Archai/அர்ச்சை
For English version, please click here, Thanks
ஐந்தாவது நிலை
எம்பெருமானின் ஐந்து நிலைகளை நம் பூர்வாச்சார்யர்கள் ஐந்து விதமான நீர் நிலைக்களுக்கு ஒப்பிடுவர். அவை,
- பரத்துவம் – ஆவரணநீர், அண்டகடாகம் என்ற ஓட்டின் மேல் உள்ள நீர்
- வியூகம் – திருப்பாற்கடல் – பாற்கடல்
- விபவம் – அவதாரங்கள் – காட்டாறு வெள்ளம்
- அர்ச்சை – திவ்யதேசங்கள் – காட்டாற்று வெள்ளம் பாய்ந்ததால் மடுக்களில் சேர்ந்த நீர்
- அந்தர்யாமி – பூமிக்குள் மறைந்து கிடைக்கும் நீர் – சரஸ்வதி நதி, அந்தர்வாகினி
இந்த நிலைகளை, ‘பரம் என்பது ஆவரண ஜலம் போன்றது; வியூஹம் என்பது சமுத்திர ஜலம் போன்றது; விபவம் என்பது காட்டாற்று வெள்ளம் போன்றது; அந்தர்யாமி என்பது ஊற்று நீர் போன்றது; அர்ச்சை என்பது கிணற்று நீர் போன்றது’ என்றும் சொல்வதுண்டு.
பரம் என்பது ஆவரண ஜலம் போன்றது. ஆவரண ஜலம் என்பது சத்ய லோகத்துக்கும் மேலே சூழ்ந்து இருப்பது. பூலோகத்தில் தாகம் எடுத்தவனுக்கு ஆவரண ஜலம் பயன்படாது. நமது அருகிலேயே சமுத்திரம் இருந்தாலும் அதிலிருந்து நீரை எடுத்துப் பருக முடியாது. அப்படி, வ்யூஹ மூர்த்தி நம்மால் சுலபமாக சேவிக்க முடியாத அளவுக்கு எங்கேயோ திருப்பாற்கடலில் இருக்கிறார். விபவ மூர்த்திகளோ காட்டாற்று வெள்ளம். மழை பெய்தால் ஏகமாக வெள்ளமாக நீர் போகும்; மழை நின்றால் ஒன்றும் இருக்காது. அந்த மாதிரி அவதாரங்கள் ஒரு காலத்தில் நடந்தவை. அந்தர்யாமி என்பது ஊற்று நீர் போன்றது. கீழே பூமியில் நீர் நரம்பு இருப்பதை வல்லுநர்கள்தான் சொல்ல முடியும். அப்படி சாதாரண உலகவாழ்கையில் இருக்கும் நமக்கு, ஹ்ருதயத்தில் இருக்கும் எம்பெருமானை உணர்வது சுலபமான காரியம் இல்லை. அர்ச்சாவதாரம் கிணற்று நீர் போன்றது.
கிணறு வெட்டி, தண்ணீரும் இருந்து, அதிலிருந்து ஒரு குடம் நீர் பருகக் கொடுத்தால் என்ன கஷ்டம்? அதேபோன்று கோயில் கட்டி விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து, அந்தக் கோயில் நம் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்தால், நமக்கு அனுபவிக்க என்ன கஷ்டம்? அர்ச்சாவதாரத்தில் எம்பெருமான் நம் பக்கத்திலேயே குடி கொண்டிருக்கிறான்.
பகவானின் ஐந்து நிலைகளில், அர்ச்சை என்பது பர, வியூக, விபவ மற்றும் அந்தர்யாமி நிலைகளுக்கு அடுத்த நிலை. நாம் இருப்பது கலி காலத்தில், இங்கு தர்மம் குறைந்து, கலி புருஷன் எல்லோருக்கும் எல்லாவித கஷ்டங்களையும் தாராளமாக கொடுத்துக்கொண்டு இருக்கும்போது, அவற்றில் இருந்து நம் எல்லோரையும் காப்பாற்றுவதற்காக, பரமாத்மா எடுத்த நிலையே அர்ச்சை ஆகும்.
முன்பே சொன்னது போல் எல்லா நிலைகளிலும் பரமாத்மா சமமாகவே உள்ளார்.
அர்ச்சை என்றால் என்ன ?
பர, வியூக, விபவ நிலைகளை நாம் பார்க்க முடியாமல் போனதால், அவைகளின் பிரதிநிதியாக வந்த நிலை தான் அர்ச்சை. கோவில்களிலும், விடுகளிலும் உள்ள சிலைகள் மற்றும் படங்கள் அர்ச்சையில் அடங்கும். மேலும்,
- சிலைகளாய் (எல்லா கோவில்களிலும்)
- வன ரூபமாய், காடாய் (நைமிசாரண்யம்)
- நீர் ரூபமாய் (புஷ்கரம்)
- சித்திரங்களில் (கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ என்று பாடிய நம் சடகோபனை பாடினையோ என்று கம்பரிடம் கேட்ட, ஸ்ரீரங்கம் மேட்டு அழகிய சிங்கர் போன்றவை )
- நம் வீடுகளில் (சாளக்கிராமம் மற்றும் படங்கள்)
சிறப்புகள்
அர்ச்சையின் சிறப்புகள் சில :
- பரமாத்மாவின் எளிமைக்கு சிறந்த நிலை அர்ச்சை ஆகும். கோவில்களில் உள்ள சிலைகளுக்காவது சில நியமங்கள் உண்டு ஆனால் வீடுகளில் வந்து நம்மோடு துணை இருக்கும் சாளக்கிராமங்களில் தன்னை இன்னும் தாழ்த்திக்கொண்டு நியமங்களை குறைத்துக்கொள்ளுகிறான்.
- மற்ற எல்லா நிலைகளிலும் நாம் பகவானை பார்க்க முடியாது, அர்ச்சை ஒன்றில் மட்டும் தான் நாம் பகவானை தரிசிக்க முடியும்
- பரவாசுதேவன் நித்யசூரிகளுக்கே சேவை சாதிக்கிறார்
- வியூக வாசுதேவன், தேவாதி தேவர்களுக்கு காட்சி அளிக்கும் இடம்
- திருமழிசை ஆழ்வார் தவிர வேறு யாரும் அந்தர்யாமியை தரிசித்ததாக சரித்திரம் இல்லை (“நின்றதும்,இருந்ததும், கிடந்ததும் என் நெஞ்சுளே“).
- விபவ வாசுதேவனான, ராம, கிருஷ்ண, நரசிம்ஹ, வாமன, திருவிக்கிரம அவதாரங்கள் ஒரு குறிப்பிட்ட சில காலங்களுக்கே. அந்த அந்த காலங்களில் வாழ்ந்தவர்கள் மட்டுமே பகவானை தர்சிக்க முடிந்தது
- ராமர் வாழ்ந்து இந்த நாட்டை ஆண்டது சுமார் 11000 ஆண்டுகளாம். கிருஷ்ணர் இந்த பூமியில் அவதரித்து கடாச்ஷித்தது சுமார் 100 முதல் 120 ஆண்டுகள் வரை. நரசிம்ஹ அவதராம் சில மணித்துளிகளே (ஒன்றரை முஹுர்த்த நேரமே – 72 நிமிடம்). வாமன அவதாரமும் மகாபலி சக்ரவர்த்திக்கு மோட்சம் அளிப்பது வரையில் தான். ஆக எல்லா அவதாரங்களுமே ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள்தான். ஆனால் அர்ச்சை ஆண்டாண்டு காலமாக, இங்கேயே இருந்து, நாம் எப்போது சென்றாலும், நான் இருக்கிறேன் என்று நமக்கு தைரியம் கொடுப்பது அர்ச்சை தான்.
- மற்ற எல்லா அவதாரங்களின் காலத்தில் நாம் வாழவில்லை. ஆகவே நமக்கு உள்ள ஒரே பாதுகாப்பு அர்ச்சைதான். அதைதான் ஆழ்வார்களும் ‘பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக்களத்தானாய்‘ என்று பாடி மற்று எல்லா அர்ச்சை க்ஷேத்திரங்களையும் குறிக்கும் வகையில் திருமூழிக்களத்தை உதாரணமாக சொன்னார்கள்.
- எவ்வாறு நடந்தனையோ எம் இராமாவோ (பெருமாள் திருமொழி 9.2), என்று தானாகவே எழுந்து நடந்து செல்லக்கூடிய அவதாரம் போல் அன்று அர்ச்சை.
- மற்ற எல்லா நிலைகளிலும் பெருமாள் தன் இச்சைப்படி நடந்துகொள்வார். அவரால் முடிந்தாலும், அர்ச்சகர்கள் சொற்படி மட்டுமே தன்னை மாற்றிக்கொள்ளும் அவதாரம் அர்ச்சை (அர்ச்சக பராதினகா)
- இராம, கிருஷ்ண அவதாரங்கள், பெரும்பாலாக மக்களை கைப்பற்றினாலும் அவ்வபோது பாவிகளுக்கு தண்டனயும் கொடுத்து விடும். ராவண, சிசுபால, ஹிரண்யகசிபு ஆகியவர்களை கொன்று தண்டனை கொடுத்தது போல் என்றும் திருவேங்கடமுடயானோ, ரங்கநாதனோ அர்ச்சையை விட்டு எழுந்து யாருக்கும் தண்டனை கொடுத்தது இல்லை.
- அர்ச்சை என்பது பெருமாளின் ஒரு நிலை. அந்த நிலையில் அவர் உள்ள இடம் க்ஷேத்திரங்கள் ஆகும். க்ஷேத்திரங்கள் உருவாகி பெருமாளுக்காக காத்துகொண்டு இருகின்றன. ஆழ்வார்கள், பெருமாளை பாடியதோடு அல்லாமல் அந்த க்ஷேத்திரங்களையும் பாடி இருக்கிறார்கள். க்ஷேத்திரங்களுக்கே தனி பெருமை, அவைகளை சென்று அடைந்தாலே பலன் என்றும் கூறுவார்கள். (பரன் சென்று சேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ, நம் வினை ஓயுமே).
- ஆழ்வார்கள் பாடிய ஸ்தலங்கள், திவ்ய தேசங்கள் (108) ஆகும், மற்றவை ஸ்தலங்கள் அல்லது க்ஷேத்திரங்கள்.
- அர்ச்சைதான் நாம் சரணாகதி செய்வதற்கு இருக்கும் ஒரே வழி ஏன் என்றால் மற்ற நிலைகளை நாம் தரிசிக்க முடியாது. இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் நம் பெருமாள் முன்னே சரணாகதி கேட்டார்.
- அர்ச்சை என்பது இப்போது நம் காலத்தில் உருவானது இல்லை. ஆழ்வார்கள் ஆச்சார்யார்கள் காலத்தைத் தாண்டி புராண காலத்திலும் அர்ச்சை உண்டு. பீஷ்மர் சொன்ன மகாபாரதத்தில் உள்ள விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அர்ச்சை பற்றி சுமார் 40 நாமங்கள் கொண்ட தொகுப்பு உள்ளது.
பிரிவுகள்
கீழே கொடுக்கப்பட்ட க்ஷேத்திரங்கள் யாவும் உதாரணங்களே, முழு பட்டியல் அல்ல, அவை எந்த ஒரு வரிசையிலும் சொல்லப்படவில்லை. இவை நாம் படிப்பதற்கும் ரசிப்பதற்குமே.
- தோற்றப் பாங்கு – (“புளிங்குடி கிடந்து, வரகுணமங்கை இருந்து, வைகுந்ததுள் நின்று” என்று நம்மாழ்வார் பாடியபடி அல்லது “நின்றது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து, அன்று வெ கணை கிடந்தது ” என்று திருமழிசை ஆழ்வார் பாடியபடி )
- நின்றான் – 60 (திருப்பதி, திருமாலிரும்சோலை)
- நடந்தான் – 3 (திருக்கோவிலூர், சீர்காழி – காழிசீராம விண்ணகரம், உலகளந்தபெருமாள்)
- கிடந்தான் – 24 (ஸ்ரீரங்கம், திரு இந்தளூர்)
- இருந்தான் – 20 (திருவரகுணமங்கை – நத்தம், பரமேச்சுர விண்ணகரம்)
- எங்கும் நிறைந்து இருப்பது- 1 (நைமிசாரண்யம்)
- திவ்ய தேசங்களில் திருமுக திசைகள்
- கிழக்கு நோக்கிய திருமுகம் – 78 (தில்லைநகர் திருச்சித்ரகூடம், கூடலழகர்)
- மேற்கு நோக்கிய திருமுகம்- 19 (திருநகரி, திருக்கச்சி/அத்திகிரி, முக்திநாத்)
- வடக்கு நோக்கிய திருமுகம் – 3 (அயோத்தியா, உறையூர் )
- தெற்கு நோக்கிய திருமுகம் – 7 (ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருமெய்யம் )
- எங்கும் நிறைந்து இருப்பது – 1 (நைமிசாரண்யம் )
- திவ்யதேசங்கள் (108) உள்ள இடங்கள்
- சோழ நாடு -40
- பாண்டிய நாடு – 20
- தொண்டை நாடு – 22
- மலை நாட்டு – 11 (மலையாள திவ்ய தேசங்கள்)
- நடுநாடு – 2
- வட நாடு – 11
- விண்ணுலகம் – 2
- விபவத்தின் உருவாய்
- கிருஷ்ண க்ஷேத்திரங்கள் (திருகண்ணன்குடி, திருகண்ணமங்கை, திருகண்ணபுரம், கபிஸ்தலம், திருகோவிலூர், துவரகா , மதுரா) (முதல் ஐந்தும் பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள் எனப்படும்)
- நரசிம்ஹ க்ஷேத்திரங்கள் (அஹோபிலம், சோளிங்கர், காட்டு அழகியசிங்கர், பூவரசன்குப்பம், திருக்குறையலூர், ரேணிகுண்டா அருகில் மங்களகிரி)
- இராம க்ஷேத்திரங்கள் (அயோத்யாவில் தசரதராமானாக, திருப்புட்குழியில் விஜயராகவனாக, திருப்புல்லாணியில் பட்டாபிராமானாக, திருவெள்ளியன்குடியில் கோலவில்லி இராமனாக, வடுவூரில் சக்ரவர்த்தி திருமகனாக, குடந்தையில் இராஜாராமனாக, தில்லைவிளாகத்தில் வீர கோதண்டராமனாக , மதுராந்தகத்தில் ஏரி காத்த இராமனாக)
- வராக க்ஷேத்திரங்கள் (ஆழ்வார் திருநகரியில் ஆதிபிரானாக, இடது தொடையில் பூமாதேவியை கொண்ட திருஇடவெந்தை, வலது தொடையில் பூமாதேவியை கொண்ட திருவலவெந்தை அல்லது திருகடல்மல்லை, பூவராகவனாக ஸ்ரீமுஷ்ணம்)
- ஸ்ரீகாகுளம் அருகே கூர்ம அவதாரத்திற்காக ஸ்ரீ கூர்மம் என்ற ஊரில்
- திருவிக்கிரம க்ஷேத்ரங்கள் (திருகோவிலூர், காழிசீராம விண்ணகரம், காஞ்சி உலகளந்த பெருமாள்)
- கோவில் கட்டமைப்பில்
- கடற்கரை கோவில்களில் (பூரி ஜகந்நாதன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மகாபலிபுரம் ஸ்தலசயன பெருமாள், திருநாகை சௌந்தரராஜ பெருமாள், திருப்புல்லாணி ஆதிஜகன்நாதன், வர்கலா ஜனார்த்தன பெருமாள், துவராகா ஸ்ரீ கிருஷ்ணர்)
- மலையில் உள்ள கோவில்களில் (பத்ரிநாத், முக்திநாத், ஜோஷிமட் எனப்படும் திருபிரிதி, கண்டம் என்னும் கடிநகர் எனப்படும் தேவப்பிரயாகை, அஹோபிலம், திருமலை, சோளிங்கர், திருமாலிருஞ்சோலை, திருக்குறுங்குடி)
- படி ஏறும் கோவில்களில் (காஞ்சிபுரம் தேவப்பெருமாள், திருநறையூர் ஸ்ரீனிவாசன், திருவெள்ளறை புண்டரிகாட்சன், திருகோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள், மதுரை கூடலழகர், மலைநாட்டு திவ்ய தேசமான குட்டநாடு எனப்படும் திருப்புலியூர் மாயப்பிரான் மற்றும் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் )
- அபிமான க்ஷேத்திரங்களில்
- திவ்ய தேசம் இல்லாத மற்ற சிறப்பு கோவில்கள் (மேல்கோட், காட்டு மன்னார் கோயில், வடுவூர், மன்னார்குடி)
- ஆழ்வார் அவதரித்த ஸ்தலங்களில் (தொண்டரடி பொடி ஆழ்வாரின் திருமண்டங்குடி, திருமழிசை, குலசேகர் ஆழ்வாரின் திருவஞ்சிகளம்)
- ஆசார்யர் அவதரித்த ஸ்தலங்களில் (ஸ்ரீ பெரும்புதூர், கூரத்தாழ்வான் அவதரித்த காஞ்சிக்கு அருகில் உள்ள கூரம், எம்பார் அவதரித்த மதுரமங்கலம்)
- பஞ்ச ரங்க க்ஷேத்திரங்கள் (ஸ்ரீரங்கபட்டினம் ரங்கநாதன், திருவரங்கம் ரங்கநாதன், கோவிலடி அல்லது திருப்பேர்நகர் அப்பகுடத்தான் அல்லது அப்பாலரங்கன், குடந்தை சாரங்கபாணி, திரு இந்தளூர் பரிமளரங்கன் )
- உருவாகிய பொருள்
- தங்கம், வெள்ளி மற்றும் பிற உலோகங்கள்
- பஞ்சலோகம் அல்லது உலோக கலவைகளில்
- பாறை மற்றும் கல்சிலைகள்
- மரம் (காஞ்சிபுரத்தில் அத்திவரதர், மாயவரம் அருகில் கோழிக்குத்தி என்ற ஊரில் உள்ள வானமுட்டி பெருமாள், உடுப்பி கிருஷ்ணன்)
- சாளகிரமத்தால் (12000 சாளக்கிராமத்தினாலும் “கடுசர்க்கரா” என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது “அனந்தசயன மூர்த்தி” திருவனந்தபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது) (திருவட்டாறு, கடுசர்க்கர கலைவயால், 16008 சாளக்கிராமங்களை கொண்டது )
- ஆழ்வார்களுக்கு காட்டிய குணாதிசயங்களால்
- ஸ்ரீரங்கம் – வியூக சௌகார்த்தம் – கால தத்வம் உள்ளதனையும் ஒருவன் பண்ணும் உபகாரமே – (சௌகார்த்தம் = எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தல்)
- திருப்பதி – வாத்சல்யம் – தாயை போல் அன்பு காட்டும் தன்மை
- வானமாமலை – ஔதார்யம்: கைமாறு கருதாது வேண்டியவை எல்லாம் தருவது.
- ஆழ்வார் திருநகரி – பரத்துவம்
- திருக்குறுங்குடி – லாவண்யம் – மொத்த அழகு
- நாகைபட்டினம் – சௌந்தர்யம் – அவயம் அவயமாக அழகு
- கும்பகோணம் – மாதுர்யம் – தன்னை கொல்ல வருபவனிடம் கூட அன்பாக,இனியனாக இருப்பது.
- திருகாட்கரை – ஸௌசீல்யம் : பெரியவர், தாழ்ந்தவர்களிடம் அன்புடன் பேதமில்லாமல் கலப்பது
- திருவனந்தபுரம் – ஸாம்யம்: ஜாதிகுண விஷயத்தில் ஏற்ற தாழ்வு பாராட்டாமல் எல்லோருக்கும்
- வேறு பிரிவுகள்
- பித்ரு காரியங்கள் செய்ய வேண்டிய ஸ்தலங்கள் (கயா, பத்ரிநாத், நாவாய், வர்க்கலா, புஷ்கரம்)
- ஸ்வயம்வக்த க்ஷேத்திரங்கள் எட்டு – தானாகவே தோன்றிய க்ஷேத்திரங்கள் (வானமாமலை, ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, புஷ்கரம், நைமிசாரண்யம், சாளக்ராமம் மற்றும் பத்ரிகாச்ரமம்)
- முக்தி தரும் க்ஷேத்திரங்கள் ஏழு ( அயோத்தி, மதுரா, மாயா எனப்படும் பூரி, அவந்திகா என்னும் உஜ்ஜைனி, காஞ்சி,துவாரகை, காசி)
ஏன் இந்த பிரிவுகள்
மக்களாகிய நமக்கு ஒவ்வொரு சமயங்களிலும் ஒவ்வொன்று பிடிக்கின்றது. நேரத்திற்கு தகுந்தார் போல் நம் சுவைகள் மாறுபடுகின்றன. அதே போல் ஒருவருக்கு பிடித்தது மற்றவருக்கு அவ்வளவாக பிடிக்குமா என்று தெரியாது. இப்படி ஒவ்வொரு நேரத்திற்கும் மாறிக்கொண்டு இருக்கும் ஜீவாத்மாக்களுக்கு, எப்படியாவது தன் அழகையும், வீர தீர பராக்கிராமங்களையும் காட்டி தன்பக்கம் இழுக்கும் பரமாத்மாவின் நோக்கமே, இப்படி பற்பல ஊர்களில், பற்பல தோற்றங்களில், பற்பல விழாக்களில் அர்ச்சையாக காட்சி தருவதற்கு காரணம்.
ஏதாவது ஒரு வகையில் ஜீவாத்மாக்களுக்கு ருசி பிறப்பிக்க வேண்டும் அல்லது பிறந்த ருசியை வளர்க்க வேண்டும் என்பதே இதன் மற்றொரு முக்கிய காரணம்.
தனது ஊரில் பெருமாள் இல்லை, அதனால் தனக்கு முக்தி கிட்டாது என்று ஒரு ஜீவாத்மாவும் பயந்து விடக்கூடாது என்று பெருமாள் நினைப்பதால் அவர் எங்கும் அர்ச்சையில் காட்சி தருகிறார்.
பகவத் அபசாரம்
இப்படி எத்தனை பிரிவுகள் இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், எந்த உருவத்தில் இருந்தாலும், எந்த இடத்தில இருந்தாலும், எந்த பொருளில் உருவானதாக இருந்தாலும் பரமாத்மாவான பெருமாள் ஒன்றே, ஆகவே எல்லோரும் சமம். தங்கத்தினால் செய்த பெருமாளும் சித்திரத்தில் வரைந்த பெருமாளும் ஒன்றாகும். இதில் தவறாக நாம் உயர்வு தாழ்வு பார்த்தால், அது பெரிய அபசாரமாகும். அதை நம் முன்னோர்கள் பகவத் அபசாரம் (நான்கு முக்கிய அபசாரங்களில் ஒன்று) என்று கூறுவார்கள், ஆகவே பெருமாள் அர்ச்சையில் நமக்காகவே வந்து இருப்பதால், நாம் கவனமாக இருக்கவேண்டும்.
பேசியது உண்டோ ?
அர்ச்சையில், ஒரு சில நேரங்களில் ஒரு சிலரோடு மட்டும் பெருமாள் பேசி உள்ளார் என்று குறிப்புகள் கூறுகின்றன.
இவை என்ன என்பதை பின்பு மற்றொரு வலை பதிவில் காணலாம்.
================================================================
Fifth State
Our acharyaars have compared the five states of Paramathma to five different water sources, namely,
- Parathvam – ambient water, the water over the galaxy
- Vyuham – Thirupaarkadal the milky ocean
- Vibhavam – Incarnations – wild seasonal floods
- Archai – Divyadesangal or Holy temples – the ponds, where the water was filled by the wild floods
- Antharyaami – Fountain water coming from underneath – the river Saraswathi, Antharvaagini
These five states are also called as follows with a slight variation for easier understanding :
- Parthvam is like amibent water
- Vyuham is like sea water
- Vibhavam is like seasonal floods
- Antharyaami is like the groundwater fountain and
- Archai is like well water
Parathvam, is like ambient water, that is not accessible to us, who are in this world and thirsty. The sea is near, but we can not use the sea water for drinking purpose as it is. The Vyuha Moorthy in Thirupaarkadal, like sea water, and we are unable to have His dharsan from here. Vibhava Moorthis are like seasonal floods and the incarnations happened at some time back. Antharyaami is like groundwater and only experts can assess the avaiability of the water and a common man like us cannot understand and pray to Him.. Archai is like well water.
When a well is dug, there is no difficulty to draw and drink a pot of water from it. In the same way, if a temple is constructed and Consecrated, nearby our house, there should not be any difficulty in offering our prayers to Him. In Archai, Emperuman is very close and nearby to us.
After Para, Vyuha, Vibhava and Antharyaami, the fifth state is called Archai. We are living in Kali Yugam. The good things and kindness are getting reduced day by day. The ruler of Kaliyugam, namely, Kali Purshan, gives enormous amount of trouble to all of us and Paramathma has taken the Archai State to protect all of us.
As said earlier, Paramathma is same in all respects and equal in all the five states.
What is Archai ?
Since we could not have dharsan of Para, Viyuha and Vibha states, Archai represents those states to us. All the statues and the pictures available at all the temples and in our homes constitute Archai. In addition,
- all statues in the temples
- As forest, in a place called Namisaranyam, in the north eastern part of India.
- As water, in a place called Pushkaram, in the north western part of India.
- In all pictures. For example, Mettu Azhagiya Singar, who asked Kambar, whether he has written anything about Sri Namazhwaar, who had so much respect and devotion for Sri Rama, is in the form of a drawing on the wall, when Kambar launched Kamba Ramaayanam in Srirangam Temple. Please recall “karpar rama piranai allal matrum karparo, endru paadina Nam Sadagopanai (Namazhwaar) paadinaayo?”.
- All pictures and Sallagramams in our houses
Glories of Archai
Some of the glories of Archai below :
- Among the five states, Archai is the best state to represent His Simpleness. Even among all Archais, there are at least some rules, norms and procedures set for the statues at the temple, but He lowers Himself further for those statues, Salagramams and pictures at our home and further minimises or reduces the rules and regulations.
- We can not see the Paramathma or Perumal or God in all other four states, but we can have dharsan or see him only when He is in Archai state.
- Paravasudevan, Paramatha in Vaikundham, provides His dharsan only for the Nithysoories, like Ananthan, the snake who serves primarily as His bed, Gaurdan, the bird that serves Him as the vehicle, Vishvaksena, the General who serves to carry out all His orders.
- Viyuha Vasudevan, Paramathma on the Holy Sea, Thirupaarkadal, provides his Dharsan only for the the good and bad (Devas and Asuras) from the Celestial world.
- There is no record of having seen the Antharyami by anyone other than Sri Thirumazhisai Azhwaar. (“Ninrathum, Irunthathum, Kidanthathum en nenjulle “)
- All the incarnations (Avathaarms), like Rama, Krishna, Narasimha, Vamana, Thiruvikrama, had existed only for a specific amount of time and the people who lived during that time alone had the fortune of having the dharsan of those incarnations respectively.
- Sri Rama ruled this country for about 11,000 years Sri Krishna’s incarnation was for about 100 to 120 years. Sri Narasimha had taken the incarnation and completed the purpose of his incarnation in about 72 minutes. Vamana Avatharam completed His mission till He gave Mukthi to Sri Mahabali Chakravarthy. From the above, we can understand that each incarnation was for a fixed time, whereas Archai exits for years. Whenever we go and pray Archai in any form, in any temple or house, He, in Archai form, alone gives us the confidence that He is available along with us in this world to support us.
- We did not live during the Vibhava incarnations. Now our only hope is Archai. Azhwaar had also highlighted the same in one of his hymns “Pinnanar vanangum sothi Thirumoozhikkalathaanaai“, meaning that the Deity in Thirumoozhikalam would be for those who live, after the vibhava avatharams or incarnations. Thirumoozhikalam is only an example and it represents all other deities in other temples and other Archais.
- Archai can not walk or move by itself like the Vibhava Incarnations as what is told by Azhwaar “evvaaru nadanthaniyo em Ramaavo” (Perumal Thirumozhi 9.2)
- In all other states, Paramathma or Perumal will act according to His desire. However in Archai, even though it is possible for Him, what He does depends on what the priest carries out. (archaka paraathinagaa)
- Whenever Paramathma takes an incarnation, He protects all, except the bad ones, for whom He hands over the punishment. For example, Ravanaa, Sisupala, Hiranyakasipu got the punishment from Rama, Krishna and Narasimha respectively, and they got killed. However the deities in Archai, like Sri Ranaganathar or Sri Venkatamudaiyan, never came out of their Archai state and gave any punishment to anyone.
- Archai is one of the states of Paramathmaa, or perumal. The places where Archai reside is called Kshetras. Kshetras had existed even before the Perumal arrived in those places. In other words, Kshetras wait for Paramathma to reach their places. Azhwaars have created hymns not only about the Deity in the Kshetra, but also about the Kshetra itself. In some cases, the places have their own glories, and the Jeevathmaas get the benefits even if they just reach the kshetras. For example, “Paran Sendru Ser Thiru Venkatada MaMalai ondrume thozha nam vinai oyume“, meaning that “if we reach and pray the mountain of Thiruvenkadam, all our sins will vanish”.
- When the Azhwaars have created Hymns about the Kshetras or about the Deity in the Kshetras, they are called Divya Desams, all other Kshetras are just called as Kshetras.
- Archai is the only way we can surrender, because other four states of Embermaan or Paramatha is not reachable to us in this life. Ramanuja prayed for total surrender in front of Namperumal in Srirangam and he got His acceptance, as per Saranagathi Katyam.
- Archai is not something that has evolved in our time. Archai had existed beyond the time of Azhwaars and Acharyas even in Puranic times. The Vishnu Sahasranama in the Mahabharata by Bhishma contains a collection of about 40 names about the archai.
Divisions
Given below are some of the examples of Kshetras. They do not represent a complete list. Also please note that they are not given in any specific sequence. These are only for our own interests and reading pleasure.
- Posture – (Like what is quoted by Sri Namazhwaar in “Pulingudi kidanthu, Varagunamangai irunthu, Vaikunthathul nindru“, meaning, the sleeping posture of Pulingudi, the sitting posture of Varagunamangai and the standing posture of Vaikuntham, all these three places are part of Divya Desams in Tirunelveli District; or as given by Thirumazhisai Azhwaar in “nindrathu entha Ooragaththu, irunthathu entha Paadagaththu, andru Vekkanai kidanthathu” standing posture of Ooragam, sitting posture of Padagam and Sleeping posture of Vekka, all these places are part of Divya desams in and around Kancheepuram)
- Standing Posture – 60 (Thirupathi, Thirumalrincholai or Madurai Azhagar Koil)
- Walking Posture – 3 (Thirukovilur, Sirkazhi or Kazhicheerama Vinnagaram and Kancheepuram Ulagalantha Perumal)
- Reclining Posture – 24 (Srirangam, Mayavaram – Thiruindalur)
- Sitting Posture -20 (Thiruvaragunamangai or Natham, Paramechura Vinnagarm)
- Existing everywhere – 1 (Naimisaranyam)
- Perumal facing directions in Divya Desams
- East Facing – 78 (Examples – Thillainagar Thiruchitrakoodam, (Chidambaram), Koodalazhagar (Madurai)
- West Facing – 19 (Thirunagari, Thirukachi/Athigiri, Mukthinath)
- North Facing – 3 (Uraiyur near Tiruchi, Ayodhya)
- South Facing – 7 (Srirangam, Thirumeyyam)
- Facing all directions – 1 (Naimisaranyam)
- Divya Desam (108) Locations
- Chola Nadu (in and around Thanjavur) – 40
- Pandiya Nadu (in and around Madurai) – 20
- Thondai Nadu (In and around Kancheepuram) – 22
- Malai Nadu (In and around Kerala) – 11
- Nadu Nadu (In and around Centre of Tamil Nadu) – 2
- Vada Nadu – (In and around North India)- 11
- Vinnulagam – (In celestial world) – 2
- Incarnations in Archai form
- Krishna (Thirukannangudi, Thirukannapuram, Thirukannamangai, Thirukovilur, Thirukavithalam, Dwaraka and Madura in Northern India – the first five in the list together is called Pancha Krishna Kshetram)
- Narasimha Kshetrams – (Ahobilam, Sholingar, Kattu Azhagiya Singar, Poovarsankuppam, Thirukuraiyaloor, Managalagiri near Renigunta)
- Rama (Dasaratha Raman in Ayodya, Vijayaraghavan in Thiruputkuzhi, Pattabiraman in Thirupullani, Kolavilliraman in Thiruvelliangudi, Chakravarthy Thirumagan in Vaduvoor, Veera Kodathandaraman in Thillaivillagam, Eeri Katha Raman in Maduranthagam)
- Varaagha (Aathipiran in Alwarthirunagari, Bhumadevi on the left thigh in Thiruidaventhai, Bhumadevi on the right thigh in Thirukadalmallai or Thiruvalaventhai, Bhuvaraaghavan in Srimushnam)
- Koorma representation in a place called Sri Koormam near Srikakulam in Andra Pradesh
- Thiruvikarama representation in Thirukovilur, Kancheepuram Ulagalantha Perumal and Sirkazhi)
- By Temple Structure
- Sea Shore Temples – (Puri Jagannathan, Thiruvellikeni Parthasarathy, Mahaballipuram Sthalasayanapperumal, Nagapattinam Soundararaja Perumal, Thirupullani Adhi Jagannatha Perumal, Varkala Jagannatha Perumal and Dwaraka Sri Krishnar)
- Temples on the Hill – Badrinath, Mukithinath, KandamEnumKadiNagar (Devaprayagai), Thirupirithi (Joshimatt), Ahobilam, Thirumalai, Sholingar, Thirumaliruncholai, Thirukurungudi Nambi)
- Temples on Multi Storey – Kancheepuram Devapperumaal, Thirunaraiyur Srinivasan, Thiruvellari Pundarikakshan, Thirukoshityur Sowmiya Narayana Perumal, Madurai Koodalazhagar, Thirupuliyur or Kuttanadu Mayappiran and Thiruvattaru Adi Kesavan in Kerala)
- Adorable Places
- All special deities in temples which are not Divya Desams (Melkote, Kattu Mannar Koil, Vaduvoor, Mannargudi)
- Birthplaces of Azhwaars (Thirumandangudi of Thondaradipodi Azhwaar, Thirumazhisai, Thiruvanchikalam of Kulasekara Azhwaar)
- Birthplaces of Acharyars (Sriperumpudur – Swami Ramanujar, Kooram – Koorthazhwar, which is near Kancheepuram, Mathuramangalam – Embaar)
- Five Important Ranganathan temples (Srirangapattinam, Srirangam, Koviladi or Thirupernagar Appakkudathaan or Appala Rangan, Kudanthai Sarangapani and Thiruindalur Parimalarangan)
- Made up of
- Gold, Silver and other metals
- A special alloy consisting of five metals (gold, silver, Brass, Copper and Lead) used for making statues or other alloys
- Granite or other Stones
- Wood (Athivaradhar in Kancheepuram, Vaanamuttiperumal in Kozhikutthi, which is near Mayavaram, Uduppi Krishnan)
- Sallagramam (Thiruvananthapuram Padmanabhaswami was constructed using 12000 salagramams and an Ashtabanthana paste; Adi Kesava Perumal in Thiruvattaru is also made up of 16008 salagramams and Ashtabanthana paste)
- By the Glories shown to Azhwaars
- Srirangam – Viyuha Sowgartham – meaning that He who helps all the time and generation after generation
- Thirupathi – Vasthalyam – Motherly Affection
- Vaanamaamalai – Outharyam – Giving away everything without expecting anything in return
- Azhwaarthirunagari – Parathvam – Extreme Superiority
- Thirukurungudi – Lavanyam – Extraordinary total beauty or complete handsomeness
- Nagaipattinam – Sowndharyam – Beauty in each and every part
- Kumbakonam – Mathuryam – Showing kindness and affection to even those who come to kill Him
- Thirukatkarai – Sowseelyam – collaborating with people without considering the differences among the superior and inferior
- Thiruvananthapuram – Saamyam – Showing Equality without looking into caste or colour
- Other Groups
- Places where rituals or rites to be done for our forefathers – Gaya, Badrinath, Navaai, Varkala, Pushkaram
- Swayam Vyaktha Kshetrams – Eight – Those places, temples and deities that came into existence on its own – Vaanamaamalai, Srirangam, Srimushnam, Thirupathi, Pushkaram, Naimisaranyam, Salagramam and Badrinath)
- Mukthi tharum Kshetrams – The places which can give the eternal world – Seven – (Ayodhya, Mathura, Maaya or Puri, Ujjaini or Avanthikaa, Kancheepuram, Dwaraka and Kasi)
Why these Divisions
We may need to understand why there are so many perspectives and views on the deities and places for these Archai.
We like different things at different times. Our taste changes with time. In the same way, what is liked by one person, may or may not be liked by others and the extent to which we like or dislike may also differ from people to people. Ultimately Paramatha wants to make sure that all Jeevathmaas reach him in one way or other. So He takes different shapes, appears in different places, displays His Beauty and Handsomeness in different ways at different times to attract as many Jeevathmaas as possible. As said earlier, this is one of the reasons for Him to be in Archai state.
His intention is to create some interest about Him, somewhere in all Jeevathmaas or if the interest is already there, He tries to improve or increase the same by resorting to these very many different appearances.
In the same way, Paramathama appears in Archai form in every place, because He does not want even one Jeevathmaa to feel that since there is no deity or Paramathma in his or her town or village, he or she would not get the opportunity to reach paramapatham or eternal world.
Disrespect to Paramathmaa
Even though there are multiple ways in which we can see the Paramathma in Archai, we should never forget that all are Equal, whether they are present in Temple or at Home, whether they are made up of Gold or drawn in paper. If we start seeing the differences and start considering the superior and inferior versions of Perumal, then we have not learnt or understood the kindness of Paramathmaa. It is He who has come down on all these shapes and sizes to give us the comfort and confidence, we should be careful to treat them on par. If we dont, then we end up doing what is called, “Baghawath Apacharam”, meaning that it is Disrespect to Paramathma, one of the four major possible apacharams or Disrespects.
Can Archai Talk ?
In the state of Archai, Paramathma has spoken to a few people a few times, as per the historical notes.
We will see these interesting details on another weblog.
Like this:
Like Loading...