திருமாலிரும்சோலை – கிளரொளி இளமையும் முடிச்சோதியும்

For English version, please click here, thanks 

திருமாலிருஞ்சோலை

நாம் இப்போது, திருவாய்மொழியில் ஆழ்வார் அனுபவித்த சில திவ்யதேசங்கங்களைப் பற்றி பார்த்து வருகிறோம். முதலில், திருவேங்கடமுடையானைப் பற்றியும், தொடர்ந்து திருஅரங்கனைப் பற்றியும்,  குடந்தை ஆராவமுதன் என்ற தலைப்பில் சில தகவல்களையும் பார்த்தோம்.  இந்த வலைப்பதிவில், நம் சம்பிரதாயத்தில் தெற்கு  வீடு என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை அல்லது தற்போது அழகர்மலை என்று பெயர் பெற்ற பாண்டிய நாட்டு திவ்யதேசத்தை பற்றி  நம்மாழ்வார் திருவாய்மொழியில் கூறுவதை சிறிது காண்போம்.

திருமாலிருஞ்சோலை, பாண்டியநாட்டுத் திருப்பதி பதினெட்டில் ஒன்றும், ‘இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை யென்னும் பொறுப்பிடம் மாயனுக்கென்பர்  நல்லோர்” என்றபடி ஆன்றோர் கொண்டாடப்படும் ஒரு திவ்ய தேசம். “உலக மேத்தும், தென்னானாய் வடவானாய் குடபாலானாய், குணபாலதாயினாய்” என்று திருநெடுந்தாண்டகம் (10) என்ற பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் சொன்னபடி, வடக்கு வீடு எனப்படும் திருவேங்கடத்தையும், கிழக்கு வீடு எனப்படும் திருக்கண்ணபுரம் என்ற திவ்ய தேசத்தையும், மேற்கு வீடு எனப்படும் ஸ்ரீரங்கத்தையும் போல் திருமாலிருஞ்சோலை, நம் சம்பிரதாயத்தில் தெற்கு வீடு என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது.  

மால் என்றாலும் இருமை என்றாலும் பெருமை என்ற ஒரே பொருள். திருமாலிருஞ்சோலையில் இவ்விரண்டும் சேர்ந்து ஒரு பொருட்பன்மொழியாய் நின்றன. மால் என்பதற்கு உயரம் என்றும், இருமை என்பதற்கு பரப்பும் என்று கொண்டால், உயர்ந்து பரந்த சோலைகளையுடைய மலை என்று திருமாலிருஞ்சோலைக்கு அர்த்தம் கொள்ளலாம்.

சுவாமி நம்மாழ்வார் திருவேங்கடமுடையானுக்குத்தான் அதிக பாசுரங்கள் (52) கொடுத்துள்ளார்.  அதற்கு அடுத்து அதிக பாசுரங்கள் (46 பாசுரங்கள்) கொடுத்தது, திருமாலிருஞ்சோலை அழகருக்குத்தான்.  அதேபோல், திருமாலிருஞ்சோலை அழகருக்கு உள்ள 128 பாசுரங்களில், அதிக பாசுரங்கள் பாடியதும் சுவாமி நம்மாழ்வாரே  ஆவார்.

தனி பாசுரங்களாக, திருவேங்கடமுடையானை, “கண்ணாவான் என்றும் மண்ணோர், விண்ணோருக்கு தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே” (1.8.3) என்றும், திருக்குறுங்குடி நம்பியை, “நம்பியை தென் குறுங்குடி நின்ற அச்செம்பொன்னே திகழும் திருமூர்த்தியை,”(1.10.9) என்றும் முதல் பத்திலேயே சொல்லியிருந்தாலும், “கிளரொளி இளமை” (2.10) எனத்தொடங்கும் திருமாலிருஞ்சோலை பற்றிய பதிகமே, திருவாய்மொழியில் முழுப்பதிகமாக சொல்லப்பட்ட முதல் திவ்யதேசம் ஆகும்.

கிளரொளி இளமை

தனக்கேயாக என்னை கொள்ளும் இதே” (2.9.4) என்று முந்தைய பதிகத்தில் தான் அடைய விரும்பும் இலக்கான சர்வேஸ்வரனுக்கு மட்டுமே அடிமை செய்ய வேண்டும் என்றும், அதனையும் அவனே அளிக்க வேண்டும் என்றும் ஆழ்வார் வேண்டுகிறார். அதே போல் அந்த பதிகத்தில் ஒல்லை (2.9.1), ஒல்லை (2.9.10), மற்றும் காலக்கழிவு செய்யேல், (2.9.2) என்று ஆழ்வார் தாம் பகவத் கைங்கர்யத்தை பெறுவதில் உள்ள கால தாமதத்தை பொறுத்துக் கொள்ளாத நிலையை வெளியிட்டார். இதனைக் கண்ட சர்வேஸ்வரன், ஆழ்வாருக்கு அவர் விரும்பும் பேற்றினை கொடுப்பதாக தீர்மானித்து விட்டதாகவும், ஆனால் அதனை அவர் இந்த தேகத்தோடு அடையமுடியாதே என்றும், ஆழ்வார் காட்டும் வேகத்தைப் பார்த்தால், இந்த தேகத்தோடே சேவை செய்ய விரும்புகிறார் போலும் என்றும், தாம், தனியாக உள்ள இடமான திருமாலிருஞ்சோலை என்ற திருப்பதியில் வந்து இருப்பதாகவும் ஆழ்வாருக்கு உணர்த்தினார்.

அதனால், அவன் மகிழ்ந்து நிற்கும் இடமும், தான் அடைய வேண்டிய இடமும்  ஒன்றே என்று ஆழ்வார், திருமாலிருஞ்சோலை, அதற்கு அருகில் உள்ள மலை, அதை அடைய வேண்டிய பாதை, அதில் உள்ள ஆர்வம் என்று அனைத்தையும் ஒரு வேறுபாடின்றி தன்னுடைய இலக்காக கொள்கிறார். அதனால், இந்த பதிகத்தில், திவ்யதேச பெருமாளான அழகர் பற்றி ஒன்றும் சொல்லாமல், திவ்யதேசத்தை மட்டுமே ஆழ்வார் முக்கிய விஷயமாக எடுத்துக்கொள்கிறார்.

கிளரொளி இளமை (2.10.1) என்பதற்கு இளமை கெடுவதன் முன்னம், திருமாலிருஞ்சோலை என்ற  திவ்யதேசத்தை அடையுங்கள் என்று ஆழ்வார் உபதேசிக்கிறார். அதே போல், திருமழிசையாழ்வார் தனது திருச்சந்தவிருத்தத்தில் (112), “வாள்களாகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பெய்தி, மாளும் நாள் அது ஆதலால் வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே” என்று கூறுகிறார்.

ஒளி என்பதற்கு ஞானம் என்று பொருள் கொண்டால், பகவத் ஞானம் மறைந்து இந்த உலகியல் பொருள்கள் மேல் ஆசை வருவதற்கு முன்பு என்றும் அர்த்தம் கொள்ளலாம். வளரொளி (2.10.1) என்பதற்கு கைங்கர்யம் செய்பவன், கைங்கர்யம் பெறுபவன் மற்றும் கைங்கர்யம் நடக்கும் இடம் என்று எல்லாம் ஒரே வயதோடும் இளமையோடும் உள்ளது என்பதாகும்.

மதி தவழ் குடுமி” (2.10.2) என்றது, கர்ப்பிணிபெண்கள் மெல்ல மலையில் ஏறுவதுபோல், சந்திரன் மெல்ல தவழ்ந்து ஏறும் மலை, திருமாலிருஞ்சோலை ஆகும்.

தான் அடையவேண்டியது திருமாலிருஞ்சோலை என்று உறுதிசெய்யப்பட்டபின், அதன் சம்பந்தமுள்ள அருகில் உள்ள மலையை அடைந்தாலும் போதும் என்று அடுத்த பாசுரத்தில் சொல்கிறார். (2.10.3)

வரு மழை தவழும் ” (2.10.4) என்றதில் இந்த ஊருக்கு இரண்டு மழை, ஒன்று நின்றவிடத்திலேயே இருக்கும் மேகத்தாலும், மற்றொன்று வருவதும் போவதுமான மேகங்களாலும் என்று சுவாரஸ்யமாக நம் ஆச்சார்யர்கள் சொல்வார்கள். நின்ற இடத்தில உள்ள மேகமானது, எப்போதும் கருணையை பொழியும்  சர்வேஸ்வரன் ஆவான். இரண்டாவது வரியில், மற்ற விஷயங்களில் மனதினை செலுத்தாமல்,  திரு(மாலிருஞ்சோலை) மலைக்கு போகிற வழியை நினைப்பது போதும் என்கிறார்.

புறமலை சாரப்  போவதுகிறியே” (2.10.5) என்று சொன்னதால், பகவானை அடையவேண்டும் என்று இருப்பவர்களுக்கு ஆழ்வார்கள் திருவுள்ளம் போன்று தெளிவாக உள்ளதும், இனியதாய், எப்போதும் நீர் சுரந்த வண்ணம் உள்ளதாய் இருக்கும் திருமாலிருஞ்சோலை மலைக்கு பக்கத்தில் உள்ள மலையை அடைந்தாலும் போதும் என்று கூறுகிறார்.

பிணைசேர் மாலிருஞ்சோலை ” (2.10.6) என்றது, காப்பாற்றப்படும் பொருள் ஆகிய  நாமும், காப்பாற்றும் பொருளாகிய சர்வேஸ்வரனும் பிரியாது வாழும் மலை என்பதாகும். அதே பாசுரத்தில், நினைவது நலமே என்றது, அந்த மலைக்குப் போகும் வழியை சிந்திப்பதே நம்மைப் போன்ற ஜீவாத்மாக்களுக்கு நல்லது என்கிறார்.

நரகழுந்தாயே ” (2.10.7) என்றது, அவனை பிரிந்தால், நரகத்தில் இருப்பது போன்றும், அவனுடன் சேர்ந்து இருந்தால் ஸ்வர்கத்தில் இருப்பது போன்றும் குறிப்பதாகும்.   லக்ஷ்மணன்  ராமரிடத்தில் அவனை பிரிந்து அயோத்தியில் வாழ்வது நரகத்திற்கு சமம் என்றும் அவனுடன் காட்டிற்கு செல்வதே சொர்க்கம் என்று அயோத்யா காண்டத்தில் சொல்வது  உவமையாகும். அது போல், சேஷ சேஷி என்ற தெளிவான சிந்தனையுடன் மாலிரிஞ்சோலை செல்வது நலம் என்று இந்த பாசுரத்தில் உரைக்கிறார். 

நம்மாழ்வார் “விண்ணோர் வெற்பன்” (1.8.3) என்று சொன்னது போலவும், “அமர்ந்து வானவர் வானவர் கோனொடும், நமன்று எழும் திரு வேங்கடம்” (3.3.7) என்று சொன்னது போலவும், வடக்கே திருவேங்கடமலையும், தெற்கே திருமாலிருஞ்சோலை சோலை மலையும் நித்யஸூரிகள் கூட அன்றாடம்  வலம் வரும் இடங்களாகும் என்பதை “வலம் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை” (2.10.8) என்றும், தினமும் திருமாலிருஞ்சோலையில் இருந்து அவனை வணங்குவதே சிறப்பு என்றும் இந்த பதிகத்தில் சொல்கிறார். 

மாலிருஞ்சோலை, தொழக் கருதுவதே” (2.10.9) என்று சொன்னதன்மூலம், பெருமாளைக் கூட சொல்லாமல், திருமாலிருஞ்சோலை மலையை தொழ நினைப்பதே கூட சிறந்தது என்கிறார்.

சூதென்று களவும் சூதும் செய்யாதே” (2.10.10) என்றதில் களவு என்பது பிறர் பார்க்காத போது செய்வது, சூது என்பது ஒருவர் பார்க்கும் போது அவர் கண் எதிரிலேயே செய்வது.  “சூதனாய், கள்வனாய் ” (திருமாலை, 16) என்று நாம் பின்பு பார்க்கப்போகும் ஆழ்வாராகிய தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்பவரும் சொல்கிறார். இவற்றை விலக்கி, திருமாலிருஞ்சோலை செல்வதே ஆத்மாவிற்கு உரிய செயல் ஆகும் என்று இந்த பாசுரத்தில் ஆழ்வார் சொல்கிறார். 

அருளுடையவன் தாழ்” (2.10.11) என்றதில் இருந்து, திருமாலிருஞ் சோலை பெருமாளாகிய கள்ளழகர்க்கு “அருளுடைய பெருமாள்” என்ற திருநாமமும் உண்டு என்பது விளங்கும். இந்த பாசுரங்களை சொல்பவர்களை, அவனுடைய திருவடிகளில் சேர்த்துவிடும் என்று சொல்லி ஆழ்வார் முடிக்கிறார்.

முடிச்சோதி

திருமாலிருஞ்சோலை மலையை அனுபவித்த ஆழ்வார், இந்த பதிகத்தில் (3.1), அழகரின் அழகினை அனுபவிக்கிறார்.  அழகரின் அவயங்களின் பிரகாசத்தினாலும் அழகினாலும் ஆடையும் ஆபரணங்களும் சேர்ந்து ஜொலிப்பதை கண்ட ஆழ்வார், அவனது அழகை சொல்லி முடிக்கமுடியாது என்பதை இந்த பதிகத்தில் உள்ள பாசுரங்களால் சொல்கிறார்.   இந்த உலகத்தில் உள்ள மக்களாலும், மயர்வற மதிநலம் பெற்ற தன்னாலும், வேதங்களாலும், பிரம்மா, சிவன் போன்ற மற்ற தேவதைகளாலும் பெருமாளின் பெருமையும், குண நலங்களையும் சொல்லி முடிக்க முடியாது என்பதே இந்த பதிகத்தின் சுருக்கம்.   

முதற்பாட்டில், (3.1.1) அழகருடைய திவ்ய அவயங்களுக்கும் திருஅணிகலன்களுக்கும் உண்டான பொருத்தத்தின் மிகுதியைக் கண்டு ஆச்சரியப்படுகிறார். திருமுகத்தின் ஒளிமிகுதியால், கிரீடம் பிரகாசிக்கிறதா அல்லது திருஅபிஷேகமாகிய கிரீடத்தின் ஒளி மிகுதியால், அவருடைய திருமுகம் பிரகாசிக்கிறதா என்று ஆழ்வார் வியக்கிறார். திருமுகத்தின் ஒளி ஜொலிக்கின்றதை அனுபவித்த ஆழ்வார், அவயங்களின் அழகால் ஆபரணங்கள் மற்றும் ஆடையும் பிரகாசிப்பதை சொல்கிறார்.

திருஅபிஷேகத்தின் கம்பீரமும் அழகும், அவனே எல்லோருக்கும் சேஷி என்பதை அறிவிப்பதால், ஆழ்வார் முதலில் திருஅபிஷேகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். சேஷி என்று உணர்ந்த உடனே அதற்கு துணைபோகும், திருவடிகளில் பயணிக்கிறார். திருவடிகளின் அழகும் பிரகாசமும், ஆழ்வாரின் கவனத்தை மேல்பக்கம் செலுத்த, பெருமாளின் திரு அரை (இடை), ஆடை, ஆபரணங்கள் மற்றும் திரு மேனி அழகு என்று இவைகளின் பிரகாசத்தில் தனது சந்தேகத்தை தொடர்கிறார். 

அழகரின், அழகை நெஞ்சினாலும் கண்களாலும் முழுவதுமாக அநுபவிக்க வேண்டுமேயொழிய, அதற்கு உபமானம் சொல்லி விளக்க முடியாது என்று அடுத்த பாசுரத்தில் (3.1.2) சொல்கிறார். திருக்கண், திருவடி, மற்றும் திருக்கை முதலிய அவயவங்களுக்குத் தாமரையை உவமையாக மக்கள் பேசுகின்றார்கள் என்றாலும், அவை சரியான உதாரணங்கள் ஆகமாட்டா என்பது பாடலின் முதல் இரண்டு வரிகளின் கருத்து. பொன், நன்பொன், சுட்டுரைத்த நன்பொன் என்று அடுக்கிக்கொண்டே போனாலும், அவைகளை திருமேனியின் பிரகாசத்திற்கு உவமை ஆகாது என்கிறார். முன் பாடல் போலவே இந்த பாசுரத்தில், (3.1.2) பெருமாளின், கண், பாதம், கை என்ற தொடர்ச்சியில் சொல்கிறார். 

அடுத்த பாசுரத்தில், (3.1.3) ஆழ்வார்,

  • பெருமாளுக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லை என்றும், 
  • அவனுடைய அழகிற்கும், பண்பிற்கும் தன்னாலோ, மற்றவர்களாலோ ஒப்பு கூறமுடியாது என்றும்,
  • இந்த உலகத்தையெல்லாம் படைத்தும் இந்த உலகத்தின் நன்மை தீமைகள் சிறிதும் அவன் மேல் படாமல் இருக்கும் அவன் பெருமையாலே அவனுடைய மேன்மையின் எல்லைக்கும், எளிமையின் எல்லைக்கும் எந்த உவமையும் சொல்ல முடியாது என்றும் கூறுகிறார். 

சுருக்கமாக சொல்லும் ஈட்டு ஸ்ரீஸுக்தி, நெஞ்சால் நினைக்க முடியாததை, வாயினால் சொல்ல முடியாது என்று அழகாக விளக்கும். 

அடுத்த பாசுரத்தில் (3.1.4), ஆழ்வார் இந்த உலகத்தில் உள்ள மக்கள் இவ்வளவு அழகாக உள்ள பரமாத்மாவின் அழகிலும், குணங்களிலும் ஈடுபடாமல், வேறு விஷயங்களில் கவனம் செலுத்தும் போது, பெருமாள் அவர்களை திருத்துவதில் கவனம் காட்டாமல், துளசி மற்றும் மலர்களில் மகிழ்வதால், இத்தகைய மக்கள் இழக்கும் இழப்பைப் பற்றி சொல்கிறார்.  

அடுத்த பாசுரத்தில் (3.1.5), ஆழ்வார்,  இயற்கையிலேயே மிகப்பேரொளியாய், நல்ல ஞானமுள்ளவனாக, எல்லாப் பொருள்களிலும் நிறைந்து இருப்பவனான பெருமானின் நல்ல குணங்களை எப்படி சொல்லி முடிப்பேன் என்று கூறுகிறார். பெருமாள் விண்ணுலார்களாலும் சொல்லி முடிக்க முடியாதவன் என்பதே முந்தைய பாசுரத்திற்கும் இந்த பாட்டுக்கும் உள்ள வேறுபாடு ஆகும்.  பெருமாளின் பிரகாசம், பெருமாளுக்காக இல்லை, அடியவர்கள் அனுபவிப்பதற்கே என்று சொல்வது போல் அவருடைய திவ்யமங்கள விக்கிரகம் அமைந்துள்ளது என்று சொல்லலாம். 

ஒவ்வொரு உலகத்திலும் அங்குள்ளவர்களின் ஞானத்தின் அளவை வைத்து ஸ்லோகங்கள் / க்ரந்தங்களின் எண்ணிக்கை இருந்தாலும், நான்கு வேதங்களிலும், யாரால் சொல்லப்படுகின்ற வேதமும், அவன் பெருமைகளையும், குணங்களையும் சொல்லி முடிக்க முடியாது என்பது போல், தான் சொல்வதும் கடலில் விழுந்த ஒரு நீர்த்துளி போல் ஆகுமே தவிர, தானும் முழுதாக சொல்லி முடிக்க முடியாது என்று அடுத்த பாசுரத்தில் (3.1.6) ஆழ்வார் கூறுகிறார். 

அவனால் படைக்கப்பட்ட சிவன், பிரம்மா போன்ற சிறந்த அறிவுள்ளவர்களாலும், அவனுடைய குணங்களை கூறி முடிக்க முடியாது என்று ஆழ்வார் அடுத்த பாசுரத்தில் (3.1.7) சொல்கிறார்.  

ஞான குறைவே இல்லாத பிரமனின் ஞானமும் அவரது பதவிக்காலம் முடிந்தவுடன் குறையும்.  அப்படிப்பட்ட பிரம்மனே பெருமாளின் குணங்களை கூற ஆரம்பித்தாலும், கூடாது, குறையாது இருக்கும் பெருமாளின் திருமேனியின் (அவிகாராய சுக்தாயா நித்யாய பரமாத்மனே – விஷ்ணு சஹஸ்ரநாமம்) ஒரு பகுதியான திருவடிகளின் தேஜஸ் குறையாது என்று சொல்லிய போதும், இது போன்றவர்கள் உயர்த்தி சொல்லும் அளவிற்குத் தானோ, பரமாத்மாவோ அல்லது அவனது இந்த திருவடிகளோ என்று  ஒரு சந்தேகம் வரக்கூடும் என்பதால், ப்ரம்மா போன்றவர்களாலும் பெருமாளின் குணநலன்களை சொல்லி முடிக்க முடியாது என்று அடுத்த பாசுரத்தில் (3.1.8) ஆழ்வார் சொல்கிறார். 

பெருமாளின் மேன்மை நிலை என்பது மட்டுமல்ல, எளிமையையும் சொல்லி முடிக்க முடியாது என்பதை நமக்கு விளக்கவே,  அடுத்த பாசுரம் (3.1.9).  பெருமாளின் மேல் பெரும் பக்தி கொண்ட கஜேந்திரன் என்ற யானை, பல ஆண்டுகள் முதலையுடன் போரிட்டுக்கொண்டு இருந்தபோதும், தான் கொண்டு வந்த மலரினை அவன் திருவடிகளில் சமர்ப்பித்து, அவனை தரிசிக்க வேண்டும் என்பதையே தன்னுடைய விருப்பமாக கொண்டு இருந்ததால், அதனை நிறைவேற்ற, அவன் தன்னுடைய வாஹனமாகிய கருடனின் மேல் ஏறி நேரில் வந்ததாகிய அவனுடைய எளிமை இந்த பாசுரத்தில், சொல்லப்பட்டது. 

வேதங்களினாலும், பரமாத்மாவினால் படைக்கப்பட்டு, அறிவு கொடுக்கப்பட்டவர்களாலும் பெருமாளின் குணநலன்களை சொல்லி முடிக்க முடியாது என்று அடுத்த பாசுரத்தில் ஆழ்வார் சொல்கிறார்.

வேதம் என்றால் விளக்கமாக சொல்வது, மறை என்றால் மறைத்து விடுவது. இந்த இரண்டுமே வேத சாஸ்திரத்தையே குறிக்கின்றன. வேதம் என்பது பரமாத்மாவின்மேல் பக்தி கொண்ட ஆஸ்திகர்களுக்கும், மறை என்பது நாஸ்திகர்களுக்கும் என்று நம் ஆச்சார்யர்கள் சொல்வர். வேதங்கள் பரமாத்மாவை, வேறு ஒரு மேற்கோளை  எதிர்பார்க்காமல் தானாகவே  நேரடியாக சொல்கின்றன.  திகாச புராணம் போன்றவைகளை மேற்கோள் காட்டி நிலை நிறுத்துபவை. எல்லா வேதங்களாலும் அறியப்படுபவன்அவனே என்று சொல்லும் மேற்கோள்களும் உண்டு. அதுவே அடுத்த பாசுரத்தின் (3.1.10) முதல் அடியாக உள்ளது, இரண்டாவது அடி அவனை சர்வேஸ்வரன் என்றும், மூன்றாவது அடியால், அவனால் படைக்கப்பட்டவர்களுக்கு அவனே ஞானத்தை அளித்தான் என்றும், இறுதி வரியினால் அவர்கள் அவனை ஈஸ்வரன் என்று அறிந்தவர்கள் என்றும், அப்படிப்பட்டவர்கள் அவனை புகழுந்து உரைப்பதால் அவன் இறுமாந்து இருந்தால் அவனுக்கு ஏற்றமோ என்று நகைச்சுவையோடு ஆழ்வார் முடிக்கிறார். 

இந்த பதிகத்தில் உள்ள பாடல்களில் ஆழ்வார் அழகரின் அழகை சொல்லிக்கொண்டு வருகிறார் என்பதை நினைவில் கொள்ளலாம். ஆனால் ஒரு பாசுரத்தில் கூட நேரடியாக திருமாலிருஞ்சோலை அழகர் பற்றிய குறிப்பு இல்லை என்பதனையும் குறிப்பிடலாம். 

இந்த பாசுரங்களைத் தொடர்ந்து, முந்நீர் ஞாலம் படைத்த (3.2) என்று ஒரு பதிகமும், இறுதியில் செஞ்சொற் கவிகாள் என்று (10.7) என்று ஒரு பதிகமும் திருவாய்மொழியில், திருமாலிருஞ்சோலை திவ்யதேசத்திற்கு உண்டு, அவைகளை பற்றி அடுத்த வலைப்பதிவில் பார்க்கலாம். 

இந்த பகுதியில் சில கருத்துக்களை உறுதி செய்ய உதவிய எங்கள் அண்ணா ஸ்ரீ ரங்கநாதன் அவர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த பகுதியில் உள்ள பாசுரங்களை கீழ்கண்ட வலைத்தளங்களில் காணாலாம். அவர்களுக்கும் எங்கள் நன்றி. 

http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1428

http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=1417

Click to access kilar.pdf

Click to access mudichchodiyaay.pdf

========================================================
 

One Comment on “திருமாலிரும்சோலை – கிளரொளி இளமையும் முடிச்சோதியும்

  1. Excellent Write up Sir, Thank You very much. Contains many information that are not known to common man like me, Thanks and Pranams, SWaminathan S

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error

Enjoy this blog? Please spread the word :)

RSS
Follow by Email
%d bloggers like this: