உபதேசங்கள்- மொய்த்த வல்வினை,பெண்டிரால் சுகங்கள் மறம் சுவர் மதிள்

Please click here for English version of this weblog, thanks 

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, நாம் எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இதன் முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார், பெருமாள், தனக்கு கொடுத்த அனுபவத்தை ரசிக்கிறார். அவைகளை சென்ற இரண்டு பதிவுகளில் பார்த்தோம். இனி அடுத்த பகுதியான நான்கு முதல் பதினான்கு வரையிலான பதினோரு பாசுரங்களைக் கொண்ட, தன்னுடைய அனுபவத்தை, நமக்கு உபதேசம் செய்கிறார்.

ஆழ்வார் தன்னுடைய அனுபவத்தை தொடராமல், நம் போன்றவர்களுக்கு உபதேசம் செய்வது ஏனென்றால்,

 • ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் உபதேசம் செய்வது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளில் ஒன்று, அதனால் அது இயற்கையில் அவர்களுக்கு உள்ள ஒரு பண்பு.
 • ஆழ்வார்களுக்கெல்லாம் தலைவராக கொண்டாடப்படும் நம்மாழ்வாரும் தன்னுடைய முதல் பத்திலேயே ‘வீடு மின் முற்றவும்” (1.2) என்ற இரண்டாம் பகுதியில் நமக்கு உபதேசம் செய்ய ஆரம்பிக்கிறார்.
 • பெரியாழ்வாரும், முதலில் தான் திருப்பல்லாண்டு பாடி, அதில் திருப்தி கொள்ளாமல், தன்னுடன் ஐஸ்வர்ய, கைவல்யார்த்திகள் மற்றும் பகவத்லாபார்த்திகள் என்று எல்லோரையும் தன்னுடன் சேர்த்துக்கொள்ளுகிறார். அவர்களை ஒன்றன் பின் ஒன்றாக அழைத்தது மூன்று பாசுரங்கள், அவர்கள் வந்து சேர்த்தது மூன்று பாசுரங்கள், அவர்களுடன் சேர்ந்து பல்லாண்டு பாடியது மூன்று பாசுரங்கள் என்று ஒன்பது பாடல்களாக, மொத்தம் பன்னிரண்டு பாசுரங்களுடன் தன்னுடைய பல்லாண்டு பதிகத்தை முடித்தார்.
 • நம் போன்றவர்கள் பகவான் கிருபைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தும், அதை இழக்கிறார்களே என்ற வருத்த பட்டு, நம் மீது வெறுப்புற்றும், நம்மை நிந்தித்துக் கொண்டும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் உபதேசம் செய்ய தொடங்குகிறார்.
  • நல்ல உணவை ஒருவன் தனியாக உண்ணக்கூடாது என்றும்,
  • தனி ஒருவனாக வழிப்பாதையில் செல்லக்கூடாது என்றும்,
  • பலர் தூங்கும் போது, ஒருவன் மட்டும் தனியாக விழித்துஇருக்கக்கூடாது என்றும் சொல்வதுண்டு.
  • அவைகளைப்போல், தொண்டரடிப்பொடி ஆழ்வார், ‘இன்கனி தனி அருந்தேல்” என்று பெருமாளின் இந்த இனிய அனுபவத்தை, தான் மட்டும் தனியாக அனுபவிக்க விரும்பாதவராய் நம்மையும் அழைக்கிறார்.
 • இதேபோல் மற்ற ஆழ்வார்கள் சொல்வதை காண்போம்
  • தொண்டீர்! வம்மின் நம்சுடரொளி ஒரு தனி முதல்வன்…. அணிதிரு மோகூர் …… கோயிலை வலம் இங்கு ஆடுதும் கூத்தே ” (திருவாய்மொழி, 10.1.5) என்று நம்மாழ்வார், எந்த தொண்டரும் இந்த அனுபவத்தை இழக்கக் கூடாது என்றும் திருமோகூர் கோவிலுக்கு சுற்றி வந்து எல்லோரும் ஒன்றாக கூத்து ஆட வேண்டும் என்றும்,
  • தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி, ஆராத மனக்களிப்போடு அழுத கண்ணீர் மழை சோர நினைந்து உருகி ஏத்தி ” (பெருமாள் திருமொழி, 1.9) என்று குலசேகராழ்வார், பெருமாளுடன் உண்டான அனுபவத்தை தனியே அனுபவிக்கக் கூடாது என்றும் சேர்ந்து பாடி, சேர்ந்து அனுபவித்து, சேர்ந்து அழுது உருகிவிட வேண்டும் என்று சொல்வதும்,
  • பெண் படையாரும் உன் மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்” (நாச்சியார் திருமொழி 7.8) என்று ஆண்டாள், எல்லோருக்கும் பொதுவான ஒன்றை, தான் மட்டுமே அனுபவிக்கும் பாஞ்ச ஜன்யம் என்ற சங்கிடம் முறையிடுவதும் இது போன்ற வேறு சில உதாரணங்கள்.

இனி அடுத்த பாசுரத்திற்கு செல்வோம்.

மொய்த்த வல் வினை உள் நின்று

மொய்த்த வல்வினை உள் நின்று, மூன்றெழுத்து உடைய பேரால், கத்திர பந்தும் அன்றே, பராங்கதி கண்டு கொண்டான், இத்தனை அடியனார்க்கு, இரங்கும் நம் அரங்கனாய, பித்தனைப் பெற்றும் அந்தோ, பிறவியுள் பிணங்கு மாறே (திருமாலை 4).

பிராயச்சித்தம் செய்து போக்கிக்கொள்ள முடியாத அளவுக்கு பாபங்கள் செய்த க்ஷத்திரபந்து போன்றவர்களுக்கே மிக உயர்ந்த பதவியான பரமபதம் கொடுக்க வல்லவனான நம் திருஅரங்கன் இருக்கும்போது, அவனுக்கு நாம ஸங்கீர்த்தனம் செய்யாமல், இந்த பிறவிப்பிணியோடு உழல்கிறார்களே என்று ஆழ்வார் வருத்தம் அடையும் பாசுரம்.

மொய்த்த என்பதற்கு உரையாசிரியர் கொடுக்கும் விளக்கங்கள்:

 • அளவுக்கு அதிகமான பாபங்கள்
 • தேன்கூட்டை ஈ மொய்த்துக்கொள்வது போல்
 • நெய்குடத்தை பற்றி ஏறும் எறும்புகள் போல் நிறைந்து நிற்கும் நோய்காள் என்று பெரியாழ்வார் சொல்வது போல் (பெரியாழ்வார் திருமொழி 5.2.1)
 • இராமாயணத்தில், சீதையை கண்ட அனுமனுடன் வந்த குரங்குகள் அனைத்தும் நான் முந்தி, நீ முந்தி, என்று ராமனிடம், செய்தி சொல்ல வந்த ஆவலைபோல், அளவுக்கு அதிகமான வேகத்துடன் நம்மை வந்து அடையும் பாவங்கள்
 • உலகை படைப்பதில் பரமாத்மாவிற்கு உள்ள சர்வ சக்தியைப் போல் இந்த ஜீவாத்மாவிற்கு பாவங்களை செய்வதில் அளவு கடந்த சக்தி உள்ளது
 • பட்டு பூச்சி எப்படி வெளியே வராதபடி தன்னை சுற்றி ஒரு கூடு கட்டிக்கொள்ளுமோ அதேபோல், இந்த ஜீவாத்மாக்கள் தன்னை சுற்றி பாபங்கள் ஆகிய மிக பெரிய கூட்டை கட்டிக் கொள்ளுகின்றன.
 • மேரு மந்திர மலைகளை போல் அளவுக்கு அதிகமான பாவ குவியல்கள், கேசவா என்று சொன்னவுடன் அழிவது
 • அளவு கடந்த பாவங்களை செய்த நாம், ஒரு பாவத்தைப் போக்குவதற்கு, இரு பிறவி அல்ல, பல பிறவிகள் அல்ல, இந்த கால தத்துவம் உள்ள அளவும் ஒரு ஜீவாத்மா போராடவேண்டி உள்ளது. இத்தனை பாவங்களை போக்குவதற்கு உள்ள வழி, திருநாம ஸங்கீர்த்தனமே ஆகும். அவற்றால், நெருப்பிலிட்ட பஞ்சு பொதி போல் எல்லா பாவங்களும் அழியும்.

கொடுமையான பாவங்களுக்கு நடுவே நன்றாக உள்ளே இருந்து, ஆழ்ந்து வெளியே வர முடியாமல் இருக்கும் நிலையை தெரிவிப்பதற்காக, ஆழ்வார், வல்வினையில் நின்று என்று சொல்லாமல், வல்வினை உள் நின்று என்று சொல்கிறார்.

மூன்று எழுத்து கொண்ட பெயர் என்ன என்று கேட்பதற்காகவது ஆழ்வாரை அணுகுவோம் என்ற நம்பிக்கையில், கோவிந்தா, விஷ்ணுவே, கேசவா, மாதவா என்று ஏதாவது ஒரு பெயரைக் கூறாமல், மூன்று எழுத்து உடைய பெயரால் என்று மறைத்து சொல்கிறார். பெரியாழ்வாரும் “மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால்” (பெரியாழ்வார் திருமொழி (4.7.10)) என்று மறைத்து கூறுவது இன்னொரு உதாரணம். நம்மாழ்வார் திருவாய்மொழியில் (10.2.1) “கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன ” என்பதனை பார்த்தால்,

 • திருநாம ஸங்கீர்த்தனம் செய்த அளவில், திருவனந்தபுரம் செல்வதற்கு உள்ள தடை எல்லாம் நீங்கும் என்றும்,
 • கேசவா என்று மூன்று எழுத்துடைய பெயரை சொன்னால், விரோதி என்று பெயர் பெற்ற எல்லாம் நீங்கும் என்றும்
 • ப்ராரப்த கர்மங்கள் (இந்த பிறவிக்கு முந்திய பிறவிகளில் கிடைத்த கர்ம பலன்கள்) , ஸஞ்சித கர்மங்கள் (இந்த பிறவியில் கிடைத்த கர்ம பலன்கள்) என்று பாகுபாடு இன்றி எல்லாம் கெடும் என்றும்,
 • கேசவ நாமத்தை சொன்னால், நரக வேதனை அனுபவிக்க வேண்டாம் என்றும்,

உள்ள கருத்துக்கள், இந்த பாடலுடன் உள்ள தொடர்பினை ரசிக்க வைக்கும்.

நாம் பாவம் செய்த காலத்தின் அளவை வைத்து பார்த்தாலும், செய்த பாவங்களின் தாக்கத்தை வைத்து பார்த்தாலும், இத்தனை பாவங்களை தீர்க்கும் திருநாமம் அவ்வளவு வலிமையானதா என்ற சந்தேகம் வரும் போது, திருநாமத்தின் ஒவ்வொரு எழுத்துமே பாபங்களை போக்கி மோக்ஷம் கொடுக்க வல்லது என்பதை தெரிவிக்கவே, ஆழ்வார் ஒரு சொல் என்று கூறாமல், மூன்று எழுத்து என்று கூறுகிறார்.

யாவரும் சொல்லலாம், எந்த விதிமுறையும் இன்றி சொல்லலாம் என்பதை எடுத்து உரைப்பதற்காக, ஆழ்வார் மூன்று எழுத்து உடைய மந்திரத்தால் என்று சொல்லாமல், மூன்று எழுத்து உடைய ‘பேரால்‘ என்று சொல்கிறார்.

ப்ரஹ்ம பந்து என்பவர் ப்ராஹ்மணர்களில் மிக தாழ்ந்தவர் என்றும், க்ஷத்திரபந்து என்பவர் க்ஷத்திரர்களில் மிக தாழ்ந்தவர் என்றும் சொல்வார்கள். க்ஷத்திரபந்து ஒருவனுக்கும் கோவிந்த என்ற நாமம் சொன்னதால், மோக்ஷம் கிடைத்தது என்று விஷ்ணு தர்மம் என்ற நூலில் சொல்லப்பட்டதை இங்கு ஆழ்வார் கூறுகிறார். க்ஷத்திரபந்து என்று ரிஷிகள் கூட்டத்தில் சொன்னால், அவர்கள் மிகவும் பயந்து வெறுப்பார்கள் என்றும், அதே போல், நாலூரான் என்று நம் வைணவ அடியவர்கள் குழுவில் சொன்னால், கூரத்தாழ்வான் தன்னுடைய ஊனக்கண்கள் இழந்த சரித்திரத்தை நினைத்து பதறுவார்கள் என்று பெரியவாச்சான் பிள்ளை சொல்வதை இங்கே குறிப்பிட வேண்டும்.

திருநாமம் சொல்வதற்கு பாபங்கள் நீங்குவதே பெரிய பலனாக இருக்க, அதையும் தாண்டி, ஐஸ்வர்ய, கைவல்ய பலன்கள் இல்லாமல், நித்யஸூரிகள் எப்போதும் அனுபவிக்கின்ற பரமபத ப்ராப்தியை கொடுப்பதையே, ஆழ்வார் பராங்கதி என்று சொல்கிறார்.

திருநாம வைபவம் என்பது, மணியில் உள்ள அழுக்கை நீக்கி ஒளிவிட செய்வது போலவும், பள்ளம் தோண்டி, தண்ணீரை வெளியே வரச்செய்வது போலவும் ஆகும். ஒளியோ, தண்ணீரோ அங்கு உருவாக்கப்படவில்லை, அவை இருப்பது வெளியே உலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. ‘கண்டுகொண்டான்‘ என்று சொன்னது, எதோ புதிதாக பெற்ற பலனாக கருதாமல், ஏற்கனவே அனுபவித்து வந்ததை, இழந்து, பின் திரும்பி பெற்றதைப் போல் ஜீவாத்மா உணர்கிறது என்று ஆழ்வார் சொல்கிறார்.

இப்படி இந்த ஜீவாத்மாவிற்கு மோக்ஷத்தை அளித்த பின்பும், தான் அவனுக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று கலங்கும் அரங்கன் என்பதை, இரங்கும் நம் அரங்கன் என்று ஆழ்வார் கூறுகிறார். ‘உன் அடியார்க்கு என் செய்வேன் என்று இருத்தி,” (பெரிய திருவந்தாதி, 53) என்று நம்மாழ்வார் சொல்வதை நினைவில் கொள்ளலாம்.

முன்பு நடந்தவைகளை மறந்து, அவ்வப்போது இருக்கும் நிலையை கொண்டு காரியம் புரிதல் பித்தர்களின் சுபாவம். திருஅரங்கனும் நாம் முன்காலங்களில் செய்த பாபங்களை எடுத்துக் கொள்ளாமல், நாம் சொல்லும் நாம ஸம்கீர்த்தனத்தை மட்டும் மனதில் கொண்டு நமக்கு அருள் புரிவதால், திருவரங்கனை பித்தன் என்று ஆழ்வார் கூறுகிறார். இதே போல், பித்தர்கள் தன்னுடைய முன்னாள் நிலையையும் மறந்து விடுவார்கள், மற்றவர்களின் நிலைமையையும் மறந்து விடுவார்கள். திருஅரங்கனும், தன்னுடைய மிக உயர்ந்த நிலையான ஸ்ரீவைகுந்தத்தில் இருந்து வந்ததை மறந்து விட்டு, திருஅரங்கத்தில் மிக எளியவனாக, நம்மை போன்ற தாழ்ந்தவர்கள் செய்த எண்ணிலடங்கா பாபங்களையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், நமக்கு கொடுக்கும் பலனாக வைகுண்ட ப்ராப்தியின் பெருமையும் நினைவில் கொள்ளாமல், அதையே நமக்கு அளிப்பதால், ஆழ்வார் திருஅரங்கனை பித்தன் என்று கூறுகிறார்

சர்வேஸ்வரனுக்கு கௌஸ்துப மணியைப் போல ஆசைப்படத்தக்க இந்த ஆத்மா, இப்படி அழிந்து போவதைக்கண்டு பொறுக்கமுடியாமல், இந்த பாடலில் ஆழ்வார் கதறுகிறார்.

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான், பெரியதோர் இடும்பை பூண்டு, உண்டு இராக் கிடக்கும்போதும், உடலுக்கே கரைந்து நைந்து, தண் துழாய் மாலை மார்பன், தமர்களாய்ப் பாடியாடி, தொண்டு பூண்டு அமுதம் உண்ணாத் தொழும்பர், சோறு உகக்குமாறே. (திருமாலை 5)

எல்லா திருமாலை பாசுரங்கள் போல் இந்த பாசுரமும் எளிமையானது, ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடைக்கியது.

சிறந்த பகவத் அனுபவத்தை விட்டு, தாழ்ந்த உலக விஷயங்களில் ஈடுபட்டு, வாழ்க்கையை வீண் அடிக்கிறார்களே என்று சென்ற பாட்டில் கவலைப்பட்ட ஆழ்வார், இந்த பாசுரத்தின் முக்கிய கருத்தாக சொல்வது, இந்த உடம்பு கொண்டு நாம் பெரும் இன்பங்கள் தாழ்ந்தது, நிரந்தரம் இல்லாதது, அடைவதற்கு கடினமானது என்றும், பெருமாள் அனுபவம் எளியது, இனிமையானது, நிரந்தர பலன் தருவது என்பதே.

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் என்று ஆழ்வார் சொல்வது, எப்படி பெண்களால் ஆண்கள் சுகம் அடைவார்களோ, அதே போல், ஆண்களால் பெண்களும் சுகம் அடைவார்கள் என்று பெண்களுக்கும் பொருந்தும். இப்படிப்பட்ட சுகங்கள்,

 • தீயை அணைத்துக்கொள்வது போன்றும்,
 • படமெடுக்கும் பாம்பின் நிழலில் இளைப்பாறுவது போன்றும்,
 • விஷம் கலந்த உணவை உண்டு உயிர் வாழ நினைப்பதை போன்றும் உள்ளது என்கிறார்.

துன்பத்திற்கு காரணமான இவைகளை இன்பம் என்று மக்கள் நினைப்பதை ஆழ்வார் இங்கு வருத்தப்பட்டு கூறுகிறார். நம்மாழ்வார் சொன்னபடி “கொண்ட பெண்டிர்” (9.1.1) என்றாலும் அல்லது வேறுவிதமான பெண்களாய் இருந்தாலும், பணம், பொருள் உள்ள வரையில் தான் அவர்கள் அன்பு செலுத்துவார்கள் என்று சொல்வது மிக பொருத்தம். மேலும் இருவருடைய நோக்கங்களும் (ஒருவருக்கு பொருளின் மீது நாட்டமும் மற்றவர்க்கு இன்பத்தின் மீது ஆசையும்) வேறு வேறாக இருப்பதால் இருவரும் வேண்டியதை முழுவதுமாக அடையமுடியாமல் தவிப்பார்கள் என்கிறார்.

பெரியதோர் இடும்பைப் பூண்டு என்று சொன்னதில், தாழ்ந்த பலனுக்காக நாம் பெரும் துன்பங்களை அனுபவிக்கிறோம் என்று தெரிகிறது. ஆனால் மிக உயர்ந்த பலனான பெருமாள், நாம் செய்யும் மிக எளிதான காரியத்திலேயே கிடைத்து விடுகிறான். நாம் வெறும் அஞ்சலி செய்தால் கூட, அவன் நீராக உருகி நமக்கு எல்லாவற்றையும் செய்ய தயார் ஆகிறான். அஞ்சலி செய்வதும் எளிது, அதன் பலனும் நிரந்தரம். அஞ்சலி என்ற வார்த்தைக்கு வேதாந்த தேசிகன் என்ற ஆச்சாரியார் சொல்லும் அர்த்தம், என்பது அகாரவாச்சன் ஆன பரமாத்மாவையும், சலி என்பது அவன் அந்த முத்திரைக்கு, நீர்பண்டமாக உருகிவிடுவதையும் குறிக்கிறது என்று சொல்கிறார்.

உடலுக்கே கரைந்து நைந்து என்று சொல்வதால், உடல் வேறு ஆத்மா வேறு என்று கூட அறியாதவன் என்றும், தொடர்ந்து வரும் பிறவி துன்பங்களை அறியாதவன் என்றும், அதனால் அவற்றை தவிர்க்கும் வழி பற்றி சிந்திக்க தவறுகிறானே என்று ஆழ்வார் வருந்துகிறார்.

பாடி ஆடி, என்பதில், பெருமாள் அனுபவத்தில், அனுஷ்டானங்கள் அதிகம் இல்லை என்றும், தான் அவனுக்கு அடியவன் என்ற இயற்கையான உறவை ஒத்துக்கொண்டால் போதும் என்று சொல்வதாகிறது.

அமுதம் உண்ணா என்பதற்கு உரையாசிரியர் சொல்லும் ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தினத்தின் 55ம் பாடலை நினைவு கூறுகிறார். அதில் ஆளவந்தார், பெருமாளுக்கு அடிமைப்பட்டு இருப்பதிலேயே சுகம் காண்பவர்கள் இல்லத்தில், தான் ஒரு புழுவாகப் பிறந்தாலும் ஒரு பாக்கியமே என்றும், வேறு எங்கும் பிரமனாக பிறந்தாலும் அது வேண்டாம் என்றும் சொல்கிறார்.

தொழும்பர், சோறு உகக்குமாறே என்பதற்கு அத்தகைய அமுதத்தின் இனிமை அறியாமல், தாழ்ந்த விஷயங்களை விரும்பும் நீசர் என்று பொருள் கொள்ள வேண்டும்.

துன்பத்திற்கு காரணமானவைகளையே இன்பமாக எடுத்துக்கொள்ளும் ஜீவாத்மாக்களை திருத்த ஆழ்வார் செய்யும் இன்னொரு முயற்சி என்று இந்த பாடலை கொள்ளலாம்.

மறம் சுவர் மதிள் எடுத்து

மறம் சுவர் மதிள் எடுத்து, மறுமைக்கே வெறுமை பூண்டு, புறம் சுவர் ஓட்டை மாடம், புரளும் போது அறிய மாட்டீர், அறம் சுவராகி நின்ற அரங்கனார்க்கு ஆட் செய்யாதே, புறம் சுவர் கோலஞ் செய்து, புள் கவ்வக் கிடக்கின்றீரே. (திருமாலை 6)

இவ்வுலக இன்பங்கள் நிரந்தம் இல்லை என்றும், பல குற்றங்கள் இருக்கின்றன என்றும், சென்ற பாடலில் ஆழ்வார் சொன்னதை, நம் போன்றவர்கள், ஒப்புக்கொண்டாலும், அவர்கள் இப்படியே பல சிறு சிறு இன்பங்களை அனுபவித்து கொள்கிறோமே என்று விலகி செல்ல ஆரம்பித்த போது, ஆழ்வார் நிலையற்ற இந்த இன்பங்களை போல் அவர்களும் நிலை இல்லாத உடலினை கொண்டவர்களே என்பதை விளக்கும் பாடல்.

மறம் சுவர் மதிள் எடுத்து என்றதில் மறம் என்று சொன்னது, அறம் என்பதற்கு எதிர் சொல்லாக உபயோகித்து, அருள் இல்லாமை, கோபம், கர்வம் மற்றும் அகங்காரம் போன்ற குணங்களை தனக்கு சுவராக கொள்ளும் மனிதன் என்கிறார். இப்படிப்பட்ட குணங்களால் தங்களைச்சுற்றி ஒரு மதிள் எடுத்து, நல்ல நண்பர்கள் கூறும் அறிவுரைகளை மதிக்க தவறி விடுவதால், மாரீசன், மால்யவான், கும்பகர்ணன், மற்றும் விபீஷணன் போன்றவர்கள் இராவணனுக்கு சொன்னது போல் பலன் இன்றி போகிறது. கர்வமின்மை, தற்பெருமையின்மை, ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுப்படுத்துதல் போன்றவை கீதையில் நமக்காக சொல்லப்பட்ட நல்ல குணங்கள். (13- 7 பகவத்கீதை)

நாம் முன்பு குறிப்பிட்டதைப்இந்த போல், நம் கர்ம பலன்களை துறந்து பிரம்மத்தை அடையவேண்டியதே ஒவ்வொரு உயிரின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று வேதங்கள் உரைக்கின்றன. பரமாத்மா, நாம் மறுமைக்கும் (இந்த பிறவிக்குப் பிறகு), இந்த பிறவியிலேயே, நல்லன பல செய்து வைக்க வேண்டும் என்று எண்ணங்களுடன் நமக்கு கை, கால் உடம்பு மற்றும் மனம் புத்தி எல்லாம் அளித்தார். இதை நாம் பெரியாழ்வாரின் சரித்திரத்தைப் படிக்கும் போதும் உணரமுடியும். ஒரு மனிதன் இந்தப் பிறவியில், கடவுளைப் பற்றி அறிந்து கொண்டும், அவரை நினைத்துக்கொண்டும் வாழ்ந்தால் தான், அவனால் இந்தப் பிறவிக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று ஒரு யோகி சொன்னதை மனதில் கொண்டுதான், அரசர் வல்லபதேவன், தனது குருவான செல்வநம்பியிடம் ‘முழு முதல் பொருளான கடவுள் யார்’ என்பதை அறிய முற்பட்டதும், பெரியாழ்வார் அரசவைக்கு வந்து அரசனின் சந்தேகத்தை தீர்த்தும், கருடவாகனனாக பெருமாள் வானில் தோன்றியதும், பெரியாழ்வார் பல்லாண்டு பாடியுதும் ஒரு இனிய சரித்திரமே.

ஆனால், நாம் தீய காரியங்களை இந்த பிறவியில் செய்வதாலும், இறந்தபிறகு உள்ள காலத்திற்கு ஒன்றும் செய்யாததாலும் , மறுமைக்கே வெறுமை பூண்டு என்று ஆழ்வார் சொல்கிறார். உரையாசிரியர் இங்கு ” ஸ்த்திதே மநஸி ” என்று தொடங்கும் வராக சரம ஸ்லோகத்தை நினைவு படுத்துகிறார், நாம் நல்ல நிலைமையில் இருக்கும் போது அவனை ஒரு கண நேரம் உண்மையாக நினைப்போம் என்றால், நாம் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் கிடக்கும்போது, அவன் நம்மை நினைவில் கொண்டு மேலான கதிக்கு அழைத்து செல்கிறான் என்பதே வராக சரம ஸ்லோகத்திற்கு பொருள். இதை நம்மாழ்வார் திருவாய்மொழியில், (3.10.11), “அவன், நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி, வீடும் பெறுத்தித் தன் மூவுலகுக்கும் தருமொரு நாயகமே” என்று சொல்லி, நம் காரியங்களை, அவன் தன் காரியங்களாக நினைத்து செய்வான் என்கிறார்.

நாம் ஆத்மா என்று உள்ளே இருக்கிற சத்தான விஷயத்திற்கு உண்டான நன்மைகளை செய்யாமல், வெளி விஷயங்களில் கவனம் செலுத்துவதால், நம் உடம்பினை புறம் சுவர் என்று ஆழ்வார் சொல்கிறார். நிலையற்றதான ஓட்டை குடிசைபோல் உள்ள உடம்பினை, நாம் நிலையான ஒரு மாளிகையைப் போல் நினைப்பதால், அதனை ஆழ்வார் ஓட்டை மாடம் என்கிறார். இவ்வுலகில் வாழும் நாட்கள் எவ்வளவு என்று அறிய மாட்டோம் என்பதை, புரளும் போது அறிய மாட்டீர் என்கிறார்.

அறம் சுவராகி நின்ற என்று சொல்வதன் மூலம், தர்மமே இயல்பானவர் என்றும், தர்மத்தைக் காப்பவர் என்றும் திருஅரங்கனை குறிப்பிடுகிறார். இராமாயணத்தில் மாரீசன் என்ற அரக்கனின் வாக்காக, “இராமன் தர்மமே உருவெடுத்தவன்” சொல்லப்படுகிறது. (ராமோ விக்ரஹவான் தர்ம) வேதம் அறிந்த ப்ராஹ்மணர்களும் ஆத்ம ஸ்வரூபம் அறிந்த பெரியோர்களும்,கிருஷ்ணனையே தர்மமாக அறிகிறார்கள் என்றது மஹாபாரத வாக்கியம். (கிருஷ்ணம் தர்மம் ஸனாதனம்). எல்லா ஜீவராசிகளையும் கரை ஏற்றினால் அன்றி இங்கிருந்து எழுந்திருக்க மாட்டேன் என்று காவேரி கரையில் பள்ளிகொண்டு இருக்கும் பெருமாளை இங்கு ஆழ்வார் “அறம் சுவர்” என்று மேற்கோள் காட்டுகிறார்.

நெடுங்காலமாக தான் செய்த பாவங்களினால், பெருமாளுக்கு அடிமைப் படாமல், தொடர்ந்து கர்மாக்களுக்கே அடிமைப்பட்டு இருப்பதை ஆட்செய்யாதே, என்று ஆழ்வார் கூறுகிறார்.

ஆத்மாவிற்கு அலங்காரம் செய்வது என்பது, அவனுக்கு அடிமை செய்வதாகும். அப்படி செய்யாமல், தங்கள் உடம்பிற்கு அலங்காரம் செய்வது என்பது, புது வீட்டைக் கட்டி அதனுள் பெருச்சாளி இருக்கும் போது வெளியே அலங்காரம் செய்வது போன்றதாகும் என்ற விளக்கத்தை உரையாசிரியர் புறம் சுவர் கோலம் செய்து என்ற பதத்திற்கு கூறுகிறார்.

இப்படிப்பட்ட மனிதர்கள் இறந்த பின்பு, மாமிசம் உண்ணும் பறவைகளும் இவர்க்ளின் உடலை உண்பதில்லை என்பதை புள் கவ்வ கிடக்கின்றீரே என்று ஆழ்வார் சொல்கிறார். ‘உண்ணாமல்’ என்று சொல்லாமல், ‘கவ்வ‘ என்று சொல்வதன் மூலம் அந்த பறவைகளும் இப்படிப்பட்ட மனிதர்களின் உடலை வெறுக்கின்றன என்று ஆழ்வார் சொல்கிறார். நமக்கு என்று பெரிய பெருமாள் அருகில் இருக்க, அவரை இவர்கள் அலட்சியம் செய்தது போல், இந்த பறவைகளும் அவர்களை வெறுக்கின்றன என்று சொல்லி இந்த பாடலை முடிக்கிறார்.

இப்படி இவர்கள் உயிரற்று கிடக்கும் போது ஆழ்வார் இப்படி சொல்கிறாரா என்றால், இல்லை, அவர்கள் உயிரோடு இருக்கும் போதே எச்சரிக்கை செய்கிறார். இராவணன் சிம்மாசனத்தில் இருக்கும் போது, இராமபிரானிடம் கொண்ட விரோதத்தால் இராவணனும், இலங்கையும், அழிந்துவிடும் என்று திருவடி, எச்சரித்ததை இங்கு மேற்கோள் காட்டுகிறார். அதேபோல் மகாபாரதத்தில், யுத்தத்தின் முடிவில் இறந்து கிடக்கும் கௌரவர்களை பார்த்து தான் சொன்னதை கேட்காததால் அவர்களுக்கு கிடைத்த முடிவை நினைத்து வியாசர் வருந்துவதும் இங்கு மேற்கோள் காட்டப்படுகிறது.

முடிவுரை

அடுத்து வரும் நான்கு பாடல்களும் தொண்டரடிபொடியாழ்வார் அருளிய திருமாலையில் வரும் உபதேசத்திற்குள் ஒரு இனிமையான சிறு தொகுதி அல்லது ஒரு கருத்து செறிவுள்ள முக்கிய சிறு உட்பிரிவு. அதனை அடுத்த வலைப்பதிவில் காணலாம்.

One Comment on “உபதேசங்கள்- மொய்த்த வல்வினை,பெண்டிரால் சுகங்கள் மறம் சுவர் மதிள்

 1. Heartily thanks for your service. Myself will be thankful to you for my lifetime

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: