திருமாலை – காவலில் புலனை வைத்து

Please click here for English version of this weblog, thanks

நுழைவு

திருமாலை (என்னும் ப்ரபந்தம்) அறியாதார், திருமாலையே (பெருமாளை) அறியாதார் என்ற சொற்தொடருக்கு ஏற்ப, எல்லோரும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் எழுதிய திருமாலை என்ற திவ்யப்ரபந்தந்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த பிரபந்தம், வடமொழியில் உள்ள “ஸ்ரீ விஷ்ணு தர்மம்” என்ற நூலின் அடிப்படையில் உள்ளது என்று நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள். வியாக்ஞான சக்ரவர்த்தி என்று அழைக்கப்படும் பெரியவாச்சான் பிள்ளை என்ற ஆச்சார்யர் அருளிய உரை இதற்கு உள்ளது.

நம் ஆச்சார்யர்கள், இந்த ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும்படி, “தொண்டரடிபொடி எம்பெருமானை எப்போதும் பேசு” என்று சொன்னார்கள். பெருமாளுக்கு தொண்டு செய்பவர்களுக்கு(பிரதம பர்வம்) பெருமாள், பெருமான் ஆவது போல், பெருமாளின் அடியவர்களுக்கு சேவை செய்யும் அடியவர்களுக்கு (சரம பர்வம்), இவர் பெருமான் ஆவார் என்று கூறுவார்கள்.

நாம் முன்பே பார்த்ததுபோல், இந்த ஆழ்வார், திருமந்திரத்தின் அர்த்தத்தை தெரிந்து கொண்டு, இந்த உலக சுகங்களில் ஆசை கொள்ளாமல், பெருமாளிடம் பக்தி கொண்டு, ஸ்ரீரங்கம் சென்று பெரியபெருமாளை சேவிக்க, அவர் தம் வடிவழகை காட்டி, ஆழ்வாரை எப்போதும் தனது அருகிலேயே இருக்கும் படி செய்தார். அதனால், இந்த ஆழ்வார், பரமாத்மாவின் ஐந்து நிலைகளில், பர, வியூக, விபவ மற்றும் அந்தர்யாமி என்ற நான்கு நிலைகளையும் விலக்கி மற்றும் அர்ச்சைகளில் உள்ள மற்ற எல்லா திவ்யதேசங்களையும் விலக்கி, வைஷ்ணவர்களுக்கு வேர்ப்பற்றான திருஅரங்க திவ்யதேசத்தை மட்டுமே பாடி, பெருமை பெற்றார். ஆகையால், ஆழ்வார், நமக்கு உதவி செய்யும் பொருட்டு, தெளிவாக, மற்ற எல்லா குழப்பங்களையும் நீக்கி, திருவரங்கனை மட்டுமே, திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சி முழுவதும் பாடி நமக்கு ஒரு நல்வழி காட்டி உள்ளார்.

இந்த ஆழ்வாரின் மற்றொரு சிறப்பு, நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை திருமாலை என்கின்ற இந்த திவ்யப்ரபந்தத்தில் விளக்கியது. எல்லா ஆழ்வார்களைப் பற்றி, ஒரு சிறு தொகுப்பு.

azhvaargal summary tamil

நம் கர்ம பலன்களாகிய பாப, புண்ணியங்களை துறந்து பிரம்மத்தை அடைந்து, நித்யஸூரிகளைப் போல், பரமாத்மாவிற்கு சேவை செய்து, ஆனந்தம் அடையவேண்டியதே ஒவ்வொரு உயிரின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று வேதங்கள் உரைக்கின்றன. அதற்கு நாம் அருகதை உடையவர்கள் ஆனாலும், அதை நாம் செய்யாது, மீண்டும் மீண்டும் பிறந்து (இறந்தும்), இந்த சம்சாரத்திலேயே வாழ்ந்து அவதியுறுவதைக் கண்டு பொறுக்க மாட்டாமல், ஸ்ரீவைகுந்ததில், மஹாலக்ஷ்மி தாயார், பெருமாளை வேண்ட, பெருமாள் இந்த ஆழ்வாரின் மூலம், தீவினைகள் மிகுந்த கலியுகத்தில் பரமாத்மாவை அடைவதற்கான எளிய வழியாகிய நாம ஸங்கீர்த்தனத்தின் பெருமையை, சொல்லிக் கொடுக்க, அதையே திருமாலை என்ற இந்த திவ்யப்ரபந்தத்திற்கு மூலப்பொருள் ஆக்கினார்.

இந்த பிரபந்தம், எட்டெழுத்து மந்திரம் (நாராயண நாமம், அல்லது வடமொழியில் “அஷ்டாட்சர மந்திரம்‘ ) போல் மிக்க சுருக்கமும் இல்லாமல், இருபத்தினான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்ட இராமாயணம் அல்லது ஒரு லட்சத்து இருபத்திஐந்தாயிரம் ஸ்லோகங்கள் கொண்ட மஹாபாரதம் போல் மிக்க நீண்டதாகவும் இல்லாமல், நாற்பத்தி ஐந்தே பாசுரங்களுடன், பரம்பொருளை தெளிவாக விளக்குவதால் தனிப்பெருமை உடையதாயிற்று. இதனை அதிகமும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் அளந்து பேசும் திருவடி, அனுமனின் சொல்லுக்கு ஒப்புமை கூறுவதும் ஒரு சிறப்பு.

திருமாலை அமைப்பு

திருமாலை என்ற இந்த திவ்யப்ரபந்தத்தை ஆழ்வார் கீழ்கண்ட தொகுப்புகளாக சொல்லி தொடர்ச்சியை கையாண்டு இருக்கிறார்.

 • முதல் மூன்று பாசுரங்கள் – ஆழ்வார் பெருமாள் தனக்கு கொடுத்த அனுபவத்தை ரசிக்கிறார்.
 • நான்கு முதல் பதினான்கு வரையிலான பதினோரு பாசுரங்கள் – தன்னுடைய அனுபவத்தை கொண்டு நமக்கு உபதேசம் செய்கிறார்
 • பதினைந்து முதல் இருபத்தி நான்கு வரை பத்து பாசுரங்கள் – உபதேசத்தின் படி மக்கள் நடந்து கொள்ளாததால், பெருமாள் தனக்கு செய்த நன்மைகளை / உபகாரங்களை நினைத்துக் கொள்ளுகிறார்
 • இருபத்திஐந்து முதல் முப்பதினான்கு வரை பத்து பாசுரங்கள் – இவ்வளவு நன்மைகள் பெருமாள் செய்தும், ஆழ்வார், தன்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை என்றும், எல்லா கெட்ட குணங்களும் உள்ளனவே என்றும் சொல்லி, பெருமாளிடம் இருந்து விலகப் பார்க்கிறார்.
 • முப்பத்தி ஐந்து முப்பத்தி ஆறு மற்றும் முப்பத்தி ஏழு என்ற மூன்று பாசுரங்களும் பெருமாள் ஆழ்வாருக்கு சமாதானம் சொல்லி, தன்னுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்வது.
 • முப்பத்தியெட்டாம் பாசுரம் – இந்த பிரபந்தத்தின் முக்கிய பாசுரம் – த்வய மஹா மந்திரத்தின் அர்த்தத்தை ஆழ்வார் நமக்கு விளக்குதல்
 • முப்பத்திஒன்பதாம் பாசுரம் முதல் நாற்பதினான்காம் பாசுரம் வரை ஆறு பாசுரங்கள் – த்வய மஹா மந்திரத்தை நன்றாக புரிந்து கொண்ட ஜீவாத்மாவின் குண நலன்களை ஆழ்வார் நமக்கு சொல்லுதல்
 • நாற்பத்தி ஐந்தாவது பாசுரம் – இந்த பிரபந்தத்தை படிப்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகளை சொல்வது – பலஸ்ருதி பாசுரம்

ஆழ்வாரின் அனுபவம்

முதல் பாசுரம் – காவலில் புலனை வைத்து

காவலிற் புலனை வைத்து கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து 
நாவலிட்டு உழிதருகின்றோம் நமன்-தமர் தலைகள் மீதே 
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற 
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்க மா நகருளானே     

திருநாமம் எம பயத்தை போக்கிவிடும் என்பதை திருநாமம் கற்றதனால், எமன் தலை மீது சந்தோஷமாக சப்தம் போட்டு நடப்போம் என்று இந்த பாசுரத்தில் ஆழ்வார் சொல்கிறார். இந்த பாசுரம் திருநாமத்தின் புனிதத்தன்மையையும் நமக்கு விளக்குகிறது.

இந்த பாடலுக்கான உரையில் இருந்து சில சிறப்பான பகுதிகளை மட்டும் காண்போம்.

காவலில் புலனை வைத்து ” என்பதை நம் ஆச்சார்யர்கள், நம் இந்திரியங்களை காவலில் வைத்து என்றும், இந்திரியங்களை காவலில் வைக்காமல் (காவல் இல்லாமல்) என்று இரண்டு விதமாகவும் சுவாரஸ்யமாக விளக்குவார்கள்.

முன்பு தன்னுடைய இந்திரியங்கள் தன்னை சிறையில் வைத்தது போல், தான் இப்போது தன்னுடைய இந்திரியங்களை சிறையில் வைத்ததாக ஆழ்வார் சொல்கிறார்.

இராவணனின் மனைவி மண்டோதரி, இராவணன் போரில் அடிபட்டு விழுந்தபோது, அவன் இந்திரியங்களை வென்று யாகங்கள் செய்தபோது பற்பல பலன்களை பெற்றதாகவும், இந்திரியங்களை கட்டுப்படுத்த முடியாதபோது சீதையை சிறைபிடித்ததால், இக்கேடு நடந்ததாகவும் சொல்லி கதறி அழுததை, உரையாசிரியர் இதற்கு மேற்கோள் காட்டுவார்கள்.

தன்னுடைய இந்திரியங்களை காவலில் வைக்காதபோதும், இந்திரியங்களை அடக்கியவர்களுக்கு கிடைக்காத பலன்களைக்கூட திருநாம வைபவத்தால், தான் அடைந்து விட்டதாகவும் பொருள் கூறுவார்கள்.

காவல் என்பது எல்லாவற்றையும் காக்கின்ற பெருமாள் என்று அர்த்தம் கொண்டு, தன்னுடைய இந்திரியங்களை உலக விஷயங்களில் இருந்து நீக்கி பெருமாளிடம் வைத்தது என்றும் பொருள் கூறுவார்கள்.

கலி தன்னை கடக்கப் பாய்ந்து என்றது திருநாமம் கற்றதால் ஆழ்வார், பாவங்கள் அதிகம் சூழ்ந்துள்ள இந்த யுகத்தை தாண்டி, எல்லா பாவங்களையும் தொலைத்து, கிருதயுகத்தில் இருப்பவர் போல் இருந்தார் என்று பலரும் கூறுவதாக நம் உரையாசிரியர் தெரிவிக்கின்றார். இங்கு கலி என்பதற்கு கலி காலம் என்றும், பாவம் என்றும் இரண்டு பொருள்களில் விளக்கம் தருகிறார்கள்.

நாவலிட்டு உழிதருகின்றோம் ” என்று பன்மையில் சொன்னதால்,

 • ஆழ்வார் ஒருவரே, பலர் போல் பலம் உடையவராக உணர்கிறார் என்று ஒரு அர்த்தம்.
 • புண்ணியம் செய்த ஒருவரால், பலரும் பலன் அடைவது உலக நியதியே என்று இன்னொரு அர்த்தம். அனுமன் ஒருவனே கடலைத் தாண்டி சீதாபிராட்டியை தரிசித்து வந்தாலும் அவருடன் சென்ற அத்தனை வானரங்களும் மகிழ்ச்சியுடன், சுக்ரீவனுக்கு பிரியமான மதுவனத்தை அனுபவித்தது போல், ஒருவனுடைய நற்செயலுக்கு பலரும் பயன் அடைவதைபோல் என்கிறார்.

நமன் தமர் தலைகள் மீதே’ என்று பன்மையில் சொன்னது, ஆழ்வாருடன் மற்றவர்கள் இருந்ததால், அவர்களுக்கு தேவையான தலைகளை எமன் தன் பரிவாரங்களுடன் கொடுத்ததை சொல்கிறார். எமன் மற்றும் அவன் பரிவாரங்களின் தலைகள் மீது ஆழ்வாரும் மற்றவர்களும் கால் வைத்து இருப்பதாக சொல்வது, ஆழ்வாரின் பெருமைக்காகவோ அல்லது எமனை சிறுமைப் படுத்தவோ சொல்லவில்லை என்றும், எமனே தானாக முன்வந்து திருநாமம் சொல்பவரின் பெருமையை அறிந்து அவர்களின் திருவடிகளை தேடி வந்ததாக உரையாசிரியர்கள் கூறுகிறார்.

இந்த பாசுரத்தில், திருநாமத்தின் பலன்களை முதல் இரண்டு வரிகளில் சொல்லிவிட்டு அதன் பிறகே ஆழ்வார் “மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ” என்று திருநாமம் சொல்கிறார். திருநாமம் சொல்வதற்கு முன்பே பலன் கிடைக்கும் என்று சுவாரசியமாக உரையாசிரியர் கூறுகிறார்.

திருநாம பலன்களுக்கு சில உதாரணங்கள் :

 • வாலியிடம் பயம் கொண்டிருந்த சுக்ரீவன், ஸ்ரீராமனின் துணை கிடைத்தபின்பு அதனால் பலம் பெற்று அவனை போருக்கு அழைப்பது போல், திருநாம மஹிமையினால் ஆழ்வார் அதேபோல் பலம் பெற்றதாக உணர்கிறார்.
 • ஸ்ரீராமனின் கருணையினாலும், கையில் அவரது மோதிரத்தை கொண்டு இருந்ததாலும், திருவடி (அனுமன்) சமுத்திரத்தைத் தாண்டினார், இங்கே ஆழ்வார் சம்ஸாரம் என்னும் சமுத்திரத்தை திருநாமத்தின் துணையால் தாண்டினார்
 • ‘கோவிந்தா’ என்ற திருநாம வைபவத்தாலேதான், ஆபத்தில் திரௌபதிக்கு புடவை வந்துகொண்டே இருந்தது.
 • திருநாமத்தின் அர்த்தத்தை தெரிந்து கொண்டு உச்சரித்தால் தான் பலன் என்பதில்லை என்றும், அர்த்தம் தெரியாமல் திருநாமங்களை உச்சரித்தால் கூட பலன் உண்டு என்பதையும் சில உதாரணங்கள் மூலம் உரையாசிரியர் கூறி இருப்பது தனி சிறப்பு.

தொடர்ச்சி

முதல் மூன்று பாடல்கள் பற்றியும் இந்த பதிவினில் எழுதி ஆழ்வாருக்கு பெருமாள் கொடுத்த அனுபவத்தை எழுதி இருக்கலாம். ஆழ்வார் திருமாலை என்ற இந்த பிரபந்தத்தில் மிக எளிமையையாக, ஆழ்ந்த அர்த்தங்கள் பல சொல்லி இருப்பதால், இதற்கு உரை எழுதிய பெரியவாச்சான்பிள்ளை, நம் நலன் கருதி விளக்கமாக சொல்வதை மனதில் கொண்டு, இந்த முதல் பாசுரத்துடன் இந்த பதிவினை முடித்துக்கொண்டு மீண்டும் அடுத்த பதிவினில் இணைவோம்.

திருமாலையின் முழு பாசுரங்களையும் கீழ்கண்ட முகவரியில் காணலாம். அவர்களுக்கு எங்கள் நன்றி.

http://www.tamilvu.org/ta/library-l4210-html-l4210in1-140090

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: