A Simple Devotee's Views
To read this article in English, please click here, thanks.
இந்த வலைப்பதிவில், ஆழ்வார்களை பற்றி பார்த்து வருகிறோம். திருமாலிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்கள் என்பதால் அவர்கள் ஆழ்வார்கள் என்று வணங்கப்பட்டு வருகிறார்கள்.
இதற்கு முன்னால் பெருமாளின் பரத்துவத்தைப் பற்றி அதிகம் குறிப்பிடும் முதல் ஆழ்வார்களான, பொய்கை, பூதம் மற்றும் பேய் ஆழ்வார்களை பற்றியும், திருமாலின் அந்தர்யாமியைப் பற்றி அதிகம் கூறும் நான்காவது ஆழ்வாரான திருமழிசைப்பிரானைப் பற்றியும், பின்னர் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை என்று எல்லாமும் கண்ணனே என்று இருந்த ஐந்தாவது ஆழ்வாரான நம்மாழ்வாரைப்பற்றியும் அவருடன், நம்மாழ்வாரையே தெய்வமாக கொண்டாடிடும் மதுரகவி ஆழ்வாரையும் சிறிது தெரிந்து கொண்டோம்.
அதேபோல் ஆறாவதாக கண்ணனையே குழந்தையாக கொண்டாடின பெரியாழ்வாரைப்பற்றி பார்த்தவுடன், அவரைப் போலவே கண்ணனிடம் அன்பும் காதலும் கொண்ட ஆண்டாளின் பெருமைகளையும் பேசினோம். அடுத்ததாக ஸ்ரீராமனின் பெருமையை கூறும் குலசேகர ஆழ்வாரைப் பற்றியும் சிறிது பார்த்தோம்.
இவர்களைத்தவிர இன்னும் சொல்ல வேண்டிய மூன்று ஆழ்வார்களில் இருவர் திருவரங்கநாதனையே தன் பாசுரங்களில் பிரதான நாயகனாக பாடும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார் ஆவார்கள். மற்றுமொருவர் பரமாத்மாவின் அர்ச்சாவதாரங்களில் மையல் கொண்ட திருமங்கை ஆழ்வார் ஆவார். இவர்களில், ஒருவரான தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்று கொண்டாடப்படும் விப்ரநாராயணரை இந்த வலைப்பதிவில் சிறிது காண்போம்.
இந்த ஆழ்வார், புள்ளபூதங்குடி என்ற திவ்யதேசத்திற்கு அருகே மண்டங்குடி என்ற புண்ணிய தேசத்தில், மார்கழி மாதத்தில், கேட்டை நட்சத்திரத்தில், வைஜயந்தி எனப்படும் பெருமாளின் வனமாலையின் அம்சமாய் ஒரு செவ்வாய் கிழமையில் ப்ராஹ்மண குலத்தில் அவதரித்தார். அவருக்கு இளமையில் விப்ரநாராயணர் என்று பெயர் இடப்பட்டது.
இந்த ஆழ்வார்க்கு ஸ்ரீவைஷ்ணவ சடங்குகளை ஸ்ரீவைகுந்தத்தில் இருந்து வந்து செய்துவித்தவர், சேனைமுதலியார் என்று நம் ஆச்சார்யர்கள் கூறுவார்கள்.
மணவாள மாமுனிகள் என்ற ஆச்சாரியார் இந்த ஆழ்வாரின் அவதாரத்தை பற்றி சொல்லும் போது, மார்கழி கேட்டை, நான்மறையோர் கொண்டாடும் நாள் என்று பெருமை படுத்தினார்.
தன்னுடைய உபதேச ரத்தின மாலை என்ற நூலில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை மாமறையோன் என்றும், வேதத்தின் உட்பொருளை உணர்ந்தவர்களால் கொண்டாடப்படுபவர் என்றும் போற்றுகிறார்.
ஆழ்வார், திருஅரங்கநாதனின் அழகுக்கு ஆட்பட்டு, அவருக்கு சேவை செய்வதையே தன் கடமையாக்கொண்டு அவருக்குக்காக ஒரு நந்தவனம் அமைத்து அதில் பூக்களும் துளசியும் வளர்த்து அவைகளை அரங்கநாதனுக்கு புஷ்பகைங்கர்யம் என்னும் சேவை செய்து வந்தார். நாம் முன்பு பார்த்த பெரியாழ்வார் என்பவரும் பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்ததை நினைவில் கொள்க.
பின்னாளில், திருமங்கை ஆழ்வார் ஸ்ரீரங்கம் கோவில் மதில் திருப்பணி செய்யும் போது, இந்த நந்தவனத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதபடி பார்த்துக்கொண்டார். இதனால், தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் சந்தித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனை தவிர மற்ற ஆழ்வார்கள் சந்தித்துக்கொண்ட வரலாறுகள் :
தொண்டரடிப்பொடி ஆழ்வார் அன்று புஷ்ப கைங்கைர்யம் செய்ததற்காக இன்றும் ஸ்ரீரங்கத்தில், வசந்த உத்ஸவம் என்ற ஒரு ஒன்பது நாள் பண்டிகையாக வைகாசி என்ற தமிழ் மாதத்தில் (மே-ஜூன்) கொண்டப்படுகிறது. அதன்போது பெருமாள் ஒவ்வொரு நாளும் மாலையில் இந்த நந்தவனத்திற்கு வந்து பெருமை சேர்க் கிறார். இதை தவிர மார்கழி கேட்டையிலும் ஆழ்வார் பிறந்த நாள் மிக விமரிசையாக கொண்டப்படுகிறது.
இந்த ஆழ்வாருக்காக திருஅரங்கநாதனே, மஹாலக்ஷ்மி தாயாரின் பரிந்துரையால், இவருடன் தனது திருவிளையாடல்களை நிகழ்த்தி, இவரை எப்போதும் தனது அருகிலேயே இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
இந்த எல்லாவற்றிலுமே, தான் எனும் ஆணவத்தை தவிர்க்கும் பொருட்டு தன்னை சிறுமைப்படுத்திக் கொண்டு, மேலும் பரமனுக்கு அடிமை என்பதினும் அவன் தன் உத்தம அடியார்க்கு அடிமை என்பதை பெரிதாக கொள்ளும் வைணவ மரபுக்கு சிறப்பு சேர்ப்பவையாக அமைந்து உள்ளன.
“தொல் புகழ் சேர் அன்பர்க்கே தொண்டு கொண்டான் வாழியே” என்ற பெருமையும் பெற்றவர் இந்த ஆழ்வார்.
இந்த ஆழ்வார் அருளிய திவ்யப்ரபந்தங்கள் இரண்டு. முதலில், நாற்பது ஐந்து பாசுரங்கள் கொண்ட திருமாலை. திருமாலை அறியாதார், திருமாலயே (பெருமாளையே) அறியாதவர் என்று பழமொழி கூறும் அளவுக்கு பிரசித்தி பெற்றது. அடுத்தது, அர்ச்சாவதாரத்தில் அரங்கனைத் துயில் எழுப்பும் விதமாக இயற்றப்பட்ட திருப்பள்ளியெழுச்சி. பொதுவாக, ஒவ்வொரு நாளும், காலையில் பெருமாளை எழுப்புவதற்கு எல்லா வைணவக் கோவில்களிலும் பாடப்பாடுவது.
நஞ்ஜீயர் என்னும் ஆச்சார்யர் தான் எழுதிய திருமாலைக்கான உரையில், சம்சாரத்தில் உழன்று கிடந்த ஆழ்வாரை, பெருமாள், திருமாலையில் அஞ்ஞானத்தில் இருந்து மயர்வற மதிநலமருளி விழிப்பித்தான் என்கிறார். பின்பு திருப்பள்ளியெழுச்சியில் ஆழ்வார், யோக நித்திரையில் இருந்த பெருமாளை, எல்லாம் தயாராக உள்ளது, திருக்கண் மலர்ந்து தொண்டரடிபொடி என்னும் தன்னை பகவத் பாகவத கைங்கர்யம் செய்ய தகுந்தவன் என்று அருள் புரிய வேண்டும் என்பதை “அளியன் என்று அருளி உன் அடியார்க்கு ஆட் படுத்தாய்” என்று பிரார்த்திக்கும் பிரபந்தம் ஆகும் எனச் சொல்கிறார்
நாம் முதலில் நமது அடுத்த வலைபதிப்பில் திருப்பள்ளியெழுச்சியைப் சிறிது பார்த்துவிட்டு பின்னர் திருமாலையைப் பற்றி பார்ப்போம்.