற நூலில், எந்த நாக்கு விஷ்ணுவை போற்றுகிறதோ அதுவே நாக்கு; எந்த நெஞ்சு விஷ்ணுவிடம் சமர்ப்பிக்கப்படுகிறதோ அதுவே நெஞ்சு. எந்த கைகள் அவனுக்கு பூஜை செய்கின்றனவோ அவையே சிறந்த கைகள் என்று சொல்லியிருந்தபடி தான் முன்காலத்தில் நெஞ்சினால் கூட நினைத்தது இல்லை என்றும், ஈஸ்வரன் என்ற ஒருவன் உண்டு என்ற புத்தியும் இருந்தது இல்லை என்பதை மதி ஒன்று இல்லை என்று சொல்கிறார். நம் வேதங்களிலும், உபநிஷத்களிலும், எவன் ஒருவன் ப்ரஹ்மத்தை பற்றி அறிகின்றானோ அவனே சத்புருஷன் என்றும் அதை அறியாதவன் இல்லாதவன் ஆகிறான் என்றும் சொல்லப்படுகிறது. எந்த வித்தை, முக்திக்கு காரணமோ, அதுவே வித்தை, மற்றதெல்லாம் வீண், என்று ஸ்ரீ பராசரர் என்ற மாமுனிவர் விஷ்ணு புராணத்தில் சொன்னதையும் இங்கே நினைவில் கொள்ளலாம். இவையே அறிவு என்பதால், தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனக்கு மதி ஒன்று இல்லை என்று இந்த பாடலில் கூறுகிறார்.
இப்படி மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களால் தன்பக்கம் திரும்பாத ஆழ்வாரை, இவைகளில் முக்கியமான மனதைத் திருத்தி பெருமாள் அவரை தனக்காக மாற்றினார் என்று ஆழ்வார் இங்கே சொல்கிறார். இரும்பு போல் வலிய நெஞ்சம் என்று சொல்லி தன்னுடைய முந்திய நிலையை ஆழ்வார் சொல்கிறார். இரும்பு போல் என்று கடினமான நெஞ்சம் என்று சொல்லி, தன் மனது, அதையும் விட கடினமானது என்பதை வலிய என்பதால் குறிப்பிடுகிறார். இரும்பினைத் தீ கொண்டு உருக்கி விடலாம், ஆனால் தன மனதை மாற்றுவது அவனால் மட்டுமே முடியும் என்ற கருத்தினைத் தெரிவிக்கின்றார். இப்படி யாராலும் செய்யமுடியாததைச் செய்பவன் என்று பெருமாளின் பெருமையைக் கூட்டுகிறார்.
இரும்பைவிடக் கடினமான தன் நெஞ்சத்தை தண்ணீரே காணாத கடினமான நிலத்திற்கு ஒப்பு சொல்லி, அங்கே எவ்வளவு மழை பெய்தால், அந்த நிலம் தளர்ந்து சேறாக மாறுமோ அதுபோல் பெரியபெருமாள் தன்னிடம் கருணை மழை பொழிந்தான் என்கிறார். வைரத்தை, வைரம் கொண்டே அறுக்கமுடியம் என்பது போல், மற்ற உலக விஷயங்களில் மட்டுமே ஈடுபட்டதால் வைரம் போன்று இறுகிய தன்னுடைய நெஞ்சத்தை, பெரிய பெருமாள் விலையுயர்ந்த வைரமாகிய அவரின் அழகினை காட்டி அறுத்தார் என்று ஆழ்வார் சொல்வதை பின்னால் பார்ப்போம்.
ஆண்டாள் ‘செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ‘ என்று திருப்பாவையில் (22) பாடியதுபோல் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உருக்கியதாக ஆழ்வார் கூறுகிறார். திடீரென்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் சக்தி தனக்கில்லை என்பதை கருத்தில் கொண்டு பெரியபெருமாள் இவ்வாறு செய்ததாக ஆழ்வார் இங்கு தெரிவிக்கின்றார். அவர் சிறுசிறிதே விழித்ததால், ஆழ்வார் மெதுமெதுவாக உருகினார்.
வண்டுகள் பொருந்தி இருக்கின்ற சோலை என்று பொருள். அமர் என்று சொல்வதால் அங்கேயே பிறந்து, அங்கேயே எப்போதும் இருக்கின்ற வண்டுகள் என்று கொள்ள வேண்டும். வண்டுகள் பறந்து வேறு இடம் செல்லாதா என்று கேட்டுக்கொண்டு, அந்த சோலைகளில் தேன் வற்றாததால், திருவரங்கத்தில் எப்போதும் வசந்த காலமே, அதனால் வண்டுகளும் வேறு இடம் செல்ல காரணம் இல்லை. எப்படி பூக்களின் வாசம், அந்த சோலையில் உள்ள பூக்களில் இருந்து பிறந்து, அங்கேயே வளர்ந்து. அங்கேயே இருப்பது போலே, ஸ்ரீரங்கத்து வண்டுகள் அந்த சோலையிலேயே பிறந்து வளர்ந்து இருக்கின்றன என்று சொல்கிறார்.
இங்கு நாம் மணவாள மாமுனிகளின் யதிராஜவிம்சதி என்ற நூலில் இருந்து இரண்டாம் பாசுரத்தில் உள்ள ஒரு கருத்தையும் பார்க்கலாம். “ ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜ ப்ரு ங்கராஜம்” என்று சொல்லும்போது, சுவாமி ராமானுஜர் எப்போதும் நம்மாழ்வாரின் பாத கமலங்களில் நீங்காது இருக்கும் வண்டு என்று சொல்கிறார். நம்மாழ்வாரின் திருவாய்மொழி என்பது ராமானுஜருக்கு என்றும் மாறாத சுவையுடைய தேன் என்பதால் அவர் எப்போதும் நம்மாழ்வாரின் திருவடிகளை விட்டு அகலாமல் இருக்கிறார்.
அத்தகைய சோலைகள் சூழ்ந்த திருஅரங்கம் என்று சொல்லிவிட்டு, திருவரங்கத்தின் இனிமை, சோலையின் இனிமையைவிட அதிகம் என்பதை ‘மா’ கோயில் என்பதைக்கொண்டு விளக்குகிறார். திருவரங்க நகரின் இனிமையை கனிக்கு ஒப்பிட்டால், சோலைகளின் இனிமையை புறத்தோலுக்கு ஒப்பிடலாம்படி உள்ளது என்கிறார். மேலும் திருவரங்கத்தை, பரமபதம் போல் சிறந்த கோவிலாக உள்ளதையும் இது தெரிவிக்கிறது.
இங்கு ஆழ்வார், பெரிய பெருமாளை கரும்பு என்கிறார். கரும்பு என்று சொல்வதால், இயற்கையாகவே இனிமையாக இருக்கும்; தைத்ரீய உபநிஷத்தில் சொன்னது போல் அவன் ஆனந்த ஸ்வரூபன், அவனை அடைந்து ஜீவாத்மா ஆனந்தம் அடைகிறான் என்பதில் பரமாத்மா இயற்கையில் இனிமையானவர் என்று கிடைக்கிறது.
வைரம் போன்று இறுகிய ஆழ்வார் நெஞ்சத்தை, வைரம் கொண்டு அறுத்தார் என்று மேலே சொன்னதை, வைரம் போன்ற ஆழ்வாரின் நெஞ்சத்தை, கரும்பு போன்ற மென்மையான, இனிமையான, இயற்கையான தன்னுடைய திருமேனி அழகினைக் கொண்டு மாற்றினார் என்று கொள்ளலாம்.
ராமாயணம் யுத்தகாண்டம், 19.7 ல் சொன்னது போல், விபிஷணனை கண்களால் இராமன் பருகியதை போல் இங்கு, பெரிய பெருமாள் கண்களால் பருகக்கூடிய கரும்பு என்று சொல்கிறார்.
மற்ற விஷயங்களில் லயித்த ஆழ்வாரின் கண்கள் பெரியபெருமாளை தரிசித்ததும் அவரை கண்டு களிக்கின்றன என்று ஆழ்வார் ஆச்சர்யம் கொள்கிறார். ‘இணை’ என்றது வலது கண்ணின் மகிழ்ச்சிக்கு இணை இடது கண் என்று தன்னுடைய இரண்டு கண்களை மட்டுமே இணையாக ஆழ்வார் காண்கிறார். முன்பு சொன்னது போல் கண்கள், இந்திரியங்கள் என்ற நிலையை தாண்டி தானே ஒரு ஆத்மாவைப் போல் ரசிக்கின்றன.
மேல் சொன்னது, கண்கள் தாமாகவே இன்பம் கொள்ளும் காட்சி. கண்கள் தானாகவே துயரப்பட்ட காட்சியை இராமாயணத்தில் காணலாம். இராமனைக் காட்டிற்கு அனுப்பியபின், தயரதன் தன்னுடைய கண்கள் இராமன் பின் போயின என்றும், கௌ ஸல்யையைப் பார்க்க முடியவில்லை என்றும் தன்னை தொட்டுப்பார்த்து தொடு உணர்ச்சி உள்ளதா என்றும் கேட்கும் ராமாயண சுலோகத்தை (அயோத்தியாகாண்டம் 42.34) மேற்கோள் காட்டியுள்ளார்கள். தயரதன் தன் கண்கள் தன்னிடம் சொல்லாமல் தன்னிச்சையாக சென்றதை சொல்வது மேல்சொன்ன சுலோகம். இதே நிலையை தாம் அடைந்ததாக நம்மாழ்வார் சொல்லும் பதிகம், ‘முடியானே’ என்னும் 3.8 திருவாய்மொழி ஆகும்.
இதில்
இனி அடுத்த பாடலில் மீணடும் சந்திப்போம்.