A Simple Devotee's Views
For English version, please click here, thanks
நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்ய தேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும், குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம். அடுத்து, நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை திவ்யதேசத்தைப் பற்றி பார்த்தோம். இந்த வலைப்பதிவினிலும் அழகர் அவர்களேயே தொடர்வோம்.
திருமாலிருஞ்சோலை மலையின் பெருமையும், அழகையும் அனுபவித்த ஆழ்வார் அழகரின் அழகை வர்ணிக்க முற்பட்டபோது, தன்னாலும் மற்றும் எவராலும், பிரம்மன் போன்றவர்களாலும் வேதத்தினாலும், அதை சொல்லி முடிக்க முடியாது என்று சோகத்தில் மூழ்கினார். இந்த பதிகத்தில், அழகருடைய தரிசனத்தை முழுவதுமாக காண்பது எப்போது என்று கவலைப்பட்டபோது, பெருமாள் ஆழ்வாரை வடக்கு திருமலைக்கு அழைக்கிறார்.
இந்த பதிகத்தில் சில பாசுரங்களின் அழகை கீழே காண்போம்.
ஆழ்வார், முதல் பாசுரத்தில் (3.2.1), தனக்கு உபகாரமாக பெருமாள், கருணையுடன், இந்த உலகினைப் படைத்து, அதற்கு மேல், அவன் தந்த உடலினைக் கொண்டு அவனை அடிபணிந்து மோட்ஷம் பெற வேண்டிய தான், அவனை பணியாமல், அந்த சரீரம் / புலன்கள் அழைத்த வழி சென்று காலத்தினை கழித்தேனே என்று கவலைப்படுகிறார்.
“முந்நீர் ஞாலம்” (3.2.1) என்று, ஆற்று நீர், ஊற்றுநீர், வேற்றுநீர் (மழை) என்று மூன்று நீர்களால் ஆன கடல்கள் சூழ்ந்த உலகினைப் படைத்தவன் என்று கூறுவது சிறப்பு. முந்நீர் என்பதற்கு முன்னால் வந்த நீர் என்றும் பொருள் உண்டு. ஆகாயம், வாயு, அக்னி, தண்ணீர், பூமி என்பதே உலகம் படைக்கப்பட்ட வரிசை. உலகம் படைப்பதற்கு முன்பு நீரை படைத்ததால் அது முந்நீர் ஆயிற்று.
பெருமாளுக்கு ஆயிரம் ஆயிரம் நாமங்கள் இருந்தாலும், இங்கே “முகில் வண்ணன் ” என்று சொல்வது எதையும் எதிர்பார்க்காது நீரை மேகம் கொடுப்பது போல், பெருமாள் இந்த உலகத்தைப் படைத்து, நமக்கு இந்த உடலினைப் படைத்த கருணையை சொல்வது. ” எம் முகில் வண்ணன் ” என்று சொல்வதால், ஆழ்வார் இந்த உலகத்தினை அவருக்காகவே படைத்ததாகவும் அப்படி இருந்தும் தான் அவனை பணியாமல் காலத்தைக் கழித்தேனே என்று வருந்துகிறார்.
அடுத்த பாசுரத்தில் (3.2.2), வாமனனாக வந்து அவதரித்து யாரும் கேட்காமலே அவர்கள் இருந்த இடத்திற்கு சென்று, எல்லோருக்கும் தன் திருவடிகளை (சரணாகதி) அருளிய காலத்தை தவறவிட்ட தான், எப்போது அவன் திருவடிகளை அடைவது என்று கேட்கிறார். “வன்மா வையம் அளந்த” என்பது
முன் பாசுரம் போல், இங்கும் “எம் வாமனா” என்பது, தனக்காகவே வாமனனாக அவதரித்ததாக ஆழ்வார் சொல்கிறார்.
அடுத்த பாசுரத்தில், (3.2.3), வாமனனாக அவதரித்த காலத்தில் அவனை அடையமுடியாதவர்களுக்கு உபகாரம் செய்யும் வகையில் கிருஷ்ணனாக அவதரித்த போதும், அந்த வாய்ப்பையும் தான் நழுவ விட்டதாக ஆழ்வார் சொல்கிறார். கிருஷ்ணனாக அவதரித்து பாண்டவர்களுக்கு உதவியதும் தமக்காகவே என்பதை “இருநிலத் தவித்த எந்தாய்” என்பதில் சொல்லி உள்ளார்.
“கொல்லாமாக்கோல் கொலை செய்து பாரத போர் ” (3.2.3) என்று ஆழ்வார் சொல்வது, கொலை செய்யும் ஆயுதமாக பயன் படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படாத, குதிரைகளை ஓட்ட உதவும் சாட்டையைக் கொண்டு, கிருஷ்ண பரமாத்மா, இரண்டு பக்க சேனைகளையும் கொலை செய்துவித்தவன் என்கிறார். கௌரவர்கள் பக்கத்தில் அஸ்வத்தாமா மற்றும் க்ருபாச்சாரியார், பாண்டவர்கள் பக்கத்தில் தர்மன் மற்றும் சகோதர்கள் மட்டுமே பாரதப்போர் முடிவில் உயிருடன் இருந்ததாக சொல்லப்படுகிறது. இங்கே நாலைந்துபேரும் அங்கே ஒன்றிரண்டுபேரும் தவிர மற்ற எல்லோரையும் முடித்து விட்டான் என்று பன்னீராயிரப்படி ஈட்டு ஸ்ரீஸூக்தியில் சொல்லப்படுகிறது.
அடுத்த பாசுரத்தில் “சூழ்ச்சி ஞான சுடரொளி ஆகி” (3.2.4) என்பதில், ‘சூழ்ச்சி’ என்பதற்கு எங்கும் பரந்து நிறைந்து இருப்பதை சொல்கிறார். இப்படி எங்கும் பரந்து இருப்பதும் தமக்காக என்பதை, ‘எந்தாய்’ என்பதில் குறிப்பிடுகிறார். இப்படி எங்கும் பரந்து இருந்தும், எல்லாவற்றையும் சூழ்ந்து இருந்தும், வேண்டாதவர்களிடத்திலும் பரமாத்மா அந்தர்யாமியாய் இருந்தும், தான் மட்டும் விடுபட்டதாகவும், இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைப் போன்று, தனக்காக ஓர் அவதாரத்தைச் செய்து தன் கண்களுக்கு தோன்றும்படி ஆழ்வார் பிரார்த்திக்கிறார்.
அதற்கு பெருமாள், இராமாவதாரம் செய்வதானால் பதினோரு ஆயிரம் ஆண்டுகளும், கிருஷ்ணாவதாரம் செய்வதானால் நூறு ஆண்டுகளும் வேண்டும் என்றும் அதற்கு தற்போது நேரம் இல்லை என்று சொல்கிறார். ஆழ்வார் பெருமாளின் திருஉள்ளதை அறிந்து, அவரிடம், கஜேந்திரன் என்ற யானைக்கோ, அல்லது பிரகலாதனுக்கோ சிறிது நேரம் காட்சி அளித்தது போல் தனக்கு ஒரு தோற்றம் அளிக்காவிட்டால், தன்னுடைய முயற்சியால் எங்கு வந்தது, எப்படி அவனது அழகை ரசிப்பது என்று அடுத்த பாசுரத்தில் (3.2.5), “யான் உன்னை எங்கு வந்து அணுகிற்பேன்” என்று கெஞ்சுகிறார்.
அடுத்த பாசுரத்தில், (3.2.6), “பற் பல்லாயிரம் உயிர்செய்த பரமா” என்று பரமாத்மாவின் பெருமையை சொல்லி, “அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்” என்று அவனை விட்டு நீங்கிய தன்னுடைய தாழ்ச்சியையும் சேர்த்து சொல்கிறார். அவ்வளவு பெருமைகள் உடையவனுக்கு, தன்னுடைய தாழ்ச்சிகளை மாற்றுவது ஒன்றும் கடினம் இல்லை என்பது கருத்து. இதையே, தன்னுடைய தகுதியை வைத்து கொடுப்பது என்றால், ஒன்றும் கிடைக்காது என்றும், அவனுடைய பெருமைகளை வைத்து கொடுப்பது என்றால் எவருமே தப்ப முடியாது என்பதே உண்மை. இப்படி இருக்கும் போது, அவனது திருவடிகளை என்று அடைவது எனக் கேட்டு பாடலை முடிக்கிறார். இந்த பாசுரத்தில் வரும் “பரமா” என்பது பரமஸ்வாமி என்று பெயர் கொண்டு இருக்கும் திருமாலிருஞ்சோலை அழகரையும் குறிப்பிடும் என்று சொல்லலாமோ?
“நின் நன் பொன் சோதித் தாள்” (3.2.6) என்று பெருமாளின் பாதங்களின் பெருமைகளை பாடிய ஆழ்வார் அதன் தொடர்ச்சியாக அடுத்த பாடலில் (3.2.7), உண்மையான ஞானமில்லாதவர்களாகிய நாம், எல்லாக் காலத்திலும் எல்லாவிடத்திலும் நீக்கமற நிறைந்து உண்மை ஞானத்தின் உருவமான ஒளியையுடைய கண்ணபிரானை அடைவதற்கு முடியுமோ?’ என்று வருந்துகிறார். பரம்பொருளை அறியும் ஞானமே உண்மையான ஞானம் என்றும் மற்றவை அஞ்ஞானம் என்றும் விஷ்ணு புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அடுத்த பாசுரத்தில், “மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்’ (3.2.8) என்றதனால் கர்மயோகமும், ‘ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்’ என்றதனால் பக்தி யோகமும், தனக்கு இல்லை என்று கூறுகிறார். இந்த இரண்டையும் சொன்னதால், மூன்றாவதான ஞானயோகமும் சொன்னதாயிற்று.
இந்த பதிகத்திலும் திருமாலிருஞ்சோலை பற்றிய நேரடிக்குறிப்புகள் இல்லாவிடினும் நம் ஆச்சார்யர்கள் இந்த பதிகத்தை அழகர்க்கே என்று கூறுகிறார்கள். இப்படி 2.10ல் தொடங்கி, 3.1 மற்றும் 3.2 பதிகங்களில் திருமாலிருஞ்சோலை அழகரை பாடிய ஆழ்வார் மீண்டும் திருவாய்மொழியின் இறுதியில் 10.7 செஞ்சொற்கவிகாள் என்ற பதிகத்தில், மீண்டும் அழகரை நினைவு கூறுகிறார். அவைபற்றி அடுத்த வலைப்பதிவில் பார்க்கலாம்.