திருமாலிருஞ்சோலை – செஞ்சொற் கவிகாள்

To read this in English, please click here, thanks

நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்யதேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம்.  அடுத்து, நம் சம்பிரதாயத்தில் தெற்கு  வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை  திவ்யதேசத்தைப் பற்றி ஆழ்வார் பாடிய பதிகங்களான “கிளரொளி இளமை ” (2.10), “முடிச் சோதியாய் ” (3.1) மற்றும் “முந்நீர் ஞாலம்” (3.2) ஆகியவற்றில் ஒரு சில விவரங்களை பார்த்தோம். மூன்றாம் பத்தில் அழகரைப் பற்றி பாடிய ஆழ்வார் மீண்டும் இறுதியில் பத்தாம் பத்தில் “செஞ்சொற்கவிகாள்” (10.7) என்ற பதிகத்தில் திருமாலிருஞ்சோலை அழகரைப் பற்றி கூறிய ஒரு சில விவரங்களை இந்த வலைப்பதிவினில் பார்ப்போம் .   

அடியேன் செய்யும் விண்ணப்பம்” என்று திருவிருத்தத்தில்பொய் நின்ற ஞானமும் பொல்லா  ஒழுக்கும் அழுக்கு உடம்பும்”  என்ற முதல் பாசுரத்தில்  இருந்து ஆழ்வார் பெருமாளை தொடர்கிறார். இப்படி ஆழ்வார், பெருமாள் பின் செல்வது, திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழியில் முதல் ஒன்பது பத்துக்களிலும், பத்தாம் பத்தில் ஐந்தாம் பதிகம் வரையிலும் தொடர்கிறது. ஆறாம் பத்து முதல் பத்தாம் பத்து முடிய பெருமாள், ஆழ்வாரை பின் தொடர்ந்து செல்வது போல் அமைந்து உள்ளது. ஆறாம் பத்து, திருவட்டாறு திவ்யதேசத்தைப் பற்றியது. ஆழ்வாரின் பக்தியை மெச்சி பெருமாள், அவருக்கு அருளநினைத்து, (ஏகாந்தமாக) தனியாக இருக்கும் திருமாலிருஞ்சோலைக்கு ஆழ்வாரை அழைக்கிறார்.

இந்த பதிகத்தில்(10.7), ஆழ்வாரை அவரது இவ்வுலகத்து
திருமேனியோடு பரமபதத்திற்கு அழைத்துசெல்ல ஆசை கொண்டான். ஆழ்வார், அழகரிடம், வேதமானது இந்த பூ உடலை இந்த உலகத்திலேயே விட்டு விட்டு ஜீவாத்மாவை மட்டுமே செல்லும்படி சொல்லி இருக்கிறது என்று சொல்லி அழகருடன் செல்ல மறுத்தார்.  அழகரும் ஆழ்வாரின் சொற்களுக்கு கட்டுப்பட்டு ஆழ்வாரை வேதத்தின் படியே நடக்க ஆசீர்வதித்தார்.

செஞ்சொற் கவிகாள்

இந்த பதிகத்தில் ஆழ்வார், பெருமாளின் சௌசீல்யத்தின் பெருமையை சொல்கிறார். எம்பெருமானுடைய எல்லா குணங்களைக் காட்டிலும் சீல குண மிகவும் சிறப்பானது, அதில் இருந்து தப்பிப் பிழைப்பது அரிது என்றும், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டு அவனுக்கு சேவை செய்யுங்கள் என்றும் சொல்வதை ஆழ்வார் “உயிர் காத்து ஆட்செய்மின்” (10.7.1) என்கிறார்.

சீல குணம் என்பது பெரியவன் சிறியவனோடு, அவன் பெருமையும், இவன் சிறுமையும் தோன்றாதபடி, சரி சமமாக இருப்பது. நம் உயிரை காத்துகொண்டு அவனுக்கு சேவை செய்யுங்கள் என்று ஒரு அர்த்தம் இருந்தாலும், ராமானுஜர் இதையே, பரமாத்மாவின் உயிரைக் காத்து அவனுக்கு சேவை செய்யுங்கள் என்பாராம். பரமாத்மா பெரியவன் என்பதால், அவன் சீல குணத்தைக் காட்டும் போது, “நீராய் உருகும் என்னாவி“(சிறிய திருமடல், திருமங்கை ஆழ்வார்) என்பது போல், நாம் உருகி அவனை தடுக்க, அவன் விட்டு விலகி செல்லும் அபாயம் உள்ளது. அவன் சென்று விட்டால் யாரைக் குறித்து கவி பாடுவது, ஆகவே அவன் உயிரை காத்து, அவன் சொன்னபடி செய்து அவனை அனுபவிக்கப் பாருங்கள் என்று ஆழ்வார் சொல்வதாக ராமானுஜர் சொல்கிறார். கவி என்றால், அர்த்தத்தை பெரிதாக கொள்ளாமல், எதுகை மோனையுடன் எழுதுவது. சொற்கவி என்றால், அர்த்தத்தையும் முக்கியமாக கொண்டு தன்னுடைய சுய லாபத்திற்காக / பயனுக்காக எழுதுவது. செஞ்சொற்கவி என்றால், பயனை எதிர்பாராமல், பகவத் விஷயத்தை மட்டுமே எழுதுவது.

ஆழ்வாரை உபகரணமாகக்கொண்டு, திருவாய்மொழி எழுத அவனே காரணமாக இருந்து, அருகில் இருக்கும் நித்யஸூரிகளும் அறியா வண்ணம், ஆழ்வாரிடம் புகுந்து, அவரது நெஞ்சையும் உடலையும், உயிரையும் ஆட்கொண்டு முழுவதுமாக ஆகி நின்ற மாயன் என்கிறார். அப்படி கலந்த பின் பெருமானுக்கு உண்டான முழுமையும், பெருமையும் மகிழ்ச்சியையும் கண்டு ஆழ்வார் மகிழ்கிறார். பெருமானின் குணநலன்களை ஆழ்வார் உணருகிறார். பெருமானுக்காக தான் பாடிய கவி இனிக்கின்றதையும் ஆழ்வார் கூறுகிறார்.

என்னை முற்றும் உயிர் உண்டு“(10.7.3) என்று இரண்டாவது முறையாக கூறியதை, எம்பெருமானுக்கு லஷ்மீ ஸம்பந்தத்தினால் எவ்வளவு ஏற்றமோ அவ்வளவு ஏற்றம் ஆழ்வாரை அனுபவிப்பதால் உண்டு என்று நம் உரையாசிரியர்கள் கூறுவார்கள். இந்த பாடலில், ஆழ்வார், எம்பெருமான் தனது உயிராகவும், உடலாகவும் ஆனார் என்கிறார். இந்த இடத்தில் ஆழ்வாரிடம் சேர விரும்பியதால், அவன் விரும்பும் இடமான மாலிருஞ்சோலையை விரும்பி, அதற்கு செல்லும் வழியை விரும்பி, அந்த திசையையும் ஆழ்வார் விரும்புகிறார்.

த்ரிவிக்ரமனாக எல்லா உலகங்களையும் அளந்த காலத்தில் இருந்தே திருமாலிருஞ்சோலையின் சிறப்பு பெருமாளுக்கு தெரியும். ஆகவே ஆழ்வாருடன் அனுபவிக்க சிறந்த இடமாக பெருமாள் திருமாலிருஞ்சோலையை தேர்ந்து எடுத்தார். இந்த பாசுரத்தில், ஆழ்வார், “ஞாலத்தூடே நடந்துழக்கி” (10.7.4) என்று சொல்வது, பூமியெங்கும் உலாவித் திரிந்து என்று அர்த்தம் இருந்தாலும், தாவி அன்று உலகு அளந்த த்ரிவிக்ரமனையே நாம் நினைவில் கொள்ள வேண்டும். “நங்கள் குன்றம் கை விடான், நன்கு என் உடலம் கை விடான்” (10.7.4), என்று சொன்னது, இங்கே நின்று அருளி, ஆழ்வாரின் உடலிலும் அதே அளவு ஆசையுடன் உறைந்தான் என்பதாகும்.

பெருமாளே, ஆழ்வாராக இருந்து திருவாய்மொழி இயற்றியதை, பெருமாள் அவதாரமும் திருவாய்மொழி அவதாரமும் ஒரே மாதிரி உள்ளது என்கிறார். “ஆதியஞ் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த (3.5.5)” என்பது அசுரர்களை அழிக்கவும், நல்லவர்களை காப்பதற்கும் அவ்வப்போது பெருமாள் அவதரிப்பதை ஆழ்வார் சொல்வது. திருவாய்மொழியும் விஷ்ணுபக்தர்களை காப்பதற்காகவும், அப்படி கடவுள் பக்தி இல்லாவதவர்களை தண்டிப்பதற்கு தோன்றியதாகும். இதை திருவாய்மொழியும் இராமாயணமும் இரண்டு கண்களாக இருந்து வைஷ்ணவத்தை காலம் காலமாக காக்கும் என்று கிருமிகண்டசோழனின் மகன் சிறு வயதிலேயே சொன்னதை உரை ஆசிரியர்கள் மேற்கோள் காட்டுவார்கள்.

திருவாய்மொழி பெருமாளின் எல்லா குணநலன்களையும் கூறிவிட்டது என்றும் பெருமாள் இன்னும் சில குணநலன்களை அருள வேண்டும் என்பதை “எண்ணாதனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப” (10.7.5) என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். திருவாய்மொழிக்கு முன் பெருமாளின் எல்லா குண நலன்களையும் சொல்லும் பிரபந்தம் ஒன்றும் இல்லை என்பது கருத்து. இப்படி “யானாய் தன்னை தான் பாடி“, என்பது பெருமாளே ஆழ்வாரின் உடலில் புகுந்து, திருவாய்மொழியை இயற்றியத்தை சொல்கிறார். அதன் பெருமையை திருமாலிருஞ்சோலையில் உள்ள வண்டுகள் பேசி மிக உற்சாகமாக பறந்தன என்று ஆழ்வார் இந்த பாசுரத்தில் (10.7.5) கூறுகிறார்.

அடுத்த பாசுரத்தில், (10.7.6) மூன்று முக்கிய பொருள்களை ஆழ்வார் அருளுகிறார். ஒன்று, பெருமான் மூவுலகங்களையும் காலம் காலமாய் தன் திருவயிற்றில் வைத்து காத்தது, அதில் ஆழ்வாரும் அடக்கம் ; அடுத்ததாக, சிவனுக்கும், பிரமனுக்கும் தன் திருவடிகளை மட்டுமே கொண்டு அருள் தந்தது; ஆனால் அவர்களுக்கு தன் திருமுக மண்டலத்தைக் காட்சி கொடுக்கவில்லை. மூன்றாவதாக தனக்கு திருமாலிருஞ்சோலை அழகனாக இருந்து காட்சி தந்து, தன்னை அடிமை கொண்டது.

அடுத்த பாசுரத்தில், (10.7.7) தன்னை ஆட்கொண்ட தேசமான திருமாலிருஞ்சோலை மலையின் பெருமையைக் கொண்டாடுகிறார். பெருமானிடம், சிவன் அருள் வேண்டிய இடம் என்றும், பிரம்மன், இந்திரன், மற்றும் தேவர்களும் முனிவர்களும், துதிக்கும்படியான பெருமான் திருமாலிருஞ்சோலையில் எழுந்து அருளியுள்ளான் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.

 • அடுத்த பாசுரத்தில், (10.7.8) பெருமாள், அவருக்கு உகந்ததான திருமாலிருஞ்சோலை, திருப்பாற்கடல், வைகுந்தம் மற்றும் திருவேங்கடமலை போன்ற திவ்யதேசங்களில் அடையும் இன்பத்திற்கு ஒப்பாக தன்னுடன் சேரும் போதும் பெருமாள் பெறுவதாக ஆழ்வார் சொல்கிறார்.
 • இந்த பாடலில் திருமாலிருஞ்சோலையின் பெருமையை குறித்தே அது முதல் அடியிலேயே சொல்லப்படுகிறது.
 • ஆழ்வார் தனது தலையை, திருமாலிருஞ்சோலை மலைக்கும், வியூகத்திற்கும் (திருப்பாற்கடல் ), ஒப்பிடுகிறார். அதேபோல், திருவேங்கடத்தையும், வைகுந்ததையும் தன்னுடைய உடலுக்கு ஒப்பிடுகிறார்.
 • இதையே நம் உரையாசிரியர்கள், பெருமாளுக்கு பர, வியூக, திருமலை மற்றும் திருமாலிருஞ்சோலை போன்ற தமக்கு உகந்த திவ்ய தேசங்களில் இருப்பதும், ஆழ்வாருடன் இருப்பதும், ஒன்று என்று ஆழ்வாரை உயர்த்தி சொல்வதும் உண்டு.
 • இந்த பாசுரத்தில், தன் தலையும், திருமாலிருஞ்சோலை மலையும், திருவேங்கடமும், வைகுந்தமும், திருப்பாற்கடலும் என்று ‘உம்’ என்ற விகுதி கொண்டு இணைத்துச் சொல்லாமல், தனித்தனியே சொல்வது, எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் இருப்பதைச் சொல்வதாகும்.
 • அதேபோல், பெருமாள், ஆழ்வாரின், மனம், வாக்கு மற்றும் செயல்களில் தனித்தனியேயும், ஒன்றாகவும், முழுவதுமாகவும் இருக்க விரும்புவதை சொல்வார்கள்.
 • இப்படி ஆழ்வார், பெருமாள் தன்னை விட்டு ஒரு நொடியும் பிரியாமல் இருப்பதை கண்டு தன்னுடைய ஜீவாத்மாவின்மேல், உடலின் மேல், சொல்லின் மேல், மற்றும் செயல்களில் பெருமாள் லயித்து கிடப்பதை ஆழ்வார் உணர்ந்து நெகிழ்கிறார்.

அடுத்த பாசுரத்தில், (10.7.9) தன் மனதிற்கு ஒரு உபதேசமும், பெருமானிடத்தில் ஒரு விண்ணப்பமும் செய்கிறார். மனதிற்கு செய்யும் உபதேசம், திருமாலிருஞ்சோலையை வாழி என்று வாழ்த்தி அதனை என்றும் கைவிடாமல் இருக்க சொல்வது, ஏனெனில் அந்த தேசம் தான் பெருமாளுடன் ஆன தன்னுடைய காரியத்தை முடித்துக்கொடுத்த இடம். இதனைக்கேட்ட பெருமாள், ஆழ்வாரைக் கொடுத்தது அவர் சரீரமானபடியாலேயம் அதனையும் கைவிடாமல், ஞானம் சுடர்விடும் அவர் மேனியுடன் ஆழ்வாரை வைகுந்தத்திற்கு அழைத்து செல்ல தயார் ஆனார். இந்த உடலுடன் வைகுந்தத்திற்கு செல்வது உகந்தது ஆகாது என்று அவருடைய உயிரையும் உடலையும் மங்கும்படி செய்ய பிரார்த்திக்கிறார்.

எல்லோரும் தங்கள் உடலை இந்த உலகினில் விட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது நியதி. அதை “தைவீ ஹ்யேஷா குணமயீ  மம மாயா துரத்யயா” என்று, பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணனே சொல்கிறார். அதையே அடுத்த பாசுரத்தில், (10.7.10) பெருமாள், ஆழ்வாரை இந்த உடலோடு வைகுந்தத்திற்கு அழைத்து செல்ல விரும்பும் போது, பெருமாள் அவருக்கு உபதேசித்த, ஜீவாத்மாவின் பெருமைகளை நினைவு படுத்துகிறார். இதனை பெருமாள் ஆழ்வாருக்கு “கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து ” (8.8) என்ற பதிகத்தில் சொல்லியிருப்பதை நினைவில் கொள்ளலாம்.

 • பஞ்ச பூதங்கள் ஐந்து (நிலம், நீர், தீ, காற்று, வானம்)
 • ஞான இந்திரியங்கள் ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி)
 • கர்ம இந்திரியங்கள் ஐந்து (வாய், கை, கால், கழிவு துவாரங்கள் இரண்டு)
 • தன்மாத்திரைகள் ஐந்து (சுவை, ஒளி, தொடுஉணர்ச்சி, ஓசை, வாசம்)
 • இவற்றோடு மனம், அகங்காரம், மஹான், அவ்யக்தம் என்னும் நான்கு தத்துவங்கள்
 • இந்த 24 தத்துவங்களையும் ஆழ்வார் இந்த பாசுரத்தில் சொல்லி இவைகளால் ஜீவாத்மா கட்டப்பட்டு இருப்பதையும் அவற்றை விட்டு பிரியவேண்டிய அவசியத்தையும் சொல்லி திருமாலிருஞ்சோலை மலையில் வந்து இருக்கும் பெருமானிடம், தனது உயிரும் உடலும் மங்கும்படி செய்வது தனக்கு கிடைக்கும் பரம பாக்கியம் என்று வேண்டி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

இறுதி பாசுரம், இந்த பதிகத்தைப் படிப்பதால் உண்டாகும் பலனை சொல்கிறது. மகான், அகங்காரம் என்பவைகள் கூட்டாக உள்ள தேகத்தை மங்க செய்ய வந்த பதிகம் என்றும் ஆழ்வார் மிக செருக்கோடு எழுதிய பதிகம் என்றும் கொள்ளலாம். ஒவ்வொரு பாசுரத்தில் திருமாலிருஞ்சோலை என்று சொல்லிவிட்டு, மீண்டும் கடைசி பாசுரத்தில் மீண்டும் இந்த பத்தும் திருமாலிருஞ்சோலை மலைக்கே என்று சொன்னது, இந்த மலையின் மேல் ஆழ்வாருக்கு உண்டான ஆசைக்கும் மதிப்பிற்கும் சேர்த்து சொன்னது.

மயல் மிகு பொழில்சூழ் மாலிருஞ்சோலை என்று 2.10ல் சொன்னதால், அது அஞ்ஞானத்தை அதிகரிக்கும் மலை ஆனது. அது மயர்வற மதிநலம் பெற்ற ஆழ்வாருக்கே என்பது “முடிச் சோதியாய் உன் முகச் சோதி மலர் ந்ததுவோ” என்ற 3.1ல், கேள்வி எழுப்பியதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதைத் தவிர, எல்லாவற்றையும் அறிந்த பெருமாளுக்கே, இந்த மலையின் மேல் உள்ள மையல் காரணமாக, ஆழ்வாரை இந்த உடலுடன் ஸ்ரீவைகுந்தத்திற்கு அழைத்து செல்லலாம் என்று ஒரு கருத்தும் உள்ளது. அடியவர்கள் சொற்படி மட்டுமே தன்னை மாற்றிக்கொள்ளும் அவதாரம் அர்ச்சை  (அர்ச்சக பராதினகா) ஆகையால், ஆழ்வார் சொன்னபடி அவனை மாற்றிக்கொண்டு ஆழ்வாரின் உடலை தவிர்த்ததுவும் இந்த திருமலையிலே தான் என்பதாலும் ஆழ்வார் இநத பத்தும் திருமாலிருஞ்சோலைக்கே என்று இந்த பாடலில் கூறுகிறார்.

இப்படி ஒவ்வொரு பாசுரத்திலும் திருமாலிருஞ்சோலை மலையை சொல்லி, ஒவ்வொரு பாசுரத்திலும் உடலின் சம்பந்தத்தையம் சொல்லி அதனையும் மங்கச்செய் என்று வேண்டிய பதிகம் என்பதாலும் ஆழ்வார் மோக்ஷம் பெறுவதற்கு உதவிய பெருமாள்களில் முக்கியமான ஒருவருமானதாலும் இந்த தெற்கு வீடான திருமாலிருஞ்சோலை திருமலையை வணங்கி நாம் இந்த திவ்யதேசம் பற்றிய விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்வோம்.

2 Comments on “திருமாலிருஞ்சோலை – செஞ்சொற் கவிகாள்

 1. Nandri Venkatesan. Irundha idathileyE Tirumal “Irum” Solaiyai anubavithOm. Vaazhthukkal. Pranams Swaminathan S

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: