A Simple Devotee's Views
Please click here for English version of this weblog, thanks
திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இதன் முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார், பெருமாள், தனக்கு கொடுத்த அனுபவத்தை ரசிக்கிறார். அவைகளை முந்தைய இரண்டு பதிவுகளில் பார்த்தோம். அடுத்த பகுதியான நான்கு முதல் பதினான்கு வரையிலான பதினோரு பாசுரங்களைக் கொண்ட உபதேங்களை பார்த்து வருகிறோம். அதில், ஆழ்வார், தன்னுடைய அனுபவத்தை, நமக்கு உபதேசம் செய்கிறார். அவற்றின் முதல் பகுதியான நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பாடல்களைப் பற்றி முந்தைய பதிவினில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியான மற்றொரு ஆச்சர்யமான பகுதியை இங்கு காணலாம்.
அதாவது, முதல் மூன்று பாசுரங்களில், பரமாத்மாவின் அனுபவத்தை ரசித்த ஆழ்வார், நமக்கு அடுத்த பதினோரு பாடல்களில் நமக்கு உபதேசிக்கிறார். ஆழ்வாரின் இகழ்வுக்கு பயந்து நம் போன்றவர்கள், பரமபதநாதன் எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறான் என்றும் அவனை தங்களால் அடைய முடியாது என்று சொன்னார்கள். சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான் என்று ஆழ்வார் சொல்லி இராமபிரானை அடையச் சொன்னார். இராமனோ சக்ரவர்த்தி திருமகன், அவனை அணுகுவதும் தங்களுக்கு சிரமம் என்று நம் போன்றவர்கள் சொன்னதால், ஆழ்வார், கற்றினம் மேய்த்த கழலிணை பணிமின் என்று எளிமையான கண்ணனை அடையச்சொன்னார். கண்ணனும் இந்த காலத்தில் இல்லை என்று நாம் நழுவிய போது, ஆழ்வார், உய்பவர்க்கு உய்யும் வண்ணம் திருவரங்கம் காட்டினான் என்று சொல்லி நம்மை அரங்கனிடம் அழைத்து செல்லுகிறார்.
இப்போது இந்த உபதேசத்தின் கடைசி பகுதியை பார்ப்போம்.
ஒரு வில்லால் ஓங்கு முந்நீர், அனைத்து உலகங்கள் உய்ய, செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார், மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் ஏன்னா கருவிலே திரு இலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே. (திருமாலை 11)
முதலில் இந்த பாசுரத்தின் அர்த்தத்தை பார்க்கலாம். ஒரு வில்லினால், கொந்தளிக்கின்ற கடலில் ஒரு அணை கட்டி, அனைத்து உலகங்களிலும் உள்ள அனைவரும் வாழும்படி, போர்க்களத்தில், அரக்கர்களின் தலைவனான இராவணனை கொன்று, நமக்கு என்றும் உதவும் பெருமாள் இருக்கும் இடம், பெரிய மதிள்களை உடைய திருக்கோவில் ஸ்ரீரங்கம் அன்றோ, அதன் பெருமை தெரியாமலும், இராமாவதார காலத்திற்கு பிற்பாடு உள்ளவர்கள் வழிபடவும் இங்கு இருக்கின்ற அவனின் திருநாமத்தை சொல்லாமல் காலத்தை கழிக்கின்ற நம் போன்றவர்கள், கருவில் இருக்கும் போதுகூட பெருமாளின் கருணையை பெறாதவர்கள் என்று எண்ணி ஆழ்வார் வருத்தப்படுகிறார்.
இராமாயணத்தில், அனுமன் இலங்கை சென்று இராவணனால் கவரப்பட்ட சீதாபிராட்டியை கண்டபின், இராமன், வானர சேனையுடன் கடற்கரைக்கு சென்று கடலை கடக்க உதவி செய்ய வேண்டும் என்று சமுத்திர ராஜனிடம் விண்ணப்பித்து, அந்த கடற்கரையிலே (திருப்புல்லாணி), தர்ப்பையில் சயனித்து இருந்தான். இராமனின் பெருமையை அறியாத சமுத்திர ராஜன், அதற்கு செவி சாயாமல் இருந்ததால், கோபம் கொண்ட இராமன், இலக்குவனைப் பார்த்து, கடலினை வற்ற செய்ய வேண்டும் என்று வில் அம்பினை கேட்க, உடனே பயந்து ஓடி வந்த சமுத்திர ராஜன் தன் மேல் அணை கட்ட உடன் பட்டான் என்பது சரித்திரம். அதனால் இராமன், வானரங்களின் உதவியுடன், கல்லினால் அணையை கட்டி இருந்தாலும், வில்லினால் கட்டினார் (ஒரு வில்லால் ) என்று ஆழ்வார் சொல்கிறார்.
ஓங்கு என்பது சாதாரணமாக கடலில் எழும் கொந்தளிக்கின்ற அலைகளை பற்றியது இல்லை என்றும் இராமனின் கோபத்தையும் சீற்றத்தையும் கண்டு சமுத்திரமானது அவசரம் அவசரமாக, கீழே உள்ள மண்ணை மேலே எறிந்து, ஆசிரியர் பிரம்பை எடுத்தவுடன் காலில் விழும் மாணவர்கள் போல், சயனித்து இருந்த இராமனின் திருவடிகளில், சமுத்திரம், கடலின் கீழ் உள்ள மண் மற்றும் வெள்ளம் முதலியவற்றை அவசரம் அவசரமாக கொண்டு சேர்த்தது என்று நம் ஆச்சார்யர்கள் அருமையாக கூறுவார்கள். முந்நீர் என்பது, ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று நீர் (மழை நீர்) கொண்ட கடலை குறிப்பது.
இராவணன், பொய்மானைக் காட்டி, ராம லட்சுமணர்களை அந்த இடத்தை விட்டு நகரச்செய்து, ஒரு கோழையாய், சீதையை அபகரித்து வந்தது போல் இல்லாமல், நேருக்கு நேர் போரில் மோதி வெற்றி கண்ட இராமன் என்பதால் இங்கு செருவிலே என்று ஆழ்வார் கூறியுள்ளார்.
நம் எல்லோரையும் ரட்சிப்பது அவன் விருப்பமுடன் செய்வது தான் என்றாலும், அதை ஒவ்வொருவரும் இருக்கும் இடம் சென்று செய்வது கொஞ்சம் அரியதாக இருப்பதால், எல்லோருக்கும் துன்பம் கொடுத்து வந்த இராவணனை கொன்று விட்டால், அனைத்து உலகத்தில் உள்ள அனைவரையும் காத்து விடலாம் என்பதால், போரில் அரக்கர்களின் தலைவனான இராவணனை கொன்று (அரக்கர் கோனை செற்ற) நம் இராமன், ‘அனைத்து உலகங்களும் உய்ய” வழி செய்தார் என்று ஆழ்வார் கூறுகிறார். இதே போல், அரிதான காரியங்களை அவன் எளிமையாக கையாண்ட மேலும் இரண்டு இடங்களை, நம் பூர்வாச்சார்யார்கள் கூறுவார்கள். அவை
இராவணனை கொன்று அவன் அராஜகமாக கைப்பற்றிய சொர்க்கம், பாதாளம், பூமி போன்ற உலகங்களில் உள்ளவர்கள் மீண்டும் மகிழ்ச்சியாக வாழும்படி செய்ததால், ‘அனைத்து உலகங்களும் உய்ய‘ என்று சொல்வதும் சரியே. கங்கை கடலில் கலப்பதை பார்த்தாலும், இராமன் கடலின் மேல் கட்டிய இந்த சேதுவை (பாலத்தை) பார்த்தாலும் எல்லா காலங்களிலும் வாழ்பவர்கள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபடுகிறார்கள் என்பதாலும் அனைத்து உலகங்களும் உய்ய‘ என்று சொல்லலாம்.
‘சேவகனார்’ என்பது நமக்கு சேவை செய்யும் பரமாத்மாவை பற்றியது. அடியான் ஒருவன், பெருமாளை நோக்கி அஞ்சலி என்ற ஒன்றை செய்துவிட்டால், அந்த பெருமாள் அவனுக்கு சேவகம் செய்யும் பணிவினை இங்கு உரையாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். உதாரணமாக, மஹாபாரதத்தில், ‘இன்னார் தூதன்’ என்று நின்றவன் அன்றோ அவன்.
சேவகம் என்பதற்கு வீரம் என்ற ஒரு பொருளும் உண்டு. ‘இன்று போய் நாளை வா’ என்று வீரத்தின் எல்லையை காண்பித்த ராமன் என்றும், தன்னுடைய அகந்தையினால், தன் கண் முன்னே தனக்கு துணையாய் இருந்தவர்களை இழக்க செய்தும், பிள்ளைகளை இழக்க செய்தும், தன்னுடைய தலை அறுந்து வீழ்வதை தானே பார்ப்பது போன்று, உலகத்தில் யாருக்கும் நேராத அவமானம் அளித்தும், பல சித்ரவதைகளை செய்து இராவணன் கதையை முடித்த இராமனின் வீரம் என்பதையும் ‘சேவகம்‘ என்றதன் மூலம் உணரலாம். நாச்சியார் திருமொழியில், ஆண்டாள் சொன்ன “தாய்தலை அற்று அற்று வீழ தொடுத்த தலைவன்‘ (5.3) என்று இராவணனின் முக்கிய தலை மீண்டும் மீண்டும் அறுந்து வீழ்ந்ததை செய்த இராமன் என்று கூறுவதை இங்கு நினைவில் கொள்ளலாம். சீதா பிராட்டியுடன் சேர்வதற்கு தடையாக இருந்த இராவணனை அழித்ததால், அதே போன்று, நம்முடைய விரோதிகளை அழிப்பதற்கு உதவுவான் என்பதால், சேவகன் என்பது சரியே. பிராட்டிதான், சரணாகதி காலத்தில், நமக்கு பெருமாளிடம் சிபாரிசு செய்வதால், அந்த பிராட்டியின் விரோதியை ஒழித்தால், அதுவே நமக்கு உதவியது போல் ஆனதாலும், சேவகன் என்பது பொருத்தமே.
நஞ்ஜீயர் என்ற ஆச்சாரியார் இந்த பாடலை அவரது குருவான பட்டரிடம் கேட்டு தெரிந்த அன்று அதன் விளக்கத்தை ஒரு சாதாரணமாக பெண்ணின் இடம் இருந்து கேட்டதை எண்ணி, வியப்பு அடைந்து உள்ளார். அந்த பெண்ணின் கணவன், அவளை மிரட்ட, அதற்கு அவள், ‘உன்னால் என்ன செய்ய முடியம், உன் போன்றவர்களிடம் இருந்து காப்பதற்கே, அரசன் ஆயுதத்துடன் உள்ளான்’ என்று தைரியமாக கூறுவதே இந்த பாடலின் விளக்கமாக நஞ்ஜீயர் வியந்தார்.
பட்டரிடம் வந்து சேர்ந்த சோழ சிகாமணி பல்லவராயர் என்பவருக்கு பட்டர் ‘கடற்கரையை நினைத்து இரும்’ என்றாராம். அதாவது பல்லாயிர கணக்கான வானர சேனைகளை இராமனும் இலட்சுமணனும் கடற்கரையில் இரவில் பாதுகாத்து வந்ததையே இங்கு பட்டர் குறிப்பிட்டு நமக்கு இராமனே தஞ்சம் என்று சொல்வது இன்னொரு ஐதீகம்.
‘மருவிய பெரிய கோவில்‘ இராவணனை கொன்ற பிறகும், இராமாவதார காலம் முடிந்த பின்பு உள்ளவர்களுக்கும் அருள் பாலிப்பதற்காகவே இங்கே திருவரங்கத்தில் பள்ளி கொண்டு இருக்கும் திருவரங்கனை குறிக்கும். இதே ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி என்ற பிரபந்தத்தில், ‘மாமுனி வேள்வியை காத்து அவபிரதம் ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே ‘ என்று இதே கருத்தை தெரிவித்தது இங்கு குறிப்பிடவேண்டியது. மருவிய என்பதற்கு, பெருமாள் திரு உள்ளம் மகிழ்ந்து என்றும் வாழும் இடம் என்று பொருள் கொள்ள வேண்டியது.
பெரிய கோவில் என்றது பரப்பளவை சொல்லவில்லை என்றும், முக்கியத்துவத்திற்காக சொல்லப்பட்டது என்றும் உரையாசிரியர் கூறுகிறார். இந்த கோவிலில் தன்னை பற்றும் அடியார்களை காப்பாற்றுவதால், இது பெரிய கோவில் ஆனது.
இராமாவதாரத்தில் வந்த எதிரிகள் இங்கும் வருவார்களோ என்று பயந்து, திருமங்கை ஆழ்வார் போன்றவர்கள் கட்டிய பெரிய மதிள்களை உடைய கோவில் என்பதை இங்கே மதிள் திருவரங்கம் என்று பாடுகிறார்.
ஸ்ரீரங்கத்தில் உள்ள மூலவர் (பெரிய பெருமாள்), கண்ணனின் பிரதிநிதி என்றும், உத்சவர் (நம்பெருமாள்), இராமனின் பிரதிநிதி என்று நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள். இப்படி கண்ணனும், இராமனுமாக அவதரித்தவர் அன்றோ இந்த ஸ்ரீரங்கத்தில் இருந்து நமக்கு அருள் புரிகிறார். அன்னையின் கர்ப்ப வாசத்தில் இருக்கும் போது,பிறக்கப்போகின்ற குழந்தைக்கு அதிக சத்வகுணம் வளர வேண்டும் என்று பெருமாள் தன்னுடைய குளிர்ச்சி மிகுந்த பார்வையை அந்த சமயத்தில் நோக்குவார் என்ற ஒரு கருத்து உள்ளது. அதையே ஆழ்வார், அரங்கநாதனின் அருளை பெறாமல் காலத்தை கடத்துபவர்களை நினைத்து, இங்கு கருவிலே திரு இலாதீர் என்று சொல்லி, அவர்களை எண்ணி வருத்தப்படுகிறார்.
பொய்கை ஆழ்வார் அருளி செய்த முதல் திருவந்தாதி என்ற பிரபந்தத்தில் ஆறாவது பாசுரத்தில், “அன்று கருவரங்கத் துட்கிடந்து கைதொழுதேன்” என்று கூறியதையும், பூதத்தாழ்வார் அருளி செய்த இரண்டாம் திருவந்தாதியில் (87) பாசுரத்தில், “அன்று, கருக்கோட்டியுள் கிடந்து கைதொழுதேன்” என்று கூறியதையும் இங்கு நினைவில் கொள்ளலாம்.
நித்யசூரிகளுக்கு கிடைக்கும் அனுபவத்தை நமக்கும் கொடுத்தற்காக இங்கே வந்து காத்து இருக்கும் பெருமாளை நினைக்காமல் இருக்கும் நம்மை பார்த்தும், பெருமாளின் குண நலன்களை விளக்கும் ஆயிரம் ஆயிரம் நாமங்களை சொல்ல தேவை இல்லாமல், அவன் இருக்கும் இடமான திருவரங்கம் என்ற ஒரு சொல்லே போறும் என்று சொல்லியும் அதைக் கேட்காதவர்களை பார்த்தும் ஒரு அபாரமான வருத்தத்தை ஆழ்வார் இந்த பாடலில் காட்டுகிறார்.
நமனும் முற்கலனும் பேச நரகில்நின்றார்கள் கேட்க, நரகமே சுவர்க்க மாகும் நாமங்களுடைய நம்பி, அவனது ஊர் அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்தளிய மாந்தர், கவலையுள் படுகின்றார் என்று அதனுக்கே கவல்கின்றேனே. திருமாலை 12
திருநாமங்களை சொல்ல சொன்ன ஆழ்வாரிடம், அது தங்களால் முடியவில்லை என்று முறையிட்டவர்களுக்கு, திருநாமங்களை காதினால் கேட்டாலும் பலன் கிடைக்கும் என்று விளக்கிய பாசுரம். முதலில் பாசுரத்தில் அர்த்தத்தை பார்க்கலாம். யமனும் முத்கலன் என்பவரும், நரகத்தில் பேசிக்கொண்டு இருக்க, அந்த வார்த்தைகளை, நரகத்தில் பாவத்தின் பலன்களை அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள் கேட்க, அந்த நரகம், சொர்க்கம் ஆனது என்றால், அத்தகைய பெருமைகளும் மேன்மைகளையும் கொண்ட திருநாமங்களை உடைய பெருமாளின் திவ்யதேசம் திருவரங்கம் ஆகும் என்று சொல்லாமல் காலத்தை கழிக்கிறார்கள், அதை எண்ணி தான் வருந்துவதாக ஆழ்வார் சொல்லும் பாடல்.
ஆழ்வார் வருத்தப்படுவதற்கான காரணங்களை முதலில் பார்ப்போம். திருநாமங்கள் பெருமைகளை தான் அறியாவிட்டாலோ, மானிடப்பிறவி எடுப்பதற்கு எளிது என்றாலோ, மானிடர் உஜ்ஜீவனம் ஆவதற்கு செய்ய வேண்டிய காரியம் கடினம் என்றாலோ தான் கவலைப்பட மாட்டேன் என்றும், கிடைப்பதற்கு அரியதான மானிடப்பிறவி எடுத்தும், திருநாமங்கள் மேன்மைகளோ சொல்லி முடிவதில்லை என்பதாலும், செய்ய வேண்டிய காரியமா, மிக எளிது என்பதாலும், அந்த திருவரங்கம் என்ற நாமத்தை சொல்லாமல், இந்த மண்ணுலக இன்பங்களுக்காகவே, காலத்தை வீணாக கழித்தால் தான் வருந்தாமல் எப்படி இருப்பது என்று ஆழ்வார் கூறுகிறார்.
விஷ்ணு தர்மம் என்ற நூலில், முத்கலன் பற்றி சொல்லப்பட்டுள்ளது. அவன் ஒரு மிகப்பெரிய பாவி என்றும் அவன் ஒருநாள் பசு தானம் செய்யும் போது கிருஷ்ணார்ப்பணம் என்று சொன்னான். அவன் இறந்த பிறகு எம கிங்கரர்கள் அவனை நரகத்திற்கு எடுத்து செல்ல அங்கே, மாறாக யமன் அவனை மரியாதையுடன் வரவேற்றான். அது ஏன் என்று முற்கலன் கேட்க, அதற்கு எமன், அவன் ஒருநாள் கிருஷ்ணா என்ற நாமம் உரைத்ததாக பேசிக் கொண்டு இருந்தான். அதை, நரகத்தில் தண்டனைகளை அனுபவித்து கொண்டு இருந்தவர்கள் கேட்ட போது, அவர்கள் இருந்த துக்கமயமாக இருந்த நரகம், ஆனந்த மயமான சொர்க்கமாக மாறியது. இங்கு பட்டியல் இடப்படும் திருநாமத்தின் பெருமைகள் யாவை என்றால்,
இங்கு உரையாசிரியர் ஒரு கேள்வி கேட்டு ஒரு தத்துவத்தை நமக்கு சொல்கிறார். அதாவது, நரகத்தில், பாவங்களுக்கு தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கும் திருநாமங்கள் காதில் விழுந்ததனால் பலன் கிடைத்தது போலே, பாவம் செய்து கொண்டு இருக்கும் போதே ஏன் இந்த திருநாமங்கள் காதில் விழவில்லை என்றும், அப்போதே விழுந்திருந்தால், இவர்கள் நரகத்திற்கே வந்திருக்க மாட்டார்களே என்றும் கேள்வி எழுப்பினார். ஆனால் பாவம் செய்யும் போது, இருக்கும் கர்வத்தினால், இந்த நாமங்கள் காதில் விழுந்து இருக்காது. துன்ப காலத்தில் தான், யாரவது உதவ மாட்டார்களா என்று செவியினை திறந்து காத்து இருப்பார்கள் என்று உண்மையை நமக்கு உரையாசிரியர் போதிக்கிறார்.
நரகமே சுவர்க்கம் ஆகும் என்றதற்கு இராவணன் ஆட்சிக்கு உட்பட்ட இலங்கை, வீபீஷணன் ஆட்சி மாறிய உடன் ‘தாமஸபுரி’, ‘சாத்விகபுரி’ ஆனதுபோல், துக்ககரமான நரகம், இனிமையான ஸ்வர்கம் ஆனது என்றார்.
அவனது ஊர் அரங்கம் என்று எளிதில் சொல்லக்கூடிய திருநாமம் இருக்கும் போது, அதை சொல்ல விடாமல் தடுப்பது ஒருவர் செய்யும் பாவத்தின் கனமே என்று உரையாசிரியர் தெளிவு படுத்துகிறார். திருநாமம் சொல்பவர்கள் அருகில் இருக்கக்கூடாது என்று சொன்னவர்களும், அவர்களை நாட்டை விட்டு துரத்தும் கிருமிகண்ட சோழன் போன்றவர்களும், திருநாமம் சொன்னதே காரணமாக பிரகலாதனுக்கு துன்பம் கொடுத்த ஹிரண்யன் போன்றவர்களும் உலகில் இருக்கிறார்கள் என்பதே உண்மை.
பெரியாழ்வார் தன்னுடைய பெரியாழ்வார் திருமொழி என்ற பிரபந்தத்தின் நான்காம் பத்தில் ஆறாம் பதிகத்தில், குழந்தைக்கு பெயர் வைக்கும் போது நாயகன், நாரணன், கோவிந்தா, கண்ணன், கேசவன் என்று பெருமாள் திருநாமம் இட்டால், தாய் நரகம் செல்ல மாட்டார் என்று பாடுகிறார். திருநாமம் சொல்ல நேரம் இல்லாவதர்கள் இப்படி செய்தால் குழந்தையை அழைக்கும் போது, திருநாமம் சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஆழ்வாரின் வாக்கு. இந்த பாடலின் விளக்கம் கொடுக்கும் போது, மணவாளமாமுனிகள் தந்தையும் இதற்குள் அடக்கம் என்று கூறி உள்ளார்.
‘அயர்த்து வீழ்ந்து ‘ நமக்கு இயற்கையிலே உறவினனான எம்பெருமானின் திருநாமங்களை மறந்து, உலக விஷயங்களிலே மூழ்கி தலைகுப்புற வீழ்ந்தவர்கள் என்கிறார். திருமங்கை ஆழ்வார், திருவிண்ணகர் பெருமாளை பற்றி பாடும் போது, “மறந்தேன் உன்னை முன்னம் மறந்த மதி இல் மனத்தால் இறந்தேன் ” (பெரிய திருமொழி 6.2.2), என்று கூறுவது இங்கு மேற்கோள் காட்டப்படுகிறது. நினைவின் ஊற்றுவாயில் இருக்கும் மறக்கவே முடியாத உன்னை மறந்தேன் என்று ஆழ்வார் வருந்தி பாடுகிறார்.
‘அளிய மாந்தர் ‘ திருநாமம் சொல்வதற்கு உரிய நாக்கும், நன்றாக உடல் நலனும் மனநலமும் உள்ள மனிதர்கள், திருநாமம் சொல்ல முயற்சி எடுக்காதவர்கள் என்று ஆழ்வார் கவலை படுகின்றார். பூதத்தாழ்வார் அருளிய இரண்டாம் திருவந்தாதி (21) பாசுரம், “தாமுளரே, தம் உள்ளம் உள் உளதே, தாமரையின் பூ உளதே ஏத்தும் பொழுதுண்டே, வாமன் திருமருவு தாள் மரூவு சென்னியரே, செவ்வே அருநரகம் சேர்வது அரிது “ இதே கருத்தை சொல்கிறது. எம்பெருமானை பணிவதற்கு உரிய உடம்பும், சிந்திப்பதற்கு ஏற்ற உள்ளமும், தாமரை பூவும், அவனை வணங்குவதற்கு உரிய நேரமும், வாமன மூர்த்தியின் திருஅடிகளை தாங்கக்கூடிய தலைகளை படைத்தவர்கள் என்று எல்லாம் இருந்தும், நரகத்திற்கு செல்கின்றார்கள் என்று இந்த ஆழ்வார் ஆச்சர்யப்படுகின்றார். இதே கருத்தை, பொய்கையாழ்வார் தன்னுடைய முதல் திருவந்தாதி (95) பாசுரத்தில் ‘ நா வாயில் உண்டே, நமோ நாரணா என்று, ஓவாது உரைக்கும் உரையுண்டே, மூவாத மாக் கதிக்கண் செல்லும் வகையுண்டே, என்னொருவர் தீக் கதிக்கட் செல்லும் திறம்” கூறுகிறார். நமோ நாராயண என்று சொல்வதற்கான நாக்கு வாயில் உள்ளது, அதை உச்சரித்து மோக்ஷம் செல்லாமல், தீய வழிக்கு செல்கிறார்களே என்பது இதன் பொருள்.
அதனுக்கே கவல்கின்றேனே என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் சொல்வது அவர் தனக்காக கவலைப் படவில்லை என்றும், இந்த சம்சாரிகள் வாழ்க்கையை நினைத்தே கவலைப்படுகின்றார் என்று சொல்லி இந்த பாடலை முடித்துக்கொள்வோம்.
எறியும் நீர் வெறிகொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம், வெறிகொள் பூந் துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த, அறிவிலா மனிதர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பார் ஆகில் , பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே (திருமாலை 13)
பரமாத்மா, ஜீவாத்மாக்கள் தம்மை வந்து அடைய, வேதங்களையும் கை கால், மற்றும் உடல் கொடுத்து வழி காட்டினார். அதற்கு ஏற்ப கடவுளை அடைவதற்கு தத்துவ ஞானம் தேவை உள்ளது. அது இல்லாதவர்களும் திருவரங்கம் என்று சொல்வார்கள் என்றால் திவ்யதேசத்தின் பெயரை சொன்னதன் காரணமாக மோக்ஷம் அடைவார்கள், பின்பு பாவத்தின் காரணமாக இங்கு வசிக்கும் பிராணி ஒன்றும் இல்லாததால் இந்த பூவுலகம் முழுவதும் புல் முளைத்து பாழ் ஆகி விடும் என்று ஆழ்வார் சொல்கிறார்.
நலம் அந்தம் இல்லாதோர் நாடாகிய பரமபதத்தை அடைந்து, அங்கு எம்பெருமானுடைய திருத்துழாய் நறுமணத்தை அநுபவித்துக்கொண்டு அப்பெருமானை போற்றி இனிதாக இருக்க வேண்டிய ஜீவாத்மாக்கள், ”வெள்ளத்து இடைப்பட்ட நரியினம் போலே” (பெரிய திருமொழி, 11.8.5), கலங்கி மீன் போன்ற மாமிச துர்நாற்றம் வீசுகிற கடல்வெள்ளத்துக்கு உட்பட்ட இப்பூமியிலே கிடந்து வருந்துகின்றார்களே! என்பதை “எறியுநீர் வெறி கொள் வேலை மாநிலத்துயிர்கள்” என்கிறார்.
வெறிகொள் பூந்துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த என்பதற்கு, நறுமணத்தை உடைய திருத்துழாய் மாலையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் அழகுக்கும் பரத்துவத்திற்கும் தோற்று நித்யஸூரிகள் பெருமாளை துதிப்பதைப்போல், சம்சாரிகளான நம் போன்றவர்களும் அவனை போற்றுவதற்கே உருவானவர்கள். இங்கு உரையாசிரியர் கொடுக்கும் உதாரணம் மிக அருமை. இராமன் காட்டுக்கு போவதற்கு முன், லட்சுமணனின் தாய் சுமித்ரா தேவி, லட்சுமணனிடம், அவன் காட்டுக்கு போவதற்கு என்றே படைக்கப்பட்டவன் என்றும், அவன் ராமனின் நடை அழகில் கவனம் செலுத்த கூடாது என்றும் அப்படி செய்தால், அந்த அழகில் மயங்கி அவனுக்கு வரும் எதிரிகளை கண்காணிக்க தவறிவிடுவான் என்றும் எச்சரிக்கிறார். எப்படி லட்சுமணன் வனவாசத்திற்காகவே படைக்கப்பட்டானோ அது போல் ஜீவாத்மாக்களாகிய நாமும் பெருமாளை துதிப்பதற்கு என்றே படைக்க பட்டவர்கள் ஆவோம்.
அழைப்பாராகில் என்பதை, பாவிகளான இவர்கள் கடும் சொல் சொல்வதை எளிது என்று கொண்டுள்ள இவர்கள், அரங்கம் என்று சொல்வதை அரிது என்று காண்கிறார்கள்.
எல்லா துன்பங்களும் தன்னிடத்தில் வந்து மாட்டிக் கொள்கிறபடியால் ஐம்புலன்களை கொண்ட இந்த உடலை பொறி என்று ஆழ்வார் கூறுகிறார். ஐம்புலன்களும் ஒவ்வொரு வகையான ஈர்ப்புகள் இருப்பதை, சப்த, ஸ்பர்ச, ரஸ, ரூப, கந்த என்ற உணர்ச்சிகளுக்கு உதாரணமாக, சில உயிரினங்களை கொண்டு விளக்குகிறார்.
இவை சிக்குவதற்கு ஒரே ஒரு பொறி தான் வைக்கப்பட்டுஉள்ளது, ஆனால் நம் போன்ற மனிதர்களுக்கு ஐந்துபொறிகள் வைக்கப்பட்டு ஏதாவது ஒன்றில் சிக்க வைத்துவிடும் இந்த சம்சார வாழ்க்கை என்ற நரகம்.
இராமன் காட்டிற்கு செல்வதற்கு முன்பு நரகம், சொர்க்கம் பற்றி சீதா தேவி சொன்ன வார்த்தைகள், இங்கு பொருத்தம் ஆக இருக்கும். சொர்க்கம் என்பது ஆனந்தத்தை அளிக்கும் இடம் என்றும், நரகம் என்பது தண்டனை அனுபவிக்கும் இடம் என்றும் பொதுவாக சொல்வது சரியாக இருக்காது என்றும், அவை யாருடைய பார்வையின் என்பது தான் உண்மையான சொர்க்கமும் நரகமும் என்று சொன்னதை போல், சுவாமி நம்மாழ்வார் போன்று அறிவுடையார்க்கு இந்த உலக வாழ்க்கை, நரகம் போன்று உள்ளது. சுவாமி நம்மாழ்வார், திருவாய்மொழி (8.1.9) பாசுரத்தில், ‘நன்றும் அஞ்சுவன் நரகம் நானடைதல்” என்று சொன்னது நரகம் சொர்க்கம் இரண்டுமே அவனால் படைக்கப்பட்டதால், அங்கு இருந்தாலும், இங்கு இருந்தாலும் ஒன்றே என்று சொல்லிவிட்டு, ஆனால் அந்த ஞானம் நிலையாக இருக்க இந்த உலக வாழ்க்கை உதவுவது இல்லை ; ஆகையால் இந்த உலக வாழ்க்கையை நரகம் என்றும் தான் அதற்கு அஞ்சுவதாகவும் சொல்கிறார். திருவாய்மொழி இருபத்தினான்காயிரம் விளக்கத்தில், ‘அகப்பட்ட பகவத் ஞானத்தையும் இந்த சம்சாரத்தில் இருந்தால் இழந்துவிடுவேன்’ என்று ஆழ்வார் பயப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. சுவாமி நம்மாழ்வார் திருவாய்மொழியில், (10.6.1) ‘இருள் தருமா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்” என்று கூறுகிறார். அதாவது, இங்கு இருக்க இருக்க, அஞ்ஞானத்தை மேலும் மேலும் வளர்கின்ற இந்த நிலத்தில் இருப்பதை யான் இனி வேண்டேன் என்று உறுதியாக கூறுகிறார்.
பொறியில் வாழ் நரகம்‘ என்று இந்த வாழ்க்கையை நரகம் என்று தொண்டரடிபொடி ஆழ்வார் கூறுவதும் அதே போன்றதே.
இனி அடுத்த பாசுரம் செல்வோம்.
வண்டு இனம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை, கொண்டல் மீது அணவும் சோலை குயிலினம் கூவும் சோலை, அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்க மென்னா, மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமி னீரே. (திருமாலை 14)
இந்த பாடல், ஆழ்வார் உபதேசம் என்ற நான்கு முதல் பதினான்கு வரையிலான ஒரு பிரிவில் வரும் இறுதி பாசுரம். நம்போன்ற சம்சாரிகளை நேருக்கு நேர் பார்த்து சொல்லியும், அவர்கள் கேட்காது போனதால், தமக்கு தாமே சொல்வது போல் மற்றவர்களுக்கு நன்மை அளிக்க கூடிய உபதேசங்களை செய்தும், கழுதைக்கு உபதேசம் காதில் ஓதினாலும், அழுகைக்குரல் அன்றி அங்கு ஒன்றும் இல்லை என்பதுபோல், நம் போன்றவர்களுக்கு பகவத் விஷயத்தில் ஈடுபாடு ஏற்படாததால் , தன் வாயில் ஏற்பட்ட கசப்பினை போக்குவதற்காக திருவரங்கத்தின் இனிமையை சொல்லிவரும் போது, இந்த சம்சாரிகளும் இதை செய்ய கடமைப்பட்டவர்கள் தாமே என்று எண்ணி அவர்களை இகழ்ந்து பாடும் பாசுரம். இந்த பாசுரம், ஆழ்வாரின் அனுபவத்தை சொன்னாலும், அது மற்றவர்களுக்கும் ஒரு உபதேசமாக இருப்பதால், இதுவும் இந்த உள்பகுதியில் சேர்க்கப்பட்டது.
வண்டினம் முரலும் சோலை, என்பதற்கு, நதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக நீராடுவது போல், இங்குள்ள சோலைகளில், தேன் வெள்ளம் பாய்வதால், வண்டுகள் கூட்டம் கூட்டமாக உள்ளன என்று உரையாசிரியர் ஆரம்பிக்கிறார். தேன் வெள்ளம் பாய்வதை, திருமங்கையாழ்வாரும், திருகுறுந்தாண்டகம் என்ற பிரபந்தத்தில், எட்டாவது பாசுரத்தில், ‘வரையிடைப் பிரசம் ஈன்ற, தேனிடைக் கரும்பின் சாற்றைத் திருவினை ‘ என்று குறிப்பிடுகிறார். மலைகளில் உள்ள தேன் கூடுகளில் இருந்து தேன் எடுக்காததால் வெள்ளம் போல் வரும் தேனில் வளர்ந்த கரும்புகளின் சாற்றைப்போல் இருக்கும் தேவுக்கும் தேவாகிய எம்பெருமானை பற்றி திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்.
முரலும் என்பதற்கு, மதுபானம் அதிகம் அருந்தி, இருந்த இடத்தில இருக்க முடியாமல், வழக்கம் போல் சப்தம் இடாமல் ரீங்காரம் செய்கின்றன. அது வைகுந்ததில், நித்ய முக்தர்கள் பெருமாள் அனுபவத்தில் திளைத்து சாம கானம் வாசிப்பதை போல் உள்ளதாக சொல்லப்படுகிறது.
வண்டுகள் கூட்டமாக இருப்பதனாலும் அவற்றின் சப்தத்தினாலும், சோலைகளின் பசுமையினாலும், அவற்றை மழைக்காலத்தின் மேகக்கூட்டங்களின் வருகை என்று எண்ணி, மயில்கள் ஆடி களித்ததை மயிலினம் ஆலும் சோலை என்று சொல்கிறார். வண்டுகளின் கூட்டத்தையும், சோலைகளின் பசுமையையும் கண்டு, மேகங்கள் திருவரங்கத்தை கடலாக நினைத்து, ஆழியுள் புக்கு முகந்து ஆர்த்தெறி செய்வதற்காக சோலைகளின் மேல் படர்ந்து இருந்தது என்பதை ‘கொண்டல் மீது அணவும் சோலை ‘ என்று குறிப்பிடுகிறார். மேலும் இந்த சோலைகள் மேகமண்டலம் வரை உயர்ந்து உள்ளன என்றும் சொல்லலாம்.
நம்மாழ்வார், திருவாய்மொழியில் (2.10.3), ‘மயல் மிகு பொழில் சூழ் மாலிரும்சோலை ‘ என்று திருமாலிருஞ்சோலை மலையில் உள்ள சோலைகளின் இருட்சியாலே மேகங்களுக்கு புறப்பட இடமும், புகுந்த இடமும் தெரியாது என்கிறார். இப்படி மயக்கும் சோலைகளை போலவே இங்குள்ள (திருவரங்கத்திலுள்ள) சோலைகளும் மேகங்களை மயங்க வைத்து, இதை கடலாக நினைக்க வைத்தன.
வண்டுகள், மயில்கள், மேகங்கள் போல் அங்கும் இங்கும் நகராமல், குயில்கள் இருந்த இடத்தில இருந்தே ஒன்றை ஒன்று அழைக்கின்றன. இது “குயிலனம் கூவும் சோலை‘ என்பதில் தெரிகிறது.
‘அண்டர் கோன் அமரும் சோலை‘ என்பதற்கு வண்டுகள், மயில்கள், மேகங்கள், குயில்கள் இந்த சோலையின் பரப்பையும் இனிமையும் கண்டு மகிழ்ந்து இருப்பது போல், நித்யஸூரிகளால் போற்றப்படும் பரமபதத்தையும் மறந்து இங்கே நித்யவாஸனாக இருக்கிறான் என்று ஆழ்வார் கூறுகிறார். இங்கு ஐந்து நிலைகளில் ஒன்றான பர நிலையை மட்டும் சொன்னது, வியூஹ, விபவ நிலைகளை சொன்னது போல் என்று உரையாசிரியர் கூறுகிறார். அமரும் என்ற பதம் நித்யவாஸம் செய்வது சொல்வது. அண்டர் கோன் என்றால் இந்த பிரும்மாண்ட உலகில் வாழும் ஜீவராசிகளுக்கு தலைவனாக இருந்து அவர்கள் வேண்டியதை அருள்வதாகவும் கொள்ளலாம்.
சோலை அணித்திருஅரங்கம் என்பதால், சோலைகள் திருவரங்கத்திற்கு ஆபரணங்களாக உள்ளன. அப்படிப்பட்ட திருஅரங்கத்தில், அவன் வந்து இவர்களுக்காக பொருந்தி இருக்கும் போது, திருவரங்கம் என்று சொல்லாத மூடர்கள் என்பதை, திருஅரங்கம் என்னா மிண்டர் என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். மிண்டர் என்பதை ‘இப்போதைய நிலையையும் வரப்போகும் நிலையையும் அறியாதவர்கள்’ என்றும் மேலும் விளக்குகிறார்.
திருவரங்கம் என்று போற்றி பாடவேண்டிய வாயை அதற்கு பயன் படுத்தாமல், சோறு உண்பதற்கு உபயோகிப்பதால், ஆழ்வார், நன்றி இல்லாத அவர்கள் உண்ணும் அந்த சோற்றினை எடுத்து நன்றி உள்ள நாய்களுக்கு இடுவார் இல்லையோ என்று கூறி, உபதேசங்களில் இருந்து விலகுகிறார். இங்கு பெரியாழ்வார் திருமொழியில் இருந்து (4.4.5) “நேமிசேர் தடங்கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடைப், பூமிபாரங்கள் உண்ணுஞ் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே” என்ற பெரியாழ்வார் பாசுரம் மேற்கோள் காட்டப்படுகிறது. திருக்கோட்டியூர் பெருமாளை நினைக்காத வலிய நெஞ்சம் கொண்ட பாவிகளின் (இங்கு ஆழ்வார், மனிதர் என்று கூற மனமில்லாமல், ‘பூமி பாரங்களே’ என்று சொல்வது கவனிக்க வேண்டியது) சோற்றை பிடுங்கி அவர்கள் வாயில் / வயிற்றில் புல்லை திணிக்குமாறு கூறுகிறார்.
நாய்க்கு சோறு கொடுக்கவேண்டும் என்று ஆசை பட்டால் வேறு ஏதாவது கொடுக்கவேண்டியது தானே, மற்றவர்களிடம் இருந்து பிடுங்கி கொடுக்க இவர்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது என்று கேட்டு கொண்டு, ‘அசத்துக்களின்/தீயவர்களின் பொருளை பிடுங்கி சத்துகளுக்கு/நல்லவர்களுக்கு அளியுங்கள்’ என்ற சாஸ்திர வாக்கியத்தை மேற்கோள் காட்டுகிறார். அதோடு நில்லாமல் அது மாதிரி வாழ்ந்து காட்டியவர் திருமங்கை ஆழ்வார் என்று முடிக்கிறார்.
முதல் மூன்று பாசுரங்களால் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார், பின்பு பதினோரு பாசுரங்களால் நம்போன்ற சம்சாரிகளுக்கு திருநாம வைபவம் பற்றி உபதேசம் செய்தார். அதை நாம் சரியாக கேட்டு கொள்ளாததால், ஆழ்வார் அடுத்த பத்து பாசுரங்களில், பெருமாள் தனக்கு செய்த உபகாரங்களை பேசுகிறார். அவற்றை அடுத்த பதிவினில் பார்க்க ஆரம்பிக்கலாம்.