திருப்பள்ளியெழுச்சி

For English Version, please click here, thanks

முகவுரை

விப்ரநாராயணர் என்று திருநாமம் கொண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வாரைப் பற்றி நாம் சென்ற வலைப்பதிவில் பார்த்தோம். அவர் பாடிய பிரபந்தங்கள் இரண்டு என்றும், அவை திருமாலை, மற்றும் திருப்பள்ளியெழுச்சி என்றும் பார்த்தோம்.

ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரண்டு பேர் ஆவர். அவர்கள் எழுதிய பிரபந்தங்கள் இருபத்திநான்கு ஆகும். ஒவ்வொரு ப்ரபந்தத்திற்கும் காரணத்தோடு ஒரு பெயர். பெருமாளை திருக்கண் பள்ளி உணர்த்த அல்லது திருக்கண் மலர செய்ய, ஆழ்வார் வேண்டிய பாடல்கள் ஆனதால், இதற்கு திருப்பள்ளியெழுச்சி என்ற பெயர். வேறு எந்த . ப்ரபந்தத்திற்கும் இல்லாத பெருமையாக, நேரடியாக ஒரு காரியத்தை கொண்டு தலைப்பு பெற்ற பிரபந்தம் ஆகும்.

திருப்பள்ளியெழுச்சிக்கு நஞ்ஜீயர் மற்றும் பெரியவாச்சான்பிள்ளை என்கின்ற இரண்டு ஆச்சாயர்களின் உரை இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. ஆனால் எல்லோரும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும், இருவரின் உரைகள் என்று சொல்லப்பட்டு இருக்கும் பகுதிகளில் இருந்து, சுவையான சில மேற்கோள்களை இங்கே கொடுக்க முயற்சி செய்து உள்ளேன்.

ஸ்ரீரங்கத்தில் எழுந்து அருளியிருக்கும் ஸ்ரீரங்கநாதனை, ஸ்ரீவைகுந்ததில் இருக்கும் பரவாசுதேவனாக கொண்டு இந்த திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பாடப்பட்டு உள்ளன. ஸ்ரீரங்கநாதர்தான் வைகுந்தத்தில் இருக்கும் பரவாசுதேவன் என்பதற்கான மேலும் சில பாடல்கள் :

  • வடிவுடை வானவர் தலைவனே என்றும், வண் திருவரங்கனே” (திருவாய்மொழி 7.2.10)
  • காவேரி விரஜா சேயம், வைகுண்டம் ரங்க மந்திரம், சவாசுதேவோ ரங்கேச, பிரத்யஷம் பரமம் பதம்
  • பொங்கோதம் சூழ்ந்த புவனியும், விண்ணுலகும் அங்காகும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்க செல்வனார் ” (நாச்சியார் திருமொழி, 11.3)

இதனால், திருப்பள்ளியெழுச்சி பாசுரங்கள் தமேவமத்வா பரவாசு தேவம் என்று கூறப்பட்டன.

சக்ரவர்த்தி திருமகனாகிய ஸ்ரீ ராமபிரானால் ஆராதிக்கப்பட்ட பெரிய பெருமாளாகிய ஸ்ரீ ரங்கநாதனை, ராஜாதி ராஜன் என்பதால், திருப்பள்ளியெழுச்சி ராஜவதர்ஹணீயம் என்றும் சொல்லப்படும்.

கண்கள் மூடி பள்ளிகொண்டு இருந்த பெருமாளை, திருஆராதனத்திற்கு, வேண்டிய எல்லா உபகரணகங்களையும் அவைகளின் அதிகாரிகள் கொண்டு வந்து தயாராக காத்துகொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லி, பெருமாளை, திருக்கண்கள் மலர செய்ய வேண்டி, பாடிய பாசுரங்கள் இவை.

திருப்பள்ளியெழுச்சியின் பிறப்பு

இதற்கு முந்தய பிரபந்தத்தில்(திருமாலை), ஆழ்வார் சம்சாரத்தில் உழன்று பற்பல சோதனைகளை எதிர்கொண்டு, பின்னர் பெருமாளின் அருள் பெற்று அவைகளில் இருந்து மீண்டு, அதனால் தான் பெற்ற பகவத் அனுபவத்தையும், பாகவத அனுபவத்தையும் பெருமையுடன் சொல்லிக்கொண்டே பெருமாளை தரிசிக்க ஆனந்தமாக சென்றார். ஆயினும் பெருமாள் கண் குளிர நோக்குதல், கைகளை நீட்டி அணைத்துக் கொள்ளுவது என்று ஒன்றும் செய்யாமல், கண்களை மூடி பள்ளிகொண்டு இருந்தார். பெருமாள், கண்களை மூடிக்கொண்டு இருந்ததற்கு, சம்சாரிகள் போல் சோம்பேறித் தனமாகவோ, ஆழ்வாரிடம் அன்பு இல்லாமையிலோ இல்லை என்றும், கொடிய நிலையில் இருந்த ஆழ்வாரை மீட்டு தன் பக்கம் கொண்டு வந்த தன் பெருமையை நினைத்துக்கொண்டும், அதே போல் எப்படி இந்த உலகத்தில் உள்ள மற்ற ஜீவாத்மாக்களையும், தன் பக்கம் வரவழைப்பது என்றும் சிந்தித்துக்கொண்டு “நாகமிசைத் துயில்வான் போல் உலகெல்லாம் நன்கு ஒடுங்க, யோகு அணைவான்” (4.8.9) என்றபடி இருக்கிறார் என்றும் நம் உரையாசிரியர்கள் அழகாகக் கூறுவார்கள்.

முதல் பாசுரம்

பழைய காலத்தில், மஹாராஜாவிற்கு பொழுது புலர்ந்ததை தெரிவிக்க சந்தியா தீபம் கொண்டு வருவதைப்போல, சூரியன் தன்னுடைய கிரணங்களை, பெருமாளுக்கு பொழுது புலர்ந்ததை தெரிவிக்க, உதயகிரி மலையின் உச்சியில், குன்றின் மேல் இட்ட விளக்கு போல் தன் கைங்கரியத்தை சமர்ப்பிக்க வந்தான். சூரியனை விளக்கு என்று முதல் திருவந்தாதி முதல் பாட்டில், பொய்கை ஆழ்வார், “வெய்ய கதிரோன் விளக்காக” என்று கூறிப்பிட்டதை நினைவில் கொள்ளவும்.

இன்னொரு சுவாரசியமான இடம், “ஆதித்யனுக்கு அருகில் கோவில்” என்று சொல்வதன் மூலம், தெற்கு நோக்கி பள்ளிகொண்டு இருக்கும், பெரியபெருமாளின் திருவடிகளின் தரிசனம் காண கிழக்கு திசையில் சூரியன் உதித்தான் என்று சொல்வது பொருத்தமே. பெரிய பெருமாளின் திருவடிகள் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து கிழக்கு நோக்கி நீண்டு உள்ளதை இன்றும், ஒவ்வொரு தெருவிலும் உள்ள கிழக்கு வாசலிலும் அவனது திருவடிகள் இருப்பதைக் காணலாம். மேலும் அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தில், திருப்பாணாழ்வார் “நீள் மதிள் அரங்கத்தம்மான் திருக் கமலபாதம் வந்து என் கண்ணில் உள்ளன” என்றுபெருமாளின் பாதங்கள் நீள்வதைப் பற்றி கூறுவதையும் நினைவு கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து, பெருமாளின், திருமுடியிலும், திருவடியிலும் ஆதித்யர்கள் இருப்பதையும் அவர்களுக்கு இடையில், அவர் கண் வளர்ந்து (உறங்கிக் கொண்டு) இருப்பதையும் நயமாக எடுத்து சொல்கிறார். திருமுடியில், அல்லது அவன் அணிந்து இருக்கும் கீரிடத்தில், ஆயிரம் ஆதித்யர்கள் இருப்பதை, பெரியாழ்வார், ” கதிர் ஆயிரம் இரவி கலந்து எரித்தால் ஒத்த நீள்முடியன்“(பெரியாழ்வார் திருமொழி 4.1.1) என்று சொல்வது மேற்கோளாகிறது.

மேலும் சில பாசுரங்கள்

  • பேயாழ்வார் “முடிவண்ணம், ஓர் ஆழி வெய்யோன் ஒளி ” (மூன்றாம் திருவந்தாதி, 1.5)
  • நம்மாழ்வார் “மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி ” (திருவாசிரியம், 1)

இந்திரன், குபேரன் என்னும்படியான பல தேவர்களும் மற்றும் அரசர்களும், தாம் முதலில் பெருமாளின் திருவடி வணங்குவதற்கும், தங்கள் பதவி நிலைத்திடவும், நேரம் தவறாமல் எதிர் திசையில் வந்து காத்து இருந்தனர்

ஆகையால் தேவரீர் எழுந்து அருள வேண்டும் என்பது கருத்து.

இரண்டாம் பாசுரம்

கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றானது, முல்லை கொடிகளில் மலர்ந்து கொண்டு இருக்கும் முல்லை மலர்களை தழுவிக் கொண்டு அதன் வாசத்தினால் பெருமாளுக்கு பொழுது புலர்ந்ததை தெரிவிக்கின்றது

அன்று கஜேந்திர ஆழ்வான் என்னும் யானையை, கொடிய ஆபத்தில் இருந்து வேகமாக வந்து காப்பாற்றியது போல், அடியோங்களையும் காக்க விரைவில் கண் வளர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்.

மூன்றாம் பாசுரம்

முதற்பாட்டில், கதிரவன் உதயகிரி சிகரத்திலே வந்து சேர்ந்தான் என்றது. இப்பாட்டில் நேராக உதித்துத் தனது ஒளியை எல்லா திசைகளிலும் பரப்பிக்கொண்டு இருளை நீக்கிக் கொண்டு இருந்தான் என்கின்றது.

நட்சத்திரங்களும் அவைகளின் அதிபதியான சந்திரனும் ஒளி இழந்தன என்பதை நம் உரையாசிரியர்கள், நட்சத்திரங்களும், சந்திரனும் வேற்று உரு கொண்டன என்பார்கள்.

பாக்குச் சோலைகளில் மடல் விரிந்து, பாளைகள் வாசனையை அளித்ததால், விடியற்காலை காற்று அவற்றினை சேர்த்துக் கொண்டு, பொழுது புலர்ந்ததை தெரிவிக்கிறது. இந்த பாசுரத்தில், “வண் பாளைகள்” என்று ஆழ்வார் கூறுகிறார். வண் என்றால்
ஒளதார்யம் – தன்னிடத்தில் உள்ளதை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவது. இங்கு பாளைகள் தன்னிடம் உள்ள வாசத்தை காற்றுக்கு மறுக்காமல் கொடுப்பது என்று கூறுவது அழகே.

எல்லாவிதமான எதிரிகளையும் அழிக்கவல்ல, மிக ஒளியுடன் விளங்கும் சக்கரத்தாழ்வானை கையில் ஏந்தி இருக்கும் பெருமாளின் அழகை அடியவர்கள் காண எழுந்தருள வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

நான்காம் பாசுரம்

எருமைக்கன்றுகளை மேய்ச்சலுக்காகக் கட்டவிழ்த்து விடுவதற்காக இடையர் ஊதுகிற புல்லாங்குழலோசையும், எருதுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகளின் ஒலியும் எல்லா திசைகளிலும் பரவின.

முந்தைய நாள் மாலை பொழுதில் மது பானத்திற்காக சோலை, வயல், மற்றும் உள்ள நீர்நிலைகளில் உள்ள தாமரை மலர்களினுள் புகுந்த வண்டுகள், சூரியன் மறைய, மலர்கள் தன் இதழ்களை மூடிக் கொள்ள, இரவெல்லாம் அவைகளுக்குள் கிடந்து வருந்தி காலையில் மலர்களின் இதழ்கள் விரிய, வண்டுகள் ஆரவாரம் செய்து, வெளியே கிளம்பின என்று நயம்பட கூறுகிறார்.

தேவர்களின் காரியமும் விசுவாமித்திரர் போன்ற முனிவர்களின் வேள்விகளையும் காப்பதற்கு அசுரர்களையும், எதிரிகளையும் அழித்த, அயோத்திக்கு அதிபதியான பெருமாளுக்கு தாங்கள் கைங்கர்யம் செய்ய வேண்டும் என்றும் அதற்காக பெருமாள் எழுந்தருள வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

விச்வாமித்ரரை முனி என்று கூறாமல், மாமுனி என்று கூறியதை, முன் ஒரு காலத்தில், வேறு மாதிரி இருந்து, பின்னாளில், ஸ்ரீ ராமனின் தயவு வேண்டி தசரதனிடம் சென்றதும், ஸ்ரீ ராமனுக்காக “கௌஸல்யா சுப்ரஜா ராம பூர்வா” என்று பாடி அவரை தினமும் எழுப்பியதும், ஆழ்வார் தனது வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, தானும் இந்த உலகத்து சுகங்களில் மயங்கி இருந்து, பெருமாளின் அருளால், மயர்வற மதிநலம் அருள பெற்று, விப்ரநாராயணராக இருந்தவர் தொண்டரடிப்பொடி ஆழ்வாராக மாறியதும், அவருக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுவதையும் சுவாரசியமாக உரை ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

ஐந்தாம் பாசுரம்

நான்காம் பாசுரத்தில், வயற்காடுகளில் வண்டுகள் விடிந்ததை உணர்ந்தது கூறப்பட்டது; இந்த பாசுரத்தில், பறவைகளும் பொழுது புலர்ந்தது உணர்ந்தமை கூறப்படுகின்றது.

முதலில் வண்டுகளைப்பற்றி சொல்லி, பிறகு பறவைகளைப்பற்றி சொன்னதால், பறவைகள், வண்டுகளைவிட அதிகம் உறங்க ஆசை கொண்டவை என்று ஆழ்வார் சொல்கிறார். அதை வயலுள் வண்டுகள் உணர்ந்தது பக்திமான்களின் உணர்வு போன்றது என்றும் இந்த பாசுரத்தில் சொன்ன, பறவைகள் உணர்ந்தது, உறங்குவதற்கு அதிக ஆசை உள்ள சம்சாரிகள் போன்றது என்றும் பெரியவாச்சான்பிள்ளை என்ற ஆச்சாரியார் தனது உரைகளில் கூறி உள்ளார்.

இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில் ” என்று சொன்னது, விபீஷணன் வழிபட்ட பெருமாள் என்றும் விபீஷணனுக்கு, (பங்குனி உத்திர ப்ரம்மோத்ஸவம்) பகவத் கைங்கரிய அனுபவம் கொடுத்தது போல், தனக்கும் கைங்கர்ய பிராப்தி அருள ஆழ்வார் வேண்டுகிறார்.

இந்த பிரபந்தத்தில் உள்ள எல்லா பாசுரங்களிலும் “அரங்கா”, “பள்ளி எழுந்தருளாயே” என்று பாடிய ஆழ்வார் இந்த ஒரு பாடலில் மட்டும் “இலங்கையர் கோன் வழிபாடுசெய் கோயில் ” என்று திருவரங்க திவ்யதேசத்தைக் குறிப்பிட்டு இருப்பது விபீஷணனுக்குச் சேர்க்கும் மற்றொரு பெருமையே ஆகும்.

ஆறாம் பாசுரம்

பன்னிரண்டு தமிழ் மாதங்களுக்கும் ஒவ்வொரு பெயர் கொண்ட ஆதித்யர்கள்(சூரியன்), பதினொன்று ருத்திரர்கள் (சிவன்) , தேவர்களுக்கு சேனாதிபதியான ஷண்முகக் கடவுள், எம கிங்கரர்கள், எட்டு வசுக்கள் மற்றும் பற்பல தேவதைகள், அவர்கள் எல்லோருடைய பரிவாரங்கள், பெருமாள் திருக்கண் மலர்வதை முதலில் தரிசிக்க திரண்டு வந்து உள்ளார்கள். ஆகவே தாங்கள் எழுந்து அருள வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

இந்த பாசுரத்தில் முதலில் ஆறுமுகன் என்று கூறி, பின்னர் குமரதண்டம் என்று கூறுவது, முருகனின் ஆயுதத்தையும், அங்கு வந்துள்ள மற்ற எல்லா தேவதைகளின் ஆயுதங்களையும் குறிக்கும் என்பது ஒரு பொருள். குமரதண்டம் என்பது எப்போதும் இளமையில் இருக்கும் தேவர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

ஏழாம் பாசுரம்

தேவலோகத்தில் இருந்து தேவர்களும், முனிவர்களும், எம கிங்கரர்களும், இந்திரன் தன்னையுடைய ஐராவதம் என்னும் யானையுடனும், கந்தர்வர்கள் நெருக்கவும், வித்யாதரர்கள் தள்ளவும், இவர்களுடன் யக்ஷர்களும் சேர்ந்து பெருமாளுடைய கோவிலின் வாசலில், பூமியிலும் ஆகாயத்திலும் இடம் இல்லாமல் பெருமாளின் திருவடி தொழுவதற்காக மயங்கி நிற்பதால், தேவரீர் கண் மலர்ந்து அருள வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.

எட்டாவது பாசுரம்

இந்த பாசுரத்தில், ஆழ்வார், பெருமாளின் திரு ஆராதனத்திற்கு எல்லா பொருட்களும் தயாராக உள்ளது என்றும் சூரியன் தனது ஒளியை எல்லா திசைகளிலும் பரப்பி இருட்டினை முற்றுமாக விலக்கி விட்டான் என்று சொல்லி பெருமாளை திருக்கண் மலர வேண்டுகிறார்.
வம்பவிழ் வானவர் என்று சொன்னதை என்றும் இளமையுடன் இருக்கும் வானவர் என்றும், அல்லது வம்பவிழ் வாயுறை என்று கொண்டு, வாசம் மிகுந்த அருகம்புல் என்றும் கொள்ளலாம்.

ஒன்பதாவது பாசுரம்

குற்றமற்ற இசை வாத்தியங்கள் முழங்கின. குற்றமற்ற வாத்தியங்கள் என்பது நாதம் நன்கு உண்டாகும் வாத்தியங்கள் என்பதாகும். இந்த வாத்யங்களுக்கு இணையாகப் பாடவல்லவர்களும் மற்றும் வானத்தில் சஞ்சரிக்கும் தேவர்களும் மகரிஷிகளும், இந்த பூவுலகில் சஞ்சரிக்கும் முனிவர்களும் சித்தர்களும் பெருமாளின் திருவடி தொழுவதற்கு சிறியோர் பெரியோர் என்று வித்யாசம் பாராமல் நெருக்கத்தில் காத்து இருக்கின்றனர் என்று ஆழ்வார் சொல்கிறார். நாளோலக்கம் என்று சொன்னது, காலையில் சிறந்த சிம்மாசனத்தில், தன்னுடைய பெரிய பரிவாரங்களுடன் எழுந்தருளி எல்லோருக்கும் தனது கருணையைப் பொழியும் சபை ஆகும்.

பத்தாவது பாசுரம்

இந்த பாசுரம், மேற்கூறிய எல்லோரையும் தவிர்த்து தான் பெருமாளுக்கும் பாகவதர்களுக்கும் சேவகன் என்று தோற்றும்படி பூக்குடலையும் தோளுமாக வந்து நிற்கின்ற அடியேனை அங்கீகரித்தருள வேண்டும் என்ற பாடல்.

கூடையும் பொலிந்து தோன்றிய தோள் ” என்பதற்கு உரையாசிரியர் சொன்னது, பெருமாளுக்கு சங்கும் சக்கரமும் அடையாளமாக இருப்பது போல், வனவாச காலத்தில் லட்சுமணனுக்கு, மண்வெட்டியும், கூடையும் அடையாளமாக இருந்தது போல், தொண்டரடிப்பொடி ஆழ்வாருக்கு பூக்குடலை ஆயிற்று என்கிறார். லட்சுமணனை குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம், அவர் பகவத் கைங்கர்யத்திற்கு மிகச் சிறந்த உதாரணம்.

ஸ்ரீ ராமனுக்கு சேவை செய்வதற்காகவே பிறந்த லக்ஷ்மணன், ஸ்ரீ ராமன் கூடவே இருந்து, வனவாசம் சென்ற போதும், தான் மட்டும், அவர்கள் கூடவே சென்று,  யுத்தம் முடிந்து பட்டாபிஷேக காலத்தில் இராமனின் வில்லையும் சேர்ந்து சுமந்து தொடர்ந்து தன் கைங்கர்யங்களை செய்தவன் லக்ஷ்மணண். லக்ஷ்மணன் பெருமாளுக்கு எப்போதும் கைங்கர்யம் செய்யும் நித்யஸூரிகளில் ஒருவரான, ஆதிசேஷனின் அம்சம் என்றும் கூறுவதுண்டு. ஐந்து தலை உடைய ஆதிசேஷன் ஆனவன் திருமாலுக்கு எப்போதும்,

“சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம், நின்றால் மரவடியாம், நீள்கடலுள் என்றும் புணையாம்”  (முதல் திருவந்தாதி, 53) 

அதாவது ஆதிசேஷன் எப்போதும் ஏதாவது ஒரு வகையில் திருமாலுக்கு சேவை செய்து கொண்டு இருப்பான்.   அதுபோலவே லக்ஷ்மணனும் எப்போதும் ஸ்ரீ ராமருக்கு சேவை செய்து வந்தார்.

உன் அடியார்க்கு ஆட்படுத்தாய்” என்பதற்கு உரையாசிரியர் ,
ஆழ்வார் தம்முடைய திருநாமத்துக்கு ஏற்ப, பாகவத கைங்கரியத்தை வேண்டுகிறார் என்கிறார். இங்கே, சுவாமி நம்மாழ்வாரின், திருவாய்மொழியில் இருந்து “அடியார், தம்அடியார்,அடியார் அடியார் எம் கோக்கள்” (8.10.10) என்ற பாசுரத்தை நினைவு கூறலாம்.

நாலாயிர திவ்யப்ரபந்தத்தில், இந்த திருப்பள்ளியெழுச்சிக்குப் பிறகு வருவது அடுத்த ஆழ்வாரான திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் என்ற பிரபந்தம் ஆகும். அதை அவர், “அமலானாதிபிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்” என்று தொடங்குவது இந்த பிரபந்தத்தில் இருந்து அடுத்த ப்ரபந்தத்திற்கு செல்லும் அந்தாதி வகை போல் உள்ளது.

துடி இடையார் சுரி குழல் பிழிந்து உதறித் துகில் உடுத்து ஏறினர்”  என்று சொன்னது, கண்ணபிரானாகிய பெரியபெருமாளுக்கு அந்த காலத்து யமுனை ஆற்றங்கரையில், கோபியர்களின் ஆடைகளை அணிந்ததை நினைவுபடுத்தி, பெருமாளை உடனே கண் வளர்ந்து அருள பிரார்திக்கிறார்.

சூழ் புனல் அரங்கா ” என்றதற்கு, வைகுந்ததில் உள்ள விரஜா நதியையும், அயோத்தியின் சரயு நதியையும், கோகுலத்தின் யமுனா நதியையும் மறந்து காவேரி நதி சூழுந்துள்ள அரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதனே என்று சொல்வது மற்றொரு சிறப்பு.

தான் என்னும் அகங்காரத்தையும் ஆரவாரத்தையும் ஜீவாத்மாவிலிருந்து எடுத்துவிட்டால், அதுவே அடியேன் என்று ஆகிறது என்பதை விளக்கமாக உரையாசிரியர் சொல்லி முடிப்பது அருமை.

முடிவுரை

ஒரு நூலில் அல்லது காவியத்தில், ஒரே விஷயத்தை முதலிலும், முடிவிலும் சொல்வது சிறப்பாக கருதப்படுகிறது. திருப்பள்ளியெழுச்சியில் “கதிரவன் குணதிசை வந்து அடைந்தான்” என்றும், “மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் ” என்றும் தொடக்கத்தில் பாடிய ஆழ்வார், “கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ, கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ “ என்று முடிவில் சூரியனையும் தாமரையும் பாடி இந்த பிரபந்தத்திற்கு சிறப்பு செய்து உள்ளார். இந்த ஆழ்வாரைப் போலே நம்மாழ்வாரும் ஆண்டாளும், ஆசாரியனான ஆளவந்தாரும் முதலிலும் முடிவிலும் ஒரே கருத்துக்களை கையாண்டு உள்ளனர்.

நம்மாழ்வார் திருவிருத்தம் என்ற பிரபந்தத்தில், முதல் பாடலில் ‘அடியேன் செய்யும் விண்ணப்பம்” என்றார். இந்த பிரபந்தத்தின் கடைசிப் பாடலிலும் “மாறன் விண்ணப்பஞ்செய்த ” என்று முடிக்கிறார்.

ஆண்டாளும் தன்னுடைய திருப்பாவையில் முதல் பாட்டிலும் இறுதிப் பாட்டிலும் “பaறை கொள்ளுவதை” பற்றி சொல்கிறார். “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று முதல் பாடலிலும் “அங்கப் பறைகொண்ட ஆற்றை “ இறுதிப் பாடலிலும் சொல்கிறார்.

யாமுனாச்சாரியார் என்ற ஆளவந்தார் தன்னுடைய ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் என்ற நூலில் முதல் ஸ்லோகத்திலும் கடைசி ஸ்லோகத்திலும் ஸ்ரீ நாத முனிகளை குறிப்பிட்டு பாடியதும் இதைப் போன்றதே.   

இத்துடன், திருப்பள்ளியெழுச்சியை முடித்து அடுத்த வலைப்பதிவில், ஆழ்வாரின் இன்னொரு ப்ரபந்தமான நாற்பத்து ஐந்து பாசுரங்களைக் கொண்ட திருமாலையை பார்க்க தொடங்கலாம்.

இந்த பகுதியில் சில கருத்துக்களை உறுதி செய்ய உதவிய எங்கள் அண்ணா ஸ்ரீ ரங்கநாதனுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இந்த பிரபந்தத்தின் முழு வடிவினை கீழ்கண்ட முகவரியில் காணாலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: