பெரிய பெருமாள் பெருமைகள் – மெய்யர்க்கே- திருமாலை

முன்னுரை

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், நமக்கு அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம் போன்றவர்கள், பரமபதநாதன் எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறான் என்றும் அவனை தங்களால் அடைய முடியாது என்று சொன்னார்கள். சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் என்று ஆழ்வார் சொல்லி இராமபிரானை அடையச் சொன்னார். இராமனோ சக்ரவர்த்தி திருமகன், அவனை அணுகுவதும் தங்களுக்கு சிரமம் என்று நம் போன்றவர்கள் சொன்னதால், ஆழ்வார், கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின் என்று எளிமையான கண்ணனை அடையச்சொன்னார். கண்ணனும் இந்த காலத்தில் இல்லை என்று நாம் நழுவிய போது, ஆழ்வார், உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்லுகிறார். அப்படியும் நாம் ஆழ்வார் பக்கம் செல்லாமையால், ஆழ்வார் நம்மை விட்டு, பெருமாள் தனக்கு செய்த மிக பெரிய நன்மைகளை / உதவிகளை இனிவரும் பத்து பாசுரங்களில் விவரிக்கிறார்.

திருமாலை பதினைந்தாவது பாசுரம்

மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போல, பொய்யர்க்கே பொய்யனாகும், புட்கொடி உடைய கோமான், உய்யப்போம் உணர்வினார்கட்கு ஓருவன் என்று உணர்ந்த பின்னை, ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கமன்றே. திருமாலை 15

உண்மையாக பக்தி கொண்டவர்களிடம் உண்மையாகவும், பொய்யுடன் பக்தி உள்ளவர்களிடம் பொய்யாகவும், கருட கொடியுடைய பெருமாள், முக்தி அடையவேண்டும் என்ற ஆசை உடையவர்களுக்கு அவர்களுடைய சந்தேங்களை தீர்த்து அழகாக இருக்கும் பெருமாள் உள்ள இடம் திரு அரங்கம் என்பது இந்த பாடலின் மேல் எழுந்தவாரியான கருத்து ஆகும்.

இதில், நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள், உண்மையான பக்தி என்று பெருமாள் எதை எதிர்பார்க்கிறார், பொய்யான பக்தி என்பது பெருமாள் பார்வையில் என்ன, இப்படிப்பட்ட பக்தியை வெளிப்படுத்தும் நம் போன்ற ஜீவாத்மாக்களுக்கு பெருமாள் என்னவெல்லாம் செய்கிறார் என்பதே இந்த பாடலின் முழுமையான கருத்தாகவும் உரையாசிரியர்களின் கருத்தாகவும் அமையும். இனி அவற்றில் சிலவற்றை கீழே பார்க்கலாம்.

கருடனை கொடியாக கொண்ட பெருமாள், நெடும்காலமாக பகவத் விஷயம் கிடைக்காமல் இருந்த ஆழ்வாரைப் போன்று பெருமாள் மேல் வெறுப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு தன் ஸ்வரூபத்தை உள்ளபடி காட்டி கொடுத்தும், பகவானைத் தவிர மற்ற விஷயங்களில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்களுக்கு, தன்னை காட்டிக்கொள்ளாமலும் இருப்பான் என்றும், பெருமாள் ஒருவன் இருக்கிறான் என்று அறிந்து கொண்ட பின்பும், அவனை அடையவேண்டும் என்று ஆசை கொண்ட பின்பும் அவர்களது சந்தேங்களை போக்கி, அழகுடன் காட்சி அளிக்கின்றவனாக விளங்கும் ஊர் திருவரங்கம் என்பதே பாடலின் தெளிவுரைப் பொருளாக உரையாசிரியர்கள் கூறுகிறார்கள்.

ஆழ்வார், நன்றி உள்ளவர்கள் செய்யும் காரியமாகிய, நமக்கு நல்லது செய்தவர்களின் பெருமை கூறுவது என்ற செயலை இந்த பாடலின் மூலம் நமக்கு தெரிவிக்கின்றார். நம் போன்று சம்சாரியாக இருந்த ஆழ்வாரை நம் போன்றவர்களுக்கு உபதேசிக்கும் அளவிற்கு உயர்த்தி, ஆழ்வாரின் சந்தேகங்களை தீர்த்து, பக்தி, பரபக்தி, பரமபக்தி என்று பலபடிகளில் ஏற்றிச்சென்ற பெருமாளின் பெருமையும் அழகையும் சொல்லும் பாடல் இது.

இதே போல் என்ன கைம்மாறு செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரம் (2.7.8), “என்னைத் தீமனங் கெடுத்தாய்” என்பதாகும். இதற்கான ஈட்டு ஸ்ரீஸூக்தி; “அமிர்தத்தையும், விஷத்தையும் ஒன்றாக விரும்புவாரைப் போல உன்னையும் உகந்து, மற்ற எல்லா விஷயங்களையும் உகக்கும் பொல்லாத நெஞ்சைத் தவிர்த்தாய்”. அதாவது பெருமாளை மட்டும் உகக்கும் நெஞ்சத்தை தமக்குக் கொடுத்ததற்காக ஆழ்வார் நன்றி கூறுகிறார்.

மெய்யர்க்கே மெய்யனாகும்

இதில் வரும் மெய்யர்க்கே என்பது நம் போன்ற ஜீவாத்மாக்களைக் குறிக்கும். மெய்யானாகும் என்பது பரமாத்மாவாகிய பெருமாளின் செய்கைகளைக் குறிக்கும். இதேபோல் அடுத்து வரும் பதங்களான ‘பொய்யர்க்கே பொய்யனாகும்’ என்பதில் வரும் பொய்யர்க்கே என்பது ஜீவாத்மாக்களையும் பொய்யனாகும் என்பது பரமாத்மாவின் செய்கைகளையும் குறிக்கும்.

மெய்யர்க்கே

முதலில், பக்தி என்பதில் உள்ள பல நிலைகளை பார்க்கலாம். நாதிக்கவாதம் என்பது கடவுள் இல்லை அல்லது கடவுள் நம்பிக்கைகளை மறுப்பது போன்ற நிலை. அதற்கு அடுத்த நிலை கடவுள் பக்திக்கு மறுப்பின்மை அல்லது கடவுளிடம் வெறுப்பின்மை. இந்த நிலையில் உள்ளவர்கள் பெரியதாக ஒன்றும் சொல்லும் அளவிற்கு கடவுள் பக்தியில் திளைப்பதில்லை, ஆனால் அதே சமயம் கடவுளுக்கோ அல்லது அந்த நம்பிக்கைகளுக்கோ எந்த வித எதிர்ப்பையும் காண்பிப்பதில்லை. அடுத்த நிலை என்பது கடவுள் அல்லது அந்த நம்பிக்கைகளில் ஒரு ஆர்வம் வருவது. இப்படி அந்த ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும் போது வரும் நிலைகள், பக்தி, பரபக்தி , பரஞானம் மற்றும் பரமபக்தி என்று போகும். ஜீவாத்மாக்கள் ஒவ்வொருவரும் ஒரு சமயத்தில் இந்த நிலைகளில் ஏதாவது ஒன்றில் இருப்பார்கள். ஆக, வெறுப்பின்மை என்பது இந்த பக்தி என்ற பாதையில் உள்ள முதல் படி என்று நாம் கொள்வோம்.

‘மெய்யர்’ என்றால் இங்கு உண்மையானவன் என்பது பொருள். மெய்யர்க்கே என்பதில் ஆழ்வார் சொல்லும் பக்தியின் நிலை பெருமாளிடத்தில் வெறுப்பின்மை என்ற நிலை மட்டுமே. தனக்காகவே மட்டும் வாழ்கின்ற வாழ்க்கை நிரந்தரமான பலனை தராததால் அது பொய் என்று கூறப்படுகிறது. பெருமாளுக்காக வாழ்கின்ற வாழ்க்கையை தொடங்கி விட்டால், அது நிரந்தர பலன்களை தரும் என்பதால் அதுவே மெய் எனப்படுகிறது. இப்படி பக்தியின் முதல் படி வெறுப்பின்மை என்பதில் தான் ஆரம்பமாகிறது. இந்த நிலையில் இருந்தாலே, பெருமாள் அந்த ஜீவாத்மாவை மெய்யர் என்று கருதுகிறார்.

மெய்யனாகும்

நித்யஸூரிகள், நிஜமாகவே முற்றிலும் மெய்யர்கள், ஏன் என்றால் நித்யஸூரிகள் அவனுக்காகவே மட்டும் எப்போதும் இருப்பவர்கள். நித்யஸூரிகளுக்காக பெருமாள் மனம், மொழி, செயல்கள் மூலம் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவை எல்லாவற்றையும் செய்வான். நித்யஸூரிகளுக்கு, என்னவெல்லாம் செய்வானோ , அவைகளை, மேலே மெய்யர்க்கே என்பதில் சொன்ன வெறுப்பின்மை என்ற முதல் படியில் இருக்கும் ஜீவாத்மாக்களுக்கும் பெருமாள் செய்கிறான்.

மெய்யர்க்கே மெய்யனாகும், என்பதில் வரும் மெய் என்ற வார்த்தை, இரண்டு இடங்களில் வெவ்வேறு பொருள்களில் வருவதை, உரையாசிரியர் நியாயப்படுத்தும் காரணங்கள்:

  • திருமாலையில் இந்த பகுதி, பெருமாளின் குணநலன்களை கூறுவதால், பெருமாளின் ஒருங்கிணைந்த மனம், மொழி, செயல்களை ஒன்றாக காட்டும் பெருமாளின் குணத்தை, ஆழ்வார் மெய்யானாகும் என்பதில் உள்ள மெய்யில் சொல்கிறார்.
  • எல்லா சிறந்த குணங்களையும் உடைய பெருமாளுக்கு வெறுப்பின்மை என்பது பொருத்தமாக இருக்காது, அதனால் இரண்டு மெய்களுக்கும் வெறுப்பின்மை என்ற ஒரு பொருள் கூற இயலாது.
  • பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாக்களாகிய நமக்கும் நவவித (ஒன்பது) சம்பந்தம் உண்டு என்பது நம் முன்னோர்களின் வாக்கு. அதில் ஒன்று தந்தை- மகன் சம்பந்தம். அதன்படி வெறுப்பின்மை என்ற ஒன்று இருந்தால் கூட பெருமாள் நமக்கு அருள் செய்து காப்பாற்ற வருகிறார்.
  • அவன் எல்லாவற்றையும் பெற்றவன் ஆதலால், அவன் இதற்கு மேல் எதிர்பார்ப்பது இல்லை.
  • பொய் வாழ்க்கையில் உள்ள ஜீவாத்மாக்களுக்கு உடனே பக்தி, பரபக்தி பரஞானம் பரமபக்தி போன்ற நிலைகள் ஏற்படக்கூடியதில்லை.
  • வெறுப்பின்மை மட்டுமே கொண்டு ஜீவாத்மாக்களை காப்பாற்றுவது பெருமாளுக்கு பெருமையே தவிர குறையில்லை.
  • மேலும் குற்றமற்ற மெய்யர்களாய் இருப்பது நித்யஸூரி போன்றவர்களுக்கு மட்டுமே கூடுமாகையால், நம்போன்ற ஜீவாத்மாக்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது என்பதும் நமக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டியதும் அவனுக்கு தெரியும்.
  • இதையே, யுத்த காண்டத்தில், இராவணனின் தம்பியாகிய விபீஷண சரணாகதியின் போது,(இராமாயணம், யுத்த காண்டம், 18,3) யார் ஒருவன் நண்பன் என்று வேஷம் போட்டு வந்தாலும், அவனை ஒரு போதும் கைவிடமாட்டேன் என்று இராமபிரானே சொல்லி இருப்பதால், வெறுப்பின்மையோடு நாம் சென்றாலும், அவன் ஒருங்கிணைந்த மனம், மொழி, செயல்களை காட்டுவதாகவே கொள்ள வேண்டும்.
  • இப்படி நமக்கு பலன்கள் கிடைப்பதால், வெறுப்பின்மையை மோக்ஷத்திற்கு வழியாக எடுத்துக்கொள்ள முடியுமா என்று கேட்டுக்கொண்டு, உரையாசிரியர் கீழ்கண்டவாறு மறுக்கிறார்.ஜீவாத்மாக்களுக்கு தனக்காக வாழ்வதை தவிர்த்து, பெருமாளுக்காகவே வாழ வேண்டும் என்ற ஆசையும் உள்ளூர இருக்கும். அதற்காகவே அவர்களை ‘மெய்யர்‘ என்று ஆழ்வார் குறிப்பிட்டு உள்ளார். மேலும், சாதனம் என்பது அடைய வேண்டிய இடத்தை அடையும் வரையில் மட்டுமே வேண்டும், வந்து சேர்ந்த பின் தேவை இல்லை. ஆனால் பரமபதத்தில் வெறுப்பின்மை வேண்டும், பெருமாளுக்காகவே வாழ வேண்டிய இடம் ஆதலால் வெறுப்பின்மையை தாண்டி மேலும் பல பக்தி நிலைகளையும் இந்த முக்தாத்மாக்கள் அடைய வேண்டும். எனவே வெறுப்பின்மை மோக்ஷ சாதனம் ஆகாது. (மோட்ஷம் அடைந்த ஜீவாத்மாக்கள், முக்தாத்மாக்கள் என்று அழைக்கப்படுவர்).

பொய்யர்க்கே பொய்யனாகும்

அடுத்து, பொய்யர்க்கே பொய்யனாகும் என்பதை பற்றி பார்ப்போம். இனிமேல், வெறுப்பின்மை என்ற முதல் நிலைகூட , இந்த ஜீவாத்மாவிற்கு வரவே வாராது என்று தெரிந்தபின், மிக வருத்தத்துடன் அந்த ஜீவாத்மாவை, பரமாத்மா கைவிடுகிறான். இதற்கு நாம், நம்மாழ்வாரின் திருவாய்மொழி, 5.1.1 பாசுரத்தில், பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமேயாடி என்ற பதங்களை பார்க்க வேண்டும். ஆழ்வார், பகவத்விஷயங்களில் ஈடுபட்டவர் போல் நடித்து, பொய்யான சொல்லுக்கு மெய்யான பலன்களைத் தான் பெற்று விட்டதாக அவர் சொல்லும் பாசுரம். இப்படி, உண்மை என்று கொள்ளலாம் என்று சொல்லும் படியான பொய்யை கூட இந்த ஜீவாத்மா இனி சொல்லி / செய்து, வெறுப்பின்மை என்ற முதல் நிலையை அடையாது என்று பெருமாள் உணர்ந்த பின்பே அந்த ஜீவாத்மாவை கைவிடுவதாக கொள்ளவேண்டும்.

மெய்யர்க்கே, என்பதில் உள்ள ஏகாரம் ‘வெறுப்பின்மை என்ற பக்தியின் முதல் நிலையினை’ மட்டுமே சொல்வது; இதனை குறைந்த பக்ஷம் (அளவு) என்று கொள்ளலாம்; பொய்யர்க்கே என்பதில், உள்ள ஏகாரம் ‘உண்மை என்று சொல்லக்கூடிய பொய்யை’ மட்டுமே குறிப்பது. இதனை பக்தியின்மை அல்லது பொய்யான பக்தியின் அதிக பக்ஷம் (அளவு) என்று கொள்ளலாம். இந்த அளவுகூட வரவில்லை என்றால் மட்டுமே பெருமாள் கைவிடுகிறான். மெய் என்பது ஆஸ்திக புத்தியையும், பொய் என்பது நாஸ்திக புத்தியையும் இங்கு சொல்கிறது. பகவானை தவிர மற்ற விஷயங்கள் நிரந்தர பலனை தராததால் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவற்றை பொய் என்கிறார்.

மெய்யர் அல்லது ஆஸ்திகர்களுக்கு, மெய்யனாவான் அதாவது நித்யஸூரிகளுக்கு செய்யும் அத்தனையும் செய்கிறான். பொய்யர் அல்லது நாஸ்திகர்களுக்கு பொய்யனாவான், அதாவது கைவிட்டுவிடுவான் என்பதே இதன் தேர்ந்த கருத்து.

விதியிலா என்னைப் போல

ஆழ்வாரே ‘மெய்யர்க்கே மெய்யனாகும் ‘ என்பதையும் , பொய்யர்க்கே பொய்யனாகும் தன்னிடத்திலேயே கண்டதாகவும் சொல்வதை, விதியிலா என்னைப் போல, என்று குறிப்பிடுகிறார். விதி என்பது பாக்கியத்தை குறிப்பது. இவ்வளவு நாட்கள் வீணே கழித்து விட்டேனே என்று ஆழ்வார் புலம்புகிறார். இப்போது கிடைத்து பெரும் பகவத் இன்பத்தை விட அது கிடைக்காமல் இழந்த துன்பத்தை பெரியதாக நினைக்கும் பொய்கை ஆழ்வாரின், ‘பழுதே பலபகலும் போயினவென்று , அஞ்சி அழுதேன்‘ என்ற முதல் திருவந்தாதியில் 16 பாசுரத்தை இங்கே நாம் நினைவில் கொள்ளலாம். இராமாயணத்தில், வால்மீகி, எவன் ஒருவன் இராமனை காணவில்லையோ அல்லது எவன் ஒருவனுக்கு ராமனின் அருள் இல்லையோ அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள் (அயோத்தியா காண்டம், 17.14) என்று கூறுவதையும் இங்கே நினைவு கூறலாம்.

விதியிலா என்னைப் போல என்பதை ஆழ்வார் ஒரு மத்திய நிலையாக கொள்கிறார். அதாவது பொய்யர்க்கும், மெய்யர்க்கும் இடையே உள்ள பக்தி நிலை. எப்படி ஒரு தீபம் முன்னும் பின்னும் வெளிச்சம் தருவதைபோல், பெருமாள் இந்த மத்திய நிலைமையில் உள்ளவர்களையும் காத்து வருகிறான், ஆனால் தன்னை காட்டிக்கொள்ள மாட்டான். அந்த நிலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வார் தான் இருந்ததாக சொல்வதை இங்கே நாம் நினைவில் கொள்ளலாம்.

இப்போது விடுபட்ட இரண்டு நிலைகளை சேர்க்கலாம். ஒன்று மெய் என்று கொள்ளும்படி பொய் சொல்லும் / செய்யும் நிலை, இரண்டாவது ஆஸ்திகத்திலும் இல்லாமல், நாஸ்திகஸ்த்திலும் இல்லாமல் உள்ள நடுநிலைமை. நாம் எங்கு இருக்கிறோம் என்று தெரியாவிட்டாலும், இன்னும் அடையவேண்டிய நிலைகள் பல உள்ளன என்பதை நினைவில் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்வோம்.

புட்கொடி உடைய கோமான்

இப்படி மெய் என்று பெயர் சொல்லும்படி உள்ள பொய்யை கூறும் ஜீவாத்மாக்களுக்கு, ஆள் கிடைக்காததால்தான், பெருமாள் அருளுகிறாரோ என்றால், இல்லை என்று “புட்கொடி உடைய கோமான்‘ என்ற வாசகத்தினால் மறுக்கிறார். கருட கொடியை தனக்கு அடையாளமாக கொண்டவர் என்று சொல்லி, அவர்க்கு சேவை செய்ய பல நித்ய ஸூரிகள் இருப்பதை சொல்கிறார். கருடன் என்று சொன்னது ஒரு உதாரணமே. கருடன் செய்யும் சேவைகளை ஆளவந்தார் என்ற ஆச்சாரியார் எழுதிய ஸ்தோத்ர ரத்ன மாலை என்ற நூலில் இருந்து 41 பாடலை மேற்கோள் காட்டுகிறார்.

  • வேதங்களை தமக்கு அங்கங்கள் ஆக கொண்டவர் கருடன்
  • பெருமாளுக்கு அடியவன், நண்பன்,
  • பெருமாளுக்கு வாஹனம், சிம்மாசனம், கொடி, மேல்தட்டு, சாமரம்

இப்படி பற்பல சேவைகளை உண்மையாகவே செய்யும் ஒரு நித்யஸூரி. அதாவது, பற்பல நித்யஸூரிகள் செய்யும் வேலைகளை தனியொரு நித்யஸூரியாக செய்யும் கருடன். இதேபோல் பற்பல சேவைகளை செய்யும் ஆதிசேஷன் என்ற இன்னொரு நித்யஸூரி. அவர் செய்யும் பணிவிடைகளாவன:

  • பெருமாள் எழுந்தருளி இருக்கும் திருமாளிகை
  • பெருமாள் கண் மலர்ந்து அருளும் படுக்கை
  • பெருமாள் அமரும் ஸிம்மாஸனம்
  • பாதுகை, திருப்பரியட்டம், அணை மற்றும் குடை

இவ்வாறு பற்பல நித்யஸூரிகள் செய்ய கூடிய சேவைகளை செய்யவல்ல பற்பல நித்யஸூரிகளை கொண்டவன் அவன். அப்படிப்பட்டவன் அவன் ஒருவனே. அதனால் அவன், அவனுக்கு ஆள் இல்லாமல் நம் வெறுப்பின்மையை ஏற்கவில்லை. இந்த ஜீவாத்மாக்கள் அனைவரும் அவனுடைய உடமைப்பொருள் / சொத்து, அதில் ஒன்று கூட விடாமல் கிடைப்பதற்காவே மிக குறைந்த தேர்ச்சி அளவை வைத்து, ஆளில்லாதவன் தேடுவது போல் தேடி, அவன் நம்மை கரை ஏற்றுகிறான். இங்கு கோமான் என்று சொன்னதற்கு அயர்வரும் அமரர்கள் அதிபதி என்ற மேற்கோள் காட்டப்படுகிறது.

உய்யப்போம் உணர்வினார்கட்கு

இதுவரை இருந்த நிலையில்லாத பொய் வாழ்க்கையில் இருந்து, மாறி உய்ய வேண்டும் என்ற உணர்வு உள்ளவர்களுக்கு என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது இந்த நிலையில் இருந்து மாற என்ன செய்ய வேண்டும் என்ற அறிவு வருவதை குறிக்கும். இந்த உணர்வு வராதவர்கள் முடியப்போம் என்று உணர்வு உள்ளவர்கள் ஆவர். பகவத்கீதையில், (2-63), கிருஷ்ணன் சொன்னபடி நினைவு மழுங்குவதனால் புத்தி நாசம் அடைந்து, அதனால் உலகவாழ்க்கை என்ற சக்கரத்தில் உழல்கின்றான்.

ஓருவன் என்று உணர்ந்த பின்னை

ஓருவன் என்று உணர்ந்த பின்னை, என்பது ஈஸ்வரன் என்று ஒருவன் உள்ளான் என்ற அறிவு வருவதைக் குறிக்கும். உடல் என்பது வேறு, அதனை விட உயர்ந்ததான ஆத்மா என்ற ஒன்று உண்டு என்றும் அதனை வழிநடத்தி செல்பவனான பரமாத்மா அல்லது ஈஸ்வரன் என்ற ஒருவன் உண்டு என்று அறிவு வந்த பிறகு என்பது இதன் பொருள்.

ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்

முதலில் நம் சம்பிரதாயத்தின் 26 தத்துவங்களை நினைவில் கொள்ளவேண்டும். திருவாய்மொழியில், பெருமாள் நம்மாழ்வாருக்கு “கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து ” (8.8) என்ற பதிகத்தில் சொல்லியிருப்பதை நினைவில் கொள்ளலாம்.

  • பஞ்ச பூதங்கள் ஐந்து (நிலம், நீர், தீ, காற்று, வானம்)
  • ஞான இந்திரியங்கள் ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி)
  • கர்ம இந்திரியங்கள் ஐந்து (வாய், கை, கால், கழிவு துவாரங்கள் இரண்டு)
  • தன்மாத்திரை (ஐம்பொறிகளின் மூலம்) ஐந்து (சுவை, ஒளி, தொடுஉணர்ச்சி, ஓசை, வாசம்)
  • மனம்
  • அகங்காரம்
  • மஹான்(அறிவுத்தத்துவம்)
  • அவ்யக்தம்(சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும் தோன்றுவதற்கு உள்ள மூலம் ) என்னும் இருபத்திநான்கு தத்துவங்கள்
  • ஜீவாத்மா (25)
  • பரமாத்மா (26)

ஜீவாத்மா என்ற 25 தத்துவங்களை ஒப்புக்கொண்ட பலர் பரமாத்மா என்ற 26வது தத்துவத்தை அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளவதில்லை. அதனால் சர்வேஸ்வரன் என்ற 26 தத்துவத்தில், ஐயம் அல்லது சந்தேகம் ஏற்படுகிறது. பகவத் கீதையில் (2-7) சரணடைந்த அர்ஜுனனுக்கு சந்தேகங்களை கிருஷ்ணன் தீர்த்து வைக்கிறான். அவ்வளவு ஞான சிறப்பு இல்லாதவர்களுக்கு பெருமாள் தன் அழகை கொண்டு தீர்த்துவிடுகிறார். பார்த்தவுடனே இவன் தான் பரமாத்மா என்ற பரம்பொருள் என்று புரியவைக்கும் அவன் அழகு.

அழகனூர் அரங்கம் அன்றே

திருவாய்மொழியில் சுவாமி நம்மாழ்வார் இவ்வடிவழகை பிரிந்தால் உயிர் தரிக்க முடியாது என்ற தொனியில், 9.7.3 பாடலில், “செக்கமலர்த்தவர் போலும், கண் கை கால் செங்கனிவாய அக்கமலத்திலை போலும் திருமேனியடிகளுக்கே” பாடுகிறார். இதற்கு ஆச்சார்ய ஹ்ருதயம் என்ற நூலில், “தமரோட்டை வாஸம் மறப்பித்த ஸெளந்தர்யத்தை யுணர்த்தும் அர்ச்சை நாலாந்தூதுக்கு விஷயம்” என்று அவருடைய அழகை / சௌந்தர்யத்தை சிறப்பித்து சொல்லும். அதே போல், திருவாய்மொழி, 4.5.10 “கண்ட வாற்றால் தனக்கே யுலகென நின்றான்தன்னை,” என்ற பாடலையும் நினைவில் கொள்ளலாம். இந்த அழகினை காண்பதற்கு பரமபதம் செல்ல வேண்டுமோ என்ற சந்தேகத்தை (ஐயப்பாடு), எழுப்பி “அழகனூர் அரங்கம் அன்றே ” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் தீர்த்து வைக்கிறார்(அறுத்து தோன்றும்).

பரமபதம், ஸ்ரீவைகுந்த நாதரின் (பெருமாளின்) ராஜசபை என்றும் அது முடிந்ததும் அவர் சென்று நன்றாகத் தங்கும் இடம் திருவரங்கம் என்றும் சொல்லி உரையாசிரியர் இந்த பாசுரத்தின் விளக்கத்தை முடிக்கிறார். நாமும் இங்கு முடித்துக்கொண்டு அடுத்த வலைப்பதிவில் சந்திக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: